தங்களை அறிவுஜீவிகள் என்று கூவித் திரியும் பலரை நாம் அனுதினமும்
சந்திக்கிறோம். அவர்களில் சிலர் பாராட்டும்படியான திறன்களைப்
பெற்றிருந்தாலும், தங்களை முன் நிறுத்தும் விதம் மற்றும் தாங்கள் ஒரு
குறிப்பிட்ட துறையில் வல்லமை பெற்றிருப்பதாலாயே அனைத்து விடயங்களைப்
பற்றியும் பீற்றித் திரிய ஏகபோகம் உண்டு என சவடால் விட என்ன காரணம் இருக்க
முடியும் என்று பல சமயம் யோசித்திருக்கிறேன். அடிப்படையாக ஒருவித
பாதுகாப்பற்ற உணர்வுதான் காரணமோ? தம்மை மீறிய குரல் தமக்கு அருகிலிருந்தே
கேட்டுவிடக் கூடுமோ என்ற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுவதைக்
கண்டிருக்கிறேன்.
ஆகப் பெரிய திறமைசாலிகளிடம் இந்த பாதுகாப்பற்ற உணர்வு இருப்பதில்லை. தமக்கெதிரான குரல்களை அவர்களே உரம் இட்டு வளர்க்கிறார்கள். அந்த புதிய எதிர்ப்புக்கள் ஊடாக தம்மை இன்னும் உயர்த்திக் கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்த வகையில் பெரியார், ஜெயகாந்தன், இளையராஜா ஆகியோர் அண்மைக்கால வரலாற்றில் இத்தகையோர். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களைப் பற்றி சில நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அவருடைய மூன்று புகழ் பெற்ற ஆங்கில நூற்களைப் பற்றி எனது நண்பர்கள் மணிக்கணக்கில் சிலாகிப்பார்கள். [1] The Political Economy of Agrarian Change: Nanchilnadu 1880-1939 [2] The Image Trap: M.G.Ramachandran in Film and Politics [3] Brahmin & Non-Brahmin: Genealogies of the Tamil Political Present என்ற இந்த மூன்று புத்தகங்களையும் வாங்கிப் படித்து விட வேண்டும் என்ற ஆவல் ஓரிரு வருடங்களாகவே இருந்தாலும், அவரின் திடீர் மறைவு அவரைப் பற்றிய நினைவு உரைகள், நிகழ்வுகள், கட்டுரைகள் என்று பல சமீப மாதங்களில் பொதுவெளியில் நடத்தப்பட்டு, அவரை நன்கு அறிந்தவர்கள் பாண்டியன் என்ற ஆளுமையை விளக்கக் கேட்டு, இந்த நூற்களை உடனடியாக வாங்கி படித்து முடித்துவிட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் Madras Institute of Development Studies என்ற நிறுவனத்தில் சில வருடங்கள் பணி செய்த பிறகு, தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வ கலா சாலையில் பேராசிரியாராக தனது இறுதிக்காலம் வரை பணி புரிந்தார். இடையில் கல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார். தமிழ் அறிவுலகை உலகெங்கும் பரவியுள்ள ஆங்கில வாசகரிடம், முக்கியமாக மேற்குலகத்திடம், எடுத்துச் சென்றதில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. இவரின் மிகப்பெரிய ஆதர்சம் பெரியார் என்று எளிதாக கூறலாம். பெரியாரை மிகவும் நுண்ணியமாக, - சுதந்திரப் போராட்டம் , அகில இந்திய காங்கிரஸ், பிராமணர்களால் பெரிதும் நிரப்பப்பட்ட மேட்டுக்குடி அரசியல் - என்பதான பின்புலங்களில் அணுகியிருக்கிறார். பிரமிக்கத்தக்க ஆய்வுப் பாங்கையும், உழைப்பையும் இவரது கட்டுரைகளில் பார்க்க முடியும். தொடர்ந்து Economic and Political Weekly என்ற இடதுசாரி இதழில் தமிழக அரசியல், குறிப்பாக திராவிட – தேசிய சமன்பாடு, தமிழ் சினிமாவும் அதன் சமூக கலாச்சார அரசியலும், முரண்களும் மேடு பள்ளங்களும் அற்ற எல்லைகள் இல்லாத நாடு என்பதான பெரியாரிய கொள்கையும் முனைப்பும் ஆகியன பற்றி, கடின உழைப்பின்பாற் மட்டுமே கிடைக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதி வந்துள்ள எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஆய்வெழுத்துக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான காட்டாய் விளங்குகிறார்.
