அஜிதனும் அரசுப்பள்ளியும், அரைகுறைப் பார்வையும்

| Wednesday, April 29, 2015
நேற்றைய தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் [27-05-2015] நடுப்பக்க கட்டுரையாக ஜெயமோகன் அவர்களின் "அஜிதனும் அரசுப்பள்ளியும்" வெளிவந்துள்ளது. தன்னுடைய மகன் அஜிதன் தனியார் பள்ளி வசம் இருந்தபொழுது அவனுக்கிருந்த மன அழுத்தங்களும், படிப்பு சம்பந்தமான சிரமங்களும் அரசுப் பள்ளி ஒன்றிற்கு மாற்றப்பட்டபோது தீர்ந்துபோனதாக எழுதியுள்ளார். படிப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
 
அரசுப் பள்ளிகளின் நிலை பற்றி கவலை கொண்டோருக்கு ஆதரவான குரலைக் கொண்டுள்ள இந்த கட்டுரை ஒரு பிரபலமான, அடிக்கடி சர்ச்சைகளுக்குள் மாட்டிக்கொள்ளும் எழுத்தாளரிடமிருந்து வந்திருப்பது நல்லதே. இருப்பினும், இந்தக் கட்டுரையின் உள்ளுறையாக அரசுப்பள்ளிகளின் தரம், அவை எந்த விதத்தில் தனியார் பள்ளிகளை விட உயர்ந்தது, சமூக நலனுக்கு தனியார் பள்ளிகளை விட அதிக பங்களிப்பை அரசுப் பள்ளிகள் செய்கின்றன / செய்ய முடியும் போன்ற கருத்துக்கள் கவனமாக விடப்பட்டுள்ளன. அஜிதன் என்ற தனி மாணவனுக்கு, அவனது உள நலனுக்கு தோதாக அவன் படித்து வந்த தனியார் பள்ளி இல்லை; மன உளைச்சல் தராத ஒரு அரசுப் பள்ளிக்கு அஜிதனை மாற்றினால் அவனது உளநலன் சீராகும்; மற்றபடிக்கு, அவனது கல்விச் செயற்பாடுகளை பொறுத்தவரை திருமதி/திரு ஜெயமோகன் ஆகிய பெற்றோர் பெரும் சான்றோர்களாதலால், பள்ளியைத் தாண்டிய ஆனால் பரீட்சைகளுக்கு வேண்டிய ஏட்டுக் கல்வியை தாங்களாகவோ அல்லது டியூஷன் மூலமாகவோ கொடுத்து விட முடியும் என்ற உண்மையை மறைத்து நிற்கிறது இந்தக் கட்டுரை.
 
மற்றபடிக்கு, அரசுப் பள்ளிகளில் மட்டுமே மற்றவர்களால் பாராட்டப்படக் கூடிய நண்பர்களும் நட்பும் கிடைப்பார்கள் என்பதான ஜெயமோகனின் கருத்துரைகள், அதிகபட்சமாக, தனிப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளனவே தவிர, போதுமான உண்மையாக ஆகா. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் உண்மையான நட்பே இருக்காது என்ற முடிவுக்கு எப்படி ஜெயமோகன் வந்துள்ளார் என்று தெரியவில்லை. அரசுப் பள்ளிகளும், பரீட்சைகளைப் பொறுத்தவரை, தனியார் பள்ளிகளைப் போலவே மாணவ மாணவியரை கொடுமைக்கு உள்ளாக்குவதுதான் நடைமுறை உண்மை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அமைப்பால் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். தேர்வு மதிப்பெண்களால் மட்டுமே ஒரு அரசுப் பள்ளி அமைப்பால் மதிப்பிடப் படுகிறது. அரசுப் பள்ளிகளில் டியூஷன் என்ற கொடுமைகள் பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில், சில இடங்களைப் பொறுத்த வரையில், தனியார் பள்ளிகளை விட தீவிரமாக இருக்கிறது.
 
