இரும்பு பிடித்தவனும் சிரங்கு பிடித்தவனும்

| Wednesday, April 8, 2015



BOYS OF ABU GHRAIB என்ற படம் அண்மையில் வெளிவந்துள்ள படம். அமெரிக்க ஏகாதிபத்தியம் எத்தனையோ நாடுகளை சொல்லொணா கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. Come September என்ற புகழ்பெற்ற தனது Lennon சொற்பொழிவில் அருந்ததி ராய் அவர்கள் பட்டியலிடுவது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆளாகாத நாடுகள் எந்தக் கண்டத்திலும் இல்லை. தெற்கு அமெரிக்கா மற்ற கண்டங்களை விட அதிகமாக இந்த காரணத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறது. வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் விதிவிலக்கல்ல. முக்கியமாக எண்ணெய் வளங்கள் அதிகமாக உள்ள மத்திய கிழக்காசிய நாடுகள், இஸ்லாமை தங்கள் மதமாக கொண்டவை, அமெரிக்காவின் கண்களை பல தசாப்தங்களாகவே உறுத்திக் கொண்டிருந்தன. இந்த இஸ்லாம் நாடுகளை அமெரிக்கா சுரண்ட ஆரம்பித்ததும், அங்குள்ள இஸ்லாம் இனக்குழுக்கள் தங்களுக்குள் ஆக்ரோஷமாக சண்டையிட ஆரம்பித்ததும் தற்செயலானவை அல்ல. ஆப்கானிஸ்தான், இராக் உள்ளிட்ட பல நாடுகளின் உள் தகராறுகளில் தலையிட்டது மட்டுமல்ல, பல உள் தகராறுகளை ஆரம்பிக்கவும் செய்தது அமெரிக்கா. இருமுனை உலகளாவிய அரசுகள் என்ற நிலை தொண்ணூறுகளின் துவக்கத்தில் மாறியதும், சோவியத் குடியரசின் வீழ்ச்சியும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் சதியே. 

அமெரிக்கச் சதியின் காரணமாய் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கில் வீரர்கள் கொல்லப் பட்டனர் ஒட்டுமொத்த இஸ்லாத்தையே வன்முறையின் உருவமாக கட்டமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஐரோப்பா முழுவதிலும் ஒரு முஸ்லிம் சந்தேகக் கண்களின் ஊடாகவே பார்க்கப் படுகிறான். இடது சாரி சக்திகள் முதலாளித்துவ அரசுகளுக்கு ஒரு மாற்றாக அமையாத போது, இவ்வுலகத்தை அமெரிக்கா தலைமையேற்று நிற்கும் முதலாளிகளின் அமைப்பிற்கு ஒரு மாற்று தலைமையை, மார்க்சீயர்கள் உள்ளிட்ட இடதுசாரிகள் தரமுடியாத நிலைமையில், அதை ஓரளவிற்கேனும் தர முடிந்தவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகள்தான். 9/11 என்ற துயரத்திற்காக அமெரிக்கா துடித்துப்போனதிற்கும் காரணம், அது இடதுசாரி சக்திகளை தனது சதியால் வீழ்ச்சியடைய வைத்ததுதான். இடதுசாரிகள் இருந்து வந்த இடத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஏறி அமர்ந்து கொண்டனர். முதலாளித்துவ அமைப்பிற்கும் அரசுகளுக்கும் இடதுசாரிகள்தான் மாற்று என்ற நிலை நீடித்து வந்த வரைக்கும், 9/11 போன்ற ஒரு துயர நிகழ்வு ஏற்பட சாத்தியமே இல்லாமல் இருந்தது.

இடதுசாரிகளை கவிழ்த்த பிறகும், ஏன் அதற்கு முன்னரேயும் கூட, அமெரிக்கா பல போர்களை நடத்தவேண்டி வந்தது. தனது தலைமையை திரும்பத் திரும்ப நிறுவ வேண்டிய கட்டாயமும், உலகத்தை தன்னைப் பற்றிய ஒரு பயத்தின் பிடியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் அதற்கு எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. இத்தகைய, நோயைப் போன்றதொரு, பயம் காரணமாக அமெரிக்காவும் தனது எண்ணிறைந்த புதல்வர்களை போர்களில் பலியிட்டுள்ளது. வியட்நாம் யுத்தத்திற்குப் பிறகு அதற்கெதிரான போராட்டங்கள் அமெரிக்க மண்ணில் வலுத்தது இதற்கான பாரியமான சாட்சி. மகனையோ, சகோதரனையோ, அல்லது தந்தையையோ இழந்து அனாதையாக கொடுந்துயருற்று நின்ற அமெரிக்க குடும்பங்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். 


