தமிழில் இப்பொழுது எழுதி வருவோரில் ஆ.இரா.வேங்கடசலபதி, பழ.அதியமான் மற்றும்
மதிவாணன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
அல்புனைவுகளையே எழுதி வருபவர்கள்.
ஆ.இரா.வே. பேராசிரியராகவும்
[Madras Institute of Development Studies], அதியமான் அகில இந்திய
வானொலியிலும் பணிபுரிகின்றனர். ஆய்வுப்
படைப்பாளிகள் என்று இவர்களை வகை பிரிப்பது மிகப் பொருத்தம். தமிழ் மொழி, படைப்பிலக்கியம், அரசியல் - சமூக - இலக்கிய
ஆளுமைகள், ஊடகம் போன்ற துறைகளில் தங்களது ஆய்வுகளைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர். பல பெரிய சர்வகலா சாலைகள் செய்ய வேண்டியவைகளை
இவர்கள் தங்களது தனி முயற்சிகளால் செய்து வருவது, அவர்களின் வார்த்தைகளிலேயே
சொல்வதானால், நமது நல்லூழ்.
தமிழ்ப் பதிப்புத் துறை தனித்த வரலாறு கொண்டது. பதிப்புத் துறையில் ஈடுபடுவது என்பது
தற்கொலைக்குச் சமம், தமிழ்ச் சூழலில். இங்கு நிலவும் பதிப்புச் சூழல் நமது அருகாமையில் உள்ள
கேரளாவைப் போன்றது அல்ல. இங்கே
படித்தவர்கள் என்றால், பள்ளிக் கூடத்திலும் , கல்லூரியிலும் சில வருடங்கள் தங்கியிருந்து சான்றிதழ்கள் வாங்கியவர்களைத்தான்
குறிக்கும். நிறுவனங்கள் படிக்கச் சொல்லி
கட்டாயப்படுத்தும் அவர்களது பாடப் புத்தகங்களைத் தவிர, மருந்துக்கும் வேறு எதையும்
படிக்காதவர்கள் இங்கே ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக லட்சக்கணக்கில் மலிந்து விட்டனர். கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் படித்த ஐந்து
புத்தகங்களை பட்டியலிடுங்கள் என்று பயிற்சி பட்டறை ஒன்றில் நான் வேண்டிக்
கொண்டபோது, பயிற்சி பெற வந்திருந்த
ஆசிரியர்கள் 'எனக்கு ஏதோ ஆகியிருக்கக் கூடும் என்ற முக பாவனையோடு', சிரித்தனர். இவர்கள்தான் உபாத்தியாயர்கள் என்கிற பொழுது,
பதிப்புச் சூழல்
பற்றி கவலைப் படுவது தேவையற்றது. கேரளா
விஷயம் வேறு. இடது சாரி அரசியலின் தாக்கம்
ஆரம்பம் முதலே இருந்ததால், பாடத் திட்டத்தைத் தாண்டிய படிப்பு அங்கே இயல்பாயிற்று. புது தில்லியில் ' கல்வி நிறுவனங்களுக்கான நிதி
திட்டமிடுதல்' என்ற துறையில் பேராசியராக
இருக்கும் ஒருவரிடம் அண்மையில் பேசிக்கொண்டிருந்த பொழுது, இதற்கான காரணத்தை அவர்
அறிந்தவாறு விளக்கினார். அவர்
சொன்னார்: "Every Malayaali is politically
conscientious. Being politically conscientious
is the first step to 'real development'." அரசியல் ரீதியாக சமூக அறிவைப் பெறுவது என்பது
படித்தோருக்கே சாத்தியம். படித்தோருக்கே
என்றால் பாடத்திட்டங்களைத் தாண்டி படித்தோருக்கு என்றே பொருள் கொள்ளுதல்
தகும். இந்தப் பேராசியரின் கூற்றுப்படி,
தமிழ்நாடு தனது
பக்கத்து மாநிலமான கேரளாவின் அருகில் செல்லவே பல நூற்றாண்டுகள் ஆகும். அங்கே பதிப்புத் துறை வெகு வேகமான
முன்னேற்றங்களைக் கண்டவாறு உள்ளது.
