இலக்கியம் என்பதில்
நிச்சயமாக இலக்கியத்தன்மை இருந்தாக வேண்டும்.
ஆனால், இலக்கியத் தன்மை உடையனவற்றில் எல்லாம் இலக்கியம் இருந்தாக வேண்டிய
அவசியமில்லை. இதைப்போலவே, கவிதைத்தன்மை
இருந்தாக வேண்டியது ஒரு கவிதைக்கு மிகவும் இன்றியமையாதது. கவிதைத்தன்மை அல்லாதது பாடலாகவோ, செய்யுளாகவோ
அல்லது சமத்காரமான ஒரூ துணுக்காகவோ போய்விட வாய்ப்புண்டு. வெறும் சந்தம், எதுகை, மோனை போன்றவைகள் ஒரு
பிரதியை கவிதையாக்கிவிட முடியுமா?
கடந்த ஐம்பது அறுபது
ஆண்டுகளாக மிகை உணர்ச்சி [hyperbole] தமிழ்க் கவிதைகளில் மிகுதியாக காணக்
கிடைக்கிறது. தனிநபர் துதிப்பாடல்கள்
மற்றும் தனிநபர் வசைகளாக - இரண்டும் இல்லையென்றால் “மிகுதியான ஆராதிப்பு”
போன்றவையையே தமிழ்க் கவிதையுலகை நிறைத்துள்ளன.
அதிலும், புதுக்கவிதையின் அறிமுகம் தமிழ் வாசகனுக்கு எழுபதுகளில் ஏற்பட்ட
பிறகு, படித்தவர்கள் அனைவருமே கவிஞர்கள் என்ற நிலை உருவாகிப்போனதால், தரத்தைப்
பற்றிய அறிவு பொதுப்புத்தியில் குறைந்துபோய், கவியரங்கங்களில் புத்திசாலித்தனமாக
துதிபாடுபவர்களும், சினிமாக்களில் மெட்டுக்களுக்கு வரிகளை அமைத்துக்
கொடுப்பவர்களும் கவியரசர்கள், கவிப்பேரரசர், கவிக்கோ என்ற பட்டங்களை சுவீகரித்துக்
கொண்டார்கள். இதில் மலினப்பட்டது
என்னவென்றால், ‘கவிதைத் தன்மையும்’, ‘கவிதையும்தான்’. வாசகனின் மூளையை மழுங்கடித்தவிட்ட பிறகு,
எதையும் கவிதை என்பதாக பொதுவெளியில் அறிமுகப்படுத்துவது எளிதாகிப்போனது. வாசகனைப்
பயிற்றுவிக்க இயக்கமோ அல்லது பயிற்றரங்கங்களோ நடக்கவேயில்லை. காதலைப் பற்றியும், தாங்களே நம்பாத ஒரு பெரிய
‘புரட்சியைப்’ பற்றியும் ஆயிரக்கணக்கில் கவிதைகள் தமிழில் பிரசுரித்தாயிற்று. கடவுளைத் துதிப்பதில் இருந்து தொடங்கி அரசியல்
கட்சித் தலைவன் வரை ‘கவிதைகள்’ எனப்பட்டவை தமிழில் மிகை உணர்ச்சிகளையே
தாங்கிவந்துள்ளன. புதுக்கவிதை
எழுதுபவர்கள் இன்னும் மோசம்.
புத்திசாலித்தனம் ஒரு கவிதையை உருவாக்க முடியாது என்பதை பெரும்பாலான
தமிழர்கள் நாளதுவரை தெரிந்து கொள்ளவில்லை.
கவிதையை இவ்வாறாக
தீவிரமாக அணுக வேண்டுமா? கவிதையின்
தனிநபர் மற்றும் சமூகம் சார்ந்த பயன் என்ன?
கவிதையின் குணங்கள் என்ன? கவிதை
வெறும் மொழியிலான ஒரு பிரதியா? கவிதையின்
உருவாக்கம் பீறிட்டுக் கிளம்பும் விசைமிகுந்த உணர்வுகளைப் பொறுத்ததா அல்லது
கவிதையை தன்னுணர்வோடு கட்டமைப்பு செய்ய முடியுமா?
