நல் மேய்ப்பன் |
ஆசான் ஜெயகாந்தன் நேற்று இரவு [08-04-2015]
காலமாகி விட்டார். தமிழ் கூறும்
நல்லுலகில் எத்தனையோ ஆயிரம் பேருக்கு ஞானக்கண்களைத் திறந்து வைத்தவர். இந்த மாதிரியெல்லாம் புரைகண்ட சமூகத்தை
ஆத்திரமாகப் பார்க்க முடியுமா என்று என்னை மலைக்க வைத்தவர். ஆங்கில இலக்கியத்தின் மாணவனாக இருந்த என்னை, இன்றைய
தமிழில் படிக்க எதுவுமே இல்லை என்ற உறுதியில் இருந்த என்னை, அவரின் எழுத்துக்களை
நோக்கி திரும்பச் செய்தது மட்டுமன்றி, இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையிலும் அவர்
எழுத்துக்களை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்திருப்பது உலக இலக்கிய ஒப்பீட்டு
தரத்திலும் தனித்து விளங்குகின்ற அவரது கலா மேன்மையைத் தவிர வேறு என்னவாக இருக்க
முடியும்? “அந்த லாரியில் மொத்தம் ஏழு
பேர் இருந்தார்கள்” என்று அவருடைய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ துவங்கும். அந்த நாவலை ஒரு வருடம் முழுவதும் படித்துக்
கொண்டிருந்தேன். திரும்பத் திரும்ப. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தமும் அனுபவமும்
சாத்தியப்பட்டது பயம் கலந்த பிரமிப்பு.
அவரைப் பற்றி எழுதப்பட்டு, என் கண்ணில் விழுந்த
ஒவ்வொரு எழுத்தையும், பார்வை வந்த பிறகு தன்னுடைய காதலியைப் பார்க்க விரும்பும்
ஒருவனின் பிரியத்தோடு வாசித்திருக்கிறேன்.
அவர் எழுதியவைகளில் தொண்ணூற்று ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமாக
வாசித்திருப்பேன் என்றே நினைக்கிறேன்.
எனக்கு எழுத்தாளனாக முதலில் தெரிந்தவர், ஆசானாக மாறியவர், நண்பனாக தன்
எழுத்துக்களின் வழியே சம்பாஷித்தவர், தந்தையாக
வளர்த்தவர், நல்மேய்ப்பனாக வழிநடத்தியவர் -
இவர் நம்மிடையே இல்லாத வாழ்க்கையைத்தான் இனிமேல் வாழப்போகிறோம் என்பது புரிகிறபோது,
நித்தியத்தின் குறை உரைக்கிறது.
இன்று அந்திப்பொழுது முழுவதும் கனமான இதயத்தோடு அவரின் புத்தகங்களை ஒழுங்கின்றி புரட்டிக் கொண்டிருக்கிறேன். அவருடைய முன்னுரைகள் எப்போதும்போல என்னை கதிகலங்க அடிக்கிறது. இனிமேல் யார், கலங்கி நிற்கும் பொழுதுகளில், நம்மை கரையேற்றப் போகிறார்கள் என்று திகைக்கும் பொழுது, எப்படி இதுநாள் வரை என்னை தனது எழுத்துக்களின் வழியே திசை காட்டி வந்தாரோ அப்படியே இனிமேலும் தொடர்வார் என்ற உண்மை ஆறுதல் அளிக்கிறது.
இன்று அந்திப்பொழுது முழுவதும் கனமான இதயத்தோடு அவரின் புத்தகங்களை ஒழுங்கின்றி புரட்டிக் கொண்டிருக்கிறேன். அவருடைய முன்னுரைகள் எப்போதும்போல என்னை கதிகலங்க அடிக்கிறது. இனிமேல் யார், கலங்கி நிற்கும் பொழுதுகளில், நம்மை கரையேற்றப் போகிறார்கள் என்று திகைக்கும் பொழுது, எப்படி இதுநாள் வரை என்னை தனது எழுத்துக்களின் வழியே திசை காட்டி வந்தாரோ அப்படியே இனிமேலும் தொடர்வார் என்ற உண்மை ஆறுதல் அளிக்கிறது.
தமிழ் எழுத்துலகம் இனி தகப்பன் இல்லாத
வீடு. ஒவ்வொருவரும் அதிகப்பட்ட
பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார்கள்; நடந்து கொள்ள வேண்டும். தமிழ் கருத்துலகம், ராமசாமி நாயக்கருக்கு
அடுத்தபடியான, தனது கலகக்காரனை இழந்து நிற்கிறது.
