ஒண்ட வந்த பிடாரி

| Saturday, January 17, 2015


கடந்த இரண்டு நாட்களாக, பெருமாள் முருகனின் துயரம் தொனிக்கும் குரலில்  தன்னில் இருந்த எழுத்தாளர் இறந்துவிட்டதாக பிரகடனம் செய்து பொதுவெளியில் பதிப்பித்த வாக்குமூலத்திற்கு பிறகு, மாதொருபாகன் ஆசிரியருக்கு தமிழ்நாட்டு  அறிவுலகத்தில் ஆதரவு கொந்தளிக்கத் தொடங்கி உள்ளதுதி ஹிந்து லிட்ரேச்சர் விழாவில் நீதியரசர் சந்துரு, வரலாற்று ஆசிரியர் .இரா.வேங்கடசலபதி, என்.ராம், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் கடுமையாக 'திருச்செங்கோடு அடிப்படைவாதிகளைசாடியிருக்கின்றனர்தமிழக அரசையும் கூடநேற்று முன்தினம் தி.மு.. தனது நிலைப்பாட்டை திரு.ஸ்டாலின் மூலமாக தெளிவாக்கியிருக்கிறதுஜெயலலிதா அவர்கள் தனது கட்சியின் நிலைப்பாட்டை கருத்து எதுவும் தெரிவிக்காததால் வெளிப்படுத்திவிட்டார்கவலை அளிக்கும் நிலைப்பாடுசென்னை புத்தக காட்சி நடக்கும் நாட்களில் இந்த  விடயம் சூடு பிடித்திருப்பதால், பெருமாள் முருகனின் புத்தகங்கள் அதிக அளவில் விற்க சாத்தியம் உண்டு.  'மாதொருபாகன்நாவலை விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டதாக காலச்சுவடு கண்ணன் அவர்கள் அறிவித்திருப்பினும் கூட, பெருமாள் முருகனின் மற்ற புத்தகங்கள் விற்பனையில் தூள் பரத்தும் வாய்ப்புண்டு.  'மாதொருபாகன்' நாவல் கூட கள்ளச் சந்தையில் விற்கப்படுவதற்கு நல்ல வாய்ப்புஒரு வக்கிரமான பார்வையில், புது வருடத்தில் பெருமாள் முருகனுக்கு பெரிய யோகம்; அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது

இந்த நாவல் 2010-ல் வெளிவந்ததுநான்கு வருடங்களாக சீண்ட ஆளில்லைஆங்கில மொழிபெயர்ப்பு One Part Woman வெளிவந்தவுடன் எதிர்ப்பு அலை முதலில்  தில்லியில் இருந்து கிளம்பியிருக்கிறதுதன்னைத் தானே இந்தப் பரந்த துணைக் கண்டத்தின் கலாச்சார தணிக்கையாளராக கருதிக்கொண்டிருக்கும் ஒரு அடிப்படைவாத அமைப்பு முதலில் கண்டனக்  குரல் எழுப்பியதைத் தொடர்ந்து உள்ளூர் மதவாத அமைப்பினர்சாதியவாதிகளுடன் கூட்டு சேர்ந்து எதிர்க்கின்றனர் என்று ஆங்கில இணைய இதழ்கள் புலனாய்வு செய்துள்ளனர்பெருமாள் முருகனின் புதினத்தை எதிர்க்கும் சாதிய குழுவில் உள்ளோரில் பெரும்பாலோனோர் அவரின் சாதியினரே என்று தொல்.திருமாவளவன் கலைஞர் டிவி செவ்வியில் சொன்னார்.
 
`'மாதொருபாகன்' புதினத்தை இன்னும் படிக்காததால் தீர்மானமாக அதன் உட்கிடக்கைகள் பற்றி கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள முடியாவிட்டாலும், ஊடக தரவுகளிலிருந்து தெரிய வருவது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லைநூறு ஆண்டுகளுக்கு முந்தைய உள்ளூர் வாழ்க்கையில் நிகழ்ந்ததாக புதினத்தில் சொல்லப்பட்டிருக்கிற பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடக்கும் பிறழ்வான பாலுறவுகள், பாலியல் பார்வைகள் ஆகியவை உள்ளூர் மக்கள், அவர்களின் பண்பாடு, அவர்களின்  வழிபாட்டு ஸ்தலம், அவர்களின் கடவுள் - எல்லாவற்றையும்விட அவர்களின் பெண்கள்போன்றவற்றை கேவலப்படுத்தி விட்டதாக 'பெருமாள் முருகன் எதிர்ப்புக் குழுவினர்' குற்றம் சாட்டுகின்றனர் என்று அறிய வருகிறோம்.  'பெருமாள் முருகன் எதிர்ப்புக் குழுவினர்' சம்பந்தப்பட்ட புத்தகத்தின் பிரதிகளை எரித்திருக்கின்றனர்பெருமாள் முருகனை கைது செய்ய வேண்டி பிராதுகளும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