வாசிப்பு ஒரு கலையா? வாசனுக்கு கவிதையை
நுகரும் முன், அவனுக்கு இருக்கவேண்டிய பயிற்சி யாது? கவிதையை எவ்விதமாக பார்ப்பது?
மனிதமைய நோக்கிலா, அழகியல் நோக்கிலா அல்லது வடிவியல் நோக்கிலா?
திருச்சிராப்பள்ளி
பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் திரு.க.பூரணச்சந்திரன்
“கவிதையியல்” எனும் நூலை ‘அடையாளம்’ வெளியீடாக அண்மையில்
வெளிக்கொணர்ந்திருக்கிறார். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு வளர்ந்திருக்கும் தமிழ்க்கவிதை வரலாற்றை மேற்கத்திய
விமரிசன அளவுகோல்களை வைத்து திறனாய்வு செய்ய முயன்றிருக்கிறார். தமிழிலக்கிய மாணவர்களுக்கு மட்டுமன்றி ஒரு பொது
நூலாகவும் படிக்கத் தகுந்த வகையில் வந்திருக்கிறது.
தம்மை கவிதா
உபாசகராக பாவித்துக் கொள்ளும் யாவரும் கவிதையின் நுணுக்கங்களில் மனம்
ஊன்றியிருக்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டி வரும். கவிதையை வாசிக்கப் பயிற்சி தேவைப்படுகிறது எனில்,
எந்த குணநலன்கள் கவிதையை உருவாக்குகின்றன என்பதை வாசகன் தெரிந்துகொள்ள
வேண்டும். வெறும் வடிவ நேர்த்தி ஒன்றை
கவிதையாக்கி விடுவதில்லை. மேலும் கவிதை
என்பதை மிகவும் பிரம்மாண்டமாக பார்க்கும் போக்கும் தமிழுலகில் உண்டு. கவிதை என்றும் மாறாதது எனவும், ஒரு கவிதைக்கு
ஒரு வாசிப்பு மட்டுமே சாத்தியம் எனவும், திருக்குறள் போன்ற அறநூல்களுக்கு உரை
எழுதியிருப்போர் கூட மற்ற உரைக்காரர்களை நிராகரிப்பதாகவே எழுதியிருக்கிறார்கள் எனவும்
நிறுவப்பட்டு இருப்பது, கவிதை பற்றி சொல்ல நிறைய உண்டு என்பதை நமக்கு
உணர்த்துகின்றன.
கவிதை எதைச்
செய்கிறது? கவிதை வாசகனுக்கு அவர்
உணர்ந்தவற்றை மீண்டும் ஒருமுறை அகத்தினுள்ளே தோன்றவைத்து, தன்னை அவர் மீண்டும்
ஒருமுறை மீள்பார்வை செய்துகொள்ள உதவுகிறது.
காவியத்தில் தலைவனுக்கு நேரும் துன்பவியலான நேர்வுகளைக் கண்ணுற்று
“தாங்களும் இதைப் போன்ற அனுபவத்தில் சிக்கி அழிய வாய்ப்புண்டு” என்பதை வாசகன்
தெரிந்துகொள்கிறான். கவிதை ஒருவனை தான்
பிரதியில் சந்திக்க நேரும் அவனுடைய இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்து, வியந்து
பயமுற்று வெட்கி தன்னைப் புடம் போட்டுக் கொள்கிறான். ஆனால் கவிதை இதைச் செய்ய
வேண்டும் என்ற கட்டாயமில்லை. கவிஞன்,
பிரதி, வாசகன் என்ற மூவரும் கவிதையை உருவாக்குகிறார்கள். தரமான கவிதைக்கு ஒரு பொதுக் கலாச்சார குணம்
இருக்குமென்றாலும், இக்குணம் இருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை. வாசகன் ஒரு குறிப்பிட்ட கவிதையை நுகரும் முன்,
இதுவரை என்ன வாசித்திருக்கிறான் என்பதைப் பொறுத்ததுமாகும் இது.