ஒப்பீட்டளவில், படிப்பவர்கள் அங்கே எண்ணிக்கையில் மிகவும் அதிகம்.
தமிழ்ப் பதிப்புத் துறையில் முன்னோடிகளாக சிலரைச் சொல்ல முடியும். சக்தி காரியாலயம் வை.கோவிந்தன், சின்ன அண்ணாமலை போன்றோர்
அதில் சிலர். இதிலே, சக்தி காரியாலயம்
வை.கோவிந்தன் அவர்களால் தன்னுடைய பிரசுரத்தின் மூலம் இருநூறுக்கும் அதிகமான
புத்தகங்களைப் பிரசுரித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, இவருடைய பிரசுரத்தால்
பதிப்பிக்கப் பெறும் நூல்கள், தரத்தில் பெங்குவின் பிரசுர புத்தகங்களைப் போலவே இருப்பதாக கருதப்பட்டது. புத்தக அச்சு, கட்டடம், பளிங்கு போன்ற தாள்களில்
தெளிவான படங்கள், குறைந்த விலை என்பவை சக்தி
காரியாலய முத்திரைகள். சமூகம், அரசியல்,
குழந்தைகளுக்கான நூல்கள், சோவியத் அரசு தொடர்பானவை, பக்தி, புனைவு, அல்புனைவு போன்ற இயல்களில் நூற்றுக்கும் அதிகமாக
புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார் சக்தி வை.கோவிந்தன் அவர்கள். நாட்டுக் கோட்டை செட்டியார் சமூகத்தைச்
சார்ந்த சக்தி வை.கோவிந்தன் அவர்கள் பர்மாவிலிருந்து, அங்கு தொடங்கியிருந்த அரசியல்
சூழ்நிலைகளால், இந்தியாவிற்கு வந்து
பதிப்புத் தொழிலில் நுழைந்து அதன் சூட்சுமங்களைக் கற்று பெரும் வெற்றியும்
பெற்றவர். ருஷ்ய மகா மேதை டால்ஸ்டாயின்
எழுத்துக்களின் மீது தீராத காதல் கொண்டவர்.
டால்ஸ்டாயின் பல்வேறு நூல்களை
மொழிபெயர்த்து வெளியிட்டவர். டால்ஸ்டாயின்
WAR AND PEACE நாவலின் சில பகுதிகளை மட்டும் “போரும் காதலும்” என்ற பெயரில்
வெளியிட்டவர் அதனால் திருப்தியுறாமல், சில வருடங்கள் கழித்து, அன்றைய தினமணி
ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை அணுகி அந்த நாவலின் மொத்தத்தையும் மொழிபெயர்க்கச்
சொல்லி வேண்டி, 2500 பக்கங்கள் கொண்டதாக முதன் முதலில் 1958-ம் ஆண்டு அற்புதமான
பதிப்புத் தரத்தோடு பதிப்பித்தது கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு தமிழ்த்
தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தொண்டாற்றியதற்கு சமமான கைங்கர்யமாகும். சமீபத்தில் ஜெயமோகன் ஒரு செவ்வியில்
டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் ‘போரும் வாழ்வும்’ மொழிபெயர்ப்புத் தரத்தை மிகவும்
போற்றியிருந்தார். 2500 பக்கங்கள் கொண்ட,
அன்றைய ஐரோப்பா அரசியலின் சகல பரிமாணத்தையும் அலசும் WAR AND PEACE ஒரு
பெருங்காப்பியத்தை தன்னந்தனியர் மொழிபெயர்த்துள்ளார் என்பது நம்புவதற்கு இன்று கடினமான
காரியம் ஆகும். டி.எஸ்.சொக்கலிங்கம்
அவர்களின் மொழிபெயர்ப்பில் இதைப் படித்தவன் என்ற முறையில், ருஷ்ய மூலத்திற்கு மிக
அருகில் இந்த மொழி பெயர்ப்பு இருக்கக்கூடும் என்ற உணர்வை பலநூறு முறைகள், படிக்கும்
போதே, இந்த நாவல் எனக்குத் தந்திருக்கிறது.
