நான் வாசிக்கத் தொடங்கியது, அந்தப் பழக்கம்
தீவிரமாக வளர்ந்தது என்பதெற்கெல்லாம் காரணம், வீட்டில் எப்பொழுதும் இருந்து வந்த
வாரப் பத்திரிகைகளும் மற்ற வகையான சஞ்சிகைகளும்தான். அம்புலி மாமா, பொம்மைவீடு, பூந்தளிர், குமுதம்,
விகடன் போன்ற பத்திரிகைகளில் காணப்படும் வெகுஜன எழுத்துதான் எனக்கு அறிமுகமான,
பாடப் புத்தகங்களைத் தவிர்த்ததான, முதல் படைப்பு மொழி என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை. எப்பொழுதாவது கையில் கிடைக்கும்
சிறு பத்திரிகைகளில் காணக் கிடைக்கும் மொழிநடை என்னுடைய புரிதலைத் தாண்டி
நின்றவை. அத்தகைய பத்திரிகைகளைப்
படிப்போர் “பெரிய அண்ணன்களாகவும், அக்காள்களாகவும்” மனசில் விசுவரூபம் எடுத்து
நின்றனர். ஆனால், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளோ,
சிற்றிதழ்களில் காணப்படும் மொழிநடையை கிண்டலடித்துக் கொண்டே இருந்தன. அரசு கேள்வி பதில்களில் கூட அடிக்கடி இத்தகைய
எழுத்து முறைமை கேலி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் கிண்டல்களும் கேலிகளும் என்னை
சந்தோஷப்படுத்தவே செய்தன. எனக்குப்
புரியாததை குமுதமும் கிண்டலடித்ததால், குமுதம் எனக்கு மிகவும் பிடித்துப்
போனது. எனது பதின்மத்தில், குமுதம் ஒரு
பொழுதும் வாசிப்புச் சலிப்பை தந்ததில்லை.
பிந்தைய வருடங்களில், பிரமை கலைந்து, “பெரிய
விஷயங்களை” எல்லாம் படிக்க ஆரம்பித்த பிறகு, குமுதமும் விகடனும் எனக்கு தானாகவே தாங்க
முடியாத சலிப்பைத் தந்ததுதான் ஆச்சர்யம்.
இரண்டொரு நாட்களுக்கு முன்பு கூட நண்பர் ஒருவரிடம் சொல்லிக்
கொண்டிருந்தேன்: “ஏன் எல்லாக்
கட்டுரைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன குமுதத்திலும் விகடனிலும்?” மூன்றாந்தர சினிமா நடிகர்களைக் கூட மகாத்மா போல மிகைச்
சித்தரிப்பு செய்து வெளியிடப்படும் கட்டுரைகளும் பேட்டிகளும் ஆபாசம்
நிறைந்தவை. பழைய குமுதம் இதழ்களை
(எழுபதுகளில் வந்தவை) கண்ணுற நேர்கிற போதெல்லாம், அப்பொழுது அந்தப் பத்திரிகைகளில்
வாசிப்பதற்கு சுமாரான மொழி நடையாவது இருந்தது தெரிகிறது. பொது வெளியில் தமிழ் எழுத்தின் தரம் சமீபத்தில்
மிகவும் கீழிறங்கிப் போய் விட்டதாக மிகைப் படுத்தப்படாத செய்தி ஒன்று உலவி வருவது
கவனத்தில் கொள்ளத் தக்கது.
நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். என்ன விடயங்கள் சொல்லப்படுகிறது என்பதைக் காட்டிலும்,
எப்படி அது சொல்லப்பட்டுள்ளது என்பதிலேயே கவனத்தைக் குவித்து வருபவன் நான். ஒரு மனிதனின் மொழியானது (idiolect) அவனுடைய கைரேகையைப்
போன்றே தனியான விஷேஷங்கள் கொண்டது. அது
அவனுடைய மொத்த ஆளுமையைப் பிரதிபலிக்கிறது.
