மூன்று பேர்களை உளவு பார்க்க அனுப்பி, ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல், அந்த
மூவரும் ஒரே மாதிரியான உளவுச் செய்தியை சொல்வார்கள் என்றால், அந்த உளவு உண்மை
என்று அறிக – என வள்ளுவம் சொல்கிறது.
அரசர்களுக்குள் அரசுகளுக்கும் உளவு உணவு போன்ற ஒரு ஜீவனான அம்சம். போர்கள் ஆயதங்களால் வெல்லப்படுவது எவ்வளவு
உண்மையோ, அவ்வளவு உண்மை அவைகள் உளவால் வெல்லப்படுவதும். உளவாளிகள் பற்றிய பிம்பம்
குழந்தைகள் – இளைஞர்கள் உலகத்தில் மிகவும் பிரசித்தம்.
இரும்புக் கை மாயாவி முதல் ஜேம்ஸ் பாண்ட் ஈறாக, கதைகளும் திரைப்படங்களும்
நம்முள் நிறுத்தும் உளவாளிகள் பல ரகம். பல
பெண் தோழிகளுடன் உல்லாச வாழ்க்கையில் பெரு விருப்பம் கொண்ட ஜேம்ஸ் பாண்ட், தனது உளவுக்
கடமைகளை ஒரு வித அனாயசத்துடன் செய்து முடித்து விட்டு, மிச்சமிருக்கும் வேலைக்காக
காதலியிரிடம் காணாமல் போவார். பிரிட்டிஷ்
அதிகாரிகள், அவர் தற்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார் என்று யோசித்து, கலங்கிப்
போவார்கள்.
THE IMITATION GAME என்றொரு திரைப்படம் 2014-ல் வெளிவந்தது. அந்த வருடத்தின் மிக முக்கியமான படம் இது
என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டாம் உலகப்
போரின் ஆரம்ப வருடங்களில் நேச நாடுகள் அடைந்த படுதோல்விகள் பலவற்றுக்குப் பின்னால்
அவர்களின் உளவுத் தோல்விகள் உள்ளன. நாஜிப்
படையினர் தினந்தோறும் மில்லியன் கணக்கான ரகசிய சங்கேதங்களை தமது Enigma என்ற
இயந்திரத்தின் மூலம் தங்களுக்கிடையில் அனுப்பிக் கொண்டிருக்க, அந்த சங்கேத
குறியீடுகளை இடைமறிக்க நேச நாடுகளால் முடிந்தாலும், அவற்றை செய்திகளாக
தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
ஒருவேளை அந்த சங்கேதக் குறியீடுகளின் மர்மத்தை உடைக்க முடிந்தால், யுத்தமே
சில வருடங்கள் முன்னமேயே முடிந்துவிடக் கூடிய வாய்ப்பும் உண்டு.
இது குறித்து பெரும் கவலை கொண்ட பிரிட்டன் அரசாங்கம் நாஜிப் படையினரின் Enigma
இயந்திரம் அனுப்பும் ரகசிய சங்கேதங்களை உடைத்தெறிய ஒரு வல்லுநர் அணியை
உருவாக்குகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்
கழகத்து பேராசிரியரான ஆலன் டுரிங் [Alan Turing] அந்த அணிக்கு வந்து சேருகின்றார். அதி பெரும் புத்தி ஜீவிக்கு உரிய அனைத்து
வினோதமான குணங்களும் ஆலன் டுரிங்கிற்கு உண்டு.
இந்த திரைப்படம் கால ஓட்டத்தில் மூன்றாகப் பிரிந்து அவை ஒன்றுக்கொன்று
முன்னும் பின்னும் நகர்ந்தபடி உள்ளன.
முதல் கட்டத்தில் ஆலன் டுரிங் பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருக்கும் ஒரு
உளவுக் குறியீடு உடைப்புக் குழுவின் தலைவர்.
