எஸ்ராவின் பேசிக் கடந்த தூரம்

| Sunday, September 28, 2014


எப்பொழுதும் பேசிக்கொண்டேயிருக்கிறோம் நாம்.  யாரிடமாவது அல்லது நமக்குள்ளேயே.  கனவுகளிலும் நாம் யாருடனோ அல்லது வேறு யாரோ இன்ன பிறரோடோ பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  பேசிப்  பேசியே வளர்ந்து விட்டோம்.  துக்கம், சந்தோசம், வெற்றி, தோல்வி, காதல், சந்தேகம், நெருக்கடி, நோய், பிறப்பு, இறப்பு என்று எது எதுவோ நம் பேச்சுக்குள் நுழைந்தபடியும் வெளியேறிய வண்ணமுமாய் இருக்கின்றன. பேசிக்கொண்டிருக்கும் போதே, இதுவரை புரியாத விஷயங்கள் புரிய ஆரம்பிக்கின்றன.  

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததை பேசுகிறோம்; தெரியாததை பிறர் பேசிக் கேட்கிறோம்.  பேச்சு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, எத்தனை கோடி பேர் சுவாசித்து முடித்தும் தீராத காற்று போல.  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “பேசிக் கடந்த தூரம்” படித்து முடித்த பின் மாலைப் பொழுதில், இவருக்குத்தான் பேச எத்தனை விஷயங்கள் உள்ளது என்ற ஆச்சர்யம் மிகுகிறது.  இவரின் எழுத்துலகம் சிறுகதை, நாவல், சிறுவர் புனைவு, கட்டுரை, சினிமா, விமர்சனம் என்ற விரிந்த தளத்தில் தன்னை இட்டு நிரப்பியிருக்கிறது.  ஒரு படைப்பாளி, தான் அளிக்கும் செவ்விகளில் தன்னைப் பற்றிய சுயமதீப்பீட்டையும் நிகழ்கால எழுத்துலகில் தன் இடம் எது என்பதைப் பற்றிய பிரகடனமும் செய்கிறான்.  எழுத நேர்ந்ததற்கான காரணங்களைக் கண்டறியவும், ஏன் இதையெல்லாம் எழுத வேண்டியதாயிற்று என்பதையும் பற்றி எந்தப் புனைவும் இல்லாமல் இதைப் போன்ற செவ்விகளில் சொல்லமுடிகிறது படைப்பாளனால்.  

“பேசிக் கடந்த தூரம்” நான்கு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் பகுதி நேர்காணல்கள் கொண்டது.  மனுஷ்யபுத்திரன், கீரனூர் ஜாகீர் ராஜா போன்றோர் படைப்புலக ஸ்தூலம் வாசகனுக்கு நன்கு விளங்க வேண்டி ஆழமான கிணற்றில் தூர்வாருவது மாதிரியான கேள்விகளின் மூலம் எஸ்ராவை தனது படைப்புலக சாரம், பின்புலம், இயங்கு சக்தி, இலக்கியம் குறித்த பார்வைகள், சம எழுத்தாளர்கள் மீதான நம்பிக்கை / அவநம்பிக்கை ஆகியவை பற்றி வெளிப்படையாக பேசவைத்திருக்கிறார்கள்.  எஸ்ராவும் பேசச் சலிப்புக் கொண்டவரா என்ன?  தொடர் வாசிப்பை தவமே போல நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருபவரும், தேசாந்தரியாக இந்தப் பரந்த தேசத்தின் நீள  அகலங்களை ஆண்டுக் கணக்கில் சுற்றி அலைந்தவரும், உலகை கண்ணால், காதால், கால்களால், உணர்வால் மேவியவருமான எஸ்ரா தனது பார்வைகளை பாசாங்கு எதுவுமே இல்லாமல் இந்த நேர்காணல்களில் வாசகனிடம் ஒப்புவிக்கும்போது, அந்த நேர்மையில் மகிழ்ந்து போகிறோம்.  

