‘அழகி’

| Sunday, January 11, 2015

பால்யத்தின் கரையில் கனவுகளோடு
எல்லாச் சுகங்களிலும் பெரியது எங்கோ இருந்துகொண்டு நமது ஊரைப் பற்றி நினைத்து அசைபோடுவதுதான் என்று தோன்றுகிறது.  நமது ஊரின் பெருமையே வெளியே இருந்தால்தான் தெரியும் போல.  அப்பா, அம்மா, தம்பி - தங்கைகள், அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாய் முடிந்து வைத்து கையோடு கையாக பணத்தை தந்த ஆச்சி, ஊரிலுள்ள இன்ன பிற உறவுகள், நண்பர்கள், தெருக்காரர்கள், கடலை மிட்டாய் வாங்கியோ திருடியோ தின்ற செட்டியார் கடை, சுகமாய்ப் பிடித்த பாட்டை கேட்டுக் கொண்டே நின்ற யாரோ ஒருவரின் வீட்டு வாசற்படி, சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டது, விளையாடியது, விழுந்தது, படித்தது, பெயிலானது, திருட்டு தம் பிடிக்கையில் அண்ணனிடம் கையும் களவுமாக பிடிபட்டது, பள்ளிக்கூடம் போகாமல் பார்த்த ரஜினி சினிமா, தீபாவளிக்கு கருக்கலிலேயே கிளம்பி சினிமாத் தியேட்டரின் கியூவில் நின்றது, தெரு வீடுகளின் ஜன்னல்களைப் பார்த்தபடியே எதிரில் வரும் பெருசுகளின் மீது மோதி வாங்கிக் கட்டிக் கொண்டது, கண் எதிரிலேயே கிழித்துப் போடப்பட்ட காதல் கடுதாசிகள், முதல் காதல், தொடர்ந்த அழுகை, ப்ளஸ் டூ முடித்து ரிசல்ட் வந்த கையோடு வெளியூர் கல்லூரிக்குக் கூட்டிச் செல்லப்பட்ட போது கடுதாசி வாங்கியவளின் வீட்டைக் கடக்கையில் விழியோரங்களில் திரண்ட கண்ணீர், ஹாஸ்டலில் இருக்கும் போது அவளின் கல்யாண சேதியைக் கொண்டுவந்த நண்பனின் கடிதம், ஹாஸ்டல் மொட்டைமாடியில் கட்டுக் கட்டாக பீடியைப் புகைத்தது, படிப்பு முடித்து விட்டு வேலை கிடைக்கும் முன்பாக ஓரிரு வருடங்கள் நண்பர்களோடு உட்கார்ந்து தேய்த்த தெருமுனை படிக்கட்டு, வேறெங்கோ மொழி பேசும் மாநிலத்தில் வேலை கிடைத்து குடும்ப நிதர்சனம் காரணமாக பிடிக்காமலேயே பெட்டி கட்டிக்கொண்டு வந்து சேர்ந்த ரயிலடி இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன நம்முடைய ஊர் நமக்குள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருப்பதற்கு.
 
இருபது ஆண்டுகள் ஊரை விட்டு வெளியில் கழிக்க வேண்டியிருந்தது எனக்கு.  இரட்டிப்பு வனவாசம் போல.  படிப்பு, செய்த வேலை எதுவுமே சமயங்களில் பெரிதாகத் தோன்றாது.  பல முறை நண்பர்களிடம் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டே சொல்லியிருக்கிறேன்.  சேலத்துல புண்ணாக்கு கூட விக்கலாம்டா, இங்க வந்து இங்கீலீசு படிச்சுத் தர்றதுக்கு பதிலா.  மனசு ஒட்டவேயில்லை.  இதை வீட்டில் சொல்லும்போதெல்லாம் தவறாமல் மடையன் பட்டம் கிடைக்கும்.  சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலையை விட்டுட்டு இங்க வந்து என்ன கிழிக்கப் போற என்ற மாதிரியான பேச்சுக்கள் ஆசையின் மேல் திராவகத்தை லிட்டர் லிட்டராக கொட்டும்.  குமுதம் வாங்குவதற்காக பஸ் ஏறி பல கிலோமீட்டர்கள் பயணம் செய்திருக்கிறேன், வாரா வாரம் ஆண்டுக்கணக்கில்.  சேலத்துக்காரரை எதிர்பார்க்காமல் சந்திக்க நேர்ந்தால் கட்டாயமாக அறைக்கு கூட்டி வந்து உபசரிக்காமல் விடமாட்டேன்.  அவர் கூடப் பிறக்காத அண்ணனாகத் தெரிவார். கோடை விடுமுறையின் முதல் நாளை இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மனசு எதிர்பார்த்து ரெக்கை கட்டும்.