ஒரு மேதைக்கே உரிய அத்தனை அடாவடிக் குணங்களும் ஆலன் டுரிங்கிடம் நிரம்பவே
குவிந்துள்ளன. சமூகத்தோடு ஒவ்வாமை, ஒரு
அணியின் இணக்கமான உறுப்பினராக இருக்க முடியாமை, மற்றவர்களின் மனம் புண்படும்
படியாகவே எப்பொழுதும் நடந்து கொள்வது, தன்னுடைய பனியின் தன்மையை மற்றவருடன்
பகிர்ந்து கொள்ளாமை, அந்தக் கால சமூகத்தின் விழுமியங்களுக்கு புறம்பான சில மர்மமான
நடத்தைகள் மற்றும் தனிமை விரும்பி என்ற குணங்கள் ஆலன் டுரிங்கிற்கு உடையவை. இந்தக் காரணங்கள் அணியின் மற்ற
உறுப்பினர்களுக்கும், பிரிட்டிஷ் ராணுவத் தலைமைக்குமே கூட பெரிய தலைவலியாக
நீடிக்கிறது.
இப்படத்தின் இன்னொரு காலகட்டத்தில், அதாவது 1928ம் ஆண்டு வாக்கில், ஆலன்
டுரிங் ஒரு பள்ளி மாணவனாக காண்பிக்கப் படுகிறார்.
அந்து மற்றவர்களிடம் இருந்து தனியான தன்மைகளோடு காணப்படுவதால் மட்டுமே
அவர்களால் தொந்தரவுக்கு உள்ளாகிறான்.
பள்ளியில் அவனுக்கிருந்த ஒரே நண்பன் கிறிஸ்டோபர் மார்க்கம் [Christopher
Morcom]. பிந்தைய ஒரு வருடத்தில் நாஜிப்
படையினரின் ரகசிய சமிக்ஞைகளை அனுப்பும் Enigma என்ற இயந்திரத்திற்கு நேச நாடுகளின்
பதிலாக தான் உருவாக்கும் இயந்திரத்திற்கு தன்னுடைய நண்பனின் பெயரையே
சூட்டுகிறான்.
இப்படத்தில் வரும் மூன்றாவது காலப்பிரிவு 1951 வாக்கில் நடப்பதாக
அமைந்துள்ளது. மான்செஸ்டர் நகரில்
இருக்கும் ஆலன் டுரிங்கின் வீடு உடைக்கப்பட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் காவல்
துறையிடம் புகார் கொடுக்க, விசாரிக்க வரும் காவல் துறையினரிடம், அப்படி ஒரு
சம்பவமே நடக்கவில்லை என்று மறுக்கிறான் ஆலன் டுரிங். இந்தப் பதிலின் மர்மத்தால்
உந்தப்படும் காவல் துறை புலனாய்வாளர் ராபர்ட் நாக் [Robert Nock] ஆலன் டுரிங்கைப்
பற்றிய விடயங்களை கிளற ஆரம்பிக்கிறார்.
இருபதாயிரத்திற்கும் மேலான நபர்களை சிறையில் தள்ளிய பிரிட்டன் ஓரினச்
சேர்க்கையாளர் தடுப்பு சட்டம் ஆலன் டுரிங்கையும் சிறையில் தள்ளுகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் ஆலன் டுரிங் தனது
நாற்பத்தோராவது வயதில் தற்கொலை செய்து கொள்ளுகிறான்.