இந்தக் கட்டுரையின்
முதல் வரிகளில் பேசப்பட்ட கவிதைத் தன்மையை ஒரு கவிஞனுக்கு தருவது எது? சாதாரணமாக நாம் ஒருவரிடம் ஒருவர்
பேசிக்கொள்வதிலும் கூட கவிதைத் தன்மை இருக்க வாய்ப்புண்டு. கவிதையாக இல்லாதவற்றில் கவிதைத் தன்மை இருக்க
வாய்ப்புண்டு எனும் நிலையில், கவிதையை அடையாளப் படுத்தும் இயல்புகள் என்ன? நூலாசிரியர் கீழ்க்கண்டவைகளை கவிதையின்
இயல்புகளாக முன்வைக்கிறார்:
[1] மொழியை
முன்னிலைப்படுத்துதல்
[2] இலக்கியப்
பகுதிகளின் ஒருங்கிணைப்பு
[3] புனைவியல்பு
[4] அழகியல் தன்மை
[5] சுயநோக்குத் தன்மையும்
பரஸ்பரப் பிரதியுறவும்
[1] மொழியை
முன்னிலைப்படுத்துதல்
கவிதைக்கென்று ஒரு
மொழி உண்டு. இதை ‘மொழிக்குள் மொழி’ என்று
வேண்டுமானால் கூறலாம். கவிதை மொழி மற்ற
வகை மொழிகளை விட பெரிதும் வேறுபட்டது.
பேச்சிலோ அல்லது பிறவகை எழுத்துகளிலோ கருத்தை முன்னிலைப் படுத்துகிறோம். ஆனால் கவிதையிலோ மொழியே முன்னிலையாகிறது.
கவிஞன் தனது செய்தியை மொழியை முன்னிலைப்படுத்துவதின் மூலமே அமைக்கிறான்.
[2] இலக்கியப் பகுதிகளின் ஒருங்கிணைப்பு
பூரணச்சந்திரன்
கவிதை ஒரு உயிரி என்கிறார். ஒரு உயிரிக்கு
பகுதிகள் முக்கியம். பகுதிகளின் பொருத்தப்பாடுகள்
இன்றி முழுமை இயங்க முடிவதில்லை.
உயிருள்ளவை இயங்கும் என்றால் அவைகளின் பகுதிகளினிடையில் பொருத்தப்பாடு
அவசியம். ஒரு நல்ல கவிதை கால ஒருங்கு [Unity
of Time], இட ஒருங்கு [Unity of Place] மற்றும் காரிய ஒருங்கு [Unity of Action]
உள்ளிட்ட பொருத்தப்பாடுகளை கொண்டிருக்கும்.
[3] புனைவியல்பு
கவிதைக்கு புனைவுத்
தன்மை மிகவும் ஜீவனான ஒன்று. புனைவுத்
தன்மையை கொண்டு புற உலகத்தோடு தன்னை தொடர்புப் படுத்திக் கொள்கிறது கவிதை. இப்புனைவுத் தன்மை கவிதைக்கு உலகத்தோடு ஒரு
பிரத்தியேகமான உறவை ஏற்படுத்துகிறது. இந்த
புனைவுத் தன்மையானது கவிதைக்கு விசேஷமான மொழி ஒன்றையும் சாத்தியமாக்குகிறது. பிற சூழல்களில் இருந்து முதலில் தன்னை
வேறுபடுத்திக் கொள்ளும் இந்தக் கவிதை மொழியானது, ஒரு நிலையில் இவ்வுலகத்தோடு உறவு
கொள்வதற்கும் தன்னையே கருவியாக்கிக் கொள்கிறது.
[4] அழகியல்
தன்மை
இலக்கியப் பிரதி
ஒன்று தன்னை ‘முழுமையானது’ என்று பிரகடனம் செய்யும் பட்சத்தில், அந்த முழுமைக்கு
மேற்கண்ட மூன்று இயல்புகளும் எப்படி பங்களித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதிலே
அந்த இலக்கியப் பிரதியின் அழகியல் தன்மையாக அமைகிறது.