நிறைய பேர் தடியெடுத்து தண்டல்காரனாக நிற்பார்கள். இவர்களிடம் பயந்து நடுங்காமல், ரௌத்திரம்
கொண்டு எதிர்ப்பதுதான் JK என்ற பிரியத்திற்குரிய கலகக்காரனுக்கு நாம் செலுத்தப்
போகும் வணக்கம்.
போய் வாருங்கள் JK!
அவருடைய வரிகளை, எனக்குப் பிடித்தவையை, மேற்கோள்
காட்டுவதில் கொஞ்சம் ஆறுதல்.
படியுங்கள்! JK யார் என்பது
புரியும்.
[1] உங்களை நான்
அறிந்ததை விடவும் சிறப்பாக என்னை நீங்கள் அறிவீர்கள். உங்களைப்பற்றி நான் அறிவது ஒரு பொது அறிவே ஆகும். என்னைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்வது உங்களது சிறப்பாக ஞான
மேன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. உங்களில் பலர் நேற்று இருந்தவர்கள்; இன்று பெருகி நிலைப்பவர்கள்; நாளை பிறக்கப் போகிறவர்கள். உங்களின் இந்தத் திரிகால மேன்மையின் மீது நம்பிக்கை வைத்தே எனது இயக்கம் இங்கு
தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் இடையே புரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம்; ஆனால் பொய்யான விஷயங்கள் என்று ஒன்றும் நம்மிடையே கிடையாது.
[2] நான் சிறு கதைகள் எழுதாதது பற்றிப் பலரும் கவலை தெரிவிக்கிறார்கள். அது மாத்திரம் அல்ல; வேறு பலர் எழுதுவதற்காகவும் அவர்கள்
என்னிடம் வந்து கவலை தெரிவிக்கிறார்கள். இது மிகவும் அர்த்தமுடையதுதான். என்னைப் பற்றிய இவர்கள் கவலை நான் கதை எழுதாதது குறித்துத்தான் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
[3] நேர்மை, நாணயம் (integrity) என்பது எல்லா அந்தஸ்துகளிலும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். இந்த நாணயத்தை இழப்பதற்குச் சமூகமும், சூழ்நிலையும், தன்னைத் தவிர, எல்லாருமே காரணம் என்று ஒருவன் சொல்வது உண்மையாகக் கூட இருக்க முடியும். அந்த உண்மையை ஒப்புக்கொள்ளுமிடத்து இவ்வாறு காரணங்காட்டுகிற மனிதன் இவற்றை எதிர்த்துத் தன்னளவில் கூட
வெல்ல முடியாத மன -பலவீனன் என்பதை நாம்
கவனித்தல் வேண்டும்.
[4] நான் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை.
எனது எழுத்துக்கள் எனது திறமைக்கு மட்டும்
சாட்சியாகி விடுவதில்
எனக்குச் சம்மதமில்லை. எனது மேன்மைக்கு, எனது நேர்மைக்கு அவை அடையாளமாகத் திகழ வேண்டும். பிறரை
மகிழ்விக்ககிற வேடிக்கைக்காரனாய் நான் ஆகிவிட முடியாது. எனது பொறுப்பை நான் உணர்வதே எனது சமுதாயப் பொறுப்பு. இந்த பொறுப்புகள் எனது 'கமிட்மென்டு'களால் நானே ஏற்படுத்திக் கொண்டவை.
[5] நான் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போது நான் எழுதாத,
எவ்வளவோ பாத்திரங்கள் என்னோடு சேர்ந்து உங்களிடமிருந்து விடை பெற்றுக்
கொள்வார்கள். இதை நீங்கள்
அறியமாட்டீர்கள் என்பதால் உங்களுக்கு வருத்தம் இல்லை. இதை
அறிந்திருக்கிற நான் இதன் பொருட்டு, சில சமயங்களில் வருந்துவதும் உண்டு. அவர்களை நான் உருவாக்கி விட்டுவிடுவேனேயானால் அவர்கள் உங்களோடு
நிரந்தரம் கொண்டு
விடுவார்கள். அப்படியில்லை
என்றால் அது அவர்களின் பொறுப்பேயாகும்.
[6] பெண் எதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும்,
ஆண் எதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து கொண்டிருந்தால்தான் பெண்
வர்க்கமும் திருப்தியுறும்.
