நம் கதை

| Sunday, November 19, 2017
ஜூனியர் விகடன் போன்ற சஞ்சிகைகளை எப்பொழுதுமே நான் படித்ததில்லை. தராசு என்றொரு பத்திரிக்கை மிகவும் பிரபலமாக எனது கல்லூரிக் காலத்தில் இருந்ததுண்டு. பிறகு, கோபால் நக்கீரன் துவக்கினார். சலூன் போனால் கூட, காத்திருக்கும் சமயங்களிலும் நக்கீரனோ, ஜூனியர் விகடனோ படிக்கவோ பார்க்கவோ கவர்ந்ததில்லை. ஆனால், வண்ணத்திரை பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. நடுப்பக்க அரை நிர்வாண நடிகைகள் அன்றிரவு கனவில் வருவார்கள். வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டே தூங்கிப் போவேன். ரசக் குறைவான சினிமாப் பத்திரிகைகளுக்கு இருக்கும் அந்தஸ்து கூட இந்த அரசியல் வாராந்தரிகளுக்கு இல்லை என்று தோன்றும்.
இவைகளில் வரும் தனிநபர் துவேஷங்கள் பயமுறுத்துவை. பல சமயங்களில், sponsored / triggered எழுத்துக்கள். கல்லூரி / சர்வகலா சாலை காலங்கள் முழுவதும் இந்தப் பத்திரிகைகளுக்கு எதிராகவே இவைகளின் வாசக நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன். இப்பொழுதும் கூட, இவைகளைப் பற்றிய அக்கறை சிறிதும் என்னிடம் இருக்க எந்த காரணத்தையும் இந்த சஞ்சிகைகள் எனக்கு தந்து விடவில்லை.
ஆனால், விதி ஒன்றுக்கு விலக்கு இருப்பதைப் போலவே இதிலும் உண்டு. "திராவிட(ர்) இயக்கம் நோக்கம் - தாக்கம் - தேக்கம்" நக்கீரனில் பல வாரங்கள் வந்திருந்து அது பின்னர் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் பின்னர் வந்த கழகங்கள் ஆகியன பற்றி தொடர்ந்து வாசித்தும் யோசித்தும் வருபவன் என்ற முறையில், மேற்சொன்ன புத்தகம் நண்பன் ஒருவன் வழி எனது கைகளுக்கு வந்த பொழுது, சில நாட்கள் அதைத் தொடவே மனமில்லாமல் இருந்தேன். புரட்டிய பொழுது கண்ணில் பட்ட பக்கங்களில், பேரன் - தாத்தா என்ற பாவனையில் எழுதப் பட்ட புத்தகம் என்பது வேறு எனது அசட்டையை அதிகப்படுத்தியது. பேரன் நிறைய கேள்விகள் கேட்கிறான். தாத்தா பதில் சொல்கிறார். இப்படியான கதையாடலில் என்ன அதிகம் ஆழமாக சொல்லிவிடப் போகிறார் நூலாசிரியர் என்ற நினைப்பு வேறு.
கோவி.லெனின் என்ற சஞ்சிகையாளர் இதன் ஆசிரியர். இருநூறு உரூபா விலை கொண்டது. முன்னூற்று இருபத்தேழு பக்கங்களில் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் பின்னணிக் காலங்களில் தொடங்கி அதன் இன்றைய தேக்க நிலை மற்றும் எதிர்காலம் வரை மிகவும் தெளிவாக ஆவண ஆதாரங்களுடன் நம்பவே முடியாத எளிமையுடன் உரைநடைப் பாங்கில் வடித்துள்ளார். இவ்வளவு விரைவாகப் படிக்கும் வண்ணம் ஒரு கடினமான வரலாற்றுப் பயணத்தை ஒருவர் சொல்ல முடியுமானால், எடுத்துக்கொண்ட விடயத்தில் அவருக்கு இருக்கும் தேர்ச்சியும் பயிற்சியும் விளங்குகிறது.
திராவிட அரசியலால் விளைந்த கேடுகள் என்று பலவற்றை ஒருவர் பட்டியிலிட முடியும். சர்க்காரியா கமிஷன், சொத்துக் குவிப்பு வழக்குகள், டு ஜி, காரில் வலம் வரும் சட்டமன்றங்கள், வார்டுகள், ஒன்றியங்கள், வளர்ப்பு மகன் கல்யாணம், குடும்ப அரசியல், காலில் விழும் கர்மங்கள் என்று எவ்வளவோ நினைவுக்கு வர நியாயம் உண்டு. இவைகள் எல்லாமுமே திராவிட அரசியலால் வந்தவை. சந்தேகமேயில்லை.
ஆனால், திராவிட அரசியலுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. பெண்களுக்கு சொத்துரிமை, 69% சதவிகித இட ஒதுக்கீடு, தமிழர் மொழி இன உரிமை மற்றும் உணர்வு, மொழிச் சீர்திருத்தம், சமச்சீர் கல்வி, கடவுளர் எதிர்ப்பு, சுயமரியாதை திருமணம், நில உச்ச வரம்புச் சட்டம், பார்ப்பனரிடமிருந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களைக் கைப்பற்றி பிற்படுத்தப் பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் வசம் அளித்தல், பார்ப்பனீய எதிர்ப்பு, சுய மரியாதை, அனைவரும் ஆலயப் பிரவேசம், ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், இந்து அறநிலையத் துறை, வகுப்பு வாரி உரிமை, தேவதாசி ஒழிப்பு, சட்ட எரிப்புப் போர், இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, பெண் கல்வி, விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம், விதவைகள் மறுமண நிதியுதவி, கலப்புத் திருமண தம்பதிகளுக்கு அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள், குதிரைப் பந்தயம் ஒழிப்பு, சத்துணவு, சமத்துவபுரங்கள் ஆகியனவும் நினைவுக்கு வர நியாயம் உண்டு. நினைவுக்கு வர வேண்டும். காமாலை மனது இல்லாமலிருந்தால் இரண்டுமே நினைவுக்கு வரும்.
1920 முதல் 1937 வரை பதினெட்டு ஆண்டுகள் திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆகப் பெரிய சமுதாய மாற்றங்கள் இந்த மண்ணில் துவங்கியது இந்தப் பதினெட்டு ஆண்டுகளில்தான். அனைத்து சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்கும் மசோதாவை முதல் அமைச்சர் பனகல் அரசர் 16-8-1921ம் நாள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த வரலாறு தெரியாத TRB நடத்திய பரீட்சைகளில் பொட்டுவைத்து வாத்திகள் ஆன விசிலடிச்சான் குஞ்சுகள் திராவிட இயக்கங்களை விமரிசித்து மீம்ஸ் பகடி சமூக வலைத்தளங்களில் செய்வதைப் பார்க்கும் போது, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் சகிப்புத் தன்மையின் மீதும் மரியாதை மேலெழுகிறது. அன்றைய நிலையில் கல்லூரிகளின் விடுதிகளில் பிராமணர் அல்லாதோர் பிள்ளைகள் சேர முடியாது. அனைவரையும் விடுதிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாணையை இதே ஆண்டில்தான் பனகல் அரசர் பிறப்பித்தார். பஞ்சமர் - பள்ளர் - பறையர் போன்ற வார்த்தைகளை அரசுப் பதிவேடுகள் எதுலும் பயன்படுத்துதல் ஆகாது; ஆதி திராவிடர் என்ற பதத்தையே பயன்படுத்துதல் வேண்டும் என்ற தீர்மானம் நீதிக் கட்சி ஆட்சியில் 25-3-1922 அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இதே கால கட்டத்தில் நாட்டிலேயே முதன்முறையாக தாழ்த்தப் பட்டோருக்கென்று தனியாக அமைச்சகத்தை தோற்றுவித்தது நீதிக்கட்சி அரசு. இதே ஆண்டில், தாழ்த்தப் பட்ட மாணவருக்கான எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக் கட்டணத்தை ரத்து செய்தது அரசு. பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் என்று அறிவித்ததும் இந்த அரசுதான். தனது முதலாவது அமைச்சரவையில், இவை தவிர, தொழிலாளர் நலனுக்கான ஆணையங்கள், தாழ்த்தப் பட்ட மக்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் போன்றவையை 1920-1923 இடைப்பட்ட காலத்தில் நிறைவேற்றியது நீதிக் கட்சி அரசு.
சென்னை மாகாண அரசால் வெளியிடப்படும் அரசாணைகள் ஒவ்வொன்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில், எம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்பது நீக்கப் பட்டது. ஆந்திரப் பல்கலைக் கழகம் இப்போதுதான் தோற்றுவிக்கப் பட்டது. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோன்ற இந்தக் காலகட்டத்தில்தான் வழிவகுக்கப் பட்டது. அற நிலையைப் பாதுகாப்பு மசோதா 1925ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது. இதன் மூலம் தனியார் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வந்தது தடுக்கப் பட்டது.
மேலே சொன்னவையை மறந்து விட்டுத்தான் திராவிட இயக்கங்களையும் தலைவர்களையும் தூற்ற வாயெடுக்க முடியும். ஊழல் இல்லையா என்று கேட்பவர்களிடம் ஊழல் இருந்தது என்று சொல்வேன். தயக்கமே இல்லை. ஆனால், இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன் மூவாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டது போல இங்கு எதுவும் நடந்து விடவில்லை என்றும் சொல்வேன். குஜராத் சம்பவங்கள் போல எதுவும் இங்கு நடக்கவில்லை என்றும் சொல்வேன். இங்கு நடந்திருக்கும் ஊழல் இந்தியாவில் வேறெங்கும் நடந்திருப்பவையை விட ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றும் சொல்வேன்.
இந்தச் சிறு கட்டுரையைப் படிக்கும் நண்பர்களிடம் ஒன்று சொல்லிக் கொள்வேன். நாம் இந்த இயக்கத்தின் கனிகள். விதைகள் நம் பாட்டன்கள். மரத்தை வெட்ட முனைவோருக்கு வரலாறு தெரியாமல் வக்காலத்து வாங்க வேண்டாம். வானத்தைப் பார்த்துப் படுத்து மேலே எச்சில் துப்பும் கதையாகி விடும். வரலாறு முக்கியம். நமக்கெல்லாம், திராவிடர் இயக்க வரலாறு முக்கியம். எங்கிருந்து துவங்குவது என்றா கேட்கிறீர்கள்? "திராவிட(ர்) இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்" - கோவி.லெனின், நக்கீரன் வெளியீடு, விலை இருநூறு உரூபாக்கள்.


ஸ்டார் பிரியாணி

| Thursday, September 14, 2017
மனுஷ்ய புத்திரனுக்கு வீடு கிடைக்காதது இன்று பலருடைய விலாசத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. ஜெயமோகன் கடுமையான கருத்தை அவரது வலைத்தளத்தில் பதிந்து, அதைப் பற்றிய எதிர் விளைவுகள் மிகக் கடுமையாகக் கிளர்கின்றன. அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக, இப்போதுதான் கூடி வந்தது.

