மனுஷ்யபுத்திரன்

| Tuesday, November 15, 2016


 ('உயிர்மை' இதழ் மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர்.  கவிஞர்.  ஊடகவியலாளர்.  திமுக பிரமுகர் - இவையெல்லாம் மனுஷ்யபுத்திரன் என்கிற அப்துல் ஹமீதுவின் அடையாளங்கள். சன்ஸ்கிருதி சம்மான் விருதை 2002-லும், தமிழ் இலக்கியத் தோட்ட விருதை 2015-லும் பெற்றவர்.  தனித்த சொல்லாடல் மூலமாக தன்னை வெளிப்படுத்துபவர்.  மிகவும் துணிச்சலாக விமரிசனங்களுக்கு அஞ்சாமல் கருத்துக்களை சொல்பவர்.

கவிஞரைப் பற்றிய கட்டுரை ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இன்று (15-11-2016) வெளிவந்துள்ளது.  நாளிதழை மடித்து கால்களின் மீது வைத்துக் கொண்டு வரிகளைப் படிக்கின்ற நிமிடங்களிலேயே மனதில் மொழிபெயர்ப்பு நடந்து, அம்மா சுட்ட இட்டிலிகள் தீர்ந்துவிடும் என்ற அவசரத்தில் விரல்கள் விசைப்பலகையில் ஓடி உருவான கட்டுரை இது.  நிறைய படிக்கிறேன்.  அவைகளில் கொஞ்சம்தான் கூப்பிடுகின்றன.  கூப்பிட்ட குரலுக்குப் போய் நின்று நன்றி சொல்லி மொழி பெயர்க்கத் துவங்குகிறேன். அப்படியான ஒன்று இது. - முனைவர் மு. பிரபு)
        
திருச்சிக்கு அருகிலுள்ள துவரங்குறிச்சி என்ற தன்னுடைய கிராமத்திலிருந்து 2000-த்தில் சென்னைக்கு புலம் பெயர்ந்த போது, பெருநகரைப் பற்றிய பயத்தோடுதான் நுழைந்தார் அப்துல் ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரன்.  ஆனால் சென்னை அப்படியாக பயமுறுத்தவில்லை; மாறாக ஹமீதை வரவேற்றது.  படைப்பூக்கத்தின் இன்னொரு வெளியைத் திறந்து விட்டது மட்டுமன்றி, கவிதைக்கான புதிய பாடுபொருளையும் பாடும் முறைமையையும் தந்தது.

நகர வழக்குகள் புதுக்கவிதையில் தமக்கே உரிய ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ளும் என்பதற்கு சாட்சியாக நிற்பவை மனுஷ்யபுத்திரனின் கவிதைகள். நகரத்திற்கு புலம் பெயர்ந்ததோடு இவரது கவிதைகள் தம்மை முற்றிலும் புத்தாக்கம் செய்து கொண்டன.  பின்பற்றி வந்த மரபான கவிதைப் பாரம்பரியங்களைக் கைவிட்டு புதிய வடிவத்தோடு வாழும் உலகத்தின் சிக்கல்களை எளிமையான மொழியில் நமக்கு சொல்பவை ஹமீதின் கவிதைகள்.  "புதுக்கவிதை என்பது மேட்டுக்குடி சமாச்சாரமாக கருதப்பட்டு வந்ததை உடைத்தெறிய பிறந்தவை எனது கவிதைகள்.  கவிதைக்கு நாகரிகப் பூச்சு எதுவும் தேவையில்லை.  புதுக்கவிதையின் பூடகமும் மர்மங்களும் தவிர்க்கப்பட வேண்டியவை.  கவிதை அந்தரங்க சுத்தியிலேயே இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. அது பண்பாட்டின் குரலாக, சமூகச் செயற்பாடாக இருக்க வேண்டிய அவசியத்தைப் புறக்கணிக்கலாகாது" என்கிறார் மனுஷ்யபுத்திரன். 
 
அப்துல் ஹமீதாக பிறந்து மனுஷ்யபுத்திரனாக பரிணமித்திருக்கும் 49 வயது திருச்சிக்காரர் புதுக்கவிதையின் எல்லைகளை கணிசமாக விரிவாக்கியுள்ளார்.  இவரிடம் நகரத்து மனிதனின் மன அவசங்கள் அவனுடைய சொல்லாடல் மூலமாகவே இலக்கிய அந்தஸ்து பெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால், பெருவாரியான தமிழ்க் கவிஞர்கள் போல, மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் கிராமத்தைப் புனைவுக் கண்களோடு பார்ப்பதில்லை.  கிராமங்களில் நூற்றாண்டுகளின் அழுக்கு மண்டிக் கிடக்கிறது.  சாதீயம், அடக்குமுறை போன்றவை இன்னும் கிராமங்களில் எளிதாகக் காணக் கிடக்கிறது. "நகரம் உங்களுக்கு சுதந்திரத்தை சாத்தியமாக்குகிறது. தங்களுடைய சாதிச் சிலுவையை சுமந்து கொண்டு நகரும் அவலம் நகரத்து மனிதர்களுக்கு இல்லை.  நகர வாழ்க்கை நூற்றாண்டுத் தளைகளிலிருந்து விடுபட்டது." இதற்கும் மேலே ஒரு படி போய் கவிஞர் சொல்லுகிறார்: "நமது கிராமங்கள் பண்பாட்டு ரீதியாக பார்த்தோமானால், அழித்தொழிக்கப்பட வேண்டியவை."  விவசாயமும் கிராமப் பொருளாதாரமும் தொடர வேண்டியவை என்றாலுங்கூட, சாதீயமும் மதச்சார்பும் பெண்களுக்கு மற்றும் தலித்துகளுக்கு எதிராகவும் கிராமங்களில் வீரியத்தோடு இயங்குகின்றன.  நமது கற்பனையில் மிதக்கும் கிராமங்கள் பூமியில் காணக் கிடைப்பதில்லை."