[7] ஆக்கிரமிப்பு என்பது அதிக துன்பத்தை ஆக்கிரமிக்கப் பட்டவரைப்
பார்க்கினும், ஆக்ரமித்தவனுக்கே இழைத்துவிடுகிறது.
[8] சட்டங்களும் சமுதாயங்களும் சாஸ்திரங்களும் மதங்களும் அரசியலாரும் மகான்களும் மட்டும்தான் இந்த
ஆக்கிரமிப்புகளை, பலாத்காரங்களைக் கைக்கொண்டுள்ளனர் என்பதில்லை; அன்புள்ளம் கொண்ட அன்னையரும், நமக்காகவே உயிர் தரித்திருக்கின்ற நமதருமைக் காதலிகளும், காதலர்களும், கணவர்களும் மனைவியரும் - தங்களுக்காகக் கூட அல்லாமல் அந்தந்த மறுதரப்பாரின் நலனுக்காகவே என்கிற நம்பிக்கையில் இந்த
ஆக்கிரமிப்பையே, இந்த மனோ-பலாத்காரத்தையே காதல் என்றும், அன்பு என்றும், கடமை என்றும், பக்தி என்றும், பண்பு என்றும் கருதி அமைதியையும் நிம்மதியையும்
இழந்த நிராசைகளை அறுவடை செய்து கொள்ளுகிறார்கள்.
[9] என் கதைகளின் மீது தர்க்கம் தொடங்க நிறைய இடம் இருக்கிறது. தர்க்கத்துக்கும் விவாத
விமர்சனங்களுக்கும் இடம் அளிக்கிற கதைகளை நானே நிறைய எழுதுகிறேன் என்பதில் எனக்கு நிறைவு ஏற்படுகிறது.
[10] நான் சமீபத்திலே
நடந்த ஒரு கருத்தரங்கிலே சொன்னேன்: தான் தமிழில் ஒன்றும் படிப்பதில்லை என்று. நான்
கற்றவர்கள் மத்தியில் பேசுகிறேன் என்ற நம்பிக்கையில் அவ்வாறு கூறினேன். நான்
அதை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும்.
I have nothing to study in Tamil என்று
இதற்கு அர்த்தம். சாரமற்ற வம்புகளும் சத்தில்லாத பொழுதுபோக்குக் குப்பைகளும்
தமிழில் மலிந்து
வருகின்றன என்பதை (அவற்றைப் படித்துத்தான் சொன்னேன்) இங்கேத்
தமிழில் படிக்க
எதுவுமில்லை என்று. சோஷலிசத்தையும் மார்சீயத்தையும் கோடா நாம் ஆங்கிலத்தில்தான்
கற்க முடிந்தது.
நான் சந்தித்த -
என்னை உருவாக்கிய கம்யூனிஸ்டுகள் எலாம் அறிவுபூர்வமான எல்லா விஷயங்களையும் என்னோடு
ஆங்கிலத்தில்தான் விவாதித்தார்கள்.
நான் இந்தியர்களான விவேகானந்தரையும் காந்தியையும் நேருவையும் ஆங்கிலத்தின் மூலம்தான் அறிந்தேன்.
நான் இந்தியர்களான விவேகானந்தரையும் காந்தியையும் நேருவையும் ஆங்கிலத்தின் மூலம்தான் அறிந்தேன்.
ஆங்கிலத்தை இன்னும்
தமிழர் வாழ்க்கை ஒதுக்கிவிடவில்லை. அறிவியல் வாழ்க்கையால் முதல்தர அறிவுஜீவிகளால்
ஆங்கிலத்தை ஒதுக்கி விடவும் முடியாது. வளர்கிற வர்க்கம் மொழியில் இத்தனை
சனாதனம் கொள்ளுவதில்லை.
தமிழில் பத்திரிகை
ஆதிக்கத்தை மீறி நேரடியாக நூல் ஆசிரியர்களால் மக்களோடு தொடர்பு கொள்ளுவதற்கு வசதியாகப் புத்தக
விற்பனையைப் பெருக்குவதற்கு யோசனை கேட்டுக் கூடிய கருத்தரங்கில்
பொருத்தமான, உபயோகமான
ஒரு கருத்தினை நான் கூறினேன்.
