துயருறுவோர் பேறுபெற்றோர்

| Sunday, September 28, 2014

 மதரீதியான அமைப்புக்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதாகக் கூறிக்கொண்டும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே புனிதமான தரகு வேலைகள் செய்வதாகக் கூறிக்கொண்டும், இறந்தபிறகு தான் செல்லப்போவதாக சாமான்யன் நம்பும் சொர்க்கத்தை வாழுகின்ற நாட்களிலேயே பூமிக்குக் கொண்டுவந்து அவன் முன் நிறுத்துவதாகக் கதைத்துக் கொண்டும், சடங்குகளின் வழியே மட்டுமேதான் இறைவனின் திருவடிகளைச் சென்றடைய முடியும் என்ற வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டும் தங்களை சமூகத்தின் அதி-உயர் மையங்களாக ஆக்கிக் கொண்டுவிட்டன.  நாட்டை ஆளும் அரசனே இந்த மத அமைப்புக்களின் செல்வாக்குமிக்க அதிகாரத்தைக் கண்டு நடுங்கி அவைகளின் முன் மண்டியிட்டு வணங்கியிருக்கிறான்.  அதற்கான உதாரணங்கள் இத்தாலியிலிருந்து சென்னை மெரீனா கடற்கரை வரை வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன.  

மனிதனின் கண்டுபிடிப்பான கடவுள் உலகத்தின் மிகப்பெரிய சந்தைப்பொருள்.  இந்த வணிகத்தில் நஷ்டம் என்பதே இல்லை.  ஹோட்டல் வைத்து நொடித்துப் போனவனும், துணிக்கடை வைத்து மோசம் போனவனும், சிலையை வைத்து வியாபாரம் செய்து லாபத்தில் கொழிக்கும் மடங்களின் அதிபர்களைப் பார்த்து பொறாமைப்படுவதில் பிரயோஜனமில்லை. எதை வாங்குவதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்களோ அதை விற்பவனே புத்திசாலி.  மக்கள் தயாராக இல்லாவிடினும், சந்தையில் தான் விற்கவிருக்கும் பொருளைப் பற்றிய விளம்பரத்தை சலிக்காமல் தந்து, சந்தைப்படுத்தி, வடியாத தேவை ஒன்றை இவைகளின் வழியே ஏற்படுத்தி வர்த்தக முதலைகளாக மாறிப் போனவர்கள் வரலாறு மேல்மருவத்தூர் முதல் பெங்களூரு பிடடி வரை ஏராளம்.  காஞ்சிபுரம் பழைய பெரிய உதாரணம்.  

பிழைப்புக்காக இவர்கள் வியாபாரம் நடத்திவருவதைப் பற்றிய கவலை ஏதுமில்லை பலரிடம்.  ஆனால், இவர்களிடம் ஏறுமுகத்தில் குவிந்துவரும் அதிகாரம், சமூகத்தில் தாங்கள் என்ன நினைத்தாலும் சாதித்துவிட முடியும் என்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.  இந்த மடாலய அதிகார குவிப்பிற்கு மதபேதம் இல்லை. ஹிந்து, கிறித்துவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களிலும் இந்த அதிகாரக் குவிமையங்களைப் பார்க்கலாம்.  இவைகள் தனிமனிதனிடம் செலுத்த முடியும் அதிகாரம் வியப்பிற்கானது.  குடும்பத்தில் ஒருவரை இறைச்சேவைக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் இன்னும் சில சமூகங்களில் உண்டு.  துறவிகளாகவும் இறைக்கன்னிகைகளாகவும் பக்தியினால் மடங்களுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை நரம்புத் தளர்ச்சி நோய்கள் மற்றும் இன்ன பிற உளவியல் சிதைவுகளுக்கு ஆளாக்கியிருக்கின்றன இந்த அதிகார மையங்கள்.   