சமீபத்திய தனது கவிதைகளை தொகுப்பாக கொண்டு வர விரும்பி அதற்கான ஏற்பாடுகளை மனுஷ்யபுத்திரன் செய்திருந்தாலும், சென்னைப் பெருவெள்ளம் (திசம்பர் 2015) காரணமாக முடியாமல் போயிற்று.  அதே மாதத்தில் தான் அடைந்த மன அவசங்களை 52 கவிதைகளாக எழுத அது தனி தொகுப்பு ஒன்றுக்கு உள்ளீடாகப் போனது.  சென்னைப் பெருவெள்ள விளைவுகளான அந்தக் கவிதைகள் "ஊழியின் தினங்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது.  "யாருமில்லா அநாதைகளும் தெரு நாய்களும் அந்த வலிமிகுந்த தினங்களில் என்ன செய்தார்கள்? சோறும் போர்த்திக்கொள்ள துணியும் - இதற்கான பரபரப்பும் மட்டும்தான் அவர்களின் அடையாளமாக இருந்தன.  இவை மட்டும்தான் அவர்களா என்ற கேள்வி உந்தித் தள்ள பிறந்தவை இந்த 52 கவிதைகளும்.  ஆங்கில இலக்கியத்தில் போர்க்கால கவிதைகள் (war poetry) என்ற வகைமை உண்டு.  அவை போன்றவைதான் இந்தக் கவிதைகளும்" என்கிறார் மனுஷ்யபுத்திரன். மிக நெருக்கடியான சூழலில், மனிதர்கள் மீது திடீரென்று திணிக்கப்பட்ட வாழ்வாதார வன்முறைகள் மனிதனை உயிர் வாழ்வது மட்டுமே லட்சியம் என்கிற ஆதி உலகத்தின் துடிப்பை மீட்டுக் கொண்டு வருகின்றன.  சுற்றி எங்கேயும் பெருகும் குழப்பங்கள் மனிதனை துரத்திக் கொண்டே இருந்த அந்தப் பெருவெள்ளத் தினங்கள் நகரத்தின் மீது கவிழ்ந்துவிட்ட போர்ச்சூழலை நினைவுபடுத்தின என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரனின் கவிதை மொழியை மிகவும் தீர்மானமாக வரையறுத்தது இவரது 2009-ம் ஆண்டின் "அதீதத்தின் ருசி" என்ற தொகுப்புத்தான். அதற்கு முந்தைய இவரது கவிதைகள் சுயத்தின் வெளிப்பாடாகவும் அந்தரங்க தொனியோடும் பிறந்தவை.  பிற்பாடு இவரது படைப்புகள் சமூகத்தின் நிதர்சனங்களை கூர்ந்து கவனிப்பவையாகவும் அவற்றை தனித்த பார்வையில் எடைபோடும் சாட்டைக் கண்களாகவும் மடைமாற்றம் பெற்றன.  ஆனால், இவரது கவிதைகள் ஒரே சிக்கலில் மாட்டிக்கொண்டவை என்றதான திறனாய்வும் இருக்கிறது.  இதை மறுக்கிறார் மனுஷ்யபுத்திரன். "சச்சிதானந்தன், விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி, பாப்லோ நெருடா கவிதைகளைப் பார்த்தவுடன் யாருடைய கவிதைகள் என்று சொல்லிவிடலாம்.  அவர்களுடைய குரல் - மொழி அவ்வளவு அழுத்தமாக வாசகனின் மனதில் பதிந்திருக்கிறது. அதைப்போலவேதான் எனது கவிதைகளும். இது எனது வடிவம் - எனது மொழி - எனது கவிதை."

மனுஷ்யபுத்திரன் என்ற மனிதரைப் பற்றிய விமரிசனம் வேறு தளத்தில் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் தினமும் தோன்றி கருத்துக்களைச் சொல்வதும் கட்சிரீதியான அரசியலில் இவர் ஈடுபட்டிருப்பதும் பெருத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  அரசியல் இவருக்குப் புதிதல்ல. பதின்மப் பருவம் முழுவதும் பெரியாரையும், மார்க்சையும் படிப்பதில் செலவழித்துள்ளார்.  "பெரியாரின் சிந்தனைகள் என்னிடம் தேங்கியிருந்த அச்ச உணர்வை முழுதாகத் தகர்த்தெறிந்து விட்டன."

பெரியாரின் சிந்தனைகள் வழியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்திருப்பதாகக் கூறுகிறார் மனுஷ்யபுத்திரன்.  ஆகஸ்டு 2015-ல் திமுக-வில் இவர் இணைந்தபொழுது, காட்டமான கண்டனங்கள் எழுந்தன. படைப்பு வெளி - அரசியல் தளம் இரண்டுக்குமான முரணை எப்படி மனுஷ்யபுத்திரன் சமாளிக்கிறார்? "கவிஞன் - ஊடகவியலாளன் - அரசியல்வாதி என்பவற்றை தனித்தனியாக நான் பார்க்கிறேன்.  இந்த மூன்றுக்குமே உரிய பிரத்தியேக வெளிகளை உணர்ந்தே இருக்கிறேன்.  தொலைக்காட்சியில் என்னைப் பார்க்கும் பலருக்கு நான் ஒரு கவிஞன் என்று தெரியாது.  என்னுள் உயிர்ப்புடன் உலவும் கவிஞனை ஸ்டுடியோ வெளிச்சமும் அரசியல் மேடையும் சேதப்படுத்திவிட முடியாது."