பிரமிள் அவர்களின் படைப்பு மொழி ரமணி சந்திரன் அவர்களின் படைப்பு மொழியை விட
ஏன் கடினமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள, அந்த ஆளுமைகள் நுழைந்து வந்த உலகங்களுக்குள்ளும்
அனுபவங்களுக்குள்ளும் ஒருவன் சென்றாக வேண்டும்.
எளிமையான நடை என்பதற்காக ஒரு எழுத்தாளனை எத்தனம் செய்ய வேண்டியதில்லை. அவனுடைய படைப்பு மொழி அவனுடைய இயல்பாய்
இருந்தால் போதுமானது. அதற்கென ஒரு மெருகு
கூடி வந்துவிடும்.
ஷங்கர் ராமசுப்ரமண்யன் எழுதியுள்ள “கலை பொதுவிலிருந்தும்
தனித்திருக்கும்” என்ற நூலைப் படித்ததின் தொடர்பாகவே மேற்கண்டவையை சொல்ல வேண்டி
வந்தது. பொதுவாக, நான் இதுவரை
கேள்விப்படாத எழுத்தாளர்களின் நூற்களைப் படிக்க பெரிதும் தயக்கம் காட்டுவேன். தொடர்ந்து வருடக்கணக்காக நூற்களை வாசித்து
வருவதால், மனதுக்கு ஒவ்வாத அல்லது எனது வாசிப்புத் தரத்திற்குள் வராத நூற்களைப் படித்தது கால விரயம் செய்ய
வேண்டாம் என்பதால், நான் பிரமித்து படிக்கும் நூற்களின் ஊடே சுட்டப்பட்டிருக்கும்
புத்தகங்கள், அந்தப் புத்தகங்களின் பிற்சேர்க்கைப் பட்டியல்கள், மற்றும் சமூகப் பொது
மனதில் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் அண்மைக்கால இலக்கியப் பிரதிகள், தேர்ந்த
வாசகர் என்று என்னால் உணரப்படும் அன்பர்கள் பரிந்துரைப்பவை என்பவையை ஒட்டியே
என்னுடைய வாசிப்பு இருக்கும். புதிதாக ஒரு
எழுத்தாளர், அதுவும் அவரின் பெயரையே முன்னால் அறிந்திராத நிலையில், எனது
வாசிப்பிற்குள் நேரமும் கவனமும் பெறுவது அரிதான நிகழ்வே. ஆனால் எப்படியோ ஷங்கர் ராமசுப்ரமண்யன் உள்ளே
நுழைந்தார். 1975ல் பிறந்தவர் என்று அறிய
முடிகிறது. சுந்தர ராமசாமி அவர்களின்
வழிகாட்டல் இவருக்கு பதின்மம் முடிந்த நிலையிலேயே கிடைக்கப் பெற்றது பெரும் பேரு. சிக்கல்
நிறைந்த குழந்தைமை, பெற்றோரிடையே தீவிரமாகி வந்த பிணக்கு, சிறு நகர வசிப்பு என்ற
பல எழுத்துக்கு உகந்த பின்னணிகள் இவரிடம் உள்ளன.
சிறு இதழ்களில் ஆரம்பித்து இன்று ‘தி சண்டே இண்டியன்’ என்ற வார இதழின்
ஆசிரியராக இருந்து வருகிறார் என்பதையும் கட்டுரைகளின் ஊடே அறிய முடிகிறது.
பல்வேறு தருணங்களில் இவர் எழுதி இதழ்களில்
வெளியாகியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது.
சமூகத்தின் பல கூறுகளை சாடும் ஒரு கோபம் கொண்ட இளைஞனாக இந்தக் கட்டுரைகளில்
இவரை நாம் பார்க்கிறோம். அதிகாரம் – எதிர்ப்பு இரண்டுமே அதிகாரத்தின்,
ஒன்றுக்கொன்று இசைமை கொண்ட, பக்கங்கள்தான்.
