அஜிதனும் அரசுப்பள்ளியும், அரைகுறைப் பார்வையும்

| Wednesday, April 29, 2015
நேற்றைய தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் [27-05-2015] நடுப்பக்க கட்டுரையாக ஜெயமோகன் அவர்களின் "அஜிதனும் அரசுப்பள்ளியும்" வெளிவந்துள்ளது. தன்னுடைய மகன் அஜிதன் தனியார் பள்ளி வசம் இருந்தபொழுது அவனுக்கிருந்த மன அழுத்தங்களும், படிப்பு சம்பந்தமான சிரமங்களும் அரசுப் பள்ளி ஒன்றிற்கு மாற்றப்பட்டபோது தீர்ந்துபோனதாக எழுதியுள்ளார். படிப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
 
அரசுப் பள்ளிகளின் நிலை பற்றி கவலை கொண்டோருக்கு ஆதரவான குரலைக் கொண்டுள்ள இந்த கட்டுரை ஒரு பிரபலமான, அடிக்கடி சர்ச்சைகளுக்குள் மாட்டிக்கொள்ளும் எழுத்தாளரிடமிருந்து வந்திருப்பது நல்லதே. இருப்பினும், இந்தக் கட்டுரையின் உள்ளுறையாக அரசுப்பள்ளிகளின் தரம், அவை எந்த விதத்தில் தனியார் பள்ளிகளை விட உயர்ந்தது, சமூக நலனுக்கு தனியார் பள்ளிகளை விட அதிக பங்களிப்பை அரசுப் பள்ளிகள் செய்கின்றன / செய்ய முடியும் போன்ற கருத்துக்கள் கவனமாக விடப்பட்டுள்ளன. அஜிதன் என்ற தனி மாணவனுக்கு, அவனது உள நலனுக்கு தோதாக அவன் படித்து வந்த தனியார் பள்ளி இல்லை; மன உளைச்சல் தராத ஒரு அரசுப் பள்ளிக்கு அஜிதனை மாற்றினால் அவனது உளநலன் சீராகும்; மற்றபடிக்கு, அவனது கல்விச் செயற்பாடுகளை பொறுத்தவரை திருமதி/திரு ஜெயமோகன் ஆகிய பெற்றோர் பெரும் சான்றோர்களாதலால், பள்ளியைத் தாண்டிய ஆனால் பரீட்சைகளுக்கு வேண்டிய ஏட்டுக் கல்வியை தாங்களாகவோ அல்லது டியூஷன் மூலமாகவோ கொடுத்து விட முடியும் என்ற உண்மையை மறைத்து நிற்கிறது இந்தக் கட்டுரை.
 
மற்றபடிக்கு, அரசுப் பள்ளிகளில் மட்டுமே மற்றவர்களால் பாராட்டப்படக் கூடிய நண்பர்களும் நட்பும் கிடைப்பார்கள் என்பதான ஜெயமோகனின் கருத்துரைகள், அதிகபட்சமாக, தனிப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளனவே தவிர, போதுமான உண்மையாக ஆகா. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் உண்மையான நட்பே இருக்காது என்ற முடிவுக்கு எப்படி ஜெயமோகன் வந்துள்ளார் என்று தெரியவில்லை. அரசுப் பள்ளிகளும், பரீட்சைகளைப் பொறுத்தவரை, தனியார் பள்ளிகளைப் போலவே மாணவ மாணவியரை கொடுமைக்கு உள்ளாக்குவதுதான் நடைமுறை உண்மை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அமைப்பால் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். தேர்வு மதிப்பெண்களால் மட்டுமே ஒரு அரசுப் பள்ளி அமைப்பால் மதிப்பிடப் படுகிறது. அரசுப் பள்ளிகளில் டியூஷன் என்ற கொடுமைகள் பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில், சில இடங்களைப் பொறுத்த வரையில், தனியார் பள்ளிகளை விட தீவிரமாக இருக்கிறது.
 
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. குறிப்பாக, பத்தாவது - பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள் விளையாட்டு மைதானம் பக்கம் செல்லவே அனுமதிக்கப் படுவதில்லை. இருப்பினும் அரசுப் பள்ளிகளின் தரம், தேர்வு மதிப்பெண்கள் என்ற அடிப்படையிலும் கூட, தனியார் பள்ளிகளின் அருகாமையில் இல்லை. 1985-க்குப் பிறகு, இந்த மாநிலத்தில் பொருளாதார வசதி கொண்டோருக்கு தரமான தனியார் பள்ளிகள், அடிப்படை வசதியும் கூட இல்லாதோருக்கு அரசு / உதவி பெறும் பள்ளிகள் என்று நிறுவப்பட்டு விட்டது. தனியார் பள்ளிகளிலும் கூட, தங்கள் மகனுக்கோ மகளுக்கோ தேர்வு மதிப்பெண்கள் அதிகம் வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கென ஒரு வகையான தனியார் பள்ளிகளும், "தேர்வு மதிப்பெண்கள் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை; எங்களது தொழிற்சாலை / நிறுவனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யத் தேவையான தரமான ஆங்கில மொழிப் பயிற்சியை மையமாகக் கொண்ட பள்ளிகள் போதும்" என நினைக்கும் பெற்றோர்களுக்கென வேறு வகையான, மேட்டுக் குடியினருக்கான, பள்ளிகள் எண்ணிக்கையில் பெருகி விட்டன.
 
"அஜிதனும் அரசுப் பள்ளியும்" என்ற கட்டுரை நிறுவ முயல்வது போல, அரசுப் பள்ளிகள் மனித நேயத்தோடு நடந்து கொள்வதில்லை; நடந்து கொள்ள அமைப்பு அனுமதிப்பதில்லை. ஜெயமோஹனும், திருமதி அருண்மொழிநங்கை அவர்களும் பெற்றோர்களாக வாய்த்ததால் அஜிதன் தப்பித்தான். தி ஹிந்துவிற்கு ஒரு கட்டுரை ஆயிற்று. இதைத் தவிர, வேறு முக்கியம் எதுவுமில்லாத கட்டுரைதான் இது. ஆனால், வேறு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். எப்போதும் போலவே, ஜெயமோகனின் ஆளை மயக்கும் உரைநடை இதிலும் உண்டு.

0 comments:

Post a Comment