இதில், இரண்டாவது காலகட்டம் மிகுந்த விசேஷங்கள் கொண்டது. தனது குழுவினருடன் இரவு பகலாக கிறிஸ்டோபர் என்ற
இயந்திரத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடுகிறான் ஆலன் டுரிங். ஒரு இயந்திரத்தின் ரகசியங்களை இன்னொரு
இயந்திரத்தாலேயே அறிய முடியும் என்று நம்பும் ஆலன் டுரிங், தன் மீது அவநம்பிக்கை
கொள்ளும் உயரதிகாரி, மற்றும் சக குழு உறுப்பினர்கள் இவர்களுடன் போராடிக் கொண்டே
தன்னுடைய இயந்திரத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறான். இந்த அணியின் புதிய உறுப்பினராக சேரும் இளம்
பெண்ணான ஜோன் கிளார்க் [Joan Clarke] குழுவிற்கு சிறப்பான ஒரு புதிய வரவு மட்டுமன்றி,
குழுச் சூழலில் மற்றவர்களிடம் எப்படி இணக்கமாக நடந்து கொண்டு அவர்களின் பங்களிப்பை
பெரிய அளவிலே பெற முடியும் என்பதை ஆலன் டுரிங்கிற்கு கற்றும் தருகிறாள். ஆலன் டுரிங்கின் மேதமையின் மீது ஜோன் கொள்ளும்
வியப்பு அவன் மீது காதலாக மாறுகிறது. ஒரு
மேதையின் அத்தனை தடுமாற்றங்களோடு அவளைத் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம்
தெரிவிக்கும் ஆலன் டுரிங் தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பது அவளுக்கு தெரிய
நேரிடின், தான் அடையப் போகும் அவமானம் பற்றி பெரும் தடுமாற்றம் அடைகிறான். சம்பவங்கள் கட்டாயப்படுத்தும் ஒரு நேரத்தில்,
அவளிடம் இதை வெளிப்படையாக சொல்லவும் செய்கிறான்.
இதைக் கேட்டு சற்றும் வியப்படையாத ஜோன், ‘நீ ஓரின
சேர்க்கையாளன் என்பது நமது காதலுக்கோ திருமணத்திற்கோ எந்த தடையையும் ஏற்படுத்தி விடவில்லை’ என்று
சொல்கிறாள். கற்றோரை கற்றோரே காமுறுவர்
என்ற பின்னணியில் ஜோன் கிளார்க்கை நாம் புரிந்து கொள்ள முடியும். அவளின் தீவிரத்தால் உணர்வு ரீதியாக
மூர்ச்சையடைவதே போன்ற நிலைக்கு ஆளாகும் ஆலன் டுரிங், ஜோன் கிளார்க்கின் காதலை
தாட்சண்யம் இல்லாமல் தவிர்க்கிறான்.
ஒரு கட்டத்தில் இவர்கள் கட்டமைத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்டோபர் என்ற
இயந்திரம், குறுக்கெழுத்துப் போட்டி தொடர்பான சம்பாஷனை ஒன்றின் மூலமாக வெற்றிகரமாக
தனது செயற்பாட்டினைத் தொடங்குகிறது.
[இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றியமைத்த ஒரு மாபெரும் தருணம் அது
என்று இன்றைய ராணுவ அரசியலின் மேதைகள் அனைவரும் ஒருசேரக் கொண்டாடுகிறார்கள்.] போரின்
முடிவில், இந்தக் குழுவின் ராணுவத் தலைமை அவர்களிடமிருக்கும் அத்தனை ஆவணங்களையும்
அழித்து விடச் சொல்வதோடு மட்டுமல்லாமல் போரின் முடிவில் அந்த அணியைக் கலைத்து,
உறுப்பினர்கள் எவரும் சாகும் வரை அடுத்தவரை சந்திக்கவே கூடாது என்ற நிபந்தனையின்
அடிப்படையில் வேறு வேறு பூகோள புள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறது.
ஆலன் டுரிங், கைது செய்யப் படுவதற்கு முன், மனநிலை பிறழப் போகும் விளிம்பில்
தான் இருப்பதை உணர்கிறான். கிறிஸ்டோபரை
வளர்த்தெடுப்பது மட்டுமே அவனது ஒரே குறிக்கோள்.