அவர் சொல்வதில் உண்மை கொஞ்சம் இருக்கிறது. வீடு கிடைப்பது எல்லோருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது. பெரு நகரங்களில் மட்டுமன்றி, சிறு நகரங்கள் - ஏன் கிராமங்களில் கூட இது சிக்கல்தான். யார் என்னுடைய வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் எப்படி வாடகைக்கு விடுவது? எங்கள் மாவட்டத்திற்கு உயர் கல்வி அலுவலர் ஒருவர் மாற்றலாகி வந்தார். குழந்தைகள் வேறு ஊரில் படித்துக் கொண்டிருத்ததால் அவரது துணைவியாரும் அவர்களுடனேயே இருந்தார். எங்கள் அலுவலர் தனியாகத்தான் இங்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் அவருக்கு வீடு பார்க்கத் தொடங்கினோம். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாவட்டத்தின் தலைமை அலுவலரான அவருக்கு வீடு தேடி வந்த நாட்களில், ஜெயமோகன் சொல்லும் பிரச்சினையை நேரடியாக சந்திக்க வேண்டி வந்தது. தனியாக இருக்கப் போகும் ஆண் ஒருவருக்கு, அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, வீடு கிடைப்பதில் சிக்கல்கள் நிறைய உண்டு. ஒருவர் நிபந்தனையோடு வீடு தர சம்மதித்தார். அதாவது, அலுவரின் குழந்தைகளை சேலத்து பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டு அதற்கான ரசீதுகளைக் காண்பித்தால், உடனே வீடு தருவதாகவும், அப்படியான நிலையில், அந்த உயர் அலுவலர் குடும்பத்தோடு தன்னுடைய வீட்டில் குடியிருப்பது தனக்குப் பெருமை என்றும் சொன்னார். அது சாத்தியமில்லை என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதவை எங்கள் முகங்களில் சாத்திவிட்டுப் போய் விட்டார்.

வீடு தேடுவது உண்மையில் ஒரு பெரிய பிரச்சினைதான். ஜெயமோகன் இதுவரை சரியாகவே தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார். அதற்குப் பிறகுதான், வழக்கம் போல தன்னுடைய வில்லங்கத்தைத் துவக்குகிறார். தென் மாவட்டங்களில் 'ஒரு சாதியினர்' என்றால் வீடு தரமாட்டார்கள் என்கிறார். முஸ்லிம்களை பேர் சொல்லி - அவர்களின் பிரிவுகளையும் சொல்லி - இவர்களுக்கு வீடு தராமல் தமிழ் நடுத்தர வர்க்கம் இழுத்தடிப்பது சரிதான் என்ற அளவில் சொல்கிறார். முஸ்லிம்கள் முரடர்கள் - அவர்களை நம்புவதற்கில்லை என்றெல்லாம் தைரியமாக சொல்லும் ஜெயமோகன், தென் மாவட்டங்களில் இருக்கும் "அந்த சாதியினரை" ஏன் பெயரை சொல்லிக் குறிப்பிட தயங்குகிறார். தேவர்கள் அரிவாளோடு வந்து விடுவார்கள் என்ற பயத்திலா? இஸ்லாமியர்களில் மட்டும்தான் 'வலுவான அமைப்பினர்' இருக்கிறார்களா? எனக்கெல்லாம் திரு ஹெச்.ராஜா-வின் பேச்சைக் கேட்டாலே குலை நடுங்குகிறது. பிரதமரின் பெயரை செய்தியாளர் சொல்லி முடிக்கும் முன்னரேயே கோபமாக "நீ ஒரு தேசத்துரோகி!" என்று ரௌத்திரமாக நாற்காலியை விட்டெழுந்து கை நீட்டி கத்துகிறார். அவர் முன்னால் பேசுவதற்கு - ஏன் நிற்பதற்கே - நிருபர்கள் பயப்படுகிறார்கள். டிவியில் அவர் பேசுவதைப் பார்க்கும் பொழுதெல்லாம் வயிற்றைக் கலக்குகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியரையும் வன்முறையாளராக மாற்ற இந்த மாதிரி ஒருவர் போதும்.

மற்றபடிக்கு, ஜெயமோகன் உணராததை எதுவும் எழுதிவிடவில்லை. இஸ்லாமியர் என்றாலே தனக்கு அச்சம் இருக்கிறது என்று சொல்கிறார். ஒன்றும் தப்பில்லை. எனக்கெல்லாம் பிஜேபி- காரர் என்றாலே குலை நடுங்குவது போலத்தான் இதுவும். பெரும்பான்மை சாதீயம்/ மதவாதம் மற்றும் சிறுபான்மை சாதீயம் / மதவாதம் - இரண்டுக்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை ஒரு பக்கம் சார்ந்து நிற்கும்போது ஒருவர் அறிய முடியாது என்பது மட்டுமல்ல, தெரிந்தாலும் சொல்ல முடியாது.

இஸ்லாமியரைப் பற்றி - வீடு வாடகைக்கு கொடுப்பதில் - இந்துப் பெரும்பான்மை சமூகத்திற்கு ஒரு அச்சம் இருக்கிறது. இருக்கலாமா என்றால் இருக்கலாகாது. நாகர்கோவில் பக்கம் பெந்தகொஸ்தே பிரிவினருக்கு வீடு தர மாட்டார்கள் என்று ஜெயமோகன் சொல்லியிருப்பது உண்மையாக இருக்கலாம். இதற்கு எது காரணம் என்றால், வாடகைக்கு வருபவன் அல்ல; வாடகைக்குத் தருபவன்தான்.
கடந்த இருபது வருடங்களில், இன்னும் சரியாகச் சொன்னால் - இந்திய அரசியலில் பிஜேபி தலையெடுத்த பிறகு, நாட்டின் பெரும்பான்மை பகுதிகளில் சிறுபான்மை மதத்தினர் - சாதியினர் ஆகியோருக்கு காலம் கெட்டுவிட்டதாகவே கருதுகிறேன். உடனடியாக சரி செய்யப்பட வேண்டியது இது. இதில் கம்யூனிஸ்டுகள் பெரிய பங்களிக்க முடியும். தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். பெரும்பான்மை இன - சாதிய வாதத்தை இங்கே வளர விடுதல் ஆகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். பெரியாரிஸ்டுகள் - கம்யூனிஸ்டுகள் - மற்றும் இந்த விடயத்தில் வலதுசாரிகளுக்கு எதிரான அரசியல் நிலையுடையோர் அனைவரும் சேர்ந்து வலுவான மாற்று கருத்தாக்கத்தை நிலைப்படுத்தி, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை சமூகத்தின் மைய நீரோட்டத்தில் பங்கெடுக்க வைத்தல் வேண்டும்.

ஒரு வகையில் மனுஷ்யபுத்திரனுக்கு வீடு கிடைக்காதது நல்லதுதான். இதைப் பற்றிய விவாதம் ஒன்றை துவக்கி வைத்திருக்கிறார். தமிழ் அறிவுலகம் இரண்டு பக்கமும் கட்சி கட்டிக்கொண்டு விவாதித்து வருகிறது. Pro-majority மற்றும் Pro-minority இரண்டு பக்கங்களும் களைகட்டி நிற்கின்றன. தேவர் - கவுண்டர் - வன்னியர் உள்ளிட்ட பெரும்பான்மையினரும் முஸ்லிம் - கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பன்மைத் தன்மையில்தான் இந்திய அரசியல் சாசனம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது.

ஹமீதிற்கு எப்படியாவது வீடு கிடைத்து விடும். இதைப் பற்றிய விவாதம் பொது வெளியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில், ஹமீதுகள் சிரமமின்றி வாடகைக்கு வீடுகளை அமர்த்திக் கொள்ள முடியும். ஹெச்.ராஜாக்கள் கடுமையான கோபத்துடன் நம் அனைவரையும் 'தேசத்துரோகிகள்' என்று அழைத்துக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அண்ணாச்சிகள் வாடகைக்கு வீடு பிடித்து சந்தோஷமாக கோழி அடித்து பிரியாணி செய்து நமக்கும் போடட்டும். நம்மில் பலர் ஸ்டார் ஓட்டல் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தவர்கள்தானே?

அந்த பிரியாணி வாசமும் சுவையும் லேசுப்பட்டதா என்ன?


முப்பது நாட்களில் ஆங்கிலம்

|
இன்றைய தமிழ் இந்துவில் அதன் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பள்ளிக் கல்வித் துறையில் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்பதாக அய்ந்து அம்சங்களைச் சொல்கிறார்.  எத்தனையோ மாற்றங்கள் தேவையிருந்தாலும் இவரைப் பொறுத்த வரையில் இந்த அய்ந்து அம்சங்களையும் போர்க்கால அடிப்படையில் சீர் படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இன்று நாம் பார்ப்பதை விட வேறெந்த மாற்றம் நிகழ்ந்தாலும் - நிகழ்த்தப் பட்டாலும் - அது தேவைப் படக் கூடிய ஒன்றுதான்.  தி ஹிந்து போன்ற பொதுவெளியில் செல்வாக்கு பெற்றுள்ள தினசரிகள் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரிப்பதும், விவாதங்களை முன்னெடுப்பதும் மிகவும் அவசியம்.  பள்ளிக் கல்வித் துறையின் நிலை அதன் அனைத்து பரிமாணங்களுடன் அத்தனை தரப்பு மக்களிடமும் கொண்டு போகப்பட வேண்டியது அதனுடைய எதிர்காலத்திற்கு இன்றியமையாதது. 

ஆங்கில மொழியைக் கற்பிப்பது குறித்தும் சமஸ் தன்னுடைய கருத்தை கவலை தொனிக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆங்கிலமே தெரியாத ஒரு நடிகை சினிமா உலகத்திற்குள் நுழைந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே சரளமாக ஆங்கிலம் பேசுவதை எத்தைகைய பயிற்சி உறுதி செய்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்.  நல்ல கேள்விதான்.  கிராமப் பள்ளிக்கூடத்திலும், அப்பள்ளியின் தொடர்ச்சியாக அருகாமையில் இருக்கும் பைசாவிற்கு உதவாத கலைக் கல்லூரியிலோ / பொறியியற் கல்லூரியிலோ படித்து பெங்களூருவிற்கு BPO அலுவலகம் ஒன்றில் பணியாற்றப் போன ஆறு மாதங்களுக்குள் பையன்கள் - பெண்டுகள் எப்படி ஆங்கிலம் பேச முடிகிறதோ அப்படித்தான் அந்த நடிகையும் பேசியிருக்க வேண்டும்.  அப்படியானால், பள்ளிக்கூடத்தில் பனிரெண்டு வருடங்கள் தங்கியிருக்கும் மாணவன் ஆங்கிலம் பேச முடியாமல் போவதெப்படி?