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. குறிப்பாக, பத்தாவது - பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள் விளையாட்டு மைதானம் பக்கம் செல்லவே அனுமதிக்கப் படுவதில்லை. இருப்பினும் அரசுப் பள்ளிகளின் தரம், தேர்வு மதிப்பெண்கள் என்ற அடிப்படையிலும் கூட, தனியார் பள்ளிகளின் அருகாமையில் இல்லை. 1985-க்குப் பிறகு, இந்த மாநிலத்தில் பொருளாதார வசதி கொண்டோருக்கு தரமான தனியார் பள்ளிகள், அடிப்படை வசதியும் கூட இல்லாதோருக்கு அரசு / உதவி பெறும் பள்ளிகள் என்று நிறுவப்பட்டு விட்டது. தனியார் பள்ளிகளிலும் கூட, தங்கள் மகனுக்கோ மகளுக்கோ தேர்வு மதிப்பெண்கள் அதிகம் வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கென ஒரு வகையான தனியார் பள்ளிகளும், "தேர்வு மதிப்பெண்கள் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை; எங்களது தொழிற்சாலை / நிறுவனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யத் தேவையான தரமான ஆங்கில மொழிப் பயிற்சியை மையமாகக் கொண்ட பள்ளிகள் போதும்" என நினைக்கும் பெற்றோர்களுக்கென வேறு வகையான, மேட்டுக் குடியினருக்கான, பள்ளிகள் எண்ணிக்கையில் பெருகி விட்டன.
 
"அஜிதனும் அரசுப் பள்ளியும்" என்ற கட்டுரை நிறுவ முயல்வது போல, அரசுப் பள்ளிகள் மனித நேயத்தோடு நடந்து கொள்வதில்லை; நடந்து கொள்ள அமைப்பு அனுமதிப்பதில்லை. ஜெயமோஹனும், திருமதி அருண்மொழிநங்கை அவர்களும் பெற்றோர்களாக வாய்த்ததால் அஜிதன் தப்பித்தான். தி ஹிந்துவிற்கு ஒரு கட்டுரை ஆயிற்று. இதைத் தவிர, வேறு முக்கியம் எதுவுமில்லாத கட்டுரைதான் இது. ஆனால், வேறு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். எப்போதும் போலவே, ஜெயமோகனின் ஆளை மயக்கும் உரைநடை இதிலும் உண்டு.

எதிர்ப்பின் மொழி

|
நான் வாசிக்கத் தொடங்கியது, அந்தப் பழக்கம் தீவிரமாக வளர்ந்தது என்பதெற்கெல்லாம் காரணம், வீட்டில் எப்பொழுதும் இருந்து வந்த வாரப் பத்திரிகைகளும் மற்ற வகையான சஞ்சிகைகளும்தான்.   அம்புலி மாமா, பொம்மைவீடு, பூந்தளிர், குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் காணப்படும் வெகுஜன எழுத்துதான் எனக்கு அறிமுகமான, பாடப் புத்தகங்களைத் தவிர்த்ததான, முதல் படைப்பு மொழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  எப்பொழுதாவது கையில் கிடைக்கும் சிறு பத்திரிகைகளில் காணக் கிடைக்கும் மொழிநடை என்னுடைய புரிதலைத் தாண்டி நின்றவை.  அத்தகைய பத்திரிகைகளைப் படிப்போர் “பெரிய அண்ணன்களாகவும், அக்காள்களாகவும்” மனசில் விசுவரூபம் எடுத்து நின்றனர்.  ஆனால், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளோ, சிற்றிதழ்களில் காணப்படும் மொழிநடையை கிண்டலடித்துக் கொண்டே இருந்தன.  அரசு கேள்வி பதில்களில் கூட அடிக்கடி இத்தகைய எழுத்து முறைமை கேலி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.  அந்தக் கிண்டல்களும் கேலிகளும் என்னை சந்தோஷப்படுத்தவே செய்தன.  எனக்குப் புரியாததை குமுதமும் கிண்டலடித்ததால், குமுதம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.  எனது பதின்மத்தில், குமுதம் ஒரு பொழுதும் வாசிப்புச் சலிப்பை தந்ததில்லை. 
 