இவைகளுக்குள் தொடர்ந்து தொண்டாற்ற முடியாமலும், வெளியேற முடியாமலும் உள்ளுக்குள் புழுங்கி வேதனையில் வாடி உழலும் லட்சக்கணக்கான துறவியரிடமிருந்து ஜெஸ்மி வேறுபடுகிறார்.  தன்னுடைய பால்ய காலத்திலிருந்து தன்னுள் ஊற்றெடுத்த கிறித்துவின் மீதான மாசற்ற பக்தி அவரை ஒரு மடாலயத்துக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.  சபையின் உதவியின் ஊடே தன்னுடைய கல்லூரிப்படிப்பை முடித்த ஜெஸ்மிக்கு அந்தச் சபை நடத்தும் கல்லூரியொன்றில் ஆங்கிலப் பேராசிரியையாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.  மாணவியாகவும், ஆசிரியராகவும் தான் நீடித்த வருடங்களில் அந்தச் சபையில் புரையோடிப்போயிருந்த அரசியல் இவருக்கு பயத்தையும் அருவருப்பையும் தருகின்றன.  இதைவிட, பெண் துறவிகளிடம் பரவலாக இருந்ததாக தான் பார்க்க நேர்ந்தது என்று ஓரினப் பாலுறவை சுட்டுகிறார் ஜெஸ்மி.  லெஸ்பியன் உறவுகள் இங்கே பிரச்சினையல்ல.  அப்படிப்பட்ட பாலுறவுகளை துறவு வாழ்க்கை என்ற போர்வைக்குள் நடத்தி வரவேண்டியிருக்கிற அவலமும், துறவு வாழ்க்கையின் அரசியலும்தான் இங்கே பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. மத அமைப்புக்கள் தவிர்த்த சமூகத்தின் ஏனைய வெளிகளில் ஒருவர் காண நேரும் அரசியலைவிட இன்னமும் கொடுமையாக அது மதச் சபைகளில் புகுந்து பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன.  அதிலும் துறவிகள் பெண்களாக இருக்கும்போது, அவர்கள் பல்வேறு உள்மன மற்றும் புறவெளிச் சிக்கல்களை சந்திக்க வேண்டிவருகிறது.  மனிதனின் இயங்கு சக்தியான லிபிடோவை உயர்மடைமாற்றம் செய்ய முடியாத இளம் துறவிகள் தங்களுக்குள்ளேயே தங்களை எதிர்த்தே ஆகப்பெரிய போராட்டம் ஒன்றை வாழ்நாள் முழுவதும் நித்தம் நடத்த வேண்டியதாகிறது.  புறவயத்திலோ, சபைகளில் நீக்கமற நிறைந்துள்ள மூன்றாந்தர அரசியல்.  சிவில் வாழ்க்கையில்  ஒருவர் கண்ணுருவதை விடவும் கேவலமான சொல்லவொண்ணா அடக்குமுறைகள்.  

தகுதிகள் நிறைய இருந்தும் ஜெஸ்மி அவர்களுக்கு உயர் கல்வி மற்றும் பதவி வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றன.  அதிகார மையத்தை எதிர்த்து குரலெழுப்பும் இவருக்கு தனது சொந்த குடும்பமும் ஆதரவு அளிக்காத நிலை.  உதவ முன் வந்த ஒரு சில தோழர்களும் அதிகாரக் குவிமையங்களுக்கு பயந்து கைவிட்ட நிலையில், தனக்கான போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்தி, சபைகளின் இரும்புக் கதவுகளை உடைத்து வெளியேறியிருக்கும் துறவி ஜெஸ்மி அவர்கள், கேரள ஊடகவியல் நண்பர்களின் காலத்தினாற் செய்த உதவிகளை நன்றியோடு நினைக்கிறார்.  துறவியரிடையே நிலவிவந்த பிரத்தியேக நட்புக்கு தானும் சில மாதங்கள் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும், கடவுளின் துணையாலேயே தன்னை மீட்டதாகவும் சொல்லும் துறவி ஜெஸ்மி அவர்கள், ஒருமுறை அதிகார அடுக்கில் உயர்நிலையில் இருந்த ஆண்துறவி ஒருவரால் துன்பப்பட நேர்ந்தது என்று வருந்துகிறார்.  இயற்கைக்கு மாறான பாலியல் வக்கிரங்கள் எவ்வளவு கொடுமையானவையோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதவை இயற்கையாக ஊற்றெடுக்கும் பாலுணர்வுக்கு ஏற்ற வடிகால் இன்றிப் போவதும்.  தங்களது பாலுணர்வை உயர்மடைமாற்று செய்யமுடிகிற துறவியரைப் பற்றி குறைகூற எதுவுமே இல்லை.  ஆனால், துறவி ஜெஸ்மி அவர்களின் வாக்குமூலம் மட்டுமன்றி, ஊடகங்களின் வழியே அவ்வப்போது தெரியவருவது என்னவென்றால், தமது பாலுணர்வை உயர்மடைமாற்று செய்யமுடியாமல், தங்களது வேஷத்தையும் கலைக்க முடியாமல், ரகசியமாக பெரிய குற்ற உணர்வுக்கு தம்மை ஆட்படுத்திக்கொண்டு, தாங்கள் ஈடுபடுவது பிறழ்ச்சியான செய்கைகளோ என்ற சந்தேகங்களால் துன்பமிகு உழன்று, தம்முடைய சஹ்ருதயர்களையும் தமக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி வேடிக்கை மனிதர்களாக வலம் வரும் இவர்களைப் பார்க்கையில் தெய்வமே! என்ன செய்துவிட்டாய் இவர்களுக்கு! என்று பதற மட்டுமே முடிகிறது.
   