பள்ளிக் கல்வித் துறையில் எத்தனை உயர் அதிகாரிகள் இருக்கிறார்களோ, அத்தனை பதில்கள் இந்தக் கேள்விக்கு இருக்கின்றன.  தங்களை ஆங்கிலம் கற்றல் - கற்பித்தல் துறையில் ஒரு expert-ஆக நினைத்துக் கொள்வதால் எந்த உயர் அலுவலரும் இந்தப் பிரச்சினையை யானையை பார்வையற்றோர் புரிந்து கொள்ளும் நிலையிலேயே உள்ளனர். நன்றாக ஆங்கிலம் பேசும் சில நபர்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டு, அந்த நடிகையிடம் தினந்தோறும் பத்து மணி நேரமாவது குறைந்து ஆங்கிலத்தில் அவர்கள் உரையாடுகிறார்கள்.  அந்த மொழியோடு கூடவே அதற்கான உடல்மொழி - பாவனை - வட அமெரிக்க உச்சரிப்பு என்று பல அம்சங்கள் அந்த நடிகையிடம் கடத்தப் படுகிறது.  பெங்களூருவிற்கு வேலைக்குப் போகும் எனது மாணவனும் ஏறத்தாழ இதே போன்ற பயிற்சிக்கு உட்படுத்தப் படுகிறார்.  அண்மையில், எனது மாணவன் ஒருவன் பெங்களூருவில் தனக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த பயிற்சியாளர் பெண்ணையே காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறான். "இதுதான் ஒருவேளை உனது வாழ்க்கையின் உச்ச பட்ச சாதனையாக இருக்கக்கூடும்" என்று அவனை நான் உரிமையோடு கிண்டலடித்த போது அவன் சொன்னது என்னை பயமுறுத்தியது: "நல்லவேளையாக நமது பள்ளியில் எந்த டீச்சரும் அவ்வளவு சிறப்பாக எனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவில்லை".

ஆங்கிலம் சொல்லித் தருவதற்கு முதல் மற்றும் அதி பிரதானமான தகுதி ஆங்கிலம் பேசுவதுதான்.  TRB மற்றும் TET பாஸ் செய்து விடுவதால் ஒருவர் ஆங்கிலம் சொல்லித் தருவதற்கான தகுதியை அடைந்து விடவே முடியாது.  ஆனால் சமூக நீதி பங்கப் படாமல் ஆங்கில ஆசிரியர்களை தெரிந்தெடுக்க அரசிடம் வேறு வழியில்லை என்பது உண்மையாக இருக்கலாம்.  உண்மையாகவே இருக்கட்டும்.  தெரிந்தெடுக்கப் பட்ட ஆங்கில ஆசிரியர்களிடையே மொழித் திறனை வளர்க்க வழியே இல்லையா? பெங்களூருவில் BPO நிறுவனங்களில் எமது மாணவர்களுக்கு நடக்கும் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறையால் தெரிந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதங்கள் என்ற கால அளவில் வழங்க முடியாதா? இந்தப் பயிற்சியை தனியார் நிறுவனங்களிடமே கொடுக்கலாம். A+ அல்லது A தரம் அடையும் வரையில் இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்குத் தொடரும் படிக்கு விதிகள் வகுக்கப் பட முடியாதா?

இதை கண்டுகொள்ளாமல், ஆங்கிலமே பேச / எழுதத் தெரியாத ஆசிரியர்களை மாணவர்களுக்கு ஆங்கிலம் நடத்தச் சொல்வது political indifference to a burning issue என்றுதான் தோன்றுகிறது.  பாடப் புத்தகத்தை மாற்றினால் நிலைமை மாறாது.  இரண்டாயிரம் ரூபாய்க்கு சந்தையில் மலிவாக கிடைக்கும் multimedia சாதனம் ஒன்றைக் கொடுப்பதால் நிலைமை மாறாது.  இதன் ஒப்பந்ததாரர் பயனடைவதைத் தவிர. 

நான் அடிக்கடி சொல்லுவேன்.  கணக்கு வாத்தியார் கணக்கு மொழியைப் பேசுகிறார்.  அறிவியல் வாத்தியார் அறிவியல் மொழியைப் பேசுகிறார்.  தமிழ் ஐயா தமிழ் மொழியைப் பேசுகிறார்.  ஏன் இங்கிலீசு வாத்தி மட்டும் தமிழ் மொழியை மட்டுமே பேசுகிறார்.

சமஸ், இதைப் பற்றி முழுப் பக்க அளவில் தொடர்ந்து முப்பது நாட்கள் நடுப்பக்கத்தில் எழுதுங்கள். முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, பள்ளிக் கல்வித் துறையின் முப்பது பெரியவர்களுக்காவது இத்தகைய முயற்சியின் முக்கியத்துவம் தெரியட்டும்.


இல்லையென்றால், எல்லாம் நாசமாகப் போகட்டும்.

அமெரிக்காவிற்குப் போ!

|
"தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக செய்ய வேண்டிய அய்ந்து மாற்றங்கள் என்ன?" என்ற கட்டுரையில் (தமிழ் தி ஹிந்து, 30-4-2017) தேவையான மூன்றாவது மாற்றமாக 'கல்வியை அரசியல்மயப்படுத்துங்கள்' என்று சமஸ் அடையாளப் படுத்தியிருக்கிறார்.  கல்வி அரசியல் மயப்பட்டுதான் இருந்தது எழுபதுகளுக்கு முன்னால். ஹிந்தி மொழி எதிர்ப்பு ஒரு மாணவர் இயக்கமே.  திராவிடக் கட்சிகள் மாணவர்களைத் தங்கள் வசம் வைத்திருந்தன.  எண்பதுகளின் மத்தி வரை அந்த நிலையே தொடர்ந்தது எனலாம்.  1983-ல் யாழ் சர்வகலா சாலை எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வட இலங்கையில் எழுந்த கலவரங்களின் பாதிப்பு தமிழகக் கல்விச் சாலைகளில் மிகப் பெரிய அளவில் எதிரொலித்தது.  ரகசியமாக ஒத்த கருத்துடைய ஆசிரியர்களிடம் மட்டும் பரிமாறப் பட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் சஞ்சிகைகள் மாணவர்களிடம் வேண்டுமென்றே கசியவிடப் பட்டன.  ஆசிரியர்களிடம் ஒருவிதமான கொந்தளிப்பு இருந்தது.  மாணவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பரித்த போது, பெரு மகிழ்வுடன் ஆதரவு வழங்கினர் ஆசிரியப் பெருந்தகைகள்.  அவர்களில் பெரும்பாலோர் கருப்பு நிறச் சட்டையுடன் மாதக் கணக்கில் பள்ளிக்கு வந்தனர்.  நினைவு சரியாக இருந்தால், முதலமைச்சர் எம்ஜியார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கருப்புச் சட்டையுடனேயே விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் அவ்வமயம் கலந்து கொண்டனர். 

கல்வி அரசியலோடுதான் இருந்தது.  ஹாலிவுட் நடிகர்களைப் பற்றிச் சொல்வார்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும்.  அதை அவர்கள் மறைப்பதில்லை.  மாறாக, அதற்கான குரலை பொதுவெளியில் தொடர்ந்து ஒலித்தவாறு இருப்பார்கள்.  கல்வி வியாபாரமாக்கப்பட்ட போதுதான் மாணவர்களிடம் அரசியல் உணர்வு மறையத் தொடங்கியது.  பொறியியல் கல்லூரிகளின் எழுச்சி, நுழைவுத் தேர்வுகளின் துவக்கம் ஆகியவை மாணவர்களை அரசியலிடமிருந்து பிரித்தன என்று சொல்லலாம்.  இந்த காலகட்டத்தில்தான் சுயநிதி கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள் / கல்லூரிகள் மற்றும் பிற நிலைகள்) காளான்கள் போல பல்கிப் பெருகின.  கல்வி முதலாளி வசம் போனபோது, அரசியல் நிறுவன வளாகங்களிலிருந்து துரத்தப் பட்டது.  பாஸ் செய்த மகன் / மகள் அமெரிக்கா போனதால், பெற்றோர்களும் அரசியல் தங்கள் தலைமுறைக்கு வேண்டாமென முடிவுகட்டி விட்டார்கள். 

கேரளாவில் நிலைமை வேறு.  அங்கே அரசியல் நிறுவன வளாகங்களில் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது.  பெரிய தலைவர்கள், நடிகர்கள், இலக்கிய கர்த்தாக்கள் உட்பட பல பிரமுகர்கள் படிக்கும் காலத்தே அரசியல் தத்துவங்களுக்காக குரல் கொடுத்தவர்கள்தான்.  தனி நபர் வழிபாடுதான் அரசியல் என்ற நிலை தமிழகத்தில் எழுந்தது பரிதாபம்தான்.  அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்ற தனி ஆளுமைகள் ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியலைத் தங்கள் வசப் படுத்தியிருந்தனர்.  அத்தகைய தனிப் பெரும் ஆளுமை இல்லாத நிலைமை இப்போது வந்திருப்பது ஒரு வகையில் நன்மையே என்று சொல்ல வேண்டும். 

தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் நாட்டை depoliticize செய்ததில் முக்கியமான பங்களித்துள்ளன.  சினிமாக் கவர்ச்சியை மக்களின் ஊடே கொண்டுபோய், தனி நபர் வழிபாட்டை தமிழக அரசியல் கூறாக முன் நிறுத்தியதில் இந்தப் பத்திரிக்கைகளுக்கு ஆகப் பெரிய பங்குண்டு.  அண்ணா, விடுதலை, மக்கள் குரல், முரசொலி, தீம்தரிகிட போன்ற கட்சிப் பத்திரிக்கைகள் செய்த பங்களிப்பைக் கூட வெகுஜனப் பத்திரிக்கைகள் செய்துவிட வில்லை.  குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுஜன சஞ்சிகைகள் எல்லாம் pornography-யாக மலிந்து போய் ஐம்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது. 

தன்னுடைய சாவு வரை மக்களை அரசியல் படுத்தியவாறு இருந்த ஒரே தமிழக அரசியல்வாதியாக ராமசாமி நாயக்கரை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.  அவர் போன பிறகு, திராவிடக் கட்சிகளுக்கு தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரே watchdog இல்லாத நிலை.  சந்தோசம் தாங்காமல் தனிநபர் வழிபாட்டை உறுதிப்படுத்தி எம்ஜியார் - கருணாநிதி என்ற இரு துருவ அரசியலை நிச்சயப் படுத்திக் கொண்டனர் திராவிடக் கிளைகள். 
பெற்றோர்கள் மத்தியிலும் அரசியலுக்கு எதிரான மனப்போக்கு வளர்க்கப் பட்டது. குழந்தைகள் உருப்பட வேண்டுமானால் அமெரிக்கா போக வேண்டும்.  அமெரிக்கா போக வேண்டுமானால் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.  நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வேண்டுமானால், பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு நிறைய பேர் போயாகி விட்டது.  

மாணவர்களிடையே அரசியற்ற தமிழ்நாடும் நாசமாகி விட்டது.  சமஸ் சொல்வது போல, இட ஒதுக்கீட்டு கொள்கையால் மட்டுமே "உருப்பட்டவர்கள்" இன்று அதற்கு எதிரான குரலெழுப்புவது காலத்தின் விந்தை மட்டுமல்ல, முட்டாள் தனத்தின் உச்சமும் கூட.
திராவிடத்தின் - தமிழகத்தின் அரசியலை தமிழ்நாடுப் பாடநூல் நிறுவனம் தன்னுடைய பாடப் புத்தகங்களில் அனுமதிக்கா விட்டால், வேறு யார் அதைச் செய்ய முடியும்? வேறு எவருக்குமே அத்தகைய தேவையில்லை.  சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடங்கள் முற்று முழுக்க அரசியல் படுத்தப் பட வேண்டும்.  அரசியல் படுத்தப் படுவது என்றால், பன்மைத்தன்மைக்கு எதிரானது என்று நினைக்கும் மனிதர்களிடம் விவாதிக்க எனக்கு ஒன்றுமில்லை.  ஒரு வரலாற்று நிகழ்வின் அத்தனைப் பக்கங்களும் மாணவர்களிடம் கொண்டுசெல்லத் தக்கவையே.  மாற்று அரசியல் கருத்துக்களால் மாணவர்கள் அரசியல் தெளிவைப் பெற முடியும்.  கட்சி மாச்சர்யங்களைத் தாண்டிய அரசியல் நேர்மை இதற்குத் தேவைப்படுகிறது.  பாடப் புத்தகங்கள் open ended-ஆகக் கூட இருக்கலாம். 