இத்தனைக்கும் நடுவில் இவரது படைப்புலகம் ஊக்கமுடன் விரிந்து கொண்டே போகிறது.  கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நானூறுக்கும் அதிகமான கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர்.  இவரது "இருளில் நகரும் யானை" திசம்பர் 25, 2016 அன்று வெளியிடப்பட இருக்கிறது.

உற்சவர்களின் வரலாறு

|
ஆனந்தவிகடன் வெள்ளிக் கிழமைகளில் வரும்.  பேப்பர்கார ஐயர் சைக்கிளில் ரொம்பவும் ஸ்டைலாக வருவார்.  சின்னப் பையன்களான எங்களிடம் பத்திரிகைகளை தர மாட்டார்.  அப்பாவின் பெயரைச் சொல்லி கூப்பாடு போட்டு தலை தெரிந்ததும் விட்டினுள் கடாசி விட்டு பெடலை வேகமாக உந்தி நகருவார்.  சாயரட்சை பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் படிக்கலாம் என்று சொல்லி கதவு கொண்ட அலமாரியில் வைத்துப் பூட்டி அப்பா நகர்ந்ததும், ஐயரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்த நாட்கள் ஞாபகத்தில் நேற்று நடந்தது போல இருக்கின்றன.  ஸ்டெல்லா புரூஸ் 'அது ஒரு நிலாக்காலம்' தொடர்கதை எழுதி வந்த வாரங்களில் விகடனை யார் முதலில் படித்தார்கள் என்ற போட்டி சிநேகக்காரர்களுடன் உறைப்பாக நடக்கும்.  குமுதம் விஷயமும் அப்படித்தான்.  சுஜாதா தொடர்கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும். காந்தி ஸ்டேடியத்திற்கு பின்னால் இருக்கும் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்த சுஜாதாவைப் பார்த்த சந்தோசத்தில் பல்டி அடித்துக் கொண்டே வீட்டிற்கு போனது ஜோராக நினைப்பிருக்கிறது.  குங்குமம், இதயம் பேசுகிறது, தாய், கல்கி போன்ற வாராந்தரிகள் பெரும் கிளர்ச்சியூட்டும் விஷயங்களாகத்தான் எங்களுக்கு இருந்தன.  குமுதம், பொம்மை போன்ற பத்திரிகைகளில் வந்திருக்கும் நடிகைகளின் படங்களை மாற்றி மாற்றி தன் கடையில் ஒட்டி வைப்பார் தெருவில் கடை வைத்திருந்த பார்பர் அண்ணாச்சி.  அலைகள் ஓய்வதில்லை படத்தின் நாயகி ராதாவின் புது ஸ்டிக்கரைப் பார்ப்பதற்கே ஒரு அண்ணன் தினம் அந்தக் கடைக்கு வருவார்.  அவருக்கு 'ராதா அண்ணன்' என்றே பெயர் வைக்கப்பட்டது.  விஜயகாந்துக்கு புரட்சிக்கலைஞர் பட்டம் மாதிரி அவருக்கு 'ராதா அண்ணன்' என்பது அவ்வளவு பொருத்தமாக வாய்த்தது. ராதா செத்துப் போனால் நானும் செத்துப் போவேன் என்று அரை போதையில் முன் இரவு ஒன்றில் அண்ணன் அழுது பார்த்தபோது, அண்ணன் காலத்திற்கு முன்னால் ராதாவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பயமாக இருந்தது.  ராதா இன்னும் இருக்கிறார்.  அண்ணன்தான் இல்லை.
 
இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டி வந்தது என்றால், அந்த வருடங்களுக்குப் பிறகு எந்தப் பத்திரிகையும் அந்த அளவுக்கு எதிர்பார்க்க வைக்கவில்லை. நான் வெகுஜனப் பத்திரிகைகளைச் சொல்கிறேன். சிற்றிதழ்களைப் படிக்கிறவர்களின் கதை தனி.  வெகுஜன ஊடக நிறுவனங்களிலிருந்து இலக்கியத்திற்காகவே தனி இதழ்கள் கொண்டு வரப்படும் போது, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் விநியோக பலத்தால் அதிக வாசகர்களுக்கு சென்றடைவதை குமுதம் குழுமத்தின் தீராநதி ஏற்கனவே நிரூபித்திருக்கிறது.  இந்த வரிசையில்தான் விகடன் குழுமம் 'தடம்' இதழைக் கொண்டு வந்துள்ளது.

