இலக்கிய உரையாடல்கள்

| Wednesday, September 17, 2014

மனிதன் மட்டும்தான் பேசுகிறான்.  வேறு எந்த ஜந்துவிற்கும் இந்தத் திராணி இல்லை.  பேசுவதற்கு தனது கூட்டத்திற்குள்ளேயே ஒலிக் குறியீடு ஒன்றை பொதுவாகத் தீர்மானித்துக் கொண்டதின் பின், கால ஓட்டம் மொழியைக் கொண்டு வந்தது. அறிவிற்கான துறைகளையும் மனதிற்கான துறைகளையும் வளர்த்துக் கொண்ட மனித ஜாதி, இவைகளின் வழியே தனது கனவுகளுக்கு நிஜ வடிவம் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது மட்டுமன்றி, தான் சார்ந்த சமூகத்தோடு உறவாடுவதில் விளையும் இன்ப துன்பங்கள், சிக்கல்கள், தீர்வுகள் போன்றவற்றையும் பிரதியாக்குவத்தின் மூலம் தீர்த்துப்போட முயன்றது.  இலக்கியம், இசை போன்ற நுண்கலைகள் இப்படித்தான் பிறந்திருக்க வேண்டும். 
 
பிறந்த ஒன்றுக்கு வரலாறு உண்டு.  ஜாதகம் உண்டா? பிறந்த கணம் ஜென்மத்தின் தன்மைகளை மாற்றி விட முடியுமா?  இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை ஜாதகத்தை எழுதுவது யார்?  படைப்புக் கர்த்தாவா, விமர்சனக்காரனா? படைப்பாளியின் தொடர் ஆக்கங்களில் அவனது படைப்புலகையும் அதன் சாரத்தையும் அறிந்து கொள்ள முடியுமா?  படைப்பாளி என்பவன் மரபின் தொடர்ச்சியா?  அல்லது நெடிய மரபொன்றின் புதிய மீறலா?  படைப்பாளி இலக்கியத்தோடு மட்டும் எப்பொழுதும் சம்பந்தப்பட்டவனாக இருக்கிறானா?  வேறு அறிவுத் துறைகள் அவனது படைப்பாக்கத்தின் மீது செலுத்தும் ஆளுமையின் விளைவு படைப்பை எவ்விதம் பாதிக்கிறது?  படைப்பு எழுத்தாளனின் வெளிப்படுத்தலா அல்லது தப்பித்தலா? ஒன்றின் கர்த்தாவானவன் தனியனா அல்லது சுற்றியிருக்கும் அறிவுலகின் குழந்தையா?  இவன் சமூகத்தைப் பாதிப்பதும் சமூகன் இவனைப் பாதிப்பதும் படைப்பில் புலனாகிறதா?  இவனது எழுத்து எதோ ஒரு ‘இசம்’ சம்பந்தப்பட்டதா அல்லது எந்த ஒரு அறிவியக்கத்தைப் பற்றியும் பிரக்ஞையோ கவலையோ இல்லாது “உள்ளே நிகழும் அசௌகர்யத்தால்” பீறீட்டவையா? ஒரு படைப்பாளிக்கு அவனது மொழியின் இலக்கிய மரபும் உலக இலக்கிய மரபும் பலவீனமா, சௌகர்யமா?  செவ்வியல் இலக்கியப் பிரதிகளில் வரும் “உதாரண” மாந்தர்களை இவன் தனது படைப்பில் புத்துயிராக்கம் செய்வது மரபா, தவிர்க்க முடியாத கட்டாயமா?  கலைஞன் ஒருவன் எப்பொழுதுமே எழுதிக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா?  ஊனத்தை நிராகரிக்க எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருப்பதுதான் ஒரே மாற்றா?  செவ்வியல் பிரதிகள் மையப்படுத்தும் அறம் நவீன கதையாடல்களில் தன்னை எவ்விதம் வெளிப்படுத்திக் கொள்கிறது?  காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாறிக் கொள்வது அறமா?  காவியங்களின் பொதுத் தன்மை, எம்மொழியில் காவியப் பிரதி இருப்பினும், இந்த ‘அறம்’ எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றியதுதானா?  காலத்தை வென்று நிற்பதால் மட்டுமே ஒரு இலக்கியப் பிரதிக்கு ‘செவ்வியல்’ தன்மை வந்துவிடுகிறதா? 

படைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் வாசிப்பு-வாசகன் ஆகிய கூறுகளின் பங்கு என்ன?  படைப்பு வாசகனிடம் முடிகிறதா, பிறக்கிறதா? படைப்பாளியின் படைப்பு மனம் படைப்போடு அது முடிந்த நிலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதா?  எது அவனது படைப்புலகின் சாரத்தை முடிவு செய்கிறது?  படைப்பாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான – பல நேரங்களில் ஒருவருக்கொருவர் எதிரெதிரான – படைப்புச் சூட்சுமங்களைத் தாங்கி நிற்பதற்கு எது காரணம்?  படைப்பின் ரகசியத்தை அறிவியலால் புரிந்து கொள்ளவே முடியாதா?  உள்மனதின் பரிமாணங்களை படைப்பாக வெளிப்படுத்தும் கலைமனதின் கட்டுமானத்தைத் தீர்மானிப்பது கலைஞன் பெரும் புறவயமான அனுபவங்கள் மட்டும்தானா?  எழுச்சிமிகு எழுத்துக்கள், தட்டையான எழுத்துக்கள், பூடகமானவை, மேலதிக அறிவுசார்பானவை, எளிமையான கிராம மக்களின் அன்றாட வாழ்வை அதே சுவாராஸ்யங்களோடு பிரதியில் கொண்டு வரும் படைப்பு மனம், மர்மமான எழுத்து, இன்னும் என்னன்னவோ மாதிரியான எழுத்துக்கள் – இவை எல்லாவற்றுக்கும் ஊற்று ஒன்றுதானா?

விமர்சனக்காரர்களின் தீர்ப்புரைகள் தவிர, படைப்பைப் பற்றி படைத்தவன் சொல்ல ஏதேனும் உள்ளதா? குறைந்தபட்சம், தனது படைப்புலகம் எதைவேண்டி தன்னால் ஒரு கால நீச்சியில் கட்டப்பட்டு வருகிறது என்பதை கலைஞன் அறிந்துள்ளானா? படைப்பனுபவம் அவனுக்குத் தருவது என்ன?  எழுதுவது அவன் திட்டமிடுதலின் விளைவா அல்லது உணரும் அவஸ்தையின் வெளிப்பாடா?  படைப்பாளி ஏன் எழுதுகிறான்?  அறிவியக்கங்கள் அவனது படைப்பு மீது செலுத்தும் அதிகாரத்தை எந்த அளவு வரை அனுமதிக்கிறான்?

இதைப் போன்ற இன்னும் நூறு வினாக்களுக்கு ஜெயமோகன், சூத்ரதாரி, வேதசகாயகுமார் ஆகியோர் சேர்ந்து, பனிரெண்டு குறிப்பிடத்தக்க தென்னிந்திய இலக்கிய ஆளுமைகளிடம் பெற்றிருக்கும் நேர்காணல்களின் தொகுப்பான “இலக்கிய உரையாடல்கள்” பதில் தர முயற்சிக்கிறது.    பதில் தர முயற்சிக்கிறது என்பதை விடவும், இவை பற்றியெல்லாம் உரக்கப் பேசுகிறது, அப்படிப் பேசுவதின் மூலம் பொதுவெளியில் இதைப் பற்றி அக்கறை கொண்டோர் சிந்திக்கவும் விவாதிக்கவும் அரிய கருப்பொருட்களை அனுமதிக்கிறது எனலாம்.  படைப்பாளி ஒருவன் தன்னுடைய எல்லாவற்றையும் படைப்பில் கொண்டுவர முடிவதில்லை.  எவ்வளவு சொல்லியும், விடுபட்டவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.  படைப்பாளியை விட, அந்த விடுபட்டவைகளை வாசகன் எளிதில் இனம் கண்டு கொள்கிறான்.  அவைகளைப் பற்றிய அர்த்தம் நிறைந்த சம்பாஷனை ஒன்றைத் துவக்கும் வாசகனோடு கலந்துகொண்டு, மிகுதியான விளக்கங்களை அளிப்பதின் மூலம் தனது படைப்பு மனதில் சொல்லாமல் நின்றவைகளை படைப்பாளியால் முன்னிலைப்படுத்த முடிகிறது.
 
படைப்பு, படைப்பனுபவம், வாசிப்பு, வாசிப்புலகம் ஆகியவை இத்தகைய சம்பாஷனைகள் மூலம் தங்களது மர்மங்களைத் தாங்களே விளங்கிக் கொள்ள முயல்வதுடன், இவ்வுலகில் தங்களுடைய தவிர்க்கவொண்ணா இருப்பையும் தரப்பினையும் உணர்த்துகின்றன. 
 
நித்யசைதன்ய யதி, கே.சச்சிதானந்தன், டி.ஆர்.நாகராஜ், பேராசிரியர் ஜேசுதாசன், நா.மம்மது, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், நீல பத்மநாபன், அ.முத்துலிங்கம், பாவண்ணன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்ட பெரும் ஆளுமைகள்.

விஷய கனமான புத்தகம்.  தொடர்ந்து படிப்பதைவிட, கேள்வி கேள்வியாக படித்து, வினா-விடை இரண்டின் உட்கிடக்கைகளையும் புரிதலுற்றபின், முன் நகர்வது இந்நூலுக்கான வாசிப்பு முறையாகும்.  இதைப் போன்ற விவாதங்கள் ஏராளமாக தொடர்ந்து நடைபெறுவதற்கான தேவையும் நியாயமும் இன்றைய தமிழ் நவீன இலக்கியச் சூழலில் உள்ளது. 
 
[என் இந்தியன் பதிப்பகம், சென்னை, திசம்பர் 2006, உரூபா 150/-]   
.

0 comments:

Post a Comment