கல்வியில் அரசியல் என்பது உப்பைப் போன்றது அல்ல; சுவாசம் போன்றது. தந்தை தாயைத் தெரிந்து கொள்வதைப் போன்றது.  வரலாற்றின் நீட்சியில் தனது இடம் எது என்று தெரியாதவன், அமெரிக்கா போய்ச் சாக வேண்டியதுதான்.

தி இந்துத்துவா சமஸ்களும், முகநூல் மார்க்சுகளும்

|
தமிழ் மொழியில் தினசரிகள் என்று பார்க்கிற பொழுது அவற்றின் பாரம்பரியமும் வளர்ச்சியும் நிச்சயமாக நாம் பெருமைப் படத் தக்கவையே.  அரசியல் விடுதலைக்கு முந்தைய காலத்தில் சுதேசமித்திரன் மற்றும் இதர தினசரிகள் மக்களிடையே அரசியல் உணர்வை தூண்டிவிட்டவாறு இருந்தன.  விடுதலைக்குப் பிந்தைய காலத்தை நோக்குமிடத்து, தினமணி தன்னுடைய தலையங்கங்களின் வாயிலாக அரசியல் கனலை மக்களிடையே தக்க வைத்துக் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.  சிவராமன் போன்றோரின் பங்களிப்பு போற்றத்தக்க வகையில் இருந்தது. பெரியார் தனது தினசரிகளின் மூலம் திராவிடர் கழக கருத்துகளை தீவிரமாக எழுதி வந்தார்.  ஐம்பதுகளில் திராவிடர் முன்னேற்ற கழகம் அரசியலில் வெகு வேகமாக முன்னகர்ந்ததற்கு காரணமே தினசரிகளில் பிரசுரிக்கப்பட்ட அதன் முன்னணித் தலைவர்களின் அனல் கக்கிய எழுத்துக்கள்தான்.

இவர்களின் எழுத்துக்களின் பின்னணியில் ஜனநாயகப் பண்பு இருந்தது.  இல்லை என்போருக்கு ஏதாவது அரிதாக தடயங்கள் கிடைக்கலாம்.  நான் பெரும்பான்மையைச் சொல்கிறேன். தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில், தீவிர மதவாத எழுத்துக்கள் எடுபடவில்லை. மிகச் சிறிய அளவிலான சாதீய செயற்பாடுகள் தெரியவந்த நிலையிலேயே தீவிரமாக எதிர்க்கப்பட்டன.  வ வே சு ஐயர் அவர்களின் குருகுலம் பிரச்சினைக்கு உள்ளாகி மூடப்பட வேண்டி வந்தது.  பெரியார் திராவிடம் - சுயமரியாதை - பிராமணீய எதிர்ப்பு - பெண் கல்வி - சாதீய எதிர்ப்பு போன்றவற்றின் காவலராக இருந்தார்.  வலது சாரி எழுத்துக்கள் - செயற்பாடுகள் பெரியாருக்குப் பயந்தன.  நம்ப மறுப்போர் அன்றைய வருடங்களின் தினசரிகளின் தலையங்கங்களைத் தேடிப் படிக்கலாம்.

பேராசிரியர் அந்தோணிசாமி மார்க்ஸ் கிண்டலாக (ஆனால் சரியாக) அழைக்கும் 'தி இந்து'த்துவாக்கள் ரொம்பவும் கில்லாடியான ஆசாமிகளாக இருக்கிறார்கள்.  மோடிக்கான ஆதரவை மோடி எதிர்ப்பெழுத்தின் வழியே உருவாக்குகிறார்கள்.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மோடியை இந்துத்துவ தீவிரவாதி என்றும், இந்திய பன்மைத்துவத்தின் எதிரி மோடி என்றும் திரும்பத் திரும்ப சொல்லும் சமஸ்கள், மோடி போன்றோரை விடுத்த இந்துத்துவம் வரவேற்கக் கூடியதே என்ற நிலைக்கு வந்து சேர்கிறார்கள்.  இடது சாரிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அவ்வப்போது கட்டுரைகள் எழுத வைத்து தங்களது நடுநிலைமையை பொதுவெளியில் கட்டமைக்கும் இவர்கள், மோடியை தாக்குவது போன்ற பாவனையை மிகக் கவனமாக நிகழ்த்துகிறார்கள்.  மோடி தீவிர இந்துத்துவத்தின் முகம் என்றும், எதேச்சதிகாரத்தின் முகம் என்றும் கவனமாகவே சொல்லப்படுகிறது.  தங்களது நடுநிலைமை பாவனைக்கு இது முக்கியம்.  அதைக் கட்டமைத்து விட்டு, மெதுவாக வலதுசாரித் தத்துவத்திற்கும், அதற்குப் பின்னால், மோடிக்கோ அல்லது அன்றிருக்கப் போகும் அதிபெரும் வலதுசாரித் தலைவருக்கோ கொடிபிடிப்பதுதான் நியாயமானது என்ற நிலை பொதுவெளியில் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, பாவனையில்லாத தங்களது வலதுசாரி முகங்களைக் காண்பிப்பார்கள்.

ஒரு வகையில், சமஸ் மிகவும் எளிமையானவர்.  தன்னை மற்றவர்கள் decode செய்வதற்கு எந்தவித சிரமங்களும் தராதவர்.  ஆனால் அவருக்கு ஒன்று தெரியும்.  தன்னை எவ்வளவு எளிமைப்படுத்தினாலும், பாவனைகள் அற்ற தனது முகத்தை படிக்கும் கூர்மை அற்றவர்கள் இந்த நவநாகரிக படித்த தமிழ்ப் பெருமக்கள் என்பது சமஸ்களுக்குத் தெரியும். 

ஒன்றே ஒன்று மட்டும் சமஸ்கள் எதிர்பார்க்கவில்லை. இவர்களின் தினசரியைப் படிப்பவர்கள் ஐந்து ரூபாய்கள் கொடுத்துப் படிக்க வேண்டும்.  சமஸ்களின் "எதிரிகள்", இதிலே பேராசிரியர் அ மார்க்ஸ் முக்கியமானவர், தங்களது முகநூல் மற்றும் வலைப்பக்கங்களில் சமஸ்களை கிழித்தெடுக்கிறார்கள்.  சமஸ் வகையறா கையில் எடுக்கும் ஒவ்வொரு அம்சத்திற்கும் எதிரான வாதங்களை மார்க்ஸ் போன்றோர் காத்திரமாக எதிர் வைக்கும் போது, திணறிப்போய் 'நான் நல்லவன், என்னை இப்படித் திட்டுகிறார்களே, இவர்களை காலம் கேட்கும்' 
என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

காலம் அனைவரையும், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும்.
Though the mills of God grind slowly;
Yet they grind exceeding small;
Though with patience he stands waiting,
With exactness grinds he all.

(HW Longfellow)