தமிழிலே படித்தவர்களே குறைவு என்ற நிலையில், தரமான உலக இலக்கியங்கள் இந்த
மொழியிலே பெயர்க்கப் பட்டாக வேண்டும் என்ற மனவிழைவில் உழைத்த இந்தப் பெரியவர்களை
எது இயக்கி இருக்கக்கூடும் என்பது ஒரு இறுக்கமான உளவியல் முடிபாக அமையும்.
பழ.அதியமான் அவர்கள் “சக்தி வை.கோவிந்தன் – தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை”
என்ற ஒரு அற்புதமான நூலைக் கொண்டு வந்துள்ளார்.
சக்தி.வி.கோவிந்தன் அவர்கள் 54 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார் (1912-1966). மிகக் குறுகிய இந்த வருடங்களில் பதிப்புத்
துறையில் எந்த முன் அனுபவமும் இன்றி கால் வைத்தது, அடைந்த பெரிய வெற்றி, அதன்
தொடர்ச்சியான பயங்கர வீழ்ச்சி, அந்திமக்கால மௌனம், பின்பு நோய்மையில் மரணம் – என்ற
இவரின் வாழ்க்கை “லட்சிய வாதம்” பேசும் எவருக்கும் பாடமாகவே அமைந்துள்ளது. தனது தந்தையார் சக்தி வை.கோவிந்தன் குறித்து
அவரது ஒரே மகன் அழகப்பன் சொன்னதாக இந்த நூலில் குறிப்பிடுவது படிக்கவே மன உளைச்சல்
கொடுப்பதாக உள்ளது. “எங்க அப்பா ஒண்ணும் செய்யாம வீட்டில் இருந்திருந்தாலே இன்னும்
பல தலைமுறைகளுக்கு நாங்க நல்லா இருந்திருப்போம்.
புத்தகம் போடறேன், பத்திரிக்கை நடத்தறேன் என்ற எல்லாவற்றையும் விரயம்
செய்து விட்டார்கள். இப்போது நாங்கள்
சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படறோம்.” ‘தற்போது
அழகப்பன் பழைய பேப்பர் உள்ளிட்ட பொருள்களை வாங்கி விற்கும் சிறிய கடை நடத்திக்
கொண்டு துன்ப வாழ்க்கையின் பிடிக்கும் இன்னமும் தத்தளிக்கிறார்’ என்று பழ.அதியமான்
தனது முன்னுரையில் குறிப்பிடுவது நம்மை – நமது தமிழ் அறிவுவெளியை நோக்கிய
கேள்வியாகவே உள்ளது.
இவரின் லோகாதய வீழ்ச்சி ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் எனும்படியான ஒரு அகராதியை
வெளிக்கொண்டு வர முயன்றதின் வாயிலாகவே துவங்குகிறது. அகராதியை எழுதிக் கொடுப்பாதாக சொன்ன நபர் [தி.நா.சுப்பிரமணியம்],
தனது இயலாமையின் காரணமாக, வேறு ஒரு அகராதியின் பல பகுதிகளை பிரதி எடுத்து
கொடுத்துவிட, அது சார்ந்து நடந்த வழக்கில் ஒரு மிகப் பெரிய தொகையை நட்ட ஈடாக
கொடுக்க வேண்டி வந்ததால், பொருளாதாரத்தில் மிகவும் நொடித்துப் போயிருக்கிறார்
கோவிந்தன். அடுத்து மின் சாதன தொழிலில் ஈடுபட்ட கோவிந்தன் அவர்கள், பங்குதாரர்
ஏமாற்ற அதிலும் பணத்தை இழந்து தோல்வி.
