இலையை உரசும் காற்று

| Sunday, September 28, 2014


க.பூரணச்சந்திரன் அவர்கள் தனது “கவிதையியல்” நூலில் பல கவிதைகளை – சங்க இலக்கியம் தொட்டு இந்நாள் வரையிலானவை – மேற்கோள் காட்டுகிறார்.  சங்க இலக்கியங்களில் பயிற்சி இல்லாத காரணத்தால் அக்காலத்திய மேற்கோள்களுடன் மனம் ஒன்ற முடியவில்லை.  ஆனாலும், எடுத்தாளப்பட்டுள்ள இற்றை நாள் கவிதைகள் பல பிரமிக்க வைக்கின்றன.  அவைகளிலே மனம் லயித்துக் கிடக்கிறது.  சின்னஞ்சிறிய கவிதை ஒன்று நம்மை அடித்துப் போட்டாற்போல விட்டுவிட்டு நகர்கிறது.  மனிதனின் அதிகபட்ச சாதனைதான் கவிதையா?



க.பூரணச்சந்திரன் எடுத்தாண்டிருப்பதில் சிலவற்றை இங்கே நீங்களும் படிக்கத் தருவதின் காரணம் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” அன்றி வேறில்லை.

----

மனை திரும்பும் எருமைமேலே
எவ்விடம் திரும்பும் காக்கை?
      -ஞானக்கூத்தன்.

----

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னைப்போல அவனைப்போல
எட்டுசாணு உயரமுள்ள மனுசங்கடா 
         -இன்குலாப்
 ----

தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப்போயின
-    ........?
----

ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை
      -நகுலன்
----

ஏன் அக் கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக்
கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்குப்
போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்குமேல் வேறென்ன வேண்டும்
சாப்பிடு
தூங்கு
மலங்கழி
வேலைக்குப் போ
உன்மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே
      -ஆத்மாநாம்
----

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
      -நகுலன்
----

அவளின் பார்வை
காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
      -கலாப்ரியா

----

சற்றைக்குமுன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை எங்கே?
அது சற்றைக்குமுன்
பறந்துகொண்டிருக்கிறது.
      -ஆனந்த்
----

அள்ளிக்
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில்.
கைநீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?
      -நகுலன்
----

ஒரு கூரைமேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.
      -ஆத்மாநாம்
----

அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி
வேப்ப மரக்கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை
பப்பாளிச் செடிகளின் நடுவே
சடைசடையைத் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம்.
      -ஆத்மாநாம்
----








  




0 comments:

Post a Comment