வாழும் சவங்கள்

|
மே மாதத்தின் தடம் இதழில் அ.முத்துலிங்கம் அவர்களின் நீண்ட செவ்வி வந்திருக்கிறது.  பல்வேறு விடயங்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்.  எண்பது வயது நிறைவடைந்திருக்கிறது.  உலகத்தின் பல இடங்களில் பணி செய்திருக்கும் காரணத்தால் உலக இலக்கியத்தின் போக்கை நன்கு உணர்ந்த வார்த்தைகள். 
ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது கூட அதைப் பற்றிய பாதிப்புகள் அவருடைய எழுத்தில் ஏன் அதிகம் காணப்பெறவில்லை என்று எனது நண்பர் சினந்து கேட்டார்.  உண்மைதான்.  முத்துலிங்கம் எழுத்தில் ஈழப் போராட்டம் அவரின் எழுத்தைத் தீர்மானித்த விடயம் என்பதாக இல்லை.  இந்தக் கேள்வி அவரிடமே இந்த செவ்வியில் வினவப் படுகிறது.  இதற்கான முத்துலிங்கம் அவர்களின் பதிலில் இலக்கிய மதிப்பு அதிகம் இருக்கிறதாகப் படுகிறது.  எனக்கு எப்போதுமே ஒரு ஆவல் உண்டு.  1885 முதல் 1947 வரையிலான இந்திய இலக்கியத்தின் போக்கை காலக்கிரயப் படிக்கு ஆராய வேண்டும்.  எனக்குத் தெரிந்து, சுதந்திரப் போராட்டத்தின் போக்கை தன்னுடைய எழுத்தில் ஏந்தியிருக்காத எந்தவொரு எழுத்தாளரைப் பற்றியும் அதிக செய்திகள் சம காலத்திலோ அல்லது இப்போதோ பிரசுரிக்கப்படவில்லை / படுவதில்லை.  க.நா.சுப்பிரமணியம் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே இதுதான்.  விடுதலைப் போராட்டம் அவரை அதிகம் கவர்ந்திழுத்தது போல தெரியவில்லை.  அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தில்லிக்கு டைப்ரைட்டரோடு கதை எழுதப் போய் விட்டார்.  அண்மையில் முடிந்திருந்த சுதந்திரப் போராட்டம் - அதன் பாதிப்பு - எதுவும் அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை.  இது காரணத்தால், அவரின் சிறப்பு எதுவும் குறைந்துவிடவுமில்லை.  ராமசாமி நாயக்கர் அவர்களின் போராட்டமுமே கூட, காங்கிரசோடு ஒப்பீட்டளவில், வெள்ளையர் அரசிடமிருந்து பெற விழைந்த அரசியல் அதிகார சுதந்திரம் பற்றியதானது இல்லை. சொல்லப் போனால், சுதந்திரம் வேண்டாம் என்பதைப் பற்றியதாகக் கூட பெரியாரின் களமாடல் இருந்திருக்கிறது. 
Contemporary mainstream literature - என்பதின் போக்குடன் காத்திரமான எழுத்துகள் பல நேரங்களில் உறவாடுவதில்லை.  சமூகத்திலே ஒரு விஷயம் மிகவும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருப்பதின் காரணமாகவே, இலக்கியவாதி அந்தத் தருணத்தை தன்னுடைய எழுத்தில் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.  அவனுக்கு எழுத ஆயிரம் இருக்கிறது.  வரலாற்றின் தொடர்ச்சி அவன்.  அதை குறுக்கு முறுக்காகவும் அவன் விசாரணை செய்வான்.  அரூபமான ஒன்றின் குரல் அவன்.  எப்படியும் வீசியடிக்கும் காற்று.  திசை தெரிந்து பயணிப்பதில்லை எழுத்து.  அது போகும் வழி திசை என்றாகிறது.  டி ஹெச் லாரன்சை இதன் அடிப்படையில்தான் புரிந்து கொள்ள முடியும்.  வாழ்ந்த காலத்தோடு முரண்டு பிடித்தவன்.  அன்றிருந்த கருத்துருவாக்கத்தை அடித்து நொறுக்கியவன். அவன் போன பிறகு அவனுடைய எழுத்தோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது இந்த உலகத்திற்கு.  காலத்தைக் கடந்தும் பெரும் எழுத்தும் எழுத்துக்காரனும் ஜீவித்திருப்பது இதனால்தான்.  ஜெயகாந்தன் போய் சேர்ந்து விட்டார். நன்றாக வாழ்ந்தார்.  நன்றாக எழுதினர்.  பூரண ஜீவிதம்.  சுப மரணம். அவரோடு முரண்டு பிடித்த உலகு அவரிடம் சமரசம் செய்து கொண்டே ஆக வேண்டும்.  குறிப்பிட்ட காலம் ஒன்றின் முகவரி அவர்.  அவரைத் தவிர்த்து அந்தக் காலத்தை அணுகவே முடியாது.  அந்தக் காலத்தையே தனதாக்கிக் கொண்டவர்.  திராவிடக் கனல் எதுவும் அவரின் எழுத்துக்களில் காணப்படவில்லை.  முக்கியமாக அவரின் புனைவிலக்கிய படைப்புக்களில். அந்தக் காலத்தின் அரசியலையே தீர்மானித்த திராவிடக் குரலை ஏன் ஜேகே தவிர்த்தார்? அவரின் அரசியல் நிலைப்பாடா? இருக்கலாம்.  அதைவிட முக்கியமான பணிகள் தமக்கிருப்பதாக அவர் நம்பியதுதான் முதன்மையான காரணம்.
ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி முத்துலிங்கம் எதுவும் அதிகமாக எழுதவில்லை என்னும் சாட்டிற்கு இதுதான் பதில்.  எழுத்துக்காரனின் படைப்புலகத்தை அவன் சுயமாக பல நேரங்களில் தீர்மானிக்க முடிவதில்லை.  அவனது சுபாவமும் ஆர்வமுமே தீர்மானிக்கின்றன.  எழுத்துக்காரன் காலத்தின் குழந்தை என்றால், அவன் எழுதியதும் காலத்தின் அம்சம்தான்.  கடந்த நாற்பதாண்டுகளில் அரசியல் போராட்டம் தவிர்த்த விடயங்களையும் எழுத வேண்டிய தேவை ஈழத்து எழுத்துக்காரனுக்கு இருந்திருக்கிறது என்பதாகவே இதைப் புரிந்து கொள்கிறேன்.  ஜெயகாந்தன் ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்விக்கு, அப்படியான விஷயங்கள் ஏன் அன்று இருந்தன என்பதுதான் பதிலாகும்.  லாரன்ஸ் ஏன் பாலுறவு விடுதலையைப் பற்றி எழுதினார் என்றால், ஏன் பாலுறவு அடிமைத்தனம் அன்று அங்கீகரிக்கப் பட்டிருந்தது என்பதுதான் விளக்கமாகும்.
ஏன் பன்னீர்செல்வம், சசிகலா, ஸ்டாலின், மோடி போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள் என்றால், அப்படியான தலைவர்கள் மக்களால் ஏன் வரவேற்கப்படுகிறார்கள் என்பதுதான் பதில். 
காலத்திடமிருந்து யாருமே தப்பிக்க ஆகுவதில்லை. சில மகாமனிதர்கள் சக ஜீவன்களால் வாழும் காலத்தில் புரிந்து கொள்ளப்படுவதில்லை.  அவர்கள் காலத்திற்கு முந்தி பிறந்து விட்டார்கள் என்பது இதற்கு அர்த்தமல்ல.  மற்றவர்கள் காலத்தை இன்னும் எட்டிப் பிடிக்காமல் பிந்தியிருந்தார்கள் என்பதுதான் பொருள்.
முத்துலிங்கம், ஜெயகாந்தன், ராமசாமி நாயக்கர், லாரன்ஸ் ஆகியோரோடு நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்பதில் நான் எவ்வளவு காலத்திற்குப் பிந்தி இருக்கிறேன் என்பது தெரிகிறது.
கடந்த காலத்திலேயே பிறந்து, கடந்த காலத்திலேயே வாழ்ந்து, கடந்த காலத்திலேயே மடிந்து கொண்டிருக்கிறோமா நாம்?       

ஆதவனின் காகிதமலர்கள்

|
தமிழ் புனைவுலகம், குறிப்பாக நாவல் உலகம், பாரியமான சோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறது என்று சொல்ல முடியாது.  வடிவத்தைப் பொறுத்த வரையில், சுந்தர ராமசாமி அவர்களின் ஜே.ஜே. சில குறிப்புகள் இன்று வரையிலும் சொல்லத்தக்க படைப்பாக இருக்கிறது.  இதையொட்டி வேறு சில நாவல்களும் வந்திருக்கின்றன.  சாரு நிவேதிதாவின் ஓரிரு நாவல்களை சொல்லலாம்.  கருத்துலகைப் பொறுத்தவரை, தமிழ் நாவல் உலகம் சம்பிரதாயமான விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாகவே உள்ளது.  பல நாவல்களின் சாரமாக வறுமையும் அதன் கொடுமையும் இருந்திருக்கின்றன.  அடுத்ததாக கற்பு.  இது கொடுமையிலும் கொடுமை.  கற்பும் தாலியும் இங்கே கேவலப்பட்டுள்ளது போல, இந்திய துணைக்கண்டத்தின் வேறு எந்த பிராந்திய இலக்கியத்திலாவது நடந்திருக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது.  இருக்காது என்றுதான் நினைக்கிறேன். 

புரட்சியான படைப்புகள் வந்திருக்கின்றனவா என்றால், நாவலைப் பொறுத்தவரை, ஜெயகாந்தனைத்தான் சொல்ல வேண்டும்.  ஜி.நாகராஜனும் நினைவுக்கு வருகிறார்.  முக்கியமாக வண்ணநிலவனையும் அவரது கடல்புரத்தில் நாவலையும் சொல்ல வேண்டும்.  கற்பு என்ற கருத்தாக்கம் இவர்களது படைப்புக்களில், தமிழ் சம்பிரதாய விழுமியங்களில் சொல்லப்படுவதை முற்றிலும் நிராகரித்து, அடித்து நொறுக்கப் படுகிறது.  இதை சுக்கு நூறாக்குபவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு அல்லது மேல்வர்க்கங்கள்தான். பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்திடம் கற்பு, இன்று வரைக்குமே, சிக்கி அல்லாடுகிறது.  ஜெயகாந்தன் இந்த வர்க்கத்திடையே ஊறிப்போயிருக்கும் முட்டாள்தனமான கற்பு சார்ந்த பாரம்பரிய விழுமியத்தை கேலியும் கையில் சாட்டையுமாக வெளுத்து வாங்குகிறார். 

கலாச்சார வெளியில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த கற்பு சமாச்சாரத்தை உடைத்து உள்ளே ஒன்றுமேயில்லை என்று காண்பித்தாலும், அவர் பெயரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் - அவர்கள் கூட்டத்தில் இருந்த படைப்பாளிகள் - கற்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூக்கிப் பிடித்தார்கள்.  மனோகராவில் மனோகரன் தனது அன்னையின் கற்பை ரொம்பவும் சிலாகிக்கிறான்.  அன்னையின் கற்பைப் பற்றி தன்னுடைய அப்பா சேதாரமாக ஒரு வார்த்தையை சொல்லிவிட்டதால், தன்னைக் கட்டியிருந்த சங்கிலியை உதறிவிட்டு பக்கத்தலிருந்தவரிடம் வாளைப் பெற்று அவரைக் கொல்ல முன்னேறுகிறான்.  எங்கிருந்தோ அன்னையே ஓடி வந்து வேண்டாம் மனோகரா, அவரை விட்டுவிடு என்று ஆணையிட்டு அவருக்கு உயிர்ப் பிச்சை தருகிறாள். பெரியார் இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.  சீடர்களே துரோகம் செய்கிறார்கள்.  ஈரோட்டுக்காரர் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" நம்பவே முடியாத ஒரு புத்தகம்.  வெளிவந்த காலத்தில், உலக அளவிலேயே சர்ச்சையைத் துவக்கியிருக்கக் கூடிய புத்தகம் அது.  ஆனால், பெரிய அளவில் தமிழ் கூறும் நல்லுலகில் சர்ச்சை எதனையும் அந்தப் புத்தகம் ஏற்படுத்தவில்லை என்பதில் நிறைய செய்திகள் இருக்கின்றன.  என்னுடைய தோழிகளிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்.  மிரண்டு அரண்டு போயிருக்கிறார்கள்.  படித்துவிட்டு இன்றுவரை என்னிடம் பேசாமல் இருக்கும் தோழி அடங்கலாக, நிறைய பெண்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கிறது.  நூற்றாண்டுகளாக உறைந்து போயிருக்கும் கருத்தாக்கத்தின் சக்தியை என்னவென்று சொல்வது?

விஷயத்திற்கு வருகிறேன்.  இந்த நிலையில், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், வண்ணநிலவன் ஆகியோரோடு இன்னும் இருவரைப் பற்றி சொல்ல வேண்டும்.  முதலாமவர், ஒப்பீட்டளவில், கொஞ்சம் பிரபலமானவர்.  தில்லி சர்வகலா சாலையின் மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், கணையாழியின் மேனாள் ஆசிரியருமான இந்திரா பார்த்தசாரதி.  இவரின் பல நாவல்களில் கற்பு, அதன் சம்பிரதாயமான நிலையில் இருந்து பார்க்குமிடத்து, பலத்த சேதாரத்திற்கு ஆளாகியிருக்கிறது.  நிலமென்னும் நல்லாள், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, தீவுகள் போன்ற பல படைப்புகளில் வரும் பெண் மாந்தருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தமக்குப் பிடித்த ஆண்களுடன் தாம் விரும்பும் மாதிரியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது.  தி.ஜானகிராமனை இந்த பட்டியலில் கொண்டு வர முடியாது. அவர் பெண்களை சக்தி வழிபாடு செய்பவர்.  லிபிடோ மிகுந்திருக்கும் பெண்கள் அவரது ஒவ்வொரு நாவலிலும்  வந்தாலும், அசாதரணமானவர்களாகவே அவர்கள் வருகிறார்கள்.  பாபு காதலில் விழுந்த யமுனா, அம்மிணி யாவரும் பெரும் தேவதையாக அவர்களின் ஆண்களால் வழிபடப் படுகிறார்கள். இந்திரா பார்த்தசாரதியின் பெண்கள் நம்மைச் சுற்றி எங்கும், மத்திய வர்க்கத்தில், இருப்பவர்கள்.  கற்பை உதறி எழுவதுடன், அதனை எதிர்த்தும் ஆண்களுடன் பெரும் விவாதம் செய்பவர்கள். ஆண்கள் அதிர்ந்து நிற்பதை ரசிப்பவர்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆட்படாதவர்கள்.  காலங்காலமான வலிமையான சங்கிலிகளை சிலிர்த்து எழுந்து உதறி முன்னே நடப்பவர்கள்.  எதைப் பற்றியும் சொந்த கருத்துக்களை வளர்த்துக் கொண்டவர்கள்.  அவர்களின் உறவுகளில் ரகசியம் என்று எதுவுமில்லை.  விக்கித்து நிற்கும் ஆண்களின் மேல் எந்த பரிதாபமும் படாமல், அவர்களின் நிழலையும் விலக்கி செல்பவர்கள்.  இந்திரா பார்த்தசாரதி தன்னுடைய வீரியமான இப்படியான நாவல்களை எழுபதுகளில் எழுதியிருக்கிறார்.