[5] சுயநோக்குத்
தன்மையும் பரஸ்பரப் பிரதியுறவும்
இங்கு எதுவுமே
சுயம்பு இல்லை. ஒன்றிலிருந்தே வேறொன்று
உருவாக்கப்படுகிறது. ஒன்று தனியாக
ஜீவித்திருக்க முடியுமானால் அதற்கு அர்த்தம் என்று சிறப்பாக எதுவும் இல்லை. ஒரு கவிதை தன்னை இதுவரை எழுதப்பட்ட எல்லாக்
கவிதைகளோடும் தொடர்பு கொள்கிறது. தன்னுடைய
அர்த்தத்தை இந்தத் தொடர்பின் மூலமே உருவாக்கிக் கொள்கிறது; செறிவாக்கிக்
கொள்கிறது. பிற பிரதிகளோடு மட்டுமன்றி
வாசகனோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவாலும் தன்னுடைய அர்த்தத்தை விஸ்தரித்துக்
கொள்கிறது. சொல்லப்போனால், ஒரு கவிதையை
தீர்மானிப்பது அதைச் சுற்றியுள்ள உலகம்தான்.
உலகின்றி அமையாது கவிதை போலும்.
இப்படியான ஒரு
பிரிக்கமுடியாத உறவை உலகத்தோடு ஏற்படுத்திக் கொள்ளும் கவிதை ஒன்று, எதன்
அடிப்படையில் அந்த உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது அடுத்த கேள்வி. முதலாவதாக, இலக்கியம் / கவிதை ஒரு மனிதனின்
அனுபவத்தை பல மடங்கு பெருக்குகிறது. அனுபவத்தின்
ஆழத்தை, வீச்சை அதிகரிக்கிறது. ஒருவன்
தன்னையே பார்க்கும் கண்ணாடியாகவும் மாறிப் போகிறது கவிதை. இரண்டாவதாக, கவிதையின்
உலகளாவிய தன்மை அதற்கு ஒரு மானிடப் பண்பை உருவாக்குகிறது. சிறிய நிலப்பரப்பைச் சேர்ந்த கவிஞன் ஒருவன் உலகத்திற்கே
பொதுவான ஒன்றை எழுதிவிடுகிறான். உணர்வு
நிலையை பொதுமைப்படுத்தி விடுகிற தன்மை கவிதைக்கு இருப்பதாலேயே நாம் பிறமொழிக்
கவிதைகளைத் துய்க்க முடிகிறது. அடுத்ததாக,
கவிதைக்கு இயல்பிலேயே இருக்கும் பண்படுத்தும் தன்மை. கவிதை பிரச்சாரத்தில்
ஈடுபடுவது இல்லை. இனியது மற்றும் இன்னாததை
அனுபவங்கள் மூலமாக கவிதை உருவாக்கித் தருகிறது.
கவிதை தரும் அனுபவங்களில் ஈடுபடும் வாசகன் தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். மனித உணர்வுகள், சிக்கல்கள், உறவுகள் உள்ளிட்டவை
மனிதகுலம் முழுமைக்குமே ஒன்றுதான் என்பதை கவிதையைத் துய்க்கும் வாசகன்
புரிந்துகொள்வது, கவிதைக்கு இருக்கும் இந்த ‘பண்படுத்தும் தன்மையால்தான்’. கடைசியாக கவிதையின் ஊடுபாவாக இருக்கும்
‘அரசியல் தன்மை’ அதன் முக்கியத்துவத்தை நிர்ணயம் செய்கிறது. சில சமயங்களில் ஆதிக்கச் சக்திகளின்
வெளிப்பாடாக இருக்கும் கவிதை, எதிர்ப்பிலக்கியத்தின் குரலாகவும் இருக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கவிதை
இருப்பதை எதிர்க்கிறது அல்லது இருப்பது அப்படியே தொடர வேண்டும் என்ற ‘துருவ
முரண்நிலை’ அரசியல் செய்தவண்ணம் உள்ளது.