[இன்றைய கம்ப்யூட்டரின் ஆதிகர்த்தா, ஆலன் டுரிங்கின் கிறிஸ்டோபர் என்பது
கூடுதல் தகவல்.] ஓரினச் சேர்க்கை என்ற “நடத்தைப்
பிறழ்வை” சரிக் கட்டுவதற்காக மருத்துவர்களால் கட்டாயமாக அவனுள் செலுத்தப்படும்
ரசாயனங்கள் அவனுடைய உடலையும் உறுதியையும் உடைத்து நொறுக்குகின்றன. ஒரு தனியனாக
மாறி, சமூகத்தில் வேறு எவரோடும் உறவுகொள்ள முடியாத மனப்பிறழ்வில் தவிக்கும் ஆலன்
டுரிங்கை சந்திக்க வருகிறாள் ஜோன்.
அவளுடைய கல்யாண விரலில் புதிய மோதிரத்தை காணும் ஆலன் டுரிங், தன்னுடைய
மகிழ்ச்சியை அவள் மட்டுமே கண்டறியும் வகையில் மிக மெல்லிய முறுவல் ஒன்றின் மூலம்
தெரிவிக்கிறான். யாருமே காப்பாற்ற முடியாத
விளிம்பு ஒன்றில் அதி பயங்கரமாக ஊசலாடும் ஆலன் டுரிங்கை கண்ணுறும் ஜோன், கண்ணீரோடு
விடைபெறுகிறாள்.
இந்த மொத்தக் கதையும் புலனாய்வாளர் ராபர்ட் நாக் அவர்களிடம் ஆலன் டுரிங்,
சிறையில் வைத்து சொல்வதாக அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின்
உலகப் புகழ் பெற்ற கணிதவியல் பேராசியருக்கு, அவரின் உதவியால் மட்டுமே வெற்றி கண்ட
தேசம் வழங்கிய பரிசு, ‘ஓரினச் சேர்க்கையாளர்’ என்ற ஒரே காரணத்திற்காக, சிறை தண்டனைதான். நன்றி கெட்ட சமூகத்தில்தான் ஒருவன் வாழ வேண்டி
இருக்கிறது என்பதையும், உலகத்தோடு ஓட்ட ஒழுகா விட்டால் மேதைகளுக்கும் வாழ்க்கை
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் என்பதையும் நமக்குச் சொல்லுகின்ற இந்தப் படம்,
அதே சமயத்தில் இத்தகைய அருவருப்புத் தரும் சமூக கட்டுப்பாடுகளை மேதைகள் உடைத்த
வண்ணமே உலகத்தை உய்விக்கச் செய்து கொண்டிருப்பார்கள் என்ற உண்மையையும்
உணர்த்துகிறது. இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்
வேளையில், இன்று தினசரிகளில் ஜப்பானின் பிரபல நடிகை ஒருவர் தனது தோழியை திருமணம்
செய்துகொண்ட புகைப்படம் ஒன்றையும், அதை அந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரித்துள்ள
செய்தியையும் கண்ணுற நேர்கிறது. மானுட
வாழ்வின் அந்தரங்கமான பிரதேசங்களில் அரசு அத்துமீறி நுழையும் பொழுது, சாதாரணர்கள்
மட்டுமல்ல மேதைகளும் கூட தற்கொலையிடம்தான் தங்களின் விடுதலையைத் தேட வேண்டி
இருக்கிறது என்பது எத்துணை கொடுமையானது! இந்தப்
படத்தை பார்க்காமலிருப்பது, அப்படி ஒரு தேர்வை செயற்படுத்துபவரின் ஈடுகட்டவே
முடியாத நட்டமாகும்.
ஆலன் டுரிங்காக Benedict Cumberbatch, ஜோன் கிளார்க்காக Keira Knightley
நடித்திருக்கிறார்கள். இயல்பான நடிப்பு
என்றால் என்ன என்பது பற்றி இவர்களிடம் உலக நாயகர்களும் உள்ளூர் நாயகர்களும் தெரிந்து
கொள்ளலாம். திரைப்படம் ஒன்று சமூக
மனசாட்சியை தட்டி எழுப்ப முடியுமா என்ற கேள்விக்கு பதில் இந்தப் படம்.
0 comments:
Post a Comment