"தாயென்றோ தந்தையென்றோ வணங்கி நிற்பதின்றி" |
இன்று தீவிரமாக எழுத்துலகில் இயங்கிவரும் பலர்
தமிழாசிரியர்களாக இல்லை. எஸ்ரா ஆங்கில
இலக்கிய மாணவர். ஜெயமோகன் தமிழ் இலக்கியம்
நிறுவனங்கள் வாயிலாக கற்றவர் அல்ல.
தமிழில் மிகவும் பிரபலமாக விளங்கிய சுஜாதா, த.ஜெயகாந்தன் மற்றும் சுரா
ஆகியோர் தமிழ் இலக்கிய மாணவர்கள் அல்லர்.
இவர்கள் அனைவருமே தமிழ் கருத்துலகத்திற்கும், தமிழ் படைப்பு மொழிக்கும்
பெரும் பங்களிப்பைச் செய்தவர்கள் என்பதில் அபிப்பிராய பேதங்கள் பெரிதாக எதுவும்
இருக்க முடியாது. தமிழ் இலக்கியம் முறையாக
கற்று, இனிமையான தமிழில் எழுதிவரும் பிரபஞ்சன் போன்றவர்களும் உடனே நம் நினைவுக்கு
வருகிறார்கள். இருப்பினும், தமிழ்
முறையாகக் கற்றவர்களின் படைப்பு மொழியில் ஒரு இறுக்கம் வந்துவிடுகிறதோ என்ற எண்ணம்
எனக்கு பல வருடங்களாக உண்டு. இலக்கண
சுத்தமாய், விதி மீறல்களுக்கு இடமெதுவும் கொடுக்காமல், சிந்தனையைக் கூட மரபையொட்டியே அமைத்துக் கொள்ளுதல்,
வழக்கொழிந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துதல், மறந்தும் பிறமொழிச் சொற்களை
பயன்படுத்தாதிருத்தல் உள்ளிட்ட சில பிரத்யேகமான படைப்பு மொழிக் கூறுகள்
இத்தகையோரிடம் பொதுவாகக் காணப்படும். சுஜாதாவினுடையதைப்
போன்ற எளிதான நடையோ, ஜெயகாந்தனுடையதைப் போன்ற தீவிரமான ஒரு நவ மிடுக்கோ இன்றி,
சற்றே மோஸ்தர் இழந்த ஒரு மொழி நடையை இத்தகையோர் தமது இயல்பெனக் கொண்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளி தமிழ்ப் பாட புத்தகங்களின்
உரைநடைப் பகுதிகள் மேற்கண்ட கருத்தை
ஊர்ஜிதப்படுத்தும் ஆவணங்களாகும்.
நடுவு நிலைமையில் இருந்து ஆராயும் பொழுது,
மேற்சொன்னவை சரியோ தவறோ, இத்தகைய கருத்து என்னுடைய வாசிப்பைப் பாதித்து
வந்துள்ளது. புத்தகங்கள் வாங்கப்
போகும்போது, விற்பனையாளர் பரிந்துரைக்கும் நூலாசிரியர்கள் தமிழ் மேற்படிப்பு பின்னணி
உள்ளவரென்று தெரிந்தால், அவர்களின் நூற்களை நிச்சயம் வாங்க மாட்டேன். (விலக்குகள் உண்டு) இது ஒரு பரிதாபமான பேதமைதான். சந்தேகமேயில்லை. மிக அண்மையில், புத்தகக் கடை ஒன்றிற்கு
சென்றிருந்த போது, கடை உரிமையாளரிடம் சில புத்தகங்களைப் பரிந்துரைக்கும்படி
கேட்டேன். பாராட்டும்படிக்கான வாசகர்
அவர். புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பது
மட்டுமன்றி, அவைகளைப் பற்றிய சொந்தக் கருத்துக்களை, தன் வாசிப்புப் பின்புலத்தில்
உருவாக்கி வைத்திருப்பவர். எனது
வாசிப்புத் திசையை ஓரளவு ஊகிப்பவர். சில
புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தவர், திடீரென மகுடேசுவரன் எழுதியுள்ள “களிநயம்”
என்ற கட்டுரைத் தொகுப்பைக் காட்டி சொன்னார்: ‘நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால், படித்த வாசகரால் பெரிதும்
மதிக்கப்படுகிறது. லைட் ரீடிங்தான், இருப்பினும் இவரின் மொழி நடையை நீங்கள்
ரசிப்பீர்கள் என்பது எனது யூகம்.’