இவைகளைத் தொடர்ந்து தனது அனைத்து உபாயங்களையும் வாழ்விலே இழந்துவிட்ட
கோவிந்தன், எழுத்தாளராக உருவெடுத்து குழந்தைகளுக்காக சில புத்தகங்களை எழுதி சொற்ப
வருமானத்தில் நாட்களை நகர்த்தியிருக்கிறார்.
வாழ்க்கை தொடர்ந்து இவரது விடயத்தில் கறாராகவே இருந்துள்ளது. இதனிடையே, கார் விபத்து ஒன்றில் சிக்கி மீண்ட
இவரை எலும்புருக்கி நோய் தாக்கியுள்ளது. எப்படியோ இவைகளிலிருந்து தப்பித்த இவர்,
முதல் நாள் நோயுற்று அடுத்த நாள் [19-10-1966] சாவெய்தி விட்டார்.
வை.கோவிந்தன் அவர்கள் வெளியிட்ட நூற்களின் பட்டியலை, தனது தீவிரமான ஆய்வின்
மூலம் பழ.அதியமான் இந்த நூலின் இறுதியில் கொடுத்துள்ளார். 191 புத்தகங்கள், முதல் புத்தகம் வெளிவந்தது
1942-ல், கடைசி புத்தகம் இரண்டாவது பதிப்பாக 1964-ல் [எருவும் எருஇடுதலும்]; இவர் வெளியிட்ட புத்தகங்களின் தலைப்புகள்
சிலவற்றை பார்ப்பது இவரின் கவனத்தைப் பெற்ற துறைகளை நாம் அவதானிக்க உதவும். அகண்ட இந்தியா [மொழிபெயர்ப்பு], அசலா [சரத்
சந்திரர், மொழிபெயர்ப்பு], அணுகுண்டும் அகிம்சையும், அபேதவாதம், அம்பிகாபதிக்
கோவை, அரசியல் விமோசனம், அரபுக் கதைகள், அறிஞர் மார்க்ஸ், ஆட்டோமாடிக் பென்சில்,
எமர்சன் கட்டுரைகள், ஏன் குருநாதர் பாரதியார், ஏழை படும் பாடு, காஷ்மீர்ப்
பிரச்சினை, கிராம மக்களுக்கும் சேவையாளர்களுக்கும், குரங்கும் முயலும், குழந்தமை
ரகசியம் (மரியா மாண்டிசோரி), சூரன் சூரியமூர்த்தி (ஆசிரியர் வை.கோவிந்தன்), போரும்
வாழ்வும், நான்மணிக் கடிகை, பிரதாப முதலியார் சரித்திரம் (1957), Angry Dust,
Lyric Festoons, Talk For Food, ஸ்ரீஅரவிந்தர், இன்ன பிற. யார் யாருடைய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்
என்று பார்க்குமிடத்து, மிகுந்த சுவராஸ்யம் ஏற்படுகிறது. கே.எம்.முன்ஷி, சக்கரவர்த்தி ராஜகோபலாச்சாரி,
தி.ஜ.ரங்கநாதன், ஏ.கே.செட்டியார், சூடாமணி, கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன்,
கபிலர், சுத்தானந்த பாரதி, சிதம்பர ரகுநாதன், க.நா.சுப்ரமண்யன், கொத்தமங்கலம்
சுப்பு, வெ.சாமிநாத சர்மா, கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஜே.சி.குமரப்பா, டி.எஸ்.சொக்கலிங்கம்,
புதுமைப்பித்தன், வேதநாயகம் பிள்ளை, வ.ரா, ஆர்.சண்முகசுந்தரம், அணில் அண்ணா
(வை.கோவிந்தன்), விளம்பி நாகனார், ஆர்.வெங்கட்ராமன், ச.வையாபுரிப்பிள்ளை,
க.சந்தானம், எம்.எல்.சபரிராஜன், பரலி சு நெல்லையப்பர், சாவர்கர், பி.கோதண்டராமன்,
இன்னும் பலர்.