இந்த இருமைகளைத் தவிர்த்த, மானிட வாழ்வின் அபத்தங்களை தன்னுடைய தனிமை /
தோல்வி இவற்றினூடே புரிந்து கொண்டு, இறப்பின் மர்மம் அவிழ்ந்து போன ஞான
தரிசனத்தில், ஈசி சேரில் அசைவற்று அமர்ந்திருக்கக் கோருகிறது இவரது எழுத்து. இவரது படைப்பு சாராம்சம், இந்த நூலைப் பொறுத்த
மட்டிலாவது, இதுதான். இவர் கொண்டாடும்
படைப்பாளிகளும் ஏறக்குறைய இதே மானுட சாரத்தைப் பிழிந்தவர்கள்தாம். நகுலனை இவருக்கு
வேறு எந்த எழுத்தாளரையும் விட அதிகம் பிடித்திருக்கிறது. விக்கிரமாதித்யன், சுந்தர ராமசாமி, தேவதேவன்,
ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், திலிப்குமார் போன்றோர் இவரைப் பாதித்த விதம் பற்றி,
அவர்களைப் பற்றியதான இவரின் கட்டுரைகளின் மூலமாக ஒருவாறு அனுமானிக்க
முடிகிறது.
அசோகமித்திரனுடையதைப் போன்ற ஒரு தட்டையான, உணர்ச்சியற்றதே போல பாவனை
கொண்ட படைப்பு மொழியை சிலாகிக்கும் இவரது படைப்பு மொழி வேகமும் கொந்தளிப்பும்
கொண்டது. இவரது மன உளைச்சல்களின் வேகம் எழுத்தின்
வழியே திராவகமாய் இறங்கி வருகிறது. சில
சமயங்களில், இப்படி எழுதுவதை தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணவைக்கும் வகையிலும் கூட,
காயப்படுத்தும் நோக்கோடு, வெளிவரும் இவரது எழுத்து, குறிப்பிட்ட சிலரை மேலதிகமான
தீவிரத்தோடு தாக்குகிறது. குறிப்பாக,
ஜெயமோகன். “இணையம், சிற்றிதழ், வெகுஜன
இதழ் முதல் அதிகாலை வீட்டுக்கு வரும் பால் பாக்கெட் எழுத்துக்கள் வரை செய்தியின்
நவ துவாரங்களிலிருந்தும் ஜெயமோகனின் பீறிடல் தமிழர் இன்று அடைந்திருக்கும்
பாக்கியம் என்றே குறிப்பிட வேண்டும்.” இவரது சினம் இன்னும் அடங்கிய பாடில்லை. “....அவருக்கு கல் தடுக்குவது, அவரது மகன்
பத்தாவது வகுப்பில் பாஸ் ஆவது எல்லாமே அவருக்கு ஆன்மிக தரிசனம்தான். ஏனெனில், இதுவரை இந்தப் பிரபஞ்சத்தில்
யாருக்கும் கல் தடுக்கவில்லை, யாரும்
பத்தாம் வகுப்பு பாசாகவும் இல்லை.”
Magical Realism எனப்படும் மிகை யதார்த்த புனைவு
குறித்து நம்பிக்கையான பல செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் ஷங்கர் ராமசுப்ரமண்யன்,
மிகை யதார்த்தத்திடம் இருந்துதான் தன்னுடைய படைப்பு மொழியை தெரிந்தெடுத்துள்ளார் என்பதை
நம்ப போதுமான அடையாளங்களை வாசகனுக்கு இக்கட்டுரைகள் வழங்குகின்றன. அண்மையில்
படித்த புத்தகங்களில், சிறப்பானது என்று இதைச் சுட்ட முடியாது. ஆனால், மிக இளைய எழுத்தாளர் என்ற புரிதலுடன்
இவரையும் இக்கட்டுரைகளையும் அணுகும் வாசகரால், வரும் வருடங்களில் முக்கியமான
படைப்புகள் இவரிடமிருந்து வெளிவரலாம் என்ற நம்பிக்கையை தன்னுள் ஏற்படுத்திக் கொள்ள
முடியும். அந்த அளவு சொல்ல வேண்டிய
புத்தகம் இது.
[“கலை பொதுவிலிருந்தும்
தனித்திருக்கும்”, ஷங்கர் ராமசுப்ரமண்யன்,
நற்றிணைப் பதிப்பகம், சென்னை, உரூபா 110/-]
0 comments:
Post a Comment