வடிவக் குழப்பம்
பூரணச்சந்திரன் அவர்கள்
தமிழ்ச் சூழலில் கவிதை குறித்த உருவ மயக்கம் இருப்பதைக் குறிப்பிடுகிறார். செய்யுள், பாட்டு, கவிதை என்பன ஒன்றே போல்
தெரிந்தாலும் இவை ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டவை என்று நிறுவுகிறார். கவிதைக்கு அடிப்படையான சப்த ஒழுங்கு ஒன்று
உண்டு என்றாலுங்கூட மிகுதியான இசைப் பங்களிப்பு இல்லாமலேயே அது இயங்குகிறது என்று
சொல்லும் ஆசிரியர் பல உதாரணங்கள் மூலம் இம்மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை
உணர்த்துகிறார். சினிமாப் பாடல்களை கவிதை
என்று ஒப்ப மறுக்கும் ஆசிரியர், சில அரிதான பாடல்களில் ‘கவிதைத் தன்மையை’ காண
நேரலாம் என்கிறார். மேலும், கவிதை என்றுமே
தனது குரலில் மாறாதது. இன்று ஒன்றும் நாளை
வேறொன்றும் சொல்லாதது. பாட்டுக்கு இது
பொருந்தாது. ஒரு தனிநபரின் குறிப்பிட்ட
நேர குரலாகவே பாட்டு பெரிதும் இருக்கிறது.
கூடவே, பாடலுக்குத் தாள அமைப்பு மிகவும் முக்கியம். கவிதையோ ‘தாள அமைப்பையும் அர்த்த அமைப்பை
நோக்கியே’ பயன்படுத்துகிறது.
இன்னும் ஒரு நிலை
மேலே போய்க் கருத வேண்டுமானால், கவிதை ‘சமரசங்கள்’ செய்து கொள்வதில்லை. ஆனால் பாடல்களில் பெரும்பாலானவை பணம் மற்றும்
அதிகாரம் ஆகியவற்றோடு செய்யப்படும் சமரசங்கள்தான். இன்னொரு நிலையில் பார்ப்போமேயானால்,
பாடலுக்கு எளிமை முக்கியம். கவிதைக்கு
எளிமை என்பது சில சமயங்களில் இயல்பாக நேருவது.
கவிதை எளிமையை யாசிப்பதில்லை. “ஒரு
கவிதை யாவர்க்கும் புரியும்படியான ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை.”
கவிதையின் கொடை
கவிதையின் கொடை
என்ன? அனுபவம்தான் கவிதையின் கொடையாக
இருக்க முடியும். பூரணச்சந்திரன்
வார்த்தைகளில் “கவிதை என்பது ஒரு தரிசன அனுபவத்தை மொழியில் கொண்டுவர
முயற்சிக்கிறது.” அது எப்போது
வேண்டுமானாலும் எழுதப்பட்டிருக்கலாம்.
எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை ஒரு நித்தியமான அனுபவத்தை வழங்குவதைத்
தவிர வேறு செயல்களை ஆற்றவொண்ணாது. வேறு
எதற்கும் கவிதை முயல்வதில்லை. மேலும்
கவிதை என்பது நீதிபோதனைகளோ, கோஷங்களோ அல்லது சொல் விளையாட்டுக்களோ அல்ல; மிகவும்
துர்ப்பாக்கியமாக, திராவிட அரசியலின் எழுச்சியுடன் தமிழில் கோஷங்களும், சொல்
விளையாட்டுக்களும் கவிதையுடன் தொடர்புப் படுத்தப்பட்டன. வாசிப்புப் பயிற்சி இல்லாத
ஆயிரக்கணக்கான முதல் தலைமுறை கல்வி கற்றோர் வெற்று கோஷங்களை கவிதைகளாக ஏற்று மனம்
மயங்கி பொருத்தமே இல்லாத தகுதிகளை பல பிரதிகளுக்கு அளித்து மகிழ்ந்தனர். ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே அவை
அனைத்தும் புழுதிக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
இதன் தொடர்ச்சியாக
‘கவிதை வாசிப்பு முறை’ பற்றி பல பக்கங்களில் ஆசிரியர் விளக்குகிறார். பண்படுத்தப்படாத, வாசிப்பிற்கு பழக்கப்படாத
வாசகன் செல்ல விரும்புகிற இடத்திற்கு போய்ச் சேரவே மாட்டான். கவிதை ஒலியோடு நெருங்கியது. கவிதையை வாய்விட்டோ அல்லது அகக்குரலின்
மூலமாகவோ ‘உரக்க’ படிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் ஆசிரியர், வாசகனிடம்
வேண்டுவது மௌனத்தையும்தான். கவிஞன்
எல்லாவற்றையும் சொல்வதில். சொல்லிக்கொண்டு
வந்ததை திடீரென்று நிறுத்துகிறான் கவிஞன்.