வை.கோவிந்தன் 26 ஜூன் 1912-ல் ராமசாமி – விசாலாட்சி தம்பதிக்கு மூத்த மகனாய்ப்
பிறந்தவர். மூன்று சகோதரர்கள் உண்டு. ராம.ரங்கநாதன்,
ராம சீனிவாசன், மற்றும் ராம.தியாகராஜன். வைரவன் செட்டியாருக்கு சுவீகாரம்
கொடுக்கப் பட்டதால் வை.கோவிந்தன் ஆனார்.
முதல் மனைவி அழகம்மை இறந்துவிட, தனது 34-வது வயதில் வள்ளியம்மையோடு
இரண்டாவது திருமணம். அழகம்மையின் வழி ஒரு மகளும்,
வள்ளியம்மை வழி ஒரு மகனும் உண்டு. 1934-ல்
பதிப்புப் தொழிலில் அன்பு நிலையம் கூட்டில் முதல் புத்தகமான ‘ஏழை படும் பாடு’
வெளியீடு. சொந்தப் பதிப்பகமான சக்தி காரியாலயம் 1939-ல் துவக்கம். கோவிந்தன் அவர்கள் ஒரு பத்திரிகையாளரும்
கூட. சக்தி, மங்கை, அணில் பாப்பா,
குழந்தைகள் செய்தி, கதைக்கடல் ஆகிய சஞ்சிகைகளை நடத்தி வந்தார். இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப்
பதிப்பித்தவர். தென்னிந்தியப் புத்தக
வியாபாரிகள் சங்கம் மற்றும் குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் தலைவர் பதவியை
வகித்தவர். நோய்மையின் காரணமாக அக்டோபர்
19, 1966 ஆண்டு சாவெய்தினார்.
ஒரு மனிதனுக்கு வாழும் காலத்தில் பல்வேறு விருப்பங்கள் இருக்கலாம். அந்த விருப்பங்களை நிறைவேற்ற தேவையான விருப்புறுதியும்
இருக்கலாம். ஆயினும், அப்படியாக இயங்கும் பொருட்டு தான் சந்திக்க நேரும்
தோல்விகளையும், தன்னுடைய குடும்பம் இழக்க வேண்டியிருக்கும் அடிப்படையான
விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இயங்குவது ஒரு மனிதனின் இயல்பாக இருக்க
வேண்டிய தர்மம். ஆனால், இந்த தர்மம்
சராசரி மனிதர்களுக்கானதே. மொத்த
சமூகத்திற்கு வேண்டியது என்று காலம் நினைக்கும் விடயங்களுக்காக அது தயாரித்து
அனுப்பும் புருஷர்களை இந்த தர்மம் கட்டுப் படுத்துவதில்லை. பழ.அதியமான் இந்தப் புத்தகத்தில் சொல்லுகிறவாறு,
“காலத்தின் கருவியைக் கண்டெடுத்த வை.கோவிந்தனின் அறிவுக் கூர்மையைக் கண்டு
பின்பற்ற வேண்டியிருப்பினும் தொழிலின் வெற்றிக்கும் வாழ்க்கையின் தோல்விக்குமான
இடைவெளியைப் புரிந்து கொள்வதே வை.கோவிந்தனின் வாழ்க்கையிலிருந்து லௌகீக மனிதன்
கற்றுக்கொள்கிற விஷயமாகவிருக்கும்.”
[சக்தி வை.கோவிந்தன் – தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை, பழ.அதியமான்,
காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு, நாகர்கோவில், உரூபா 175/-]
0 comments:
Post a Comment