எழுத்து மொழி எப்போதுமே நமது விசேஷ கவனத்தை வேண்டுவது.  கருத்துக்கான மொழி ஒன்று உண்டு.  அதன் பிறப்பு நேர்மையில், தனக்கான வடிவை, சொல்லாடலை தேர்ந்து கொள்கிறது. படைப்பாளி செலுத்தப்படுகிறான்.  அங்கே அவனுக்கு செய்ய ஒன்றுமேயில்லை.  வேண்டுமானால் அவனிடம் இருக்கும் மொழி ஆளுமை, ரகசியங்களை சிமப்பட்டு அடக்காத திறந்த மனது ஆகியவை அப்படைப்பின் வெளியேற்றத்திற்கு கொஞ்சம் உதவலாம்.  எஸ்ரா அவர்களின் சம்பாஷணைகளிலேயே காணப்படும் ஒரு இசை லயம் கொண்ட படைப்பு மொழி, இவர் எப்படி தமிழின் முக்கிய படைப்பாளியாக இருக்கிறார் என்பதின் காரணத்தை விளக்குகிறது.  இவரே முன்னுரையில் சொல்கிறார்:  “நான் ஒரு சலிப்பில்லாத பேச்சாளி. சொல்லப்போனால், சதா பேச்சின் வாலைப் பிடித்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவன்.”

இதன் இரண்டாவது பகுதி “ஆனந்த விகடன்” வார இதழில் இவர் எழுதி வந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.  வாசகர்களின் வெள்ளந்தியான கேள்விகளுக்கு முடிந்தவரையில் எளிமையாக பதில்களை சொல்லியிருக்கிறார். இங்கே எட்டிப்பார்க்கும் ஜனரஞ்சகம் விகடனால் விளைந்தது; எஸ்ரா பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.  இந்தச் சிறிய புத்தகத்தின் ஆகச் சிறப்பான பகுதி என நான் கருதுவது மூன்றாவது பகுதியான “ஊரும் வாழ்வும்”.  தனது இளமைப் பிராயத்தைப் பற்றிய கட்டுரைகள்.  வாசகனை அவனது வாழ்வனுபவத்திற்குள் எளிதாக கூட்டிச் செல்கின்றன இந்தக் கட்டுரைகள்.  எப்படி நமது அனைவரின் இளமைப் பிராயங்களும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றன?  எழுபதுகளில் பள்ளியில் படித்து வந்த அனைவரின் பள்ளி நாட்களை மிகவும் நுண்ணியமாக, அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றின் அத்தனை இயக்கத்தையும் ஒன்று விடாமல், “என் பள்ளி” கட்டுரையில் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.  “துணையெழுத்து” எழுதியவருக்கு இதெல்லாம் சாதனையா என்ன?  படிப்பவனுக்குத்தான் தொண்டையில் பந்து போல எதோ ஒன்று மிதந்து வந்து வழிமறித்துக் கொண்டு, கன்னங்களில் சரம் சரமாக கண்ணீர் மாலைகள் பெருக்கோடு, யாரும் பார்ப்பதற்குள் துடைத்தெறிய வேண்டிய அவஸ்தையெல்லாம்.

இப்புத்தகத்தின் கடைசிப் பகுதியில் “சிறுகதைக் கலை” பற்றிய சில கட்டுரைகள்.  படைப்பின் ரகசியம் மனிதப் பயல் அறிய முடிவதா என்ன?  இருந்தாலும், எல்லோருமே அந்த பிரும்ம ரகசியத்தைப் பற்றி நாம் அறிந்து கொண்ட வரையில் பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!  எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்கள், மாணவருக்கு விளங்கிக் கொள்ள முடியாத பகுதிகளாகவே எப்பொழுதும் முடிகின்றன.  

செத்தால்தானே சுடுகாடு தெரியும்!

(உயிர்மை பதிப்பகம், சென்னை, உரூபா 130/-)

0 comments:

Post a Comment