'அப்படியானால் ஏன்
தமிழில் மாத்திரம் கதையை எழுதிக் குவிக்கிறீர்கள்? எனத் தமிழ் மகன் வினா எழுப்பினால் என்ன
சொல்வாரோ அவர்' என்று
இவர்கள் தமிழ்ப் பற்றுக் கேடயத்தோடு என்னை மடக்கிவிட்டார்களாம், மடக்கி.
பதில் சொல்கிறேன்: தமிழில்
படிப்பதற்கு ஒன்றுமில்லை என்று என்னைப்போல எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
தெரியுமா? அவர்களையெல்லாம்
படிக்க வைப்பதற்குத்தான்
நான் தமிழில் எழுதுகிறேன்.
[11] இந்த சமுதாயத்தை
என் எழுத்து கெடுத்துவிடும் என்ற குற்ற உணர்வு எனக்கு இல்லை. புதிதாகக் கெடுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. எனது எழுத்துக்களைப் பாடப் புத்தகமாக வைக்கச் சொல்லி நான்
மனுப்போடவில்லை. எனது எழுத்துக்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் பள்ளிகளுக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை என்று சொல்லுகிறேன்.
[12] நான் உன்னில் ஒரு அங்கம்தான். ஆனால் நான் உன்னோடு அழிகிற அங்கம்
இல்லை. உன்னை அழித்து இன்னொன்றை உருவாக்குகிற
அங்கத்தின் அம்சம். இருக்கும் உன்னோடு எனக்கு இருக்கும் உறவைவிட இனி உருவாகப் போகும் அதற்கும்
எனக்கும் நெருக்கம்
அதிகம். நான் அப்போது
இல்லாமற்கூட போகலாம். ஆனால் நான் பிரதிநிதித்துவம் கொள்கிற அந்த ‘நான்’ ஓர் அங்கமாக இருக்கும்.
[13] சமுதாயம் என்னைத் தூக்கி எறிந்து விடும் என்ற பயம் எனக்கு இல்லை. என்னை எதிர்த்து வருகிற கூக்குரல்களில் தூக்கி எறியப்படப் போகிற ஒரு
சமுதாயத்தின் மூர்க்கமான
அலறலையே நான் கேட்கிறேன்.
[14] நான் கண்டதை – அதாவது உலகத்தால் எனக்குக்
காட்டப்பட்டதை, நான் கேட்டதை – அதாவது வாழ்க்கை எனக்குச் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன்.
அதையே திரும்பவும் உங்களிடம் சொல்லுகிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக அல்லது அதுவே உயர்வாக,
உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்?
[15] எந்தத்
தேசத்திலும் எந்த நாகரிகமும் ஒழுக்கக்கேட்டை அடித்தளமாகக்
கொண்டிருக்க முடியாது என்று அறிந்துணர்வதற்கே
ஓர் ஒழுக்கம் தேவை; ஒரு நல்ல உள்ளம் தேவை. ஒவ்வொரு தேசத்துக்கும், ஒவ்வொரு
காலத்துக்கும் ஒவ்வொரு ஒழுக்கம் இருந்திருக்கிறது என்பதுதான் சரியே ஒழிய, ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒழுக்கங்களை ஒழுக்கக்கேடுகள் என்று முடிவு கட்டுவது ஒருவகைத்
தீயொழுக்கம்.
[16] இந்த இரண்டுங்கெட்ட தன்மை தனிமனிதர்க்கு மட்டும் உரிமையானதல்ல;
சமூகத்துக்கும் உண்டு.
சட்டமும் உலகமும் அனுமதித்த ஒரு விஷயத்தைக் கூட
ஒரு குறுகிய சமூகம் வெட்கம் இல்லாமல்
பார்த்துச் சிரிக்கும். தணி மனிதனின் நிம்மதியையும் சுதந்திரத்தையும் பாதிப்பதற்காகவே தடுப்பதற்காகவே,
கேலி பேசி அவதூறு புரிவதற்காகவே சமூகத்தின் அழுகிய ஒரு பகுதியை அது உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த அழுகிய பகுதியே காலத்தால்
கழித்தொதுக்கப்பட்ட அநாகரிகப் பண்பாடுகளைக் கொடி பிடித்துக் காக்க வரும்.