பால்யத்தில் கூடப் படித்த நண்பர்களை நினைத்துப் பார்க்கிறேன்.  அயூப் ஜான், செல்வம், முருகன், மகேந்திரன், அண்ணாதுரை, சண்முகம், வெங்கடேசு, குமாரு இன்னும் நெறைய பேர்.  அவர்களெல்லாம் இப்போது எங்கே?  அவர்கள் கடித்துக் கொடுத்த எச்சில் படர்ந்த மிட்டாய்களின் ருசி நாக்கிலிருந்து விலகியது எப்போது?  எங்கள் பதின்மத்தை தங்கள் பார்வையால் கரைத்த அந்த குறும்பிகள் எந்த சமையல் கட்டின் புகையில் மறைந்தார்கள்?  வெளிச்சக் கம்பத்தின் எல்லை முடிந்ததும் கவிழ்ந்த சௌகர்யமான இருட்டில் முரட்டுத்தனமாய் முதல் முத்தம் கொடுத்த தோழி அடுத்த நாள் காலையில் குறும்புச் சிரிப்பாக வீசிய பார்வையை எனது தீராத ரயில்களின் எந்தப் பெட்டியில் தொலைத்தேன்?  ஊரை விட்ட வெளியே இருந்த வருடங்கள் என்னைப் பொறுத்த வரையில், நொண்டி ஒருவன் தீக்குண்டம் மிதித்ததைப் போலத்தான். 


அண்மையில் இப்படிப்பட்ட நினைவுத் தொடர்கள் சிலவற்றை படித்த அனுபவம் பேரானந்தம் தரக்கூடியதாக இருந்தது.  கலாப்பிரியாவின் நினைவின் தாழ்வாரங்கள், சுவரொட்டி மற்றும் ஓடும் நதி, ராஜு முருகனின் வட்டியும் முதலும்; மிக சமீபத்தில் சுகா அவர்களின் சாமானியனின் முகம் மற்றும் தாயார் சன்னதி.  இவைகள் இவர்களுடைய ஊர் மட்டும் அல்ல.  படிக்கும் அனைவரின் ஊர்களும்தாம்.  எனக்கென்னமோ, ஐம்பதுகளில் இருந்து எண்பதுகள் வரை ஊர்கள் மாறாமலேயே இருந்திருக்கின்றன என்று தோன்றுகிறது.  இவர்கள் சொல்லும் அனைத்து விடயங்களும், மனிதர்களும் எல்லா ஊர்களிலும் இருந்திருக்கிறார்கள்.  சினிமா, அரசியல், ஊர் வம்பு, சல்லையான நண்பர்கள், காதலிகள், ஒரு மாதிரியானவர்கள், வாழ்ந்து கெட்ட குடும்பங்கள், முதல் நாள் மழையில் கிளை விட்டவர்கள், பொட்டிக்கடை, பரோட்டாக் கடை என்று எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.  ஆனாலும் கூட, படிக்க சலிப்பதேயில்லை இந்த மாதிரியான நினைவுக் குறிப்புக்களை.