மிகவும் சுவாராஸ்யமான விடயம் இதுஎழுத்துச் சுதந்திரம் என்பதான முழக்கத்திற்கு அப்புறம் வருவோம்எந்த ஊரில் ரகசியமான பாலுறவு சேர்க்கைகள் இல்லைஅப்படிப் பார்த்தால், இந்த பூமிப்  பந்தில் கேவலப்படாத இடமே இல்லைஅதுவும் அலைபேசிகள் அனைவரின் கைகளிலும் இருக்கும் நாட்களில் மிகவும் அடிவாங்கியிருப்பது 'கற்பு' பற்றிய கருத்தாக்கம்தான்இதைவிட, பெண் ஏன் இன்னும் சொத்துடமையாகவே பார்க்கப்படுகிறாள் என்பது நிறுவன அரசியல் சூட்சுமங்கள் நிறைந்ததுசட்ட ரீதியாக வயதடைந்த பெண் தன்னுடைய பாலுறவுகளை தானே தீர்மானிப்பதை சாதிய சக்திகள், ஆண் நீதி ஆகியவை ஒப்பவில்லை என்ற செய்தி இதில்  இருக்கிறதுஇந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக, அண்மையில் ஒரு பள்ளியில் பெண் பிள்ளைகளிடம் 'என்னுடைய சாதிக்காரரைத்தான் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளுவேன்' என்று பிரமாணம் வாங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை படிக்க நேர்ந்ததும், இந்த விடயத்தைப் பற்றிய எனது புரிதல் அதிகமாகியதுபெருமாள் முருகனின் எழுத்து பெண்ணை அவமானப்படுத்தவில்லைஆண் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறான்அவனின் பிரதான சொத்து ஒன்று கையை விட்டுப் போகும் நிலையில் அவன் வேறு என்னதான் செய்வான்?

தான் பாதிக்கப்பட்டதாகவும், தன்னுடைய பால் மேலாதிக்கம் அசைக்கப்பட்டுள்ளதாகவும் நம்புகிற ஆண், சாதி அமைப்பு, மதவாத சக்திகள், முடியுமாயின் அரசு ஆகியவற்றை துணைக்கழைக்கிறான்பெருமாள் முருகன்  விடயத்தில் அரசின் மௌனம் பெருமாள் முருகன் எதிர்ப்புக் குழுவினரை பரவசப்படுத்தியிருக்கும்இந்தக் குழுவின் தலைவர்கள் முகமூடி அணிந்தே உள்ளனர்ஹெச்.ராஜாவும், இந்து முன்னணியும் மட்டுமே முகமூடி அணியாத எதிர்ப்பாளர்கள்எந்த பெரிய அரசியல் கட்சியும்  இது குறித்து  பெரிய போராட்டம் ஒன்றை அறிவிக்காததின் பின்னணியில், எங்கே இந்து மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் கட்சி  வருகிற தேர்தலில் உள்ளூர் மக்களின், அதாவது குறிப்பிட்ட சில வகுப்பினரின் பெரும்பாலான,  ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு போய்விடுமோ என்ற  அச்சம் இருக்கிறதுஇதிலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. தொகுதிகளில் மேலதிகமான சாதி ஒன்று இருக்குமானால், எல்லா கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அந்த சாதியிலிருந்தே  தெரிவு செய்வது இந்திய அரசியலில்  அரை நூற்றாண்டு நடைமுறை.   தமிழக அரசு வேறு மாதிரியான அணுகுமுறையை கையாண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. தனது கவனக் குறைவினால் வேறு ஒரு கட்சிஅதுவும் தமிழகத்தில் இன்னமும் வேர் பிடிக்காதது, அரசியல் லாபங்கள் அடைய அனுமதித்து விட்டது, அதனுடைய வியூகப் பிழை.

ஆனால், அரசு இதில் ஒரு நிராயுதபாணி போன்ற மௌனம் காத்திருக்கிறதுபெருமாள் முருகனையும் அவரின் எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்துப் 'பேச வைத்த' அரசு, அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பு  ஒன்றைப் பெற்று அவரது எதிர்க் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறதுஆட்சேபணைக்கு உரிய பகுதிகளை சம்பந்தப்பட்ட புத்தகத்தில் இருந்து நீக்குவதான உறுதிமொழியை அவரிடம் பெற்று  எதிர்க் குழுவிடம் வழங்கியுள்ளதுஇன்னும் விற்கப்படாத பிரதிகளை முடக்குவதாகவும், இனிமேல் மக்களின் [அதாவது, 'குறிப்பிட்ட சாதியினரின்' என்று படிக்க] உணர்வுகளைக் காயப்படுத்தாத வகையில் எழுதுவதாகவும் பெருமாள் முருகனை 'சொல்ல வைத்து' சச்சரவை 'நியாயமாக' தீர்த்துவிட்ட பெருமையை கைப்பற்றியிருக்கிறது அரசு.