வாங்குவதற்கு முன்னால், மரியாதை நிமித்தம் இரண்டொரு பக்கங்களை நின்றவாறே
புரட்டிய பொழுது, மகுடேசுவரன் [இவர் ஒரு கவிஞர் என்றும் தெரிய வந்தது] தமிழ்
இலக்கியம் முறையாகக் கற்றவர் என்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. வேண்டாமென்று சொல்ல நினைப்பதற்கு முன்னால், என்
வசம் கிட்டத்தட்ட இந்தப் புத்தகம் திணிக்கப்பட்டது. மனமின்றியே வாங்கிவந்தேன்.
‘களிநயம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பு. இருபது கட்டுரைகள் கொண்டது. தமிழினி பதிப்பகம் திசம்பர் 2014-ல்
வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள் கொண்ட
இத்தொகுப்பை சந்தேகமாகவே ஆரம்பித்து, சில பக்கங்களின் வாசிப்பில் கவரப்பட்டு,
போகப்போக பெரும் வேகமெடுத்து, முதல் அமர்விலேயே முழுவதுமாக முடித்து
விட்டேன். கொடும் இலக்கியப் பாங்கான தமிழ்
இதில் இல்லை என்பது முதல் காரணம்.
வார்த்தைகள் ஒன்றின் பின்னால் ஒன்று மிகச் சரளமாக அணிவகுத்து
வருகின்றன. தமிழ் இலக்கிய மாணவர்
என்றாலுங்கூட, மணிப் பிரவாள நடைதான். தூய
தமிழ் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆரம்பிக்கும் முதல் வாக்கியத்திலேயே கட்டுரையைப் பற்றிய மொத்த தெளிவும்,
அதனால் உருவாகும் ஒரு திட்டமும் மகுடேசுவரன் வைத்திருக்கிறார். இவரது வார்த்தைப் பிரயோகங்களை மூன்று வகைகளாகப்
பிரிக்க முடியும். மொழி பெயர்ப்புப்
பதங்கள், வழக்கொழிந்த தமிழ்ப் பதங்கள் மற்றும் தமிழ் அல்லாத பிற மொழி
வார்த்தைகளின் ஒலிபெயர்ப்பு. மொத்தப்
புத்தகத்தைப் படித்த பின்பு, கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கும் கருத்துக்களை விட, செய்நேர்த்தி
மற்றும் மொழி நடை வாசகரைக் கவருகிறது.
மேற்பத்தியில் சொன்னவாறு, மகுடேசுவரன்
பயன்படுத்தியுள்ள மொழிபெயர்ப்புப் பதங்கள் மற்றும் வழக்கொழிந்த தமிழ்ப்
பதங்களுக்கான பட்டியல் ஒன்று புத்தகத்தை வேகமாகப் புரட்டும்பொழுதே கண்படுகிறது.
மொழிபெயர்ப்புப் பதங்கள்: மகிழுந்து [car], இருப்பூர்தி [train], அகல் திரைப்படம் [cinimascope movie],
அலுப்பூட்டும் சொல்முறைகள் [cliche], பைஞ்சுதை [cement], கடவுத்தாள் [passport],
நுழைவிசைவு [visa], ஏற்றுகை அட்டை [boarding pass], பறப்புருதி [air clearance
signal], பொருளாட்சி வகுப்பு [economy class], மின்செயல் பூட்டு [electronic lock],
ஈருருளி [mobike], சாலைப் பற்று [road grip], உதைத்துக் கிளப்பும் வகை [kickstart],
எரிபொறி [eigine], புறத்தாங்கி [side stand], நடுத்தாங்கி [center stand],
அடிச்சட்டம் [chassis], பற்சக்கரப் படி [gear], முகவை [litre], எரிநெய் [gasoline],
எரிநெய் சாவடி [gas station], எரிபொறி
நெய் [lubricant], நகர்வு நிறுத்தி [brake], நிறுத்தக் கட்டை [brake shoes], நீர்ப்படிக ஒளித்திரைப் பெட்டி [liquid crystal
display televisions], எரிகுமிழ் [spark plug], ஏதிலிகள் [refugees], இன்னும்
பிற.
வழக்கொழிந்த தமிழ்ப் பதங்கள்: தோற்றுவாய், மருவல், சுபிட்சம், மருங்கு,
மாடவிதானம், கானகம், துலக்கம், நடுகிடை, அளவுமானி, இலங்குதல், சிகாமணி, நிறைசூலி,
முகிற்புகை, வினைவல்லல், தகை, மாற்றுறவு [புது சொல்லாக்கம்!], கட்புலம்,
தகுநிலைமை, ஐம்பொறி, பேரிறை, உயவு, இன்னும் பிற.