ஒரு மௌனம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. வாசகன் அந்த மௌனத்தை அர்த்தப்படுத்துக் கொள்ள
வேண்டும். ஆழமான இடங்களில் நீந்துவதற்கு
தைரியமும் பயிற்சியும் முக்கியம். மேலும்,
கவிதை விசேஷமான மொழியால், குறியீடுகளால், குறிப்பர்த்தங்களால் உருவாக்கப்படுவது. வாசகன் இந்த ‘அரசியலை’ புரிந்து கொள்ள
வேண்டும். கவிதை மொழி பல பரிமாணங்களைக்
கொண்டது. ஒற்றைப் பரிமாண அர்த்தத்திற்கு
பழகிப் போனவன் ஒரு கவிதையை முழுமையாக கட்டுடைக்கவே முடியாது. வாசகன் இந்தப் பல பரிமாண மொழிக்கு தன்னைப்
பழக்க வேண்டும். கவிதையின் பலனை
பரிபூரணமாக நுகர்வது என்பது தீவிரப் பயிற்சி கொண்ட சில நூறு வாசகர்களாலேயே
முடிவதாக உள்ளது.
வடிவமும் அணியும்
தனது நூலின்
பிற்பகுதியின் பெரும்பாலான பக்கங்களில் கவிதையின் வடிவம் மற்றும் கவிதை
பயன்படுத்தும் அணிகளை விவரிக்கிறார் நூலாசிரியர்.
கவிதை புதிதாக வாசனுக்குத் தோன்றுவது எப்படி? நாம் எல்லாவற்றுக்கும்
பழக்கவயப்பட்டிருக்கிறோம்.
“பழக்கவயப்படுதல் எல்லாவற்றையும் விழுங்கிவிடுகிறது.” வீடு, மனைவி, வேலை,
அதிகாரி, சமூகம், போர் என்ற எல்லாவற்றுக்கும் அச்சூழலில் சிக்குண்டு இருக்கும்
மனிதன் பழக்கவயப்பட்டு விட்டான். இவை எல்லாம் இருந்தும் இல்லாதது போல்தான். ஆனால் இவைகளை மீட்டெடுத்ததாக வேண்டும். கலை / கவிதை இந்த மீட்டெடுப்பில்
உதவுகிறது. அவன் உணர்ந்து பரவசப்பட்ட அதே
அனுபவத்தை கவிதை அவனுக்குத் தருகிறது.
அதுவும் தான் உணர்த்த விரும்புவதை உணர்த்துவதற்காக அது சிறப்பான வழி
ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த “பரிச்சய
நீக்கமானது” கவிதையின் முக்கிய பணியாகும்.
படிமம், உவமை,
உருவகம் போன்ற பல இலக்கிய அணிகளை கொள்கை அளவில் விளக்குவதுடன் நில்லாமல்,
சந்தர்ப்பம் வேண்டும்போதெல்லாம், சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய கவிதை வரை
மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது, வாசகன் இந்த ‘கவிதையியல்’ பற்றி நீண்ட
விவாதத்தில் நேரடியாக பங்கெடுக்க உதவுகிறது.