பெருமாள் முருகன் என்ற எழுத்தாளனின் காம்பீர்யத்தை, அழகை, துணிவை, ஆளுமையை காலில் மிதித்துக் கொன்ற 'பல்முனை' சக்திகள் தாங்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, பெருமாள் முருகனை மட்டுமன்றி, உண்மையையும் நசுக்கும் முயற்சி என்று அறியாதவர்களா என்னதி.ஜானகிராமனின் மரப்பசுவில் வரும் அம்மணியை நினைத்துப் பார்க்கிறேன்.  'நளபாகத்தில்' வரும் ரங்கமணியை  நினைத்துப் பார்க்கிறேன். 'அம்மா வந்தாள்' அலங்காரம் என் நினைவில் நுழைகிறாள்என்னுடைய ஊரை உற்றுப் பார்க்கிறேன்என்னுடைய தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதைகளையும் கேட்கிறேன்ஆணாதிக்கம் தடுமாறி தடுமாறி 'பெண் விழைவை' தனது தர்மப்படி சீரமைக்க முடியாமல், கெஞ்சியும் கொஞ்சியும், மிரட்டியும் அழுதும், அடித்தும் பிடித்தும், 'சொத்தை' காப்பாற்றிக் கொள்ள மனித வரலாறு நெடுக செய்துவரும் உபாயங்கள் எண்ணிக்கையில் குறைவா என்ன?

இது பெருமாள் முருகனுக்கு எதிரான போராட்டமே அல்லபெண்ணை பயமுறுத்துகிறார்கள். "ஜாக்கிரதையாக நடந்து கொள். உனக்கு ஆதரவாக எழுதியவனுக்கே இந்த கதி என்றால், இன்னும் பரிதாபமான நிலையே வந்து சேரும் உனக்குசொற்படி கேள்!" என்று பெண் எச்சரிக்கப் பட்டிருக்கிறாள்பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முனைபவர்கள் அனைவரும் அதிகாரத்தின் மீது எல்லையற்ற ஆசை கொண்டவர்கள்விதிகளை பெண் மீறும் போது, அதிகாரம் ஆட்டம் காணுகிறதுஎன்னைப் பொறுத்தவரை, தமிழ் நவீன இலக்கிய  ஆக்கங்கள் அனைத்திலுமே 'மரப்பசு' அம்மணிதான் ஆகப் பெரிய புரட்சிக்காரிதன் மன விழைவோடும், அதீத உந்துதலோடும் நானூறுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவில் இணையும் அம்மணி, இறுதிவரை இதுபற்றி எந்தவித குற்ற உணர்வும் இன்றி 'வாழ்ந்து விட்ட' திருப்தியில், தன மகன் வயதொத்த ஒருவனிடம் ஒருவகையான 'புரிந்துணர்தலில்' நிரந்தரமாக கலக்கிறாள்அம்மணி எந்த வகுப்பைச் சேர்ந்தவள் என்பதை எளிதில் கண்டுகொள்ள ஏராளமான தடயங்கள் நாவல் முழுவதுமே விரவிக் கிடக்கிறது. தி.ஜா. இன்றைய சூழலில் மரப்பசுவை படைத்திருந்தால் அவருக்கு என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே திகிலாக இருக்கிறதுநல்லவேளையாக, தி.ஜா. என்ற எழுத்தாளன் செத்துப்போய் விட்டான்.

இன்னொரு சேதியும் வந்து சேருகிறது.  Firstpost என்ற இணைய இதழில் பெருமாள் முருகன் குறித்த செய்தியில் அதன் ஆசிரியர் சில மருத்துவ தரவுகளை தந்துள்ளார்மரபணு ஆராய்ச்சி வளர்ந்து வரும் இந்த நாட்களில், பிரசவத்திற்காக மருத்துவ மனைகளில் சேர்க்கப்படும் பெண்களின் குழந்தைகளில் பத்து சதவிகிதம் தந்தை என்று சமூகம் நம்பும் ஆண்களுடையது அல்ல என்பதை ஆவண சாட்சியங்களோடு முன் வைக்கும் கட்டுரை ஆசிரியர், ஆண் மேலாதிக்க சமூகம் இந்த உண்மையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று வினவுகிறார்?  மத / சாதிய அடிப்படைவாதிகள் இப்பொழுது என்னவிதமான எதிர்வினை ஆற்றப்போகிறார்கள்தாய் அடையாளம் காட்டித்தான் குழந்தை தந்தையை கண்டுணரும் பரிதாபமான நிலையில், ஆண் எவ்வளவு பவ்யமாக நடந்து கொள்ள வேண்டும்இன்னொன்று, ஒவ்வொரு புதின மாந்தரும் ஏதாவது ஒரு சாதிய / மத அடையாளங்களை தாங்கித்தான் நடமாடுவார்கள்அந்தக் கதைமாந்தர்களின் செயற்பாடுகள் அவர்களுடன் அடையாளம் காணப்படும் சாதியோடு / மதத்தோடு இணைத்து, செயற்கையான சமூகக் கொந்தளிப்பை 'உற்பத்தி' செய்ய முனையும் கூட்டங்களின் இலக்கு என்ன