நான் எப்பொழுதுமே நண்பர்களிடமும் மாணவர்களிடமும் சொல்லி வந்திருக்கிறேன்.  படிப்பதுதான் முக்கியம்.  அது ஏற்படுத்தும் உணர்வுகளும் அனுபவங்களுமே கூட இரண்டாம் பட்சம்தான்.  சேலத்தில் ஒரு புத்தகக் கடையில் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் இளைஞனுக்கும் எனக்கும் அடிக்கடி நடக்கும் உரையாடல்களில் என்னை ஒரு பொய்யன் என்றே அந்த இளைஞன் சொல்லுகிறார்.  'எப்படி உங்களால் எதிரெதிர் தரப்புகளை தொடந்து வாசிக்க முடிகிறது? யாரை வாசிக்கிறீர்களோ அவரின் கருத்துகள் உங்களைப் பாதிப்பதில்லை என்று சொல்வது பொய்தான்' என்றபடிக்கு சாட்டும் அவரின் புகார்களில் உண்மை இருக்கிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.  என்னைப் பொறுத்த அளவில், வாசிப்புதான் முக்கியம்.  கருத்து இரண்டாம் மூன்றாம் பட்சம்தான்.  வாசிப்பது ஒரு தொழில்.  பரோட்டா சுடுவது, செருப்பு தைப்பது, வங்கி மேலாளராக இருப்பது மாதிரிதான் வாசிப்பதும்.  அதைத் தொடர்ந்து திருப்தியுடனும் சந்தோசத்துடனும் இடைவிடாமலும் செய்து வருகிறேனா என்பதுதான் முக்கியம்.  முத்து காமிக்ஸ் புத்தகமானாலும், கரமாசொவ் சகோதரர்கள் நாவலானாலும், நான் வாசித்தபடியே இருக்கிறேன். உயர்வு தாழ்ச்சி இல்லை.  சில எழுத்துக்களை - ஆளுமைகளைப் படிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது.  நண்பர்களிடம் எழுத்திலோ பேச்சிலோ பகிர்ந்து கொள்கிறேன்.  Richard Dawkins, Christopher Hitchens, Bertrand Russell, ராமசாமி நாயக்கர் போன்ற கடவுள் மறுப்பாளர்களைப் படிக்கும் போது என்னுள் ஏற்படுகிற பிரமிப்பு சில ஆத்திகர்களைப் படிக்கும்போதும் ஏற்படுகிறது.  உரைநடையில் கண்ணதாசனும் பெரியாரும் என்னை ஆச்சர்யப் படுத்தியவாறே இருக்கிறார்கள்.  அவர்கள் இருவருக்குமே தாங்கள் சொல்வதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.  அவர்களது உரைநடை அதைப் பிரதிபலிக்கிறது. எழுத்து சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பாரின் படைப்பும் என்னைக் கவர்கிறது.  இலக்கியம் இலக்கியத்திற்காகவே (Art for Art's sake) என்பாரின் படைப்பும் என்னை இழுக்கிறது. இதில் முக்கியமானது வாசிப்புதான்.  வாசிப்பது மனிதத் தொழில்களிலேயே சிரமமானது என்பதையும் நான் அறிவேன்.  வாசித்தல் பள்ளிக்கூட பையன் முதல் பல்கலைக் கழக பேராசிரியர் வரை விரும்பாத காரியமாகவே கருதப்படுகிறது. இருப்பதை வைத்துக் கொண்டு ஒப்பேற்றி விடலாம் என்றே எல்லோருக்கும் நினைப்பு.  "கடந்த வருடத்தில் நீங்கள் வாசித்த ஐந்து ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் எழுதுங்கள்" என்ற வேண்டுகோளுடன் ஆங்கில ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியில் வெள்ளைத் தாள்களை விநியோகித்த பொழுது, அந்த விலாசமான சபையில் இருந்த நூற்று இருபதிற்கும் அதிகமான ஆசிரியர்களும் தாள்களை எந்த மைக்கறையும் இல்லாமலேயே திருப்பித் தந்தனர்.  மீண்டும் அவற்றை விநியோகித்து 'கடந்த வருடத்தில் எந்த மொழியிலும் நீங்கள் படித்த ஐந்து புத்தகங்கள் - ஆசிரியர் பெயர்களை எழுதித் தாருங்கள்' என்ற போதும் ஒன்றிரண்டு தாள்களில் மட்டும் சில பெயர்கள் தப்பும் தவறுமாக எழுதப்பட்டு வந்தன.  வாசிப்பது கேனத்தனம் என்றே ஆசிரியர் நினைக்கிறார்.  விலக்கானவர்கள் ரொம்பவும் கொஞ்சமே.  இலக்கியத்தை கொஞ்சமாவது வாசிக்கிறார்கள் என்று நினைக்க வைத்த ஓரிரு ஆசிரியர்களும் மொழி ஆசிரியர்கள் அல்ல.  எனக்குத் தெரிந்து, இயற்பியல் பாட ஆசிரியர் ஒருவர் தீவிரமான வாசிப்பாளர்.  நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்ப பண்டிதம். எனக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் அவரை தமிழ்ப் பாடம் எடுக்கச் சொல்வேன்.  Qualifications do not guarantee delivery. 'இதனை இதனான் இவண் முடிக்கும்' என்பதை attitude முடிவு செய்கிறது; certificates அல்ல.

இருக்கட்டும்.  இந்தப் பத்தியை எழுத ஆரம்பித்தது நவம்பர் மாத "தடம்" இதழைப் பற்றிச் சொல்லத்தான்.  எஸ்ராவின் நீண்ட செவ்வியோடு இந்த கனமான இதழ் தொடங்குகிறது.  பாப் டிலனுக்கு நோபெல் வழங்கப்பட்டது குறித்து எஸ்ரா ஆட்சேபிக்கிறார். தான் கவிதைகள் எழுதாததற்கு அவர் சொல்லும் காரணம் ரசிக்க வைக்கிறது.  ஆனாலும் எஸ்ராவின் நேர்காணலை விட இரண்டு நெகிழ்ச்சியான எழுத்துக்கள் இந்த தடம் இதழில் உள்ளன.  சிற்பி ராஜன் அவர்களைப் பற்றிய கட்டுரையும், வண்ணதாசனைப் பற்றி கலாப்பிரியா எழுதியிருக்கும் கட்டுரையும்.  சமீபத்தில் நான் படித்த அபுதின எழுத்துக்களில் மனதை கசியச் செய்யும் படிக்கான ஒரு அந்தரங்க சுத்தியோடு இவைகள் எழுதப்பட்டுள்ளன.