[17] நம்மில் பல அறிவாளிகள் சமத்துவம், சுதந்திரம், பெண் உரிமை என்னும் நயத்தக்க நாகரிகப் பண்பாடுகள் யாவும் சமூக
நெறியாக மட்டுமே உபதேசிக்கப்பட வேண்டியவை என்று முடிவு கட்டிவிட்டே வாழ்ந்து வருகிறார்கள் என்று எனக்குப்
படுகிறது. சமூகக்
கண்ணோட்டத்தில் நயத்தக்க நாகரிகமாகப் படுகின்ற இதே பண்பாடுகள் குடும்பத்துள் பிரவேசிக்கும்போது அவை
குடும்பம் என்கின்ற கோயிலின் புனிதத் தன்மையைப் போக்கிக் குலைத்துவிடும் நாசப் போக்குகளாய் அவர்களது
குறுகிய கண்ணோட்டத்தில்
கொச்சைப்பட்டும் போகின்றன.
[18] எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின் மீது எனக்கு இருக்கும் பிடிப்பின் காரணமாக, பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன். அவ்வாறு எழுதுகையில் அந்த எழுத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய,
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற உக்கிராணத்தனமான பரீஷையை
இலக்கிய விவகாரங்களில் பிரயோகித்து எங்கோ ஒரு வரியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஏதேனும் அவசர முடிவுக்கு
வந்து, அதை நேரடியாகவும் பேசித் தீர்த்துக்
கொள்ளாமல் வெறும் ‘அக்கப்போர்’ அபிப்பிராயங்களைப் பரப்பிக் கொண்டிருப்பது அழகாகாது.
[19] நமது சமூகத்தில் ரொம்ப மூடர்கள் கற்பு என்பதற்கு இன்னதென்று விளங்காத எத்தனையோ குழப்பமான அர்த்தங்களை
வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் மனைவி தன்னைத் தவிர இன்னொருவனை நினைத்துக்கூடப் பார்த்திருக்க
மாட்டாள் என்று
நம்புவதில் சந்தோசம் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தத் தங்களது குருட்டு நம்பிக்கைக்குப் பங்கம் விளைந்துவிடக் கூடாதே என்று
உள்ளூரப் பயந்து பயந்து
செத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவள் பிறக்கும்போதே தமது மனைவியாகப் பிறக்கவில்லை என்ற
உண்மை அவர்களுக்கு நினைவில் தோன்றுவதே இல்லை. தன்னை யாரென்று தெரியாமல் இருபது வயதுவரை வளர்ந்து பெண்ணாகி, பெண்ணான பின்பும் வளர்ந்து இன்று தனக்கு மனைவியாய் வந்திருப்பவள்
அவள் என்பதை எண்ணிப் பார்க்கவே அவர்கள்
தயாராய் இல்லை. அந்த உண்மை தங்கள் குருட்டுத்தனமான நம்பிக்கையைக் குலைத்துவிடுமோ என்ற அச்சமே அதற்குக் காரணம்.
[20] ஒரு வேசியை ஊர் கூடிக் கல்லெறியும்போது ‘எவன் பாபம் செய்யாதவனோ அவன் இவள் மீது கல்லெறியட்டும்’ என்று கூறிய
அந்தக் கடவுளின் தூதன் ஒழுக்கக்கேட்டையா பிரச்சாரம் செய்தான்? அவன் பேச்சால்
தமது பண்பாடே கெட்டுப்போகும் என்று அவனைச் சிலுவையில் அறைந்த மூடத்தனம் இன்னும் நம்மைவிட்டு அகலவில்லையா
என்ன?
[21] அகலிகையாகட்டும்,
சீதையாகட்டும், அல்லது எனது ‘அவளே’யாகட்டும், கறைபட்டார்களா இல்லையா என்பது கறைபட்ட
நெஞ்சங்களுக்கே உரிய பிரச்சினை. அவர்கள் தங்களது அசட்டுத் தனத்தாலோ பேதமையினாலோ தங்களுக்கே ஒரு பிரச்சினையாகிப் போனார்களே அதுதான்
இதிகாசப் பிரச்சினை, இலக்கியப் பிரச்சினை, இக்காலப் பிரச்சினையும் கூட.
[22] இலக்கியத்தில் ஈடுபாடில்லாதவர்கள் இலக்கிய ஆசிரியர்களின் பெருமையை உணராதிருப்பது பொருட்படுத்தத் தகுந்த
விஷயமல்ல. ஆனால், இலக்கியத்தின் மீது மாளாத காதல் கொண்டு விட்டதாக மடலூர்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த மொழிக்காக, இந்தக் கலாச்சாரத்துக்காக சர்வபரித் தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்கள் போல காட்டிக்
கொள்பவர்கள்கூட இலக்கியத்தின் தலைவிதியை எழுதுபவனை எதோ கிள்ளுக்கீரை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
[23] இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி. இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி. நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.