இபா தில்லியில் வசித்தவர்.  அது ஒரு வித சௌகரியத்தை அவருக்குக் கொடுத்திருக்கலாம். மனிதனின் அகப் போராட்டங்கள் இவரது நாவல்களின் முத்திரையான பண்பு.  கூர்மையான கத்தி போன்ற வசனங்களைத்தான் இவரது மாந்தர்கள் பேசிகிறார்கள்.  முட்டாள்கள் என்று எவருமில்லை.  விழுமியங்களுக்கு இடையில் பெரும் போராட்டம் தொடர்ந்து நடந்தவாறு இருக்கிறது.  இபா தில்லியில் வசித்த காலத்தில் இன்னொருவரும் அங்கே இருந்திருக்கிறார்.  ஆதவன்.  "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு இன்றளவும் பேசப்படுவது.  தில்லி மாநகரத்தில் வசிக்கும் உயர்தட்டு / நடுத்தர வர்க்க தமிழர்களின், குறிப்பாக பிராமணர்களின், பகல்வேஷங்கள் மற்றும் இரவு வேஷங்களைப் பற்றிப் பேசுகின்றன இவரது கதைகள்.  உண்மையில், கதைக்க இவரிடம் ஒன்றுமில்லை. ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து வேஷம்போட்டு பின் மரித்த மனிதர்களின் வாழ்க்கைகள்தான் அவை.  இவரின் "காகிதமலர்கள்" என்ற நாவலைப் பற்றி யாரோ எழுதி எப்போதோ படித்திருக்கிறேன்.  இந்த வருட ஈரோட்டு புத்தகக் காட்சியில் இந்த நாவலை காலச்சுவடு கடையில் பார்த்ததும், வாங்கி வந்து விட்டேன்.  காலச்சுவடு கிளாசிக் நாவல் வரிசையில் மறுபதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். சுமார் நானூறு பக்கங்கள் கொண்டது.  ஒரே மூச்சில் படிக்க முடிந்தது.  படிக்கப் படிக்க மூச்சு அடைத்துக் கொண்டது.  எளிதாக சொல்லி விட முடியும்.  இபா-வின் நாவல்களை விட பல மடங்கு தைரியம் கொண்ட எழுத்து.  தாலியே தேவை இல்லாமல் தம்பதிகள் இருக்கிறார்கள்.  தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாக அவர்கள் விவாதித்தவாறே இருக்கிறார்கள்.  பெண்கள் இயல்பாக சிகரெட்டும் மதுவும் சுகிக்கிறார்கள்.  மனைவி ஒரு இளைஞனால் கவரப்பட்டிருப்பதை அவள் கணவன் கவனப்படுத்தாமல் கடக்கிறான். அரசுச் செயலாளர் பதவில் இருக்கும் கணவனின் பதவி உயர்விற்கு மனைவி தன்னால் ஆன கைங்கர்யங்களைச் செய்கிறாள்.  மந்திரிக்கு மனைவியைப் பிடிப்பதால், தனக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று கணவனுக்கு நிச்சயமாகத் தெரிகிறது.  தான் அப்படி இருப்பது மனைவிக்கு பிடிக்கிறது என்பதுதான் கவனப்படுத்த வேண்டியது.  மூன்று பிள்ளைகள், கணவன் என்ற கூட்டத்தில் காணாமல் போக அவள் தயாரில்லை.  காதலியின் பேச்சு சுவாராஸ்யமில்லாமல் போனதால், சினிமாவிற்குப் போன இடத்தில் பக்கத்து சீட்டில் இருப்பவன் தன்னிடம் ஓரினச் சேர்க்கைக்கு முயலும் போது, சரி போனால் போகட்டும் என்று ஒத்துக் கொள்ளும் கல்லூரி மாணவனை எந்தவித அசூசையில்லாமல் சம்பிரதாயமான வாசகன் கூட  எதிர்கொள்ள முடிவது ஆதவனின் சாகசம்தான். லஞ்சம் வாங்க வக்கில்லாத தன்னுடைய அப்பாவிடம் எந்தவித மரியாதையும் இல்லை மகனுக்கு.  அவருடைய உயர் அதிகாரி லஞ்சம் வாங்குவதால் அவர் இவனுக்கு ஆதர்சமாகப் போகிறார்.  அவருக்கு தன்னுடைய அப்பா தெரிந்தோ தெரியாமலோ உதவுவதால், அவர் வீட்டில் உள்ள ஆடம்பரமான பொருட்கள் அனைத்தும் தனக்கும் சொந்தமானவை என்று நினைக்கிறான். நண்பனின் வீட்டிற்கு வரும் இளைஞன் அவனுடைய அம்மாவை பெரும் அழகியாக நினைப்பது மட்டுமன்றி அவளிடம் தனக்கு கிடைக்கவிருக்கிற பாலுறவை நோக்கி இயல்பாக முன்னேறுகிறான்,  மருமகளின் மேக்அப் அறிவையும், காரோட்டும் திறனையும், சிகரெட் பிடிக்கும் மிடுக்கையும் கண்டு வியந்து அவற்றை பெரும் விருப்பத்துடன் மாமியார் பயில்கிறாள். கூட்டத்தில் நடப்பதே பெண்களை இடிப்பதற்குத்தான் என்பது மட்டுமன்றி அந்தப் பெண்களும் கூட்டத்தில் இதற்குத்தான் நடக்கிறார்கள் என்று நம்பும் இளைஞன் இந்த நாவலில் நடந்து கொண்டே  இருக்கிறான். 

ஒவ்வொரு கதை மாந்தரின் மனதிற்குள்ளும் நுழையும் ஆதவன் அவர்களின் அகச்சிந்தனையை வாசகனுக்கு தந்தவாறே இருக்கிறார்.  ஒவ்வொரு வாக்கியத்திலும் அதிர்ச்சி இருக்கிறது.  அனைத்து தமிழ் கலாச்சார விழுமியங்களும் கேலி செய்யப்படுகிறது.  எதிர்க்கலாச்சாரத்தை மேற்கொள்ளுபவர்களிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்பது முக்கியம்.  அவற்றை தங்கள் இயல்பாகக் கொண்டவர்கள்.  ஆச்சாரம் சிலரால் பின்பற்றப் படுவதிலும் உள்ள அரசியல் சொல்லப்படுகிறது. வீட்டில் நடக்கும் பண்டிகைகளைக் கூட கணவனின் பதவி உயர்வுக்கான அச்சாரமாக மாற்றப்படுகிறது மனைவியால்.  இவளின் தயவால் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என்று இயலாமையில் கணவன் ஆத்திரப்பட்டாலும், அடுத்த நிமிடம் தன்னுடைய சுபாவமான "லௌகீக மனிதம்" என்ற நிலைக்கு நழுவுகிறான். இங்கே எவனுக்கும் வாசமில்லை.  ஒவ்வொருவனும் மலர்கள் போல தெரிகிறான்.  மானங்கெட்டவன்.  தான் காகிதமலர் என்று தெரியாதவன்.  அல்லது தெரிந்திருந்தாலும் கொடியில் பூத்திருக்கும் அன்றைய மலர் போல வேஷம் போட முடிந்தவன்.

ஆதவன் தன்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் சிருங்கேரியில் ஆற்று சுழலில் சிக்கி உயிர் விட்டார் என்று நாவலின் பின் அட்டையிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நாவல் உலகிற்கு கடுமையான நட்டம்.  சந்தேகமேயில்லை.  இவ்வளவு பெரிய திறமையை இந்த உலகால் தாங்க முடியவில்லை.  மேதைகளுள் மேதைகள் நீண்ட ஆயுள் பெற்றிருப்பதில்லை.  அப்படித்தான் ஆதவனின் முடிவை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.                   

