காலம் ஒருவனை மாற்றிவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால், காலம்தான் மாற்றுகிறதா என்ன? நாம்
சந்திக்க நேரும் மனிதர்கள்தானே நம்மை மாற்றியிருப்பது? நமது உலகம் என்பது மொத்த உலகமா? நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்தானே நமது
உலகத்தை உருவாக்குகிறார்கள். நல்லவர்கள்
கெட்டவர்களாக மாறுவதும், தீயோர் திருந்தி மாமனிதர்களாக தம்மை நிறுவிக் கொள்வதும்
மாயாஜாலம் மூலமாகவா அல்லது அவர்களைச் சூழ்ந்து நிற்கும் மனிதர்களாலா?
எனக்குத் தோன்றுவதுண்டு. மனிதன்
நல்லவனோ கெட்டவனோ அல்ல. அவன் சூழ்நிலையால்
உருவாக்கப்படுகிறான். அவனது எண்ணம்
சூழலால் கட்டுபடுத்தப் படுவதுதான். சூழலை
ஒவ்வொருவரும் வேறு மாதிரி உள்வாங்கினாலும் “அவரது உலகம்” உருப்பெற்றதற்கு அவர்
எந்த சமூகத்தில் தன்னை கண்டுகொண்டாரோ அதுதான் காரணம். ஒரே சூழலை சார்ந்த அனைவரும் ஒரே மாதிரி
உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதில்லை.
இந்த நிமிடத்திய எனது சூழலை நான் எப்படி உள்வாங்குகிறேன் என்பது, நான் எனது
கடந்த கால சூழல்களை எப்படி உள்வாங்கியிருக்கிறேன் என்பதையும் பொருத்ததாகும்.
நாம் இன்று எப்படி இருக்கிறோமோ அதற்குத்தான் எத்தனை மனிதர்கள் காரணமாய்
இருந்திருக்கிறார்கள்? சிலரின் சந்திப்பு
நம்மை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது!
சிலரின் சிந்தனைகள், வாழ்வை அவர்கள் அணுகிய விதம், வாழ்வு அவர்களைப்
பாதித்த விதம், அவர்கள் வாழ்வை பாதித்த விதம் ஆகியவற்றின் நமது அவதானிப்பு
எப்படியெல்லாம் நம்மை மௌனமாக பாதித்துள்ளது!
பவா செல்லத்துரை அவர்கள் திருவண்ணாமலையில் ஒரு முக்கிய வாசிப்புப்
புள்ளி. பல வகைகளில் அசாதாரணமானவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க
செயற்பாட்டாளர். ஓயாமல் சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றி வருபவர். இவரது துணைவியார் தமிழின் இன்றைய முக்கியமான
மொழிபெயர்ப்பாளர். பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு அவர்களின் நினைவோட்டத்தை “சிதம்பர நினைவுகள்” என்ற பெயரில் திருமதி
ஷைலஜா அவர்கள் சிலிர்ப்புறும் வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தழின் பல முக்கியமான
படைப்பாளிகள் பவா செல்லத்துரை-ஷைலஜா தம்பதிகளின் விருந்தினர்களாக சிலப்பல நாட்கள்
தங்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர். பல
இலக்கிய “ஊர்ர்சுற்றிகள்” திரும்பத் திரும்ப திருவண்ணாமலைக்கு வருவதே இவர்கள்
வீட்டு விருந்தாளியாக சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லத்தான்.
இப்படைப்பாளிகள் பற்றிய தமது நினைவை, அவர்களைப் பற்றிய ஆளுமை அவதானிப்பை, தான்
அவர்களிடமிருந்து பெற்றதை, அதே சமயம் அவர்களைப் பற்றியதான தனது விமரிசனத்தை,
ஏதேனும் இருப்பின், மிகவும் சன்னமாக கடிதோச்சி மெல்ல எறிகிறார். பவா செல்லத்துரை
தொடர் வாசிப்பாளர் என்பது தெளிவாகிறது.
இதற்கு மேல், மொழி, குறிப்பாக உரைநடை, இவருக்குக் கைவருகிறது. சில வாக்கியங்கள் பிரமிக்க வைக்கின்றன. பிரபஞ்சனைப் பற்றிய கட்டுரையின் கடைசி வரிகள்: “கள்ளுக்
கடைகள் இழந்து, சால்னா ஸ்டால்கள் இழந்து, வீடு இழந்து, அந்த ஆலமரம் வேரோடு
சாயும்போதும் அதன் கம்பீரம் குறையாமல், தன் வேரில் கோடாரியோடு மல்லுக்கட்டுபவன்
மீதும் விழும் ஆலமர நிழல் மாதிரியானது பிரபஞ்சனின் வாழ்வும் படைப்பும்.”
த.ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருப்பவைகளில்
ஒன்று. இந்த பிரம்மாண்டமான இலக்கிய
ஆளுமையை தான் மெய்மறந்து வருடக் கணக்கில் பூஜித்து வந்திருப்பதை பதிவு செய்யும்
பவா அவர்கள், த.ஜெவின் பிந்தைய பல்டிகளை, கல்லெறிந்து அல்ல – பூவை மிக உக்கிரமாக எறிந்து,
தெளிவாக விமரிசிக்கிறார். ஒருவருக்கொருவர்
எதிரெதிர் திசையில், இலக்கியத்தைப் பொறுத்தவரை, பயணிப்பவர்களாக இருந்தாலும், பவா
த.ஜெவின் ஆளுமையை, அதில் இவர் ரசித்த மேன்மைகளைப் பற்றி மட்டும் நமக்குச்
சொல்லியிருப்பது சிலாக்கியமானது.
சினிமாக் கலைஞர்கள் தொடங்கி தீவிரமாக இலக்கியம் படிப்பவர்கள் வரை பவா
அவர்களின் அவதானிப்பிற்கு தப்பவில்லை.
பாலுமகேந்திரா, மம்முட்டி, பால் சக்காரியா, கந்தர்வன், சுந்தர ராமாசாமி,
நாசர், பாரதிராஜா, சா.கந்தசாமி, பாலா, வண்ணநிலவன், எஸ்ரா, மிஷ்கின் ஆகியோர்
பாவாவின் நினைவுகளில் தாலாட்டப்படுகிறார்கள்.
பாவாவின் தேர்ந்த உரைநடையில், எளிமையான அவதானிப்பு போல தெரிந்தாலும்,
மானுடர்களின் மாண்பை பாராட்டியிருக்கும் விதம், படிக்கும் வாசகனுக்கு மனிதத்தைப்
பற்றிய நம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது.
0 comments:
Post a Comment