பிந்தைய வருடங்களில், பிரமை கலைந்து, “பெரிய விஷயங்களை” எல்லாம் படிக்க ஆரம்பித்த பிறகு, குமுதமும் விகடனும் எனக்கு தானாகவே தாங்க முடியாத சலிப்பைத் தந்ததுதான் ஆச்சர்யம்.  இரண்டொரு நாட்களுக்கு முன்பு கூட நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்:  “ஏன் எல்லாக் கட்டுரைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன குமுதத்திலும் விகடனிலும்?”  மூன்றாந்தர  சினிமா நடிகர்களைக் கூட மகாத்மா போல மிகைச் சித்தரிப்பு செய்து வெளியிடப்படும் கட்டுரைகளும் பேட்டிகளும் ஆபாசம் நிறைந்தவை.  பழைய குமுதம் இதழ்களை (எழுபதுகளில் வந்தவை) கண்ணுற நேர்கிற போதெல்லாம், அப்பொழுது அந்தப் பத்திரிகைகளில் வாசிப்பதற்கு சுமாரான மொழி நடையாவது இருந்தது தெரிகிறது.  பொது வெளியில் தமிழ் எழுத்தின் தரம் சமீபத்தில் மிகவும் கீழிறங்கிப் போய் விட்டதாக மிகைப் படுத்தப்படாத செய்தி ஒன்று உலவி வருவது கவனத்தில் கொள்ளத் தக்கது. 
 
நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  என்ன விடயங்கள் சொல்லப்படுகிறது என்பதைக் காட்டிலும், எப்படி அது சொல்லப்பட்டுள்ளது என்பதிலேயே கவனத்தைக் குவித்து வருபவன் நான்.  ஒரு மனிதனின் மொழியானது (idiolect) அவனுடைய கைரேகையைப் போன்றே தனியான விஷேஷங்கள் கொண்டது.  அது அவனுடைய மொத்த ஆளுமையைப் பிரதிபலிக்கிறது.  பிரமிள் அவர்களின் படைப்பு மொழி ரமணி சந்திரன் அவர்களின் படைப்பு மொழியை விட ஏன் கடினமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள, அந்த ஆளுமைகள் நுழைந்து வந்த உலகங்களுக்குள்ளும் அனுபவங்களுக்குள்ளும் ஒருவன் சென்றாக வேண்டும்.  எளிமையான நடை என்பதற்காக ஒரு எழுத்தாளனை எத்தனம் செய்ய வேண்டியதில்லை.  அவனுடைய படைப்பு மொழி அவனுடைய இயல்பாய் இருந்தால் போதுமானது.  அதற்கென ஒரு மெருகு கூடி வந்துவிடும். 
 
ஷங்கர் ராமசுப்ரமண்யன் எழுதியுள்ள “கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்” என்ற நூலைப் படித்ததின் தொடர்பாகவே மேற்கண்டவையை சொல்ல வேண்டி வந்தது.  பொதுவாக, நான் இதுவரை கேள்விப்படாத எழுத்தாளர்களின் நூற்களைப் படிக்க பெரிதும் தயக்கம் காட்டுவேன்.  தொடர்ந்து வருடக்கணக்காக நூற்களை வாசித்து வருவதால், மனதுக்கு ஒவ்வாத அல்லது எனது வாசிப்புத் தரத்திற்குள்  வராத நூற்களைப் படித்தது கால விரயம் செய்ய வேண்டாம் என்பதால், நான் பிரமித்து படிக்கும் நூற்களின் ஊடே சுட்டப்பட்டிருக்கும் புத்தகங்கள், அந்தப் புத்தகங்களின் பிற்சேர்க்கைப் பட்டியல்கள், மற்றும் சமூகப் பொது மனதில் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் அண்மைக்கால இலக்கியப் பிரதிகள், தேர்ந்த வாசகர் என்று என்னால் உணரப்படும் அன்பர்கள் பரிந்துரைப்பவை என்பவையை ஒட்டியே என்னுடைய வாசிப்பு இருக்கும்.  புதிதாக ஒரு எழுத்தாளர், அதுவும் அவரின் பெயரையே முன்னால் அறிந்திராத நிலையில், எனது வாசிப்பிற்குள் நேரமும் கவனமும் பெறுவது அரிதான நிகழ்வே.  ஆனால் எப்படியோ ஷங்கர் ராமசுப்ரமண்யன் உள்ளே நுழைந்தார்.  1975ல் பிறந்தவர் என்று அறிய முடிகிறது.  சுந்தர ராமசாமி அவர்களின் வழிகாட்டல் இவருக்கு பதின்மம் முடிந்த நிலையிலேயே கிடைக்கப் பெற்றது பெரும் பேரு. சிக்கல் நிறைந்த குழந்தைமை, பெற்றோரிடையே தீவிரமாகி வந்த பிணக்கு, சிறு நகர வசிப்பு என்ற பல எழுத்துக்கு உகந்த பின்னணிகள் இவரிடம் உள்ளன.  சிறு இதழ்களில் ஆரம்பித்து இன்று ‘தி சண்டே இண்டியன்’ என்ற வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார் என்பதையும் கட்டுரைகளின் ஊடே அறிய முடிகிறது. 