சிற்பி ராஜனைப் பற்றிய கட்டுரையை வடிவமைத்திருக்கிறார் இளமுரசு. அற்புதமாக வந்திருக்கிறது.  இதைப் போன்ற கட்டுரைகளை எழுத ராஜனைப் போல மனிதர்களைச் சந்தித்தாக வேண்டும்.  எல்லா மேதைகளிடமும் பொதுவான குணம் ஒன்று இருக்கிறது. Rebellion.  வழக்கத்தை எதிர்ப்பது.  வளமையான குடும்பத்தில் பிறந்தவர் ராஜன்.  இவரது சகோதரர்கள் பெரிய நிலைகளில் இருப்பவர்கள்.  பியூசி வரை ஆங்கில வழியில் படித்தவர்.  சிற்பக்கலை படிக்க சுவாமிமலை போவதாக சொன்னது வீட்டாருக்கு பிடிக்காமல் எதிர்க்கவே, அவர்களின் முன்னாலேயே பியூசி சான்றிதழை கிழித்துப் போட்டுவிட்டு, கைலி சட்டையோடு வெளியேறியிருக்கிறார்.  ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் திரும்பப் போகவில்லை.  ராஜன் தீவிரமான பெரியாரிஸ்ட். சிற்பக் கலையைக் கற்றுத் தேர்ந்தது மட்டுமன்றி தலித் சமூகங்களைச் சேர்ந்த  நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களை கொண்டுவந்து தன்னுடைய கூடத்தில் ஆண்டுக் கணக்கில் தங்க வைத்து கலையைப் பயிற்றுவித்து அவர்களால் உருவாக்கப்பட்ட கடவுளர் சிலைகள் தமிழகம் உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு இந்துக் கோவில்களில் உற்சவர்களாக பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன என்பது எப்படியேற்பட்ட முரண்நகை!  கடவுளர் சிலைகள் செய்யும் ராஜனின் கூடத்தில் வருடத்திற்கு மூன்றே நிகழ்வுகள்தான் கொண்டாடப்படும்.  பெரியார் - அம்பேத்கர் பிறந்த நாள்கள் மற்றும் மே தினம்.  மூன்று தினங்களையும் சிறப்புச் செய்வது மாட்டுக்கறி பிரியாணி.  இவரிடம் சிற்பக் கலை பயின்றிருக்கும் இருநூற்று சொச்சம் மாணவர்களும் இப்படித்தான் என்கிறார் ராஜன்.  ராஜனின் வார்த்தைகளில் "கலை, பிறப்பு சார்ந்ததோ, மரபு சார்ந்ததோ இல்லை.  அதைத்தான் பெரியார் படிப்பிச்சுக்கிட்டே இருக்கார்.  திறமையும் ஆர்வமும் கொண்ட யாரும் கலைஞனா உருமாற முடியும்."  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் பிரபலமான உலோகச் சிற்பக் கலைஞர்களில் ஒருவராக விளங்கும் சிற்பி ராஜன் தற்போது சிற்பம் செய்வதை நிறுத்திவிட்டு, முழுநேர பெரியாரிய பிரசாரகராக இருக்கிறார்.   ராஜனின் வாழ்வு சராசரி மனிதனாகிய நான் எட்டிப்பிடிக்க முடியாதது.  நிறைவானது.  பிறருக்கு பயனுள்ளது. 'சோற்று மனிதர்களாகிய' நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

"அன்பெனும் தனி ஊசல்" என்ற கட்டுரை வண்ணதாசனைப் பற்றி கலாப்பிரியா எழுதியது.  ஒரே தெருக்காரர்கள்.  கல்யாணி அண்ணனாகவும் கோபாலாகவும் இருந்த காலங்களை அழியாத கோலங்களாக நம்முடைய மனங்களில் வரைந்து காட்டுகிறார் கலாப்பிரியா என்கிற கோபால். தி.க.சி.-யின் புதல்வர்களான கணபதி அண்ணனும் கல்யாணி அண்ணனும் தடம் புரண்டு போயிருக்கக் கூடிய தனது வாழ்க்கையை எப்படி நெறி செய்து தந்தார்கள், தனது எழுத்துலக வாழ்க்கையில் கூடவே இருந்து வழிநடத்தி தந்தார்கள் என்ற உணர்வுப் பெருக்கு பத்தி நெடுக வழிந்தோடுகிறது.  கலாப்பிரியாவின் கவிதைகள் அபூர்வமானவை. புதிய சொல்லாடல்களின் வழியே பின்னப்பட்டவை.

ஒவ்வொரு புது வாக்கியமும்
மொழி செய்துகொள்ளும்
சுயமைதுனம்.

கலாப்பிரியாவின் சுயசரிதைத் தொகுப்புகளான உருள்பெருந்தேர், நினைவின் தாழ்வாரங்கள், மற்றும் சுவரொட்டி ஆகியவையை அவற்றின் எளிமையான தமிழ் உரைநடைக்காக போன வருடம் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தேன். அறுபதுகளின் திருநெல்வேலியை, தமிழ் சினிமாவை, தமிழரின் நெஞ்சத்தை இவரைப் போல எழுத்தில் சொல்வது வேறு யாருக்கும் கைகூடும் என்று நான் நம்பவில்லை. 