மகுடேசுவரன் திருக்குறளுக்கு விளக்குவுரை எழுதியுள்ளார்
என்பதும், அதிலிருந்து சில குறள்களின் விளக்கவுரைகளை இப்புத்தகத்தின் கடைசிக்
கட்டுரையாக தந்திருக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி. சொடுக்கப்பட்டுள்ள ஆறேழு குறள்களுக்கான
விளக்கக்களைப் படித்தவரை, சுஜாதா அவர்களுடையதை விட விரிவானது என்றும், மூலப்
பிரதியை விட்டு விலகாமலேயே விளக்கத்தைத் தர முயன்றுள்ளார் என்றும் தெரிகிறது. “அன்பிற்கும் உண்டோ ...” என்ற குறளுக்கு ‘முதல்
மரியாதை’ திரைப்படத்தில் இருந்து ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி [intertextuality] விளக்கியிருப்பது,
மூலப் பிரதியானது எத்தகைய நவீனச் சூழலிலும் தன் பொருளை இழக்காமல் நிற்க வல்லது
என்பதை நிறுவுகிறது.
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மகுடேசுவரன் சில தருணங்களில், தன்னுடைய
கருத்துக்களின் புதுமையிலும், தீர்க்கத்திலும் நம்மை வியப்படைய வைக்கிறார். தன்னுடைய தந்தையார் உயிருடன் இருக்கும்போது அவர்
விற்று விட்ட நிலத்தின் மேல் வழக்கு ஒன்று தாக்கல் செய்து அதை வாங்கியவரிடமிருந்து
திருப்பிக் கேட்க முடியும் என்று உறவினர்கள் அறிவுரைக்கும் போது, அதை மறுக்கும்
மகுடேசுவரன், தந்தையாரின் முடிவுகளை மாற்றுகிற வாய்ப்பை அவர் உயிருடன் இல்லாத
காலத்தில் பயன்படுத்த முனைவது அறமாகாது என்கிறார்: “... நம் மூதாதையர் செய்த
செயல்களைச் சரி தவறென்று தீர்ப்பு வழங்கும் இடத்தில் நம்மை நாமே இருத்திக்
கொள்கிறோம். எந்த சூழ்நிலையில், எந்தத்
தவிப்பில் அத்தகைய நிலைக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதைக் கருதுவதில்லை. அதன் பின்னால் காலத்தில் நிறம் கரைந்துவிட்ட
ஆயிரம் நியாயங்கள் இருக்கக்கூடும். நம்
பெற்றோர்கள் குற்றங்குறைகளோடு இருந்திருக்கலாம்.
அவர்களுக்கும் உள்ளங்கனிந்த மாற்றுறவுகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால், அவ்வுறவைத் தாயென்றோ
தந்தையென்றோ வணங்கி நிற்பதின்றி வேறொன்றும் சொல்லத் தகுமோ நம் நெஞ்சம்?”
இன்னொரு கட்டுரையில், படித்தவர்கள்
வேலைவாய்ப்பின்றி உள்ளூரில் அலைந்து திரிவதும், படிக்காதவர்கள் அயல்நாடுகளில்
பணிபுரிய நம்பிக்கையுடன் விமானங்களில் பறப்பதையும் பற்றிக் குறிப்பிடுகையில், “முன்னதாக,
மஸ்கட் செல்லும் விமானமொன்று கிளம்பத் தயாராக இருந்தது. அப்போதுதான் கவனித்தேன். அழுக்குடையும் ரப்பர் செருப்பும் அணிந்தவர்கள் கூட அந்த
விமானத்தைப் பிடிக்கப் பரபரத்தனர்.
அடிப்படைத் தொழிலாளர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தோற்றத்திலிருந்த ஒருவர் என்னை
நாடி மேற்சொன்ன தம் படிவத்தை நிரப்பித் தரக் கோரினார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னார். எனக்கு வியப்புத்தான். வண்டி வண்டியாகப் படித்துக் கொண்டிருப்பவர்கள்
சொந்த ஊரை விட்டு வெளியேற வாய்ப்பில்லாதவர்களாக இருப்பதும், எழுதப் படிக்கத்
தெரியாத முயற்சியாளர்கள் பன்னாட்டு விமானத்தில் பறப்பதும் இருவேறு உலகத்து
இயற்கையோ என்று யோசித்தேன்.”
கொங்கு வட்டார வழக்கு, நாஞ்சில் நாடனும் தமிழ்கவிதை
மரபும், தந்தை சொல் போன்ற கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. கவிஞர் மகுடேசுவரன்
தன்னை கம்பீர்யமான உரைநடைக்காரர் என்பதை இத்தொகுப்பு மூலமாக தமிழ் கூறும்
நல்லுலகிற்கு உரக்க அறிவித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
[களிநயம், மகுடேசுவரன், தமிழினி, சென்னை, உரூபா
110/-]
0 comments:
Post a Comment