[24] காதல் என்பது
பருவக் கிளர்ச்சியோ, உருவக் கவர்ச்சியோ மட்டுமல்ல. வாழ்க்கையில் கௌரவமாக நிலவுகின்ற ஓர்
உணர்ச்சியை நமது கதைகளும் நமது கலா முயற்சிகளும் தரம் குறைத்துத் தாழ்த்தி வைத்துவிட்டன. அவற்றின் பாதிப்பால் வாழ்க்கையிலும், சில சமயங்களில், சமீப காலமாய்ப் பல சமயங்களில் –
அது தரம் குறைந்து தாழ்ந்து போய் விடுகிறது. இது போன்ற சூழ்நிலையிலும் கூடக் கௌரியைப் போன்ற, முதலியாரைப் போன்ற சில
பரகசிக்கப்படத்தக்க மனிதர்களிடையே உருவான கௌரவமான காதலையும் நான் கண்டிருக்கிறேன். மனிதக் காதலென்பது வெறும் உடல் உணர்ச்சி உந்துதலினால் மட்டும்
பிறப்பது அன்று. அதற்கு வேறு சில அடிப்படைகளும், சமூகப் பொருளாதார, மனோதர்மக் காரணங்களும் உண்டு.
[25] ஒழுக்கமும் – ஒழுக்கமின்மையும் தனிப்பட்ட
உறவுகளில்தான் பெரிய பாதிப்பையும் சோகத்தையும் விளைவிப்பன. சமுதாய வாழ்க்கையிலும், இலக்கிய
உலகிலும் அவை அரிவாளைத்
தீட்டிக் கொண்டு போகிற ஒரு மூடப் புருஷனைப் பாதிக்கிற அளவு பாதிப்பதில்லை.
[26] இலக்கியத்திற்கு ஒரு நோக்கமுண்டு என்று நம்புகிறவர்களுக்கு, ‘வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு எனது
முன்னுரைகள் ஓரளவு பயன்படும். இதை மறுப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் மட்டுமல்ல, எனது எழுத்துக்கள் அனைத்துமே பயனற்றுப் போவது குறித்துக்கூட எனக்குக் கவலை இல்லை.
[27] பொதுவாக வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது என்பது ஒரு புரியாத சூத்திரம்
அல்ல. சிக்கல் மிகுவதனாலேயே வாழ்க்கைக்கு ஒரு
அர்த்தமும், அதன் மீதொரு பற்றும் நமக்கு அதிகரிக்கிறதென்பது சற்றுச்
சிந்தித்தால் புரிகிற விஷயம். எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சினையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும், மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த்தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு
வெறியோடு வாழ்ந்து
அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத்தக்க ஒரு ஞானம்.
[28] இலக்கியம் பற்றிய எனது பார்வையிலும் சரி, என் படைப்புகளிலும் சரி, தவறுகள் இருக்கலாம்! இருக்கும். அவை சுயமான தவறுகளாகவும் புதுமையான தவறுகளாகவும் இருப்பதிலேயே நான் மகத்தான
திருப்தியுருகிறேன்.
[29] நான் பெரிதினும் பெரிதையே நாடுபவன். எனக்குத் திருப்தி ஏற்படவே முடியாது.
[30] எதுவும் வானத்திலிருந்து குதிக்காது; குதித்ததும் இல்லை. மண்ணில், மனிதனால்தான் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தேவனும் மனித உருவில்தான் வருவார்,
சகல தத்துவார்த்திகளும், அவதார புருஷர்களும், மெய்ஞ்ஞானிகளும்
தாயின் கருவில் உதித்துப் பிறந்து, முளை சுவைத்து, புழுதியளைந்து விளையாடி வளர்ந்த குழந்தைகளாய் இருந்தவர்கள்தான்.
[31] எனக்கு எது சிறப்பு என்று தோன்றுகிறது அதைத்தான் – அதை மட்டும் – நான் செய்கிறேன். எனது செயலாற்றலில் உள்ள அந்தரங்க சுத்தியைப் பற்றி இன்னொருவரிடம் பறையடித்துக் கொள்ள
வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அதைப் பிறர் உணர்வதுதான் சிறப்பு.
0 comments:
Post a Comment