"தடம்" வணிக ரீதியாக வெற்றியடையுமா என்பது சந்தேகம்.  விகடன் குழுமத்தில் இருந்து வருவதால் கொஞ்ச வருடங்கள் தாக்குப் பிடிக்கலாம்.  வரும்வரை, இதே போல வந்தால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு நல்லது.  ஒரு ஐநூறு தரமான வாசகரையாவது புதிதாக உருவாக்கிவிட முடியும்.

வாசிப்பு அற்ற சமூகத்திடம் political consciousness இருக்காது.  வாசிப்பு பரவலாக உள்ள சமூகத்திடம் அரசியல் பம்மாத்துகள் பலிப்பதில்லை.  தமிழ் சமூகம் வாசிப்புப் பழக்கம் பரவலாக உள்ள சமூகமாக மாற இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படலாம். அதை நோக்கிய எத்தனையோ முயற்சிகள் இதுவரை செய்தாகி விட்டது.  புதியதாக அதில் ஒன்றுதான் 'தடம்'.  இதுமாதிரியான முயற்சிகளைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் வாசிப்பவர்களின் கடமை.  காற்றில் கலக்கும் எத்தனையோ மில்லியன் வார்த்தைகளில் இந்த மாதிரியான முயற்சிகளைப் பற்றிப் பேசுவது காலப் பெருவெளியில் என்றாவது தடம் பதிக்கலாம்.

அமெரிக்காவில் மோடி

| Thursday, November 10, 2016
 
Trump comes up trumps
(அமெரிக்காவில் குடியேறியிருக்கும் தோழி ஒருவர் How do you view Trump's victory? என்று கேட்டிருந்தார். என்னிடம் இருக்கும் ஒன்றிரண்டு 500 /1000 ரூபாய்த் தாள்களை எப்படி மாற்றுவது என்ற கவலையில் இந்தக் கேள்வி பெரிதாகத் தோன்றவில்லை. இன்று அதிகாலை செய்தித் தாள்களில் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று படித்ததும் இதை எழுத ஆரம்பித்தேன்.  - முனைவர் மு. பிரபு)

அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகத்தான் ட்ரம்ப் ஜெயித்துள்ளார். எல்லா சமூகங்களும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கின்றன என்று எனது நண்பர் சொல்கிறார்.  பெண்ணை தலைவியாக மனித சமூகங்கள் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. பிரிட்டிஷ்காரர்கள் அல்லது இந்தியர்கள் போன்று மன்னன் - மக்கள் மனோநிலை அமெரிக்கர்களுக்கு இல்லாததும் ஒரு காரணம்.  இந்தியாவில் பெண்களைத் தலைவிகளாக ஏற்றுக் கொள்ளும் காரணம் அவர்களைத் தங்களுடைய தலைவரின் மனைவியாகவோ மகளாகவோ, குறைந்தபட்சம் காதலியாகவோ பார்ப்பதால்தான்.  இந்திரா காந்தி, ராப்ரி தேவி, சுப்ரியா சுலே, ஜெயலலிதா நினைவுக்கு வருகிறார்கள்.  மாயாவதி கூட கன்ஷிராம் அவர்களால் தன்னுடைய அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர்தான்.  இதில் ஒரே விலக்காக மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மட்டும் இருக்கிறார். 

இது தவிர உலகெங்கும் தங்கள் சாதி, தங்கள் மதம், தங்கள் இனம் என்ற போக்கைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் RSS தலைமையின் கீழ் செயலாற்றிவரும் அத்துனை கட்சிரீதியற்ற, கட்சி ரீதியான அமைப்புக்களும் சாதி அல்லது மத ரீதியாக இயங்குபவைதான்.  இவர்களின் எழுச்சி இதைத்தான் காட்டுகிறது.  குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் இதைத்தான் செய்திருக்கிறார்.  முஸ்லிம்களை உள்ளே விடமாட்டேன் என்று அவர் திரும்பத் திரும்ப கூறிவந்தது அதிகம் படிக்காத அமெரிக்கர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.  இளவயது ஆண்களுக்கும் இதில் கவர்ச்சி உண்டு.  வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா outsourcing பணிகளைத் தராது என்ற ட்ரம்ப்-பின் கோஷம் இளைஞர்களிடம் எடுபட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்திய ஊடகங்கள் திருமதி கிளிண்டன் ஏன் தோற்றார் என்பது பற்றி நிறைய எழுதியும் பேசியும் வருகின்றன.  புலனாய்வுத் துறை மின்னஞ்சல்கள் இவரால் கசிய விடப்பட்டன என்பது இவருக்கு எதிராகப் போயிருக்கலாம் என்றும் செய்திகள் ஆங்கில அச்சு ஊடகங்கள் எழுதுகின்றன. 

பெண்ணை தங்களது அதிபராக ஏற்றுக் கொள்வதில் அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக அமெரிக்க ஆண்களுக்கு, தயக்கம் இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.  எனக்கென்னவோ, திருமதி கிளிண்டன் ஒரு refined, suave and sophisticated அமெரிக்காவிடம் ஓட்டுக்கேட்டதாகவும், ட்ரம்ப் குடியான, கிராம, அடிப்படைவாத, வேலைகிடைக்காத இளைஞர்கள் நிறைந்துள்ள அமெரிக்காவிடம் ஓட்டுக்கேட்டதாகவும் தோன்றுகிறது. இப்படித்தான் நடந்தது என்றால் ட்ரம்ப்-தான் ஜெயித்திருக்க முடியும். 
 