மிலேச்சனான ஐந்தாம் ஜார்ஜ்

|


"ஆஷ் அடிச்சுவட்டில் - அறிஞர்கள் ஆளுமைகள்" என்ற தலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  RW ஆஷ், பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், ஜி யு போப், உ வே சாமிநாத ஐயர், ம வீ இராமானுஜலு நாயுடு, டி வி சாம்பசிவம் பிள்ளை, ஏ கே செட்டியார் , ரா அ பத்மநாபன், ஸி எஸ் சுப்பிரமணியம், எரிக் ஹாப்ஸ்பாம் மற்றும் தே வீரராகவன் ஆகியோரைப் பற்றிய வாழ்வும் அவர்தம் அளப்பற்கரிய பணியும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கவனத்திற்கு வந்துள்ளன. இவரின் பிற நூல்களைப் போலவே, இதுவும் எளிதாக கடந்து போக முடியுமான ஒன்றல்ல. திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் ஆஷ் துரையைப் பற்றிய இதுவரையில் பொதுவெளியில் படிக்கக் கிடைக்காத பல சுவாராஸ்யமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் சலபதி. மட்டுமன்றி, ஆஷ் துரையின் கொலையாளியான வாஞ்சி அய்யரின் கடைசிக் கடிதமும் படிக்கக் கிடைக்கிறது.
"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.  அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை. இப்படிக்கு, R.வாஞ்சி அய்யர் R. Vanchi Aiyar of Shencotta."
இது படிக்க அச்சத்தைத் தருவதாக உள்ளது. சனாதன தர்மம் ஆங்கிலேயர்களால் துவம்சம் செய்யப்பட்டு வருவதாகவும், கோமாமிசம் தின்னுபவர்கள் மிலேச்சர்கள் என்றும், அப்படி தின்னக்கூடியவன் என்பதால் ஜார்ஜ் பஞ்சமனைக் கொல்லுவதற்கான ஏற்பாடுகளை மதராசிகள் செய்துகொண்டுள்ளனர் என்றும் வாஞ்சி அய்யர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார்.  வாஞ்சி அய்யர் தேசாபிமானி என்பதில் சந்தேகமில்லை; அப்படியே, அய்யர் சனாதன தர்மத்தைப் பேணி வந்தவர் என்பதிலும் சந்தேகமில்லை.  சனாதன தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, மனிதர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வேற்றுமை பாராட்டி வந்தவர்களின் கைகளில் இந்துஸ்தானம் தற்சமயம் போய்விட்டிருந்தாலும், சுதந்திரத்திற்குப் பின் முதல் ஐம்பதாண்டுகளாவது மிதவாதிகளின் கைகளில் இருந்ததே என்பது ரொம்பவும் ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாகும். துன்ப நாளிது, துக்க நாளிது என்ற விடுதலை நாளை அறிவிக்க ஈரோட்டுக்காரருக்கு நிறைய காரணங்கள் இருந்தன என்பதும் தெளிவு.
இந்தக் கோவையின் நான்காவது கட்டுரை உ வே சாமிநாத ஐயரைப் பற்றியதாகும். அய்யரின் கடைசி இரண்டு தசாப்தங்களில் பல நூறு கட்டுரைகளை எழுதிக் குவித்திருக்கிறார்.  அதுவரை ஐயரவர்கள் எழுதிவந்த உரைநடைப் பாணியில் அல்லாமல், புதுமையாக உரைநடையில் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக கடைசி இருபது ஆண்டுகளில் ஐயரவர்கள் எழுதி வந்தது ஆயிரக்கணக்கில் புது வாசகர்களை அவருக்கு கொண்டு வந்து சேர்த்தது.  ஆனால், இது விஷயத்தில் புதிய கண்ணோட்டம் ஒன்றை ஆ.இரா.வேங்கடாசலபதி எழுத்து சாட்சியங்களின் வழியாக நம் கருத்தின் முன் வைக்கிறார்.  கலைமகள் ஆசிரியரும் அய்யரின் பக்தருமான கி வா ஜகன்னாத அய்யரின் உரைநடையே அதுவென்றும், சாமிநாத ஐயர் சொல்ல, கி வா ஜ கேட்டு தன்னுடைய பாணியில் எழுதி செப்பம் செய்து, ஐயரவர்களிடம் படித்துக் காட்டி, ஐயரவர்கள் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு பத்திரிக்கை காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்டவை அந்தக் கட்டுரைகள் என்று, இது சம்பந்தமாக அன்று முக்கியஸ்தர்களிடையே நடந்து வந்த கடிதாசிப் போக்குவரத்துகளை சாட்சியங்களாகக் கொண்டு நிறுவ முயல்கிறார் சலபதி.
"...உ.வே.சா. சொன்ன தகவல்கள் கி.வா.ஜ.கையால் எழுதப் பெற்று, பின்னர் அய்யரின் திருத்தங்கள் சொல்லப்பட்ட செம்மையான வடிவமே அச்சேறியிருக்கின்றது என்பது உறுதிப் படுகிறது.  பதினைந்தாண்டு கால இடைவெளியில் எழுதப் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் ஒரே சீராக அமைந்துள்ளது அவற்றை இயக்கிய உ.வே.சாமிநாதையர் என்ற பேராளுமையின் புலமையும் அனுபவமும் என்ற விசையே ஆகும் என்று கொள்ளலாம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் நீங்கலாகப் பிற கட்டுரைகள் எல்லாவற்றின் நீர்மையும் அமைதியும் ஒன்றே என்பதும் வெள்ளிடைமலை.  கி.வா.ஜகன்னாதன் அவருடைய நெடிய இலக்கிய வாழ்க்கையில் எத்தனையோ கட்டுரைகளும் கதைகளும் எழுதினார். அவை உ.வே.சா.வினுடைய படைப்புகளுக்கு ஈடாகும் என்று ஒருவரும் கருதியதில்லை."
ஆ.இரா.வேங்கடாசலபதி நிறுவ முயல்வதை அறிஞர்கள் மறுக்கலாம்.  இது சர்ச்சைக்குரிய விடயம் என்பதிலோ, இப்படியான பரபரப்பு ஒரு வழியாகத் தீர்மானம் ஆவதற்கு இன்னும் நிறைய தரவுகளும் முடிபுகளும் தேவைப்படுகின்றன என்பதிலோ ஐயமில்லை.
ஆ.இரா.வே-வின் இன்ன பிற நூல்களைப் போலவே இதுவும் சூடான ஆய்வு நூல் என்பதிலும் கொஞ்சமும் ஐயமில்லை.
("ஆஷ் அடிச்சுவட்டில் - அறிஞர்கள் ஆளுமைகள்", ஆ.இரா.வேங்கடாசலபதி. காலச்சுவடு, 2016, உரூபா 225/-)


தாட் பூட் தஞ்சாவூர்

|
இந்தியா மக்கள் தொகையைப் பொறுத்தவரை உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்பதாக இருந்து வந்திருக்கிறது. அமெரிக்காவைப் போல நவீன தொழிற்நுட்பங்களை செரித்துக் கொண்ட ஜனநாயகமாக அண்மைக்காலம் வரை இந்தியா இல்லை. படிப்பறிவு இல்லை என்பதுதான் காரணம். கேரளாவைப் பொறுத்த வரையிலும் கூட, நூறு சதவிகித படிப்பறிவு என்பதெல்லாம் மக்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் என்பதுதான்.  டிஜிட்டல் லிட்டரசி என்பதற்கெல்லாம் நகர்ந்துவிட்ட ஜனநாயகங்கள் உண்டு.  நவோம் சோம்ஸ்கி "conceptual engineering" மற்றும் "media conspiracy" என்பதாகப் பேசுவது அமெரிக்காவைப் பொறுத்தவரையில் உண்மைதான்.  தங்கள் கட்சியில் உள்ள கோஸ்ட் ரைட்டர்ஸ் உதவியுடன் தொடர்ந்து பொதுவெளியில் அறிவுஜீவித்தனமாக கருத்துக்களை தூவிக் கொண்டே வருதல் அங்கெல்லாம் நூதனமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிப் பத்திரிகைகள் உண்டு; கட்சி தொலைக்காட்சி சேனல்கள் உண்டு. கட்சி ஆதரவு பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் - பிரமுகர்கள் உண்டு. அறிவுஜீவிகளைப் போன்ற தோற்றத்துடன் ஒரு கட்சி சார்ந்த - ஆட்சி சார்ந்த நிலைப்பாடுகளை எல்லாவிதத்திலும் ஆராய்ந்து நடுநிலையில் நின்று "எழுதும்" hired writers இன்று முகநூல், இணையம், வாட்ஸ்அப் போன்றவைகளில் பல்கிப் பெருகி விட்டார்கள்.  இதை அனைத்தையும் நம்பி மற்றவர்களுக்கு கண்மூடித்தனமாக அனுப்பிக்கொண்டே "அறிவுஜோதியில்" தம்மை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள் / நடுவயதுக்காரர்கள் கோடிக்கணக்கில் முளைத்து விட்டார்கள். 

நீட் வேண்டாம் என்ற நிலையை ஆதரிக்கும் பல கட்டுரைகளை நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிக் கொண்டிருந்தார்.  திடீரென்று இன்று காலை நீட் வேண்டும் என்பதாக எழுதப்பட்டிருந்த கட்டுரையை அவர் அனுப்பி வைத்ததோடு அல்லாமல், "இதை விளங்கிக் கொள்ளாதவன் இருக்கும் வரை இந்த நாட்டை திருத்த முடியாது" என்ற ஒரு தனிக் குறிப்பும் இருந்ததைப் பார்த்ததும் ஆச்சர்யமாகி அவரை அழைத்து, "எப்படி உங்க நிலைப்பாடு மாறலாம்? நீட் வேண்டாம் என்பதாக பல்வேறு கட்டுரைகள் - செய்திகளைப் நாமிருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஒருவருக்கொருவர் அனுப்பி வந்திருக்கிறோம்.  உங்களுடைய நிலைப்பாடு எப்படி தலைகீழாக மாறியது?" என்று கேட்டேன்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.  "நீட் வேண்டாம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும்" என்றவரிடம், இன்று காலை அவர் அனுப்பிய கட்டுரையை மீண்டும் படிக்க சொன்னதும், கொஞ்ச நேரம் கழித்து அலைபேசியில் அழைத்து சொன்னார். "மன்னிக்கவும், நான் அதை சரியாகப் படிக்கவில்லை. நீண்ட கட்டுரை என்பதாலும், இரண்டொரு பத்திகள் படிக்க அறிவுஜீவித்தனமாக இருந்ததாலும் நமது நிலைப்பாடுதான் அதிலும் எதிரொலித்திருக்கிறது என்று நம்பி அனுப்பி விட்டேன்."

இந்தத் தவறை நாம் அடிக்கடி செய்கிறோம்.  நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் அரசியல் என்றால் என்னவென்று தெரியும்.  அரசியல் இல்லாதவனே இல்லை.  தன்னிடம் அரசியல் இல்லை என்று நம்புவன் அறிவிலி. தமிழ்நாட்டில் எண்பது விழுக்காட்டிற்கும் மேலானவர்களிடம் political conscientiousness இல்லை என்பது எனது எண்ணம்.  political sensitivity - political stand ஒவ்வொருவரிடம் இருப்பது மிகவும் அவசியம்.  கட்சி சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலுமே தவறில்லை.  கட்சி சார்ந்த நிலைப்பாடு ஒருவரிடம் இருக்கிறதென்றால் ஒவ்வொரு விடயத்திலும் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.  கட்சியின் தத்துவங்களைக் கற்றுத் தெளிந்திருத்தல் இன்றியமையாதது. அமெரிக்காவில் ஒவ்வொரு நடிகரிடமும் கட்சி அரசியல் நிலைப்பாடு உண்டு.  இங்கிருக்கும் கமலஹாசன் - ரஜினிகாந்த் போன்று விளக்கெண்ணெய் அரசியலை அவர்கள் செய்வது இல்லை.  பாஜக-வின் தத்துவங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களைக் கூட மதிக்கத் தயார்; தனக்கு வரும் எந்த செய்தியையும் கட்டுரையையும் படிக்காமல், வந்தவுடனேயே தான் மிகப்பெரிய செய்தியை மற்றவருக்கு படிக்கத் தருகிறோம் என்ற மிதப்பில் அவைகளை அனுப்பும் நபர்களின் மீது அருவருப்பும் வெறுப்பும் அலைஅலையாக வருகிறது.

இப்பொழுது ரிப்பப்ளிக் என்ற செய்தி தொலைக்காட்சியை துவக்கியிருக்கும் அர்னப் கோஸ்வாமியை அவர் NDTV 24x7-ல் செய்தி வாசிப்பாளராக இருந்த போதிலிருந்தே தெரியும்.  மிகவும் அமைதியாக வந்து செய்தியை வாசித்து விட்டு விருந்தினரை புன்சிரிப்புடன் இரண்டொரு கேள்விகள் கேட்டுவிட்டு எழுந்து போய்விடுவார்.  அண்ணாச்சி Times Now சேனலில் வரத்தொடங்கிய பிறகு, ஒன்பது மணிக்கு மேல் அந்த சேனலை பார்க்கக் கூடியதில்லை.  விருந்தினரை அழைத்து செருப்பில் அடிக்காத குறையாய் அவர்களைப் பார்த்து நாயாகக் குரைத்து media trial நடத்தி நடைப்பிணமாய் அனுப்பி வைப்பார்.  நண்பர்களுடன் இருக்கும் போது, திடீரென்று திரையில் தோன்றும் அர்னப் கோஸ்வாமியை உடனே அணைத்து விடும்படி கறாராக சொல்லிவிடுவேன். எனக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததற்கும் அர்னப் கோஸ்வாமிக்கும் நேரடியான சம்பந்தம் உண்டு. இப்பொழுது கூட அவரின் படத்தை பார்க்க நேரும்போதெல்லாம் படபடப்பு வருகிறது.  இப்படியான நபரைக் கூட மன்னித்து விடுவேன்; ஆனால், தனக்கு உள்வருகின்ற எதையும் படிக்காமல் பிறருக்கு அனுப்பி வைக்கும் பிரகஸ்பதிகளை மன்னிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. வளர்த்தெடுக்கக் கூடியதா அந்த வகை ஆற்றல் என்பதும் தெரியவில்லை.