அத்தகைய ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதைச் சார்ந்த இருபத்து இரண்டு வயதே நிரம்பிய ஒரு இளம் வீரனைப் பற்றியும் இந்தத் திரைப்படம் உளவியல் ரீதியாக அலசுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், முஸ்லிம் அடிப்படைவாதம் என்ற இரு முனைகளுக்குள் சிக்குண்டு தவிக்கும் ஆயிரமாயிரம் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் இளைஞர்கள், அவர்கள் சார்ந்து நிற்கும் அமைப்புக்கள் அவர்களுக்குள் ஏற்படுத்தும் உளவியல் ரீதியான தடுமாற்றங்கள், உறவுகளைப் பிரிந்து பல நூறு மைல்கள் தொலைவில் கைதியாகவோ, சிறைக் காப்பாளனாகவோ பாலைவன சிறை வளாகங்களில் தவிக்கும் அனாதியான நிலை, எது சரி எது தவறு என்று முற்றிலும் உணர முடியாத பரிதவிப்பு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தவிக்கும் உள்மனது என்ற பல்முனைப் போராட்டங்களை எவ்வித மிகையும் இன்றி சித்தரிக்கிறது இந்தப் படம்.


"நாம் படை வீரர்கள்; சிந்திக்கவே கூடாது. சொன்னதைச் செய்ய வேண்டும்" என்று கதா நாயகனை எச்சரிக்கிறான் ஒரு சக அமெரிக்க வீரன். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்ற அடையாளத்தில் சிறையில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்களை நாகரீகமாக நடத்த வேண்டும் என்று ஆத்திரப்படும் கதாநாயகன் ஒரு கைதியிடம் நட்பாக நெருங்குகிறான். அந்தக் கைதிக்கு நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிவதில் வியப்படையும் Framer என்ற நமது கதாநாயகன் தன்னுடைய குடும்பம், காதல், ஊர் திரும்பும் ஏக்கம் என்ற பலவற்றையும் அந்தக் கைதியிடம் சொல்லி ஆறுதல் அடைகிறான். அந்தி கைதியும் தன்னுடைய ஏக்கங்கள், தன்னுடைய குழந்தைகளை பார்த்தேயாக வேண்டும் என்ற பரிதவிப்பு போன்றவைகளை நண்பனிடம் சொல்லி ஆறுதல் அடைகிறான். தனக்கு வழங்கப் படும் உணவுப் பொருட்களை யாருக்கும் தெரியாமல் கடத்திக் கொண்டு வந்து அந்த கைதி நண்பனிடம் கொடுத்து சந்தோசப்படும் Framer, திடீரென்று ஒருநாள் அந்த கைதியே ஒன்றும் அறியாத 12 குழந்தைகளை குண்டு வைத்து கொன்றவன் என்று தெரிந்ததும், ருத்ரம் கொண்டு அவனைத் தாக்க தொடங்குகிறான். மனிதாபிமானம் நிரம்பித் தழும்பும் 22 வயதான இளைஞனாக Abu Ghraib என்ற பாலைவனச் சிறைக்கு ஆறுமாத பணிக்காலத்தில் வரும் Framer எப்படி யுத்தம் என்ற சதியில் மாட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலவே மிருகமாகிறான் என்பதை யதார்த்தத்தோடு சித்தரித்துக் காட்டுவதில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள் கதாசிரியரும் இயக்குனரும். 

ஒரு வருட பணிக்காலம் முடிந்து ஊருக்குத் திரும்பும் Framer தன்னுடைய காதலியைப் பார்த்து பூரித்தாலும், இயல்பான சமூகமொன்றின் உறுப்பினராக மாற முடியவில்லை. தன்னுள் மாட்டிக்கொண்டு தன்னையே ஆட்டிப்படைக்கும் அந்த யுத்த ராட்சசனை வெளியேற்ற முடியாமல், தன்னை உயிரென நேசிக்கும் காதலியிடம் முழுவதுமாக ஒப்புவிக்க முடியாமல் தடுமாறும் Framer இன்றைய அமெரிக்காவின் எடுத்துக்காட்டான இளைஞன். 

படத்தின் கடைசி காட்சி உண்மையிலேயே அதிர்ச்சி தரக்கூடியது. பன்முக அங்காடி ஒன்றிற்கு காதலியுடன் வரும் Framer, அங்கிருக்கும் டிவி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளில் தன்னுடைய முகம் தெரிவது கண்டு அதிர்ச்சியடைகிறான். Abu Ghraib சிறையில் மனித உரிமைகள் பாரியமான அளவில் மீறப்பட்டு வருவதாகவும், அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் மனிதாபிமானற்ற வகையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறும் அந்தச் செய்தி, சில புகைப்படங்களையும் ஆதாரமாக காண்பிக்கிறது. அதில் ஒன்றில்தான் Framer தன்னுடைய கைதி நண்பனை அவனுடைய மலத்தையே சாப்பிடக் கட்டாயப்படுத்திய புகைப்படம். 

தேசபக்தியை பிரச்சாரம் செய்து தன்னுடைய இளைஞர்களை பலிகடாக்களாக மாற்றும் அமெரிக்கா; மதத்தை காண்பித்து தன்னுடைய இளைஞர்களை பலிகடாக்களாக மாற்றும் இஸ்லாம் தீவிரவாதம். இங்கு மாட்டிக்கொண்ட இளைஞர்கள் என்னதான் செய்வார்கள்? கடைசியில் மனித உரிமைக் குழுக்களிடம் மாட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றில் வதைப்பவனாகவோ வதைபடுபவனாகவோ சிக்கிக்கொண்டு மனிதத்தை இழந்து நாயாகவோ நரியாகவோ திரிய வேண்டியதுதான்.

போங்கடா நீங்களும் உங்களுடைய நாகரிகமும்!

0 comments:

Post a Comment