படிமம் [image], படிமத்தன்மை [imagery], படிம இலக்கியம் [imagism], உருவகம்
[metaphor], உவமை [simile], மனிதப்படுத்தல் [personification], இலக்கணை
[apostrophe], குறியீடு [symbol], சினைஎச்சம் [synecdoche], வரலாற்றுக் கதையாடல்
[emplotment], ஆகுபெயர் [metonymy], குறிப்புருவகம் [allegory], முரண்கூறு
[paradox], உயர்வு நவிற்சி [hyperbole], குறை நவிற்சி [understatement], குறிப்பு
முரண் [irony] போன்ற பல இலக்கிய அணிகளை போதுமான எடுத்துக்காட்டுடன் ஆசிரியர்
விளக்குவதிலிருந்து அவரின் நீண்ட துறை அனுபவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பீடும்
விமரிசனமும்
இந்த நூலின் இறுதிப்
பக்கங்களில் ஆசிரியர் அவர்கள் கவிதை எப்படி மதிப்பிடப்படுகிறது என்பதையும்
விமரிசனம் எப்படி மதிப்பீட்டில் இருந்து வேறுபடுகிறது என்பதைப் பற்றியும்
விவரிக்கிறார். கவிதையை மதிப்பிடுகிற
வகையில் “ஒரு கவிதையை வாசித்த பிறகு எவ்வித அனுபவத்தையும் அடையவில்லையானால், ஒன்று
கவிதை சரியானதல்ல, அல்லது வாசிப்பவர் மோசமானவர், அல்லது அலைச்சேர்க்கை ஒன்றாதவர்
என்று சொல்லிவிடலாம்” என்கிறார். ஆனால்
கவிதையை விமரிசனம் செய்வதற்கு மதிப்பீடு செய்தால் மட்டும் போதாது. ஒரு கவிதையைப் பற்றிய நமது முடிவான கருத்திற்கு
– அந்த இடத்திற்கு – நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்று விளக்குவதுதான் விமரிசனம்
ஆகும். “விமரிசனம் என்பது மதிப்பிடலும் விளக்குதலும்
என்ற வரையறை இதைத்தான் சொல்கிறது.”
மதிப்பீடு என்பது ஒரு மனப்பதிவு என்றால், விமரிசனம் என்பது ஒரு படைப்பை
பல்வேறு இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளின் வழி ஆய்வுக்குட்படுத்தி, வாசகனின்
அனுபவத்தை விரிவாக்கம் செய்து அவன் வாசிப்பினால் அடையவிருக்கும் அனுபவத்தை இன்னும்
மேம்படச் செய்வதாகும். விமரிசனம் என்பது
வெறும் உணர்வை மட்டும் நம்பிச் செய்யப்படுவது அல்ல. கவனமாக செய்யபப்பட வில்லை என்றால், அது வெறும்
தனி வாசகன் ஒருவனின் மனப்பதிவாக மாறிவிடும் அபாயம் உண்டு. படைப்பைப் பகுப்பாய்வு செய்தல், மறுவாசிப்பு
செய்தல், மீள் உருவாக்கம் செய்தல், ஒரு சமூக, இலக்கியக் கொள்கையின் வழி நின்று
ஆய்தல் படைப்பின் பொருத்தப்பாட்டை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும்.
விமரிசனத்தின் நோக்கம்
மேம்பாடுதான். பிரதியின் மேம்பாடு,
படைப்புத் திற மேம்பாடு மற்றும் வாசக மேம்பாடு போன்றவையே இலக்கியத்தின் நோக்கமாக
இருக்க முடியும். தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகள் இன்றி செய்யப்படும் விமரிசனமானது யாரையும் காயப்படுத்தும் நோக்கம்
கொண்டது அல்ல. க.பூரணச்சந்திரன்
சொல்கிறார், “ஒருவருடைய விமரிசனத்தால் நாம் நோவடைகிறோம் என்றால் அந்த அளவுக்கு
நம்மிடம் குறைகள் இருக்கின்றன என்பதோ [விமரிசனம் சரியானது] நாம் பக்குவமடையவில்லை
என்பதோ [நம் ஈகோ பாதிப்படைகிறது] இரண்டில் ஒன்று உண்மை. விமரிசனம் ஜனநாயகத்தின் ஆதாரம்.”
[அடையாளம், திருச்சி வெளியீடு, உரூபா 120/-]
0 comments:
Post a Comment