சுகாவின் சாமானியனின் முகம் தாயார் சன்னதி இரண்டையுமே இரு நாட்களில் படித்தேன்.  இவரின் தந்தையார் ஊர் உலகத்திற்கு நன்கு தெரிந்தவர்.  நெல்லை கண்ணன் அவர்கள்.  திருநவேலிக்காரரான ஐயா மகன் [சீமான் சுகாவை இப்படித்தான் அழைக்கிறார்] தனது எழுத்து முழுக்க பாவ மன்னிப்பு கேட்டிருப்பது ஊரை விட்டு மெட்ராஸ் வந்ததற்குத்தான்.  திருநவேலி இவரைக் கட்டி இழுக்கிறது.  தனது பால்யத்தின் கதைகளை சொல்லிக் கொண்டு வருகையில் நமது கண்கள் நனைந்து சிவக்கின்றன, இழந்த சொர்க்கத்தை ஞாபகப்படுத்துவதால். ஹாஸ்யம் பக்கங்கள் முழுக்க நிரம்பியிருக்கிறது.   குஞ்சு, ஆறும்பூ நாதன், நாஞ்சில் நாடன் சித்தப்பா, பாட்டையா, சீமான், ஜெயமோகன், வாத்தியார் பாலு மகேந்திரா போன்றவர்களைப் பற்றிய சொற்சித்திரங்கள் சிலிர்க்கும் வண்ணம் சுகாவின் வார்த்தைகளில் வந்திருக்கின்றன.  இது பெரிய வரம்.  இவரது தந்தையார் ரொம்பவுமே இவரைப் பற்றி பீற்றிக் கொள்ளலாம்.  எல்லா நியாயமும் உண்டு.  அப்பத்தா ஆச்சி, அம்மாத்தா ஆச்சி, ஆழ்வார்க்குறிச்சி, மற்ற சில பாட்டிகள், ஊர் பெருசுகள் அனைவரையும் பற்றிய சித்திரங்கள் மிகவும் நுட்பமாக பாஷையில் வருவதென்பது பெற்று வந்த வரத்தால் ஒழிய வேறில்லை.  தனது மொழி நடைக்காக சுகா மெனக்கெடவில்லை.  திருநவேலி பாஷையையே பயன்படுத்தியிருக்கிறார்.  கதா பாத்திரங்கள் பேசிய வார்த்தைகளே அச்சில் பார்க்கிறோம்.  தாயளி, மயிறு, மயிராண்டி என்ற வார்த்தைகளுக்காக சுகாவை கோபப்பட்டு பிரயோஜனமில்லை.  அதெல்லாம் திருநவேலிகாரங்க பேசியது.  சொல்லப்போனால், அப்படியே எழுதியதற்காக சுகாவை உச்சிமோந்து கொள்ளலாம்.  ஹாஸ்யமாக நினைவுக் குறிப்புகளை சொல்லிக்கொண்டே போகிறவர், பல இடங்களில் எதிர்பார்க்காமல் ஒன்றைச் சொல்லி விசுக்கென்று போட்டு ஆட்டுகிறார்.  வாழ்க்கையும் அப்படித்தானே!  சொல்லிவிட்டா ஒவ்வொன்றும் வருகிறது, போகிறது!  தாயார் சன்னதி கட்டுரை இந்த இரண்டு புத்தகங்களிலுமே ஆகச் சிறந்தது என்பேன்.


சுகாவிற்கு இருக்கும் இசை ஞானம் அபாரமானது.  சினிமாப் பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடித்துச் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறார்.  திருநவேலி சைவைப் பிள்ளைமார் குடும்பத்துப் பையனுக்கு இசை கற்றுக் கொள்வது மீனுக்கு நீச்சல் போல.  அறுவடை நாள் படத்தில் வரும் தேவனின் கோயில் பாட்டை இவர் அளவிற்கு படைத்த இளையராஜா அவர்களே ரசித்திருக்க மாட்டார்.  அதே போலத்தான், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா பாடல்களை இவர் ரசிக்கின்ற விதமும்.  இசைத் துறையிலே பெரிய ஆளாக வந்திருக்க வேண்டியவர்.  சினிமா இயக்குநராகி விட்டார்.  சினிமாவுக்கு லாபமா என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

 
எனக்கு இந்த மாதிரி நினைவுக் குறிப்புக்களை படிக்க அலுப்பதேயில்லை.  Sigmund Freud சொல்லியிருக்கிறார்:  நமது கடந்த காலம்தான், நிகழ் காலம் எதிர் காலம் இரண்டையுமே இயக்குகிறது.  கடந்த காலத்தின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது.  இதை முழுமையாக நம்புகிறவன் நான். இன்றைய நமது குணம், செலவழிக்கும் விதம், பிரச்சினைகளை எதிர் கொள்வது என்று எல்லாமே நமது கடந்த காலத்தின் கொடை.  அன்றைய நமது காதலிகளைத்தான் இன்றைய மனைவிகளிடம் தேடிக் கொண்டிருக்கிறோம்.  ஒவ்வொருவரிடமும் ஒரு தங்கர்பச்சானின் அழகி இன்னும் எங்கோ இருக்கத்தானே செய்கிறாள்! 


[சாமானியனின் முகம், வம்சி வெளியீடு, உரூபா 170.  தாயார் சன்னதி, சொல்வனம் வெளியீடு, உரூபா 200/-]  



   

  

        

0 comments:

Post a Comment