பொதுவாகவே நான் சொல்வதுண்டு, தமிழக சர்வ கலா சாலைகள் பெரும் ஆய்வாளர்களை உருவாக்குவதில்லை என்று. பெரும்பாலான ஆய்வேடுகள் முனைவர் பட்டம் தரும் லாபங்களுக்காக மட்டுமே ‘செய்யப்படுபவை’. ஆகப் பெரிய ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் சர்வகலா சாலைகளுக்கு வெளியே இயங்குகின்றனர் என்ற எண்ணம் எனக்குள் நாளுக்கு நாள் வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில், விதிவிலக்காய் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்றோர் இருந்திருக்கின்றனர் எனும் போது, முனைவர் பட்ட ஆய்வு மாணவராக ஒரு காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்ற வகையில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் ஆங்கிலத்தைப் பற்றி, அவரை நினைவு கூறும் ஒவ்வொருவரும் தவறாமல் குறிப்பிடுகின்றனர். என்னிடம், “நீ எப்படி கிருஷ்ண ஐயரை பிரேமிக்கிறாயோ, அதே அளவு பாண்டியனின் ஆங்கிலத்திலும் மனம் கொடுப்பாய்” என்று சொன்னவர்களில் பலர் தீவிரமாக ஆங்கிலத்தில் வாசித்து வருபவர்கள். இவர்கள் வார்த்தைகள் வேறு எரிகிற ஜோதியில் ஊற்றிய நெருப்பாய் ஜுவாலிக்கிறது. கூடிய சீக்கிரம் பாண்டியன் அவர்களின் எழுத்து வாசிக்க கைகூட வேண்டும்.
இதன் தொடர்ச்சியாய் ஒன்னொரு விடயம். பாண்டியன் அவர்களோடு ஒரு கட்டத்தில் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிற காலச்சுவடு கண்ணன் அவர்கள் தனது பதிப்பதத்தின் மூலமாக, காலச்சுவடு இதழில் அவர் எழுதியுள்ள மூன்று கட்டுரைகளை [இராம சுந்தரம், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ஞாநி ஆகியோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை] தமது நினைவு அஞ்சலியாக வெளியிட்டுள்ளார். மிகவும் சிறிய ஆனால் ரொம்பவும் கனமான புத்தகம். ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு அவர்கள் அக்கினியான முன்னுரை ஒன்றை அளித்துள்ளார். இந்த தொகுப்பை மட்டுமே படித்துள்ள நிலையில், நெஞ்சு பிரமிப்பில் ஆழ்கிறது. பாண்டியன் ஒரு புத்திமான். அறிவுஜீவி. சந்தேகமே இல்லை. மாத்யு ஆர்னால்ட் சொல்லும் touchstone கருத்தைப் போல, தமிழ் அறிவுலகில் பாண்டியன் அவர்கள் ஒரு touchstone. “உன்னை அறிவுஜீவி என்று நாங்கள் சொல்ல வேண்டுமா? கொண்டு வா உனது உருவாக்கங்களை. பாண்டியனின் சிந்தனைகளோடு ஒப்பிட்டு உன் யோக்யதையை தீர்மானிக்கிறோம்” என்று தைரியமாக இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டுள்ள ரகத்தினரைப் பார்த்து சொல்லலாம்.
பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் வாழ்ந்த பெருமை உடைத்தது இவ்வுலகு!
0 comments:
Post a Comment