பல்வேறு தருணங்களில் இவர் எழுதி இதழ்களில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது.  சமூகத்தின் பல கூறுகளை சாடும் ஒரு கோபம் கொண்ட இளைஞனாக இந்தக் கட்டுரைகளில் இவரை நாம் பார்க்கிறோம். அதிகாரம் – எதிர்ப்பு இரண்டுமே அதிகாரத்தின், ஒன்றுக்கொன்று இசைமை கொண்ட, பக்கங்கள்தான்.  இந்த இருமைகளைத் தவிர்த்த, மானிட வாழ்வின் அபத்தங்களை தன்னுடைய தனிமை / தோல்வி இவற்றினூடே புரிந்து கொண்டு, இறப்பின் மர்மம் அவிழ்ந்து போன ஞான தரிசனத்தில், ஈசி சேரில் அசைவற்று அமர்ந்திருக்கக் கோருகிறது இவரது எழுத்து.  இவரது படைப்பு சாராம்சம், இந்த நூலைப் பொறுத்த மட்டிலாவது, இதுதான்.  இவர் கொண்டாடும் படைப்பாளிகளும் ஏறக்குறைய இதே மானுட சாரத்தைப் பிழிந்தவர்கள்தாம். நகுலனை இவருக்கு வேறு எந்த எழுத்தாளரையும் விட அதிகம் பிடித்திருக்கிறது.  விக்கிரமாதித்யன், சுந்தர ராமசாமி, தேவதேவன், ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், திலிப்குமார் போன்றோர் இவரைப் பாதித்த விதம் பற்றி, அவர்களைப் பற்றியதான இவரின் கட்டுரைகளின் மூலமாக ஒருவாறு அனுமானிக்க முடிகிறது. 
 
அசோகமித்திரனுடையதைப்  போன்ற ஒரு தட்டையான, உணர்ச்சியற்றதே போல பாவனை கொண்ட படைப்பு மொழியை சிலாகிக்கும் இவரது படைப்பு மொழி வேகமும் கொந்தளிப்பும் கொண்டது.  இவரது மன உளைச்சல்களின் வேகம் எழுத்தின் வழியே திராவகமாய் இறங்கி வருகிறது.  சில சமயங்களில், இப்படி எழுதுவதை தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணவைக்கும் வகையிலும் கூட, காயப்படுத்தும் நோக்கோடு, வெளிவரும் இவரது எழுத்து, குறிப்பிட்ட சிலரை மேலதிகமான தீவிரத்தோடு தாக்குகிறது.  குறிப்பாக, ஜெயமோகன்.  “இணையம், சிற்றிதழ், வெகுஜன இதழ் முதல் அதிகாலை வீட்டுக்கு வரும் பால் பாக்கெட் எழுத்துக்கள் வரை செய்தியின் நவ துவாரங்களிலிருந்தும் ஜெயமோகனின் பீறிடல் தமிழர் இன்று அடைந்திருக்கும் பாக்கியம் என்றே குறிப்பிட வேண்டும்.”  இவரது சினம் இன்னும் அடங்கிய பாடில்லை.  “....அவருக்கு கல் தடுக்குவது, அவரது மகன் பத்தாவது வகுப்பில் பாஸ் ஆவது எல்லாமே அவருக்கு ஆன்மிக தரிசனம்தான்.  ஏனெனில், இதுவரை இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்கும் கல்  தடுக்கவில்லை, யாரும் பத்தாம் வகுப்பு பாசாகவும் இல்லை.”

Magical Realism எனப்படும் மிகை யதார்த்த புனைவு குறித்து நம்பிக்கையான பல செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் ஷங்கர் ராமசுப்ரமண்யன், மிகை யதார்த்தத்திடம் இருந்துதான்  தன்னுடைய படைப்பு மொழியை தெரிந்தெடுத்துள்ளார் என்பதை நம்ப போதுமான அடையாளங்களை வாசகனுக்கு இக்கட்டுரைகள் வழங்குகின்றன. அண்மையில் படித்த புத்தகங்களில், சிறப்பானது என்று இதைச் சுட்ட முடியாது.  ஆனால், மிக இளைய எழுத்தாளர் என்ற புரிதலுடன் இவரையும் இக்கட்டுரைகளையும் அணுகும் வாசகரால், வரும் வருடங்களில் முக்கியமான படைப்புகள் இவரிடமிருந்து வெளிவரலாம் என்ற நம்பிக்கையை தன்னுள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.  அந்த அளவு சொல்ல வேண்டிய புத்தகம் இது.

[“கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்”, ஷங்கர் ராமசுப்ரமண்யன், 
 
நற்றிணைப் பதிப்பகம், சென்னை, உரூபா 110/-]

அம்மணமும் கோவணமும்

| Tuesday, April 28, 2015
THE IMITATION GAME
மூன்று பேர்களை உளவு பார்க்க அனுப்பி, ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல், அந்த மூவரும் ஒரே மாதிரியான உளவுச் செய்தியை சொல்வார்கள் என்றால், அந்த உளவு உண்மை என்று அறிக என வள்ளுவம் சொல்கிறது.  அரசர்களுக்குள் அரசுகளுக்கும் உளவு உணவு போன்ற ஒரு ஜீவனான அம்சம்.  போர்கள் ஆயதங்களால் வெல்லப்படுவது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அவைகள் உளவால் வெல்லப்படுவதும். உளவாளிகள் பற்றிய பிம்பம் குழந்தைகள் இளைஞர்கள் உலகத்தில் மிகவும் பிரசித்தம்.  இரும்புக் கை மாயாவி முதல் ஜேம்ஸ் பாண்ட் ஈறாக, கதைகளும் திரைப்படங்களும் நம்முள் நிறுத்தும் உளவாளிகள் பல ரகம்.  பல பெண் தோழிகளுடன் உல்லாச வாழ்க்கையில் பெரு விருப்பம் கொண்ட ஜேம்ஸ் பாண்ட், தனது உளவுக் கடமைகளை ஒரு வித அனாயசத்துடன் செய்து முடித்து விட்டு, மிச்சமிருக்கும் வேலைக்காக காதலியிரிடம் காணாமல் போவார்.  பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர் தற்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார் என்று யோசித்து, கலங்கிப் போவார்கள்.
 
THE IMITATION GAME என்றொரு திரைப்படம் 2014-ல் வெளிவந்தது.  அந்த வருடத்தின் மிக முக்கியமான படம் இது என்பதில் சந்தேகமே இல்லை.  இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப வருடங்களில் நேச நாடுகள் அடைந்த படுதோல்விகள் பலவற்றுக்குப் பின்னால் அவர்களின் உளவுத் தோல்விகள் உள்ளன.  நாஜிப் படையினர் தினந்தோறும் மில்லியன் கணக்கான ரகசிய சங்கேதங்களை தமது Enigma என்ற இயந்திரத்தின் மூலம் தங்களுக்கிடையில் அனுப்பிக் கொண்டிருக்க, அந்த சங்கேத குறியீடுகளை இடைமறிக்க நேச நாடுகளால் முடிந்தாலும், அவற்றை செய்திகளாக தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.  ஒருவேளை அந்த சங்கேதக் குறியீடுகளின் மர்மத்தை உடைக்க முடிந்தால், யுத்தமே சில வருடங்கள் முன்னமேயே முடிந்துவிடக் கூடிய வாய்ப்பும் உண்டு. 
 
இது குறித்து பெரும் கவலை கொண்ட பிரிட்டன் அரசாங்கம் நாஜிப் படையினரின் Enigma இயந்திரம் அனுப்பும் ரகசிய சங்கேதங்களை உடைத்தெறிய ஒரு வல்லுநர் அணியை உருவாக்குகிறது.  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்து பேராசிரியரான ஆலன் டுரிங் [Alan Turing] அந்த அணிக்கு வந்து சேருகின்றார்.  அதி பெரும் புத்தி ஜீவிக்கு உரிய அனைத்து வினோதமான குணங்களும் ஆலன் டுரிங்கிற்கு உண்டு.  இந்த திரைப்படம் கால ஓட்டத்தில் மூன்றாகப் பிரிந்து அவை ஒன்றுக்கொன்று முன்னும் பின்னும் நகர்ந்தபடி உள்ளன.  முதல் கட்டத்தில் ஆலன் டுரிங் பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருக்கும் ஒரு உளவுக் குறியீடு உடைப்புக் குழுவின் தலைவர்.  ஒரு மேதைக்கே உரிய அத்தனை அடாவடிக் குணங்களும் ஆலன் டுரிங்கிடம் நிரம்பவே குவிந்துள்ளன.  சமூகத்தோடு ஒவ்வாமை, ஒரு அணியின் இணக்கமான உறுப்பினராக இருக்க முடியாமை, மற்றவர்களின் மனம் புண்படும் படியாகவே எப்பொழுதும் நடந்து கொள்வது, தன்னுடைய பனியின் தன்மையை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமை, அந்தக் கால சமூகத்தின் விழுமியங்களுக்கு புறம்பான சில மர்மமான நடத்தைகள் மற்றும் தனிமை விரும்பி என்ற குணங்கள் ஆலன் டுரிங்கிற்கு உடையவை.  இந்தக் காரணங்கள் அணியின் மற்ற உறுப்பினர்களுக்கும், பிரிட்டிஷ் ராணுவத் தலைமைக்குமே கூட பெரிய தலைவலியாக நீடிக்கிறது. 
 
இப்படத்தின் இன்னொரு காலகட்டத்தில், அதாவது 1928ம் ஆண்டு வாக்கில், ஆலன் டுரிங் ஒரு பள்ளி மாணவனாக காண்பிக்கப் படுகிறார்.  அந்து மற்றவர்களிடம் இருந்து தனியான தன்மைகளோடு காணப்படுவதால் மட்டுமே அவர்களால் தொந்தரவுக்கு உள்ளாகிறான்.  பள்ளியில் அவனுக்கிருந்த ஒரே நண்பன் கிறிஸ்டோபர் மார்க்கம் [Christopher Morcom].  பிந்தைய ஒரு வருடத்தில் நாஜிப் படையினரின் ரகசிய சமிக்ஞைகளை அனுப்பும் Enigma என்ற இயந்திரத்திற்கு நேச நாடுகளின் பதிலாக தான் உருவாக்கும் இயந்திரத்திற்கு தன்னுடைய நண்பனின் பெயரையே சூட்டுகிறான். 
 
இப்படத்தில் வரும் மூன்றாவது காலப்பிரிவு 1951 வாக்கில் நடப்பதாக அமைந்துள்ளது.  மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஆலன் டுரிங்கின் வீடு உடைக்கப்பட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் காவல் துறையிடம் புகார் கொடுக்க, விசாரிக்க வரும் காவல் துறையினரிடம், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுக்கிறான் ஆலன் டுரிங். இந்தப் பதிலின் மர்மத்தால் உந்தப்படும் காவல் துறை புலனாய்வாளர் ராபர்ட் நாக் [Robert Nock] ஆலன் டுரிங்கைப் பற்றிய விடயங்களை கிளற ஆரம்பிக்கிறார்.  இருபதாயிரத்திற்கும் மேலான நபர்களை சிறையில் தள்ளிய பிரிட்டன் ஓரினச் சேர்க்கையாளர் தடுப்பு சட்டம் ஆலன் டுரிங்கையும் சிறையில் தள்ளுகிறது.  சிறையிலிருந்து வெளியே வரும் ஆலன் டுரிங் தனது நாற்பத்தோராவது வயதில் தற்கொலை செய்து கொள்ளுகிறான். 
 
இதில், இரண்டாவது காலகட்டம் மிகுந்த விசேஷங்கள் கொண்டது.  தனது குழுவினருடன் இரவு பகலாக கிறிஸ்டோபர் என்ற இயந்திரத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடுகிறான் ஆலன் டுரிங்.  ஒரு இயந்திரத்தின் ரகசியங்களை இன்னொரு இயந்திரத்தாலேயே அறிய முடியும் என்று நம்பும் ஆலன் டுரிங், தன் மீது அவநம்பிக்கை கொள்ளும் உயரதிகாரி, மற்றும் சக குழு உறுப்பினர்கள் இவர்களுடன் போராடிக் கொண்டே தன்னுடைய இயந்திரத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறான்.  இந்த அணியின் புதிய உறுப்பினராக சேரும் இளம் பெண்ணான ஜோன் கிளார்க் [Joan Clarke] குழுவிற்கு சிறப்பான ஒரு புதிய வரவு மட்டுமன்றி, குழுச் சூழலில் மற்றவர்களிடம் எப்படி இணக்கமாக நடந்து கொண்டு அவர்களின் பங்களிப்பை பெரிய அளவிலே பெற முடியும் என்பதை ஆலன் டுரிங்கிற்கு கற்றும் தருகிறாள்.  ஆலன் டுரிங்கின் மேதமையின் மீது ஜோன் கொள்ளும் வியப்பு அவன் மீது காதலாக மாறுகிறது.  ஒரு மேதையின் அத்தனை தடுமாற்றங்களோடு அவளைத் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவிக்கும் ஆலன் டுரிங் தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பது அவளுக்கு தெரிய நேரிடின், தான் அடையப் போகும் அவமானம் பற்றி பெரும் தடுமாற்றம் அடைகிறான்.  சம்பவங்கள் கட்டாயப்படுத்தும் ஒரு நேரத்தில், அவளிடம் இதை வெளிப்படையாக சொல்லவும் செய்கிறான்.  இதைக் கேட்டு சற்றும் வியப்படையாத ஜோன், நீ ஓரின சேர்க்கையாளன் என்பது நமது காதலுக்கோ திருமணத்திற்கோ எந்த தடையையும் ஏற்படுத்தி விடவில்லை என்று சொல்கிறாள்.  கற்றோரை கற்றோரே காமுறுவர் என்ற பின்னணியில் ஜோன் கிளார்க்கை நாம் புரிந்து கொள்ள முடியும்.  அவளின் தீவிரத்தால் உணர்வு ரீதியாக மூர்ச்சையடைவதே போன்ற நிலைக்கு ஆளாகும் ஆலன் டுரிங், ஜோன் கிளார்க்கின் காதலை தாட்சண்யம் இல்லாமல் தவிர்க்கிறான்.
   
ஒரு கட்டத்தில் இவர்கள் கட்டமைத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்டோபர் என்ற இயந்திரம், குறுக்கெழுத்துப் போட்டி தொடர்பான சம்பாஷனை ஒன்றின் மூலமாக வெற்றிகரமாக தனது செயற்பாட்டினைத் தொடங்குகிறது.  [இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றியமைத்த ஒரு மாபெரும் தருணம் அது என்று இன்றைய ராணுவ அரசியலின் மேதைகள் அனைவரும் ஒருசேரக் கொண்டாடுகிறார்கள்.]   போரின் முடிவில், இந்தக் குழுவின் ராணுவத் தலைமை அவர்களிடமிருக்கும் அத்தனை ஆவணங்களையும் அழித்து விடச் சொல்வதோடு மட்டுமல்லாமல் போரின் முடிவில் அந்த அணியைக் கலைத்து, உறுப்பினர்கள் எவரும் சாகும் வரை அடுத்தவரை சந்திக்கவே கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் வேறு வேறு பூகோள புள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறது. 
 
ஆலன் டுரிங், கைது செய்யப் படுவதற்கு முன், மனநிலை பிறழப் போகும் விளிம்பில் தான் இருப்பதை உணர்கிறான்.  கிறிஸ்டோபரை வளர்த்தெடுப்பது மட்டுமே அவனது ஒரே குறிக்கோள்.  [இன்றைய கம்ப்யூட்டரின் ஆதிகர்த்தா, ஆலன் டுரிங்கின் கிறிஸ்டோபர் என்பது கூடுதல் தகவல்.]  ஓரினச் சேர்க்கை என்ற “நடத்தைப் பிறழ்வை” சரிக் கட்டுவதற்காக மருத்துவர்களால் கட்டாயமாக அவனுள் செலுத்தப்படும் ரசாயனங்கள் அவனுடைய உடலையும் உறுதியையும் உடைத்து நொறுக்குகின்றன. ஒரு தனியனாக மாறி, சமூகத்தில் வேறு எவரோடும் உறவுகொள்ள முடியாத மனப்பிறழ்வில் தவிக்கும் ஆலன் டுரிங்கை சந்திக்க வருகிறாள் ஜோன்.  அவளுடைய கல்யாண விரலில் புதிய மோதிரத்தை காணும் ஆலன் டுரிங், தன்னுடைய மகிழ்ச்சியை அவள் மட்டுமே கண்டறியும் வகையில் மிக மெல்லிய முறுவல் ஒன்றின் மூலம் தெரிவிக்கிறான்.  யாருமே காப்பாற்ற முடியாத விளிம்பு ஒன்றில் அதி பயங்கரமாக ஊசலாடும் ஆலன் டுரிங்கை கண்ணுறும் ஜோன், கண்ணீரோடு விடைபெறுகிறாள்.

இந்த மொத்தக் கதையும் புலனாய்வாளர் ராபர்ட் நாக் அவர்களிடம் ஆலன் டுரிங், சிறையில் வைத்து சொல்வதாக அமைந்துள்ளது.  இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உலகப் புகழ் பெற்ற கணிதவியல் பேராசியருக்கு, அவரின் உதவியால் மட்டுமே வெற்றி கண்ட தேசம் வழங்கிய பரிசு, ‘ஓரினச் சேர்க்கையாளர்’ என்ற ஒரே காரணத்திற்காக, சிறை தண்டனைதான்.  நன்றி கெட்ட சமூகத்தில்தான் ஒருவன் வாழ வேண்டி இருக்கிறது என்பதையும், உலகத்தோடு ஓட்ட ஒழுகா விட்டால் மேதைகளுக்கும் வாழ்க்கை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் என்பதையும் நமக்குச் சொல்லுகின்ற இந்தப் படம், அதே சமயத்தில் இத்தகைய அருவருப்புத் தரும் சமூக கட்டுப்பாடுகளை மேதைகள் உடைத்த வண்ணமே உலகத்தை உய்விக்கச் செய்து கொண்டிருப்பார்கள் என்ற உண்மையையும் உணர்த்துகிறது.  இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் வேளையில், இன்று தினசரிகளில் ஜப்பானின் பிரபல நடிகை ஒருவர் தனது தோழியை திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஒன்றையும், அதை அந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரித்துள்ள செய்தியையும் கண்ணுற நேர்கிறது.  மானுட வாழ்வின் அந்தரங்கமான பிரதேசங்களில் அரசு அத்துமீறி நுழையும் பொழுது, சாதாரணர்கள் மட்டுமல்ல மேதைகளும் கூட தற்கொலையிடம்தான் தங்களின் விடுதலையைத் தேட வேண்டி இருக்கிறது என்பது எத்துணை கொடுமையானது!  இந்தப் படத்தை பார்க்காமலிருப்பது, அப்படி ஒரு தேர்வை செயற்படுத்துபவரின் ஈடுகட்டவே முடியாத நட்டமாகும். 
 
ஆலன் டுரிங்காக Benedict Cumberbatch, ஜோன் கிளார்க்காக Keira Knightley நடித்திருக்கிறார்கள்.  இயல்பான நடிப்பு என்றால் என்ன என்பது பற்றி இவர்களிடம் உலக நாயகர்களும் உள்ளூர் நாயகர்களும் தெரிந்து கொள்ளலாம்.  திரைப்படம் ஒன்று சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப முடியுமா என்ற கேள்விக்கு பதில் இந்தப் படம்.