அடுத்ததாகத்தான், கருத்துச் சுதந்திரம்அடிப்படைவாதங்களுக்கு எதிரான பேச்சுக்களும் எழுத்துக்களும் இந்தியாவில் எப்பொழுதுமே சகித்துக் கொள்ளப்படுவதில்லைபாலுணர்வு / பாலுறவு தொடர்பான விடயங்களுக்கும், வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் படைப்பு இலக்கியத்தில் எந்த வித தொடர்பும் இருக்கக்கூடாது என்று விரும்புவர்கள்ஆயிரமாயிரம்  நமது கோவில்களை - அதன் கோபுரங்களை - என்ன செய்வார்கள்ஜாலியாக நூற்றுக்கணக்கில் பெண்களை பாலுறவுக்கு உட்படுத்திய கடவுளர்களை 'மத வெளியேற்றம்' செய்ய முடியுமாஅடிப்படைவாதிகள் தங்கள் வன்முறையை கட்டவிழ்க்கும்போது, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எந்தவித உதவியும் செய்ய முன்வராமல் மௌனம் காப்பவர்கள், அடிப்படைவாதிகளுக்கு உதவுபவர்களே. உண்மையை மௌனத்தைக் கொண்டு மூடிவிட்டால், மௌனமும் ஒரு வன்முறையாக மாறிப்போகிறது.

எனக்கென்ன பயம் என்றால், திருவள்ளுவர் சமணர் என்று சொல்ல / நம்ப இடமுண்டுஅந்த ஆள்  சும்மா இருக்காமல், "அதி பாலியல் சுதந்திரம்கொண்ட பெண்களைப்  பற்றிச் சொல்கிறான்வள்ளுவரின் பெண் பிள்ளைகள் அடிப்படைவாதிகளின் 'பெண்களுக்கான இலக்கணத்தை' ஏளனமாக மீறுகிறார்கள்ரொம்பவும் அடாவடியாக 'அந்த' விடயத்தில் நடந்துகொள்ளும் பெண் பிள்ளைகளை நம் முன் உலவவிட்ட, இந்து மதத்தைச் சாராத, அந்த கவிஞரை இவர்களால் என்ன செய்ய முடியும்எந்த தாசில்தார் ஆபிஸுக்கு வரவழைத்து மிரட்டுவார்கள்மனப்பாட பகுதியில் இருக்கும் அவருடைய பாட்டுக்களை ஊரின் எந்தப் பகுதியில் வைத்து எரிப்பார்கள்ஊரெங்கும் உள்ள அவரின் சிலைகள் உடைக்கப்படுமாநினைத்தாலே பயமாக இருக்கிறது.

இவர்களை அடக்கி வைத்திருந்த ஒரு கலகக்காரர் தமிழ்நாட்டில் இருந்தார்திருச்செங்கோடு பக்கத்தில்தான் அவரது வீடு. ஈரோடுபெரியார் ஒருவர் மட்டுமே இவர்களுக்கு சரியான பதிலடி தந்திருக்கக்கூடிய கலகக்காரர்பெருமாள் முருகனுக்கு எதிராக திரண்டவர்களைப் பற்றிய அவரது விமரிசனம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கையில், மனது சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது. திராவிட இயக்கங்கள் உருவாகி வளர்ந்த இந்தப் பிரதேசத்தில், பெரியாருக்கு இணையான தலைமைகள் தோன்றியிருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டில் எண்ணிக்கையற்ற ஜெயகாந்தன்கள், ஜானகிராமன்கள், பெருமாள் முருகன்கள் பெரும் விருட்சமாகி லட்சக்கணக்கான பெண்களுக்கு நிழலையும் ஆறுதலையும் தந்திருப்பார்கள்.
 
பூனை இல்லாத வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம்.

பெரியார் செத்திருக்கவே கூடாது!







0 comments:

Post a Comment