அதிகாரம் எதிரிகளை அனுமதிப்பதில்லை.  அதிகாரத்திற்கு சட்டம், நீதி என்ற கரங்கள் உண்டு.  கருணை என்ற ஹிருதயம் இல்லை.  எதிர்ப்பவர்களை அது முழுமூச்சுடன் நசுக்குகிறது.  அப்படி நசுக்குவதின் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.  ஆனால், இன்னொன்றும் நடப்பதுதான் அதிசயம்.  நசுக்கப்படுவதின் மூலமே எதிர்ப்பும் தன்னை பலமாக்கிக் கொள்கிறது.  சொல்லப்போனால், அதிகாரமும் எதிர்ப்பும் தனித்தனியே உயிர்வாழ முடியாதவை.  ஒன்றுக்கு மற்றொன்றின் உதவி தேவை கடவுளும் சாத்தானும் போல.  மதங்களின் திருச்சபைகளில் காணப்படும் அரசியல் பாராளுமன்றத்தின் அகன்ற வளைவான தாழ்வாரங்களில் காணப்படுவதைவிட வக்கிரமானதும் பயங்கரமானதும் ஆகும்.  துறவி ஜெஸ்மி அவர்களை அடக்கி ஆள, அதிகாரக் குவிமையங்கள் கையாண்டுவரும் நூற்றாண்டுப் பழமையான தந்திரங்களையே அவரின் சபை பயன்படுத்துகிறது.  துறவி ஜெஸ்மி அவர்கள் ஒரு பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டு, மனநல மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவருடைய சபை இறங்குகிறது.  தான் மனநிலை பிறழாதவள் என்று துறவி ஜெஸ்மி அவர்கள் மறைமாவட்டத்தின் மேல்நிலை துறவியரிடம் கதறினாலும், அந்தப் பெருமக்கள் சிறிதும் இரக்கம் கொள்வதில்லை.  அதிகாரத்தின் தன்மை அப்படி.  தனக்கு முன்னால் இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், சபையில் இருந்து வெளியேறத் துணிகிறார் துறவி ஜெஸ்மி அவர்கள்.  ஆனால், அசாத்தியச் துணிச்சல் தேவையாக உள்ள இந்த காரியத்திற்கு தனது சுற்றமும் நட்பும் உதவாத நிலையில், கேரள ஊடகவியலாளர்கள் சிலர் உதவ முன்வருகிறார்கள். 
 
தன்னைப் பீடித்து வந்த சபை என்ற பிணியில் இருந்து இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் துறவி ஜெஸ்மி அவர்கள், தன்னுடைய வாழ்க்கையை பிறருக்குத் தெரிவிக்கும் பொருட்டு தாய்மொழியான மலையாளத்தில் ஆமென் என்ற தலைப்பில் தன்வரலாறை வெளியிட்டுள்ளார்.  மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய இப்புத்தகம் மிகக்குறைந்த காலத்தில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ஆக்கம் கண்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக தமிழிலும் தற்போது வெளிவந்துள்ளது. மொழிபெயப்பு இன்னும் சிறப்பாக அமைந்திருக்க முடியும்.  ஆனால், வந்துள்ள அளவில் பெரிய குறையேதும் இல்லை.  

[காலச்சுவடு பதிப்பகம், உரூபா 175/-]

0 comments:

Post a Comment