ஆனால், மோடியின் தலைமையிலான அரசு தன்னுடைய சித்தாந்தங்களையே கொண்டிருக்கும் ஒரு அரசியல்வாதி அமெரிக்காவிற்கு அதிபரானது குறித்து திருப்தி அடைகிறது என்று இந்திய ஊடகத்தின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.  பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் ட்ரம்ப் மாறலாம் என்றும் நம்புவதற்கு இடமிருக்கிறது.  ரஷ்யாவை ஆதரிக்கிறார் ட்ரம்ப். ரஷ்யா இந்தியாவுடன் மிகவும் நட்பு பாராட்டி வரும் நாடு. அமெரிக்கா - ரஷ்யா - இந்தியா என்ற ஒரு அச்சு உருவாகலாம் என்ற நம்பிக்கையும் இங்கு இருக்கிறது.   
  
மற்றபடி ட்ரம்ப் ஒரு பெண் பித்தர் என்பது எடுபடவில்லை.  எழுபது வயதான ட்ரம்ப் அவர்களின் தற்போதைய மனைவிக்கு 48 வயதுதான் ஆகிறது.  பத்து வயதில் அவர்களுக்கு ஒரு பையன் இருக்கிறான்.  இது சரியா என்ற கேள்விகளெல்லாம் விழுந்துவிட்டன.  வெள்ளை அமெரிக்கர்களைத் தவிர பிற வாக்காளர்கள் (கருப்பு அமெரிக்கர்கள், ஹிஸ்பானியர்கள், அமெரிக்க முஸ்லிம்கள்) பெருவாரியாக வந்து வாக்களித்தார்களா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது.

மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அடுத்த வருடமோ அல்லது அதற்கடுத்த குடியரசுத் தினத்திலோ தலைமை விருந்தினராக ட்ரம்ப் தில்லிக்கு வந்து இந்திய முப்படைகளின் மரியாதையை ஏற்று பிஜேபி-யின் இந்தியாவை கெளரவிப்பார் என்றுதான் தோன்றுகிறது.

சென்னை சில்க்ஸ்

| Tuesday, November 8, 2016

பெரியாரை ஒரு கலகக்காரர் என்று சொல்வது தற்போதைய மோஸ்தர்.  கலகக்காரர், தென்னகத்து சே குவாரா என்ற 'பட்டங்கள்' எதுவும் அவருக்குப் பொருந்தாதவையே.  இந்திய அரசியல் தன்மைகளை அவரை விடவும் வேறு யாரும் நுணுக்கமாக கற்றுத் தேர்ந்திருப்பார்களா என்பது ஐயமே.  இந்திய அரசியல் மேட்டுக்குடி அரசியல். சாதி நிலைப் படிக்கட்டுகளில் கடைசி வரியில் இருப்பவனை அரவணைப்பது போல பாசாங்கு செய்து அங்கேயே வைத்திருக்கும் அரசியல்.  வெகுஜன கல்விக்கு எதிரான அரசியல்.  சடங்குகளைத் தீவிரமாக பின்பற்றுவதின் மூலமாக மதத்தின் செல்வாக்கை அதிகப்படுத்துவதான சனாதனிகளின் அரசியல். 
 
இந்தியக் கலாச்சாரத்தின் ஆதி முதல் இன்று வரை எந்த அதிகாரப் பகிர்விலும் இடம் தரப்படாத மக்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டுமானால் வெறும் கலகம் மட்டும் போதாது, அரசிடம் செய்து கொள்ளும் பேரங்களும் முக்கியமானவை என்று தெளிவாக உணர்ந்தவர் பெரியார்.  அவரின் அரசியலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.  ஆனால் பேரங்கள் உண்டு.  மாசற்ற பேரங்கள் அவை.  பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற வேண்டி, அரசுப் பணிகளில் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு கேட்டுப் பெற்ற பேரங்கள் அவை.  எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாத தனது போராட்டத்தின் விளைவாக அவர் பெற்றுத் தந்திருக்கும் சௌகர்யங்களை முற்று முழுதாய் அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் / அதிகாரிகள் தங்களது வரலாறு என்ன என்பதே தெரியாமல், சனாதன மேல் சாதியினர் போலவே பாவனைகள் செய்துகொண்டு பரம்பரையாகவே தாங்கள் அரண்மனைகளில் பிறந்து வளர்ந்தவர்கள் போன்ற பாசாங்குகளுடன் திரிகின்ற இந்த நாட்களில் 'பெரியார் மீண்டும் அவதரித்தாக' வேண்டிய கட்டாயம் அன்று இருந்ததை விட இன்று அதிகம் உணரப்படுகிறது.

அண்மையில் துர்கா பூஜையின் போது எனது அலுவலக சகாக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  அதற்கு முன்பாக அவர்கள் அனைவரையும் ஒரே பார்வை வீச்சில் உள்வாங்க ஆசையாக இருந்தபடியால் சற்றே உயரமான நாற்காலியில் ஏறி நின்றேன்.  அனைவருமே, நான் உட்பட, தனி ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டதால் அரசு வேலை கிடைத்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலிகளை கடந்த இருநூறு வருஷங்களாக ஒரே ஒரு சாதியினர் மட்டுமே ஆக்கிரமித்திருந்தனர்.  தங்களது வரலாற்றைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி துர்கா பூஜை ஏற்பாடுகளில் ஒருவகையான வன்மத் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தனர், "அவர்களே பரவாயில்லை" எனும் படிக்காக. அரசு அதிகாரம் கையகமானதும், சற்றே பொருளாதார வசதி வந்ததும், சமூக நிலைப்பாடுகளில் கீழே இருந்தவன் தன்னை மேலடுக்கில் இருப்பவனோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான் என்பது மட்டுமல்லாமல், தனக்கும் கீழே படிக்கட்டுகள் இருப்பதையும் அங்கே ஆட்கள் நிறைந்திருப்பதையும் உறுதி செய்து கொள்கிறான். தன்னுடைய வரலாறு அவனுக்கு அச்சம் தருவதாகவும், நினைவுபடுத்திக் கொள்ள விரும்பாததாகவும் இருக்கிறது.  தன் சமூக வரலாற்றை அடியோடு புறக்கணிக்கிறான். அதை - தன்னுடைய சமூக வரலாற்றை - யாரும் நினைவுபடுத்தி விடக்கூடாது என்பதில் அதிகவனமாக இருக்கிறான்.  தன்னுடைய மகனும் மகளும் தனி ஒதுக்கீட்டு சலுகையால் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இந்தப் புதிய 'மனுதர்மர்கள்' தங்களது புதிய அந்தஸ்துகளுக்கு, மோஸ்தர்களுக்கு காரணமாக இருந்த பெரியவர்களை தற்செயலாகக் கூட நினைப்பதில்லை.  அடிக்கடி ராமேசுவரம், திருப்பதி, திருச்செந்தூர், இன்ன பிற ஸ்தலங்களுக்குச் சென்று தமக்கு ஏற்பட்டிருக்கும் சௌகர்யங்களுக்கு நன்றி கூறியும், புதிய தேவைகளுக்கான விண்ணப்பித்தையும் பாதாதிவிந்தங்களில் சமர்ப்பித்து விட்டு காரில் ஊர் திரும்பும் இந்தப் புதிய மனுதர்மர்கள் ராமசாமி நாயக்கர் அவர்களை நினைக்க மட்டும் ஆகாது.  நினைத்துவிட்டால் தொண்டைக்குக் கீழே சோறு இறங்காது.  தண்ணீர் குடிக்க மனசாட்சி இடம் தராது. விக்கித்துச் சாக வேண்டியதுதான்.

இவர்களின் upward mobility மோஸ்தர்தான்; சந்தேகமில்லை. இந்தப் புதிய பவுசுகள் தவிர்க்கப்பட முடியாதவைகளாகக் கூட இருக்கலாம். இந்தச் சமூகத்தின் வரலாற்றைப் படிக்காதவன் எவனும் செய்யும் பிழைதான் அது; புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால், இவர்களின் இந்த சாரமற்ற upward mobility மூலம் சனாதனிகளின் / மனுநீதிப்படி மேல்தட்டில் இருப்பவர்களின் செல்வாக்கும் ஆதரவும் கூடிக்கொண்டே போகிறது.  தமிழகத்தில் RSS மற்றும் இந்துத்வா குரல்கள் சமீப காலங்களில் வலுத்துக்கொண்டு வருவதை மறுக்க முடியுமா? இப்படியானது நமது புதிய மனுதர்மர்களின் குழந்தைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ இடையூறாக முடியும்.  Equlaity - Equity இடையே வித்தியாசம் தெரியாத சில மேட்டுக்குடி குரல்கள் வலுவடைந்து கொண்டு வரும் இந்த வேளையில், நமது புதிய மனுதர்மர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நமது குழந்தைகளுக்கு பெரிய தடை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். 

இதில் பெண்கள் விஷயம் கவலையளிக்கக் கூடியது. முதன்முறையாக அரசுப் பணிக்கு வந்துள்ள ஆயிரமாயிரம் பெண்கள் சமூக அரசியல் பரிணாமம் பற்றிய தெளிவு ஏதுமின்றி உள்ளனர் என்று எளிதாகச் சொல்ல முடியும்.  விலக்குகள் இருக்கலாம். இருப்பின், அரிதானவையே.  புதிய கோவில்கள் - புதிய தெய்வங்கள் - புதிய தேவைகளுக்கு ஏற்ப போகவேண்டிய ஸ்தலங்கள் - செய்தாக வேண்டிய சடங்குகள் - இவைகளைப் பற்றிய போதனைகளை வழங்கும் பிரத்தியேகமான பத்திரிகைகள் - ஆகியன பற்றி நம்ப முடியாத அளவு தகவல் களஞ்சியமாக விளங்கும் இந்த  முதல் தலைமுறை அரசுப் பணி பெண்கள் தாங்கள் எங்கிருந்து வந்தோம், இங்கு வந்து சேர்ந்தது எப்படி, எந்த அரசியல் தத்துவத்தின் வெற்றியால் தங்களுக்கு அரசு அதிகாரத்தில் பங்கு கிடைத்திருக்கிறது, அப்படியான தத்துவத்தை உருவாக்கித் தந்தோர் யார், பூலே - அயோத்திதாசர் - ராமசாமி நாயக்கர் - அம்பேத்கர் - மண்டல் போன்றோருக்கும் தங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பது பற்றி எதுவுமே தெரியாமல் உலா வருவது காலக்கொடுமையன்றி வேறென்ன?

பல்லாயிரக்கணக்கான ஒளிவிளக்குகளோடு மின்னும் சென்னை சில்க்ஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லரி அருகில் சிதிலமடைந்த சிறு கட்டிடத்தில் பெரியார் படிப்பகம் இருக்கக் கூடும்.  இந்தக் கடைகளிலிருந்து பெரும் பைகளோடும், வாய் கொள்ளா சிரிப்போடும் வெளிவரும் அரசுப் பெண் பணியாளர்கள், அந்தப் படிப்பகத்தை கடைக்கண்ணிலாவது பார்த்து தங்கள் பாவத்தைத் தீர்க்கலாம்.