இவரைப் போலவே, பாஜக சார்பாக இரவு வேளைகளில் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் தோன்றும் ஒவ்வொருவரும் எனக்கு அருவருப்பை தந்த வண்ணமே இருக்கிறார்கள்.  இருப்பினும், அவர்களுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு.  என்னுடைய அரசியலுக்கு மாற்றாக வேறொரு அரசியல் நிலைப்பாடு அவர்களிடம் இருப்பதை தெளிவாகவும் உரக்கவும் என்னிடம் அவர்கள் சொல்லியவாறே இருக்கிறார்கள்.  அவர்களை புறந்தள்ளுவது எளிது.  ஆனால், வந்ததையெல்லாம் அனுப்பி வைக்கும் அண்ணாச்சிகளைப் புரிந்து கொள்ளுவது கடினமாக இருக்கிறது.  இப்படியெல்லாம் என்னிடம் சொல்லப்பட்டிருக்கிறது: "இந்த மாதிரியான கட்டுரையை எல்லாம் என்னுடைய மனைவிக்கு அனுப்பி வைத்தால்தான் நான் விஷயம் தெரிந்தவன் என்று அவள் நம்புவாள்."

இந்த சூழலில், போலி அறிவுஜீவிகளின் கட்டுரைகளின் நோக்கம் எளிதில் நிறைவேறி விடுகிறது. தற்கொலை செய்துகொண்ட பெண்ணை முன் வைத்து, பாஜக, அதிமுக சில்லுகள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மருத்துவர் கிருஷ்ணசாமி கட்சி, பாமக இன்னபிற கட்சிகளின் திரைமறைவு அறிவுஜீவிகள் தங்களின் கருத்தை  பொதுவெளியில் நடுவுநிலைமை கருத்தாக பொழிந்து கொண்டேயிருக்கிறார்கள்.  எனக்கு இந்த ஆசாமிகளைப் பற்றி பொருட்படுத்த எதுவுமில்லை. தனக்கென்று ஒரு அரசியல் வைத்திருப்பவனை இந்த போலி ஞானஸ்தர்கள் எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், எது தனக்கு அனுப்பப்பட்டாலும், எதைப் படிக்க நேர்ந்தாலும் அது உண்மை எனக் கருதி அடுத்தவருக்கும் அனுப்பும் வாட்ஸ்அப் - முகநூல் வாசிகளைப் பற்றிய கவலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.  மிகவும் நுண்ணிய அளவில் நடக்கும் பிரச்சாரம் இது.  அர்ஜுன் சம்பத் அவர்கள் சாதிக்கு எதிரானவர் என்றும், சாதிக் கட்சி நடத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றும் ஒரு கட்டுரை எனக்கு சமீபத்தில் அனுப்பப் பட்டிருந்தது.  அதி கொடுமையாக, ஒரு புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டிருந்தது. வாங்குகிற காசுக்கு இந்த திரைமறைவு எழுத்தாளர்கள் குறைவில்லாமல் வேலை செய்கிறார்கள்.  எந்தப் பொய்யையும் இங்கே படிப்பவனின் மண்டைக்குள் ஏற்ற முடிகிறது என்பது நமது கல்வி அமைப்பையே கேவலப்படுத்துவதாக இல்லையா? 

எனக்கு என்ன ஆசையென்றால், தமிழ் சூழலை நன்கு விளங்கிக் கொண்ட, நவோம் சோம்ஸ்கி போன்ற, மூன்று நான்கு பேர்களுக்கான தேவை இங்கிருப்பதால், அவர்களை நாம் கூடிய விரைவில் உருவாக்க வேண்டும் என்பதுதான். அமெரிக்க அரசை எதிர்த்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார் சோம்ஸ்கி.  ஆனால், "அமெரிக்காவின் பொக்கிஷம் சோம்ஸ்கி" என்று சொல்கிறது அமெரிக்க அரசு.  அவர் போல ஒருவர் இங்கிருக்கும் நேர்வில், அவரை 'பொக்கிஷம்' என்று சொல்வாரா மாண்பமை எடப்பாடி பழனிசாமி அவர்கள்?     

Modus Operandi

|
ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் "ஆஷ் அடிச்சுவட்டில்" இன்னும் சில அத்தியாயங்கள் பாக்கியிருக்கிறது.  இந்த மாதிரியான புத்தகங்களை போகிற போக்கிலோ, இரவு உணவிற்குப் பிறகு தூக்கம் வருவதற்கு முன்போ படிக்கக் கூடுவதில்லை.  இதற்காக நேரம் ஒதுக்கி பென்சிலும் கையுமாக உட்கார்ந்து அடிக்கடி குறிப்பெடுத்துக் கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது.  வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களைப் பற்றிய அத்தியாயம் துப்பறியும் கதை ஒன்றைப் படிப்பதைப் போன்ற பரபரப்பைத் தருகிறது.  அதிலும், குறிப்பாக காங்கிரசை கைப்பற்ற மிதவாதிகளும் திலகரின் ஆதரவாளர்களும் போட்டியிடுவது, டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளுக்கிடையே நடந்து வரும் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.  மெட்ராசிலிருந்து தனித் தனியே ரயிலேறுகிறார்கள். சிதம்பரம் பிள்ளை திலகரின் தளகர்த்தர்.  முப்பது பேர்கள் கொண்ட அணிக்கு தலைமையேற்று பிள்ளையவர்கள் முதலில் பம்பாய்க்கு செல்கிறார்.  இவர்களுக்கு மட்டும் அங்கு ஒரு தங்கும் விடுதி - சர்தார் கிருஹம் - திலகரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கிருந்து சூரத் செல்கிறார்கள். மாநாட்டில் லஜபதி ராய் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்க திலகர் அணி கடுமையாக முயல்கிறது.  ஆனால் மிதவாதிகளோ காங்கிரசின் தலைவராக ராஷ் பிகாரி கோஷ் அவர்களைத் தலைவராக்க ஆவன செய்கிறார்கள். மாநாட்டிற்கு முந்தைய இரண்டு தினங்களில் இரண்டு அணிகளும் மீண்டும் மீண்டும் கூடி சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  முந்தைய மாநாட்டில் தீர்மானங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதைப் பற்றிய முறுகல் முற்றுகிறது.  மாநாட்டின் இரண்டாம் நாள் - 27-12-1907 - பெரும் சர்ச்சைக்கிடையே தலைவராக ராஷ் பிகாரி கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு விட, அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரைக் குறுக்கிட்டு திலகர் மேடையேற, அவரை நோக்கி செருப்பு வீசப்படுகிறது.  இலக்கு திலகர்தான். ஆனால், அது சுரேந்திரநாத் பானர்ஜியின் கன்னத்தைப் பதம் பார்க்கிறது.  தொடர்ந்த அடி உதை குத்தின் உச்சமாக போலீசார் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்து தடியடி நடத்த வேண்டி வருகிறது. தன்னை முற்றிலும் சூழ்ந்து பாதுகாப்புக் கொடுத்த தீவிரவாதத் தொண்டர்களின் உதவியுடனேயே திலகர் அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறார்.  "திலகர் நின்ற நிலையை மதம்பிடித்து கர்ஜித்துக் கொண்டிருந்த பல நூறு யானைகளின் முன் அமெரிக்கையாய் அடங்கி ஒடுங்கி நின்ற ஒரு சிங்கத்தின் நிலைக்கு ஒப்பிடலாம்" என்று சிதம்பரம் பிள்ளை அந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவு கூர்கிறார்.

இன்று கூவத்தூர் - கூர்க் - கட்சி மாநாடுகள் - சட்டமன்றக் கூத்துகள் - யார் தலைவர் என்ற கலவரம் - அடிதடி போன்ற எதையும் பத்திரிகைகள் "வரலாறு காணாத" என்று செய்தி போடத் தேவையில்லை.  இவையெல்லாம் 1907-ம் ஆண்டே சீரும் சிறப்பாக நடந்தேறியுள்ளன.  ஒரே வித்தியாசம் என்னவென்றால், அன்று அடித்துக் கொண்டவர்கள் தேசாபிமானிகள். இன்று அடித்துக் கொள்பவர்கள் தேசத்தின் வியாதிகள்.  ஆனால் modus operandi ஒன்றுதான்.

அரசியல் மாறவேயில்லை!   
--------

சொல்ல மாட்டேன் போ

புதியதலைமுறை சேனலில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டதில்  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மகளிடம் அலைபேசியில் பேசி தன்னுடைய மகள் 2002ம் ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாக சொன்னார். அந்த ஆண்டில் இந்த மதிப்பெண்கள் அதிகமானவைதான். சந்தேகமேயில்லை. சந்தேகமெல்லாம் உண்மையிலேயே அவருடைய மகள்தான் அந்த மதிப்பெண்களை கிருஷ்ணசாமியிடம் சொன்னாரா என்பதுதான்.  YouTube-ல் உள்ள அந்த விடியோவை நவீன தொழிற்நுட்பத்துடன் post mortem செய்து சில தகவல்களை முகநூலில் வெளியிட்டுள்ளார்கள். உன்னுடைய மார்க் என்ன என்று டாக்டர் கேட்கும் போது, சொல்ல மாட்டேன் என்று அவருடைய மகள் சொல்கிறார்.  டாக்டர் மறுபடியும் கேட்க அவருடைய மகள் சிணுங்கியவாறே சொல்ல மாட்டேன் போ என்று மீண்டும் சொல்கிறார். அடுத்த நானோ வினாடியில் 1063 என்று சொல்லியவாறே டாக்டர் தாளில் எழுதுகிறார்.  பிறகு, மகளின் பட்ட மேற்படிப்பு படித்த இடம், ஆண்டு, போன்றவற்றை டாக்டர் கேட்க மகள் பதில் சொல்கிறார்.  அனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், CBI - FBI போதாது, இஸ்ரேலின் மொசாட் வரவேண்டும் என்று சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி, தன் மகளின் ப்ளஸ் டூ மதிப்பெண்களை கண்டுபிடித்துச் சொல்ல எந்த புலனாய்வு நிறுவனத்தைக் கூப்பிடுவார்?

ஜனநாயகம் மிகுந்த பெருந்தன்மை மிக்கது.  இங்கு யாரும் எதைப் பற்றியும் பேச முடியும்.  முழுக்க தெரியாத ஒன்றைப் பற்றி பேச தைரியமும் கொஞ்சம் வெட்கமின்மையும் மட்டும் போதுமானது. NEET வேண்டும் அல்லது வேண்டாம் என்பது பற்றிய ஒருவரின் கருத்து ஆட்சேபகரமானது அல்ல. ஆனால், பதினேழே வயது கொண்ட ஒரு மாணவியின் மரணத்தைக் குறித்து கேவலமான ஐயங்களைப் பொதுவெளியில் குறைந்தபட்ச நாகரீகம் இன்றியும் வெளியிடும் மருத்துவர் கிருட்டிணசாமி அவர்கள் தன்னுடைய மகளின் ப்ளஸ் டூ மதிப்பெண்கள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? அல்லது இதையும் இஸ்ரேலின் மொசாட் வந்துதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமா?