"ங்கோத்தா"

| Wednesday, January 7, 2015

இது நாகரீகமான உலகம். மற்றவர்கள் நம்மிடம் நாகரீகமாக நடந்து கொள்ள எதிர்பார்க்கிறோம். குறைந்தது அவர்கள் நாகரீகமாக பேச வேண்டும். 'அவர் நாகரீகம் தெரியாதவர். எல்லோரும் இருக்கும்போதே அவர் பயன்படுத்துகிற வார்த்தைகளைக் கவனித்தீர்களா?' என்று நம்மில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குறை கூறுவதை நாம் அனைவருமே சில சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம் அல்லவா? எனக்கு எப்பொழுதுமே இது காண் விடயத்தில் ஒரு குழப்பம். நாகரீகமான வார்த்தைகள் - அவையத்து மொழி - என்றால் எவை? அவைகள் எப்படி யாரால் தீர்மானிக்கப்படுகின்றன? நாகரீகமான வார்த்தைகள் என்றால் படித்தவர்கள் பேசும் மொழியா? நகரம் சார் மக்களின் மொழியா? அல்லது நகரம் சார் படித்த மக்களின் மொழியா? வர்க்கம் வழியாகப் பார்க்கும் பொழுது, மேல்தட்டு மக்களின் மொழியா? கெட்ட வார்த்தைகள் என்பது பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்படாத வார்த்தைகளின் தொகுப்பு என்று கொள்ளலாமா? அப்படியானால், நல்ல வார்த்தைகள் எல்லாம் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு விட்டனவா?

கெட்ட வார்த்தைகள் என்று கருதப்படும் வார்த்தைகள் எல்லாம் என்ன பாவம் செய்தன? ஏன் அவற்றை பயன்படுத்தவே கூடாது என்று கட்டுப்படுத்தப் படுகிறோம்? கெட்ட வார்த்தைகள் சகஜமாக புழங்கும் பல வீடுகளில் நல்ல மனிதர்கள் நல்ல குடும்பமாகவே நீடிக்கிறார்களே? இந்த வார்த்தைகளின் மீது யார் தனது அதிகாரத்தை பிரயோகித்து பயன்பாட்டில் இருந்து தடுப்பது? இந்த வார்த்தைகளை 'நாகரீகச் சட்டங்கள்' போட்டு பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையில் இருந்து எடுத்து விட்டால், மொழியின் வளமை குறையாதா?


என்னுடைய இளம் பிராயத்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன். அப்பா - அம்மா இரண்டு பேரும் பள்ளிக்கூட ஆசிரியர்கள். இருவரின் தந்தையரும் அரசுப் பணியில் இருந்தவர்கள். நான் மூன்றாவது தலைமுறையாக பள்ளிக்கூடம் போனவன். வாத்தியார் வீட்டில் கெட்ட வார்த்தை என்பது கனவில்கூட பேச முடியாதது. பள்ளியிலும் தெருவிலும் சிநேகப் பசங்கள் வாய் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசித் திரிவதை பார்க்கும் பொழுது மனசு ஆசையில் துள்ளும். அதையெல்லாம் வாயொழுக பேசி சிநேகம் பாராட்ட மனசு படபடக்கும். யாராவது நான் கெட்ட வார்த்தை பேசுவதை கவனித்து பெற்றோரிடம் சொல்லிவிட்டால் தீர்ந்தது! வாத்தியார் வீட்டு பெருமையெல்லாம் போயே போய்விடும் என்பதால், கெட்ட வார்த்தை பிரயோகம் தூக்கு தண்டனைக்கான குற்றம். எனது பதின்மம் முழுவதுமே கெட்ட வார்த்தைகள் பேச விரும்பி, ஆனால் திருட்டுத் தனமாகவே பயந்து பயந்து பேசி வந்திருக்கிறேன்.

"There is nothing good or bad in this world; Our thinking maketh it so" என்று ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கிறார். கெட்டதும் நல்லதும் வார்த்தையிலா இருக்கிறது? இருப்பது புத்தியில்தான். கெட்ட வார்த்தைகளைப் பேணிப் பாதுகாக்கா விடின், அவை அழிந்து போகும் ஆபத்திலல்லவா உள்ளது! வார்த்தைகளை கெட்ட வார்த்தை என்றும் நல்ல வார்த்தை என்றும் 'பிராண்ட்' செய்வது எதனால்? ஆண் - பெண் குறிகள், பாலுறவு குறித்த வார்த்தைகளும், தகாத பாலுறவு குறித்த வார்த்தைகளும்தான் கெட்ட வார்த்தைகள் என்று நாகரீக சமூகத்தால் வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் இவை தவிர எவ்வளவு சுகமான 'கெட்ட வார்த்தைகள்' இருக்கின்றன!

நான் எப்பொழுதுமே மாணவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதை கண்டும் காணாமலேயே இருக்கிறேன். எனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை கிராமப்புறங்களிலேயே கழித்து வருகிறேன் என்பதால், 'கெட்ட வார்த்தைகள்' பேசி தங்களின் நட்பை பாராட்டித் திரியும் மாணவச் செல்வங்களின் மொழிச்சேவை 'நல்ல வார்த்தைகளால் கூட' விவரிக்க முடியாதது. அவர்கள்தான் தமிழின் மறக்கப்படும் ஒரு பெரும் வார்த்தைத் தொகுதியை தங்களது பயன்பாட்டால் பேணி வருகின்றனர். விளையாட்டுத் திடலின் வழியே நடக்கும்போது, மதிய உணவை சாப்பிட அமர்ந்திருக்கும் பெண் பிள்ளைகள் தமக்குள் 'கெட்ட வார்த்தைகள்' பேசிச் சிரிப்பதை கேட்டுக் கொண்டே நகரும் போதெல்லாம், இன்றைய ஆண் நீதி சமூகத்தில் இந்தப் பெண்டுகள்தான் அவர்களின் உலகத்தில் உண்மையான 'பெண்ணீய வாதிகள்' என்று தோன்றும்.

"எவ்வளவு கெட்ட வார்த்தைகளை ஒருவனால் பயன்படுத்தத் தெரிகிறதோ அவ்வளவு மொழி வல்லமை உள்ளவனாக அவன் ஆகிறான்" என்று எனது மொழியியல் பேராசிரியர் கூறுவதுண்டு. 'இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - மைசூர்" சென்றிருந்தபோது, வசவு வார்த்தைகளை பற்றிய டாக்டர் பட்ட ஆய்வேடு ஒன்றைக் காண நேர்ந்தது. ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. "கெட்ட வார்த்தைகளுக்கு" ஒரு கவுரதை கிடைக்காதா என்று வருடக்கணக்கில் ஏங்கியிருந்த எனக்கு, இந்த டாக்டர் பட்ட ஆய்வேடு கொடுத்த சந்தோஷத்தை நல்ல வார்த்தையாலோ, ஏன் கெட்ட வார்த்தையாலோ கூட முழுவதும் சொல்லி முடியாது. ஆங்கில ஆசிரியர் பயிற்றரங்கங்களில் எல்லாம் நான் இருபது வருடமாக கூவித் திரிகிறேன் கெட்ட வார்த்தைகளின் அருமை பெருமைகளை. 'வாத்தியார்களிடம்' கெட்ட வார்த்தைகள் பட்டியல் ஒன்றை எழுத சொல்லியிருக்கிறேன், அவர்களுக்கு எத்தனை வார்த்தைகள்தான் தெரியும் என்பதை தெரிந்து கொள்ள. ஒருத்தருக்கும் 'பத்து' வார்த்தைகளுக்கு மேல் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு "நல்ல வார்த்தைகளால் ஆன" இங்கிலீஷும் தெரிந்திருக்கவில்லை. இரண்டுக்கும் சம்பந்தம் உண்டு. அற்புதமாக இங்கிலீஷில் சம்பாஷித்துத் திரிந்த ஒரு வாண்டுப் பையனை கல்யாணமொன்றில் பார்த்தபொழுது பேசிக் கொண்டிருந்தேன். நைசாக அவனிடம் இரண்டொரு கெட்ட வார்த்தைகள் பேசி எரிச்சலூட்டிய பொது, கெட்ட வார்த்தை மழையாக அரைமணிக்கும் குறையாமல் என் மேல் பொழிந்தான். காதில் தேனாக பாய்ந்தது. பெங்களூருவில் நான்காவது படித்துக் கொண்டிருக்கிறான். அடுத்த ஆசிரியர் பயிற்றரங்கங்கத்தில் அவனை "முதன்மை கருத்தாளராக" அழைத்துவர உத்தேசம்.

கெட்ட வார்த்தைகளுக்கென்று ஆங்கிலத்தில் பல தரமான reference volumes வெளிவந்திருக்கின்றன. Hutchinson, Faber & Faber, Routledge, Cambridge, Oxford போன்ற பெயர்போன பதிப்பகங்கள் தரமான கெட்ட வார்த்தை அகராதிகளை வெளியிட்டுள்ளன. இங்கே பக்கத்தில் டில்லியில் Goyal Saab வெளியிட்ட Walter Thomson-னின் Dictionary of Slang நல்ல பதிப்பு. விலையும் 150-க்கும் குறைவு. எல்லா இடத்திலும் கிடைக்கிறது. இதையாவது "டவுசருக்குள் சொக்காயை விட்டு பெல்ட்டைப் போட்டுக் கட்டிக்கொண்டு ரொம்ப பவுசா" வரும் வாத்திங்க வாங்கினால் தேவலை. எனக்கென்னவோ இதைப்படித்து விட்டு அவர்கள் "ங்கோத்தா" என்று ஆரம்பித்து என்னைத் திட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். ஒருவேளை, அப்படித் திட்டினால் அது என் செவிகளில் 'தேனாகத்தான்' பாயும்.

இதையெல்லாம் பெருமாள் முருகன் அவர்களின் நூலான "கெட்ட வார்த்தை பேசுவோம்" என்ற நூலுக்கு மதிப்புரை ஒன்றை கிருஷ்ண பிரபு எழுதியதைப் படித்ததின் தொடர்ச்சியாக சொல்ல நேர்ந்தது. "வார்த்தைகள் ஒவ்வொன்றும் மொழிக்கு வளமை சேர்க்கின்றன. உண்மையில் கெட்ட வார்த்தைகள் என்று எதுவுமே இல்லை. இவையெல்லாம் சமூகத்தின் கற்பிதங்கள் மட்டுமே" என்று பிரகடனம் செய்யும் பெருமாள் முருகன் அவர்களின் நூலை முழுவதுமாக படிக்க 'ஆவலாதி' கொப்புளிக்கிறது. சென்னப் பட்டணத்தில் இந்த வாரம் தொடங்கும் 'புஸ்தகக் கங்காட்சியில்' கிடைக்குமா? காலச்சுவடு இதை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது என்று தெரிகிறது. மதிப்பிட்டாளர் கிருஷ்ண பிரபு மேலும் சொல்கிறார்: "பெருமாள்முருகனின் “கெட்ட வார்த்தை பேசுவோம்” – அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு. தமிழிலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி தீனி போடக்கூடிய சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு இது. சாப்ஃட்வேர் என்ஜினியர்கள் கூடப் படிக்கலாம். “மாமரம்” சிறுகதையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தந்தையைப் போன்று ஒற்றைத் தளத்தில் சிந்திக்கும் மேல்தட்டு மனோபாவம் கொண்டவர்கள் முக்கியமாகப் படிக்க வேண்டும். ஒருவகையில் இவையாவும் வரலாற்று ஆவணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எளிய மக்களின் மொழியானது தேவையில்லாத சினிமாக் காட்சிகளைப் போலத் துண்டித்து எறிய வேண்டிய ஒன்றல்ல. இந்த வட்டார மொழி ஒருசார் மக்களின் வாழ்வியல் கூறு. அதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஏனெனில், படைப்புகள் யாவும் காலத்தின் கண்ணாடி. ரசம் உதிராக் கண்ணாடிகள் எல்லாவற்றையும் பிரதிபலிக்க வேண்டும். உலக இலக்கியங்கள் யாவும் அதைத் தான் பிரதிபலிகின்றன."

என்னோட பள்ளிக்கூடம் படிச்ச நண்பங்க எல்லார் கிட்டயும் கத்த வேண்டும் போல ஆவலாதி மிகுகிறது. "டே மசிரு, வாங்கடா! ஒண்ணுக்கடுச்சுக்கிட்டே கெட்ட வார்த்தை பேசலாம். நாகரீகமாவது மயிராவது!"

0 comments:

Post a Comment