நேற்று என்னுடன் முதுகலை ஆங்கிலம் படித்த நண்பர்கள் இருவர் பொங்கல் நிமித்தம் வீட்டிற்கு வந்திருந்தார்கள். கொஞ்சம் பழைய கதை பேசிவிட்டு, பேச்சு ஆங்கிலம் - பொதுவாக பி.ஏ. எம்.ஏ. லிட்ரேச்சர் மாணவர்களிடம் அந்தப் பாஷையில் போதுமான பயிற்சியின்மை குறித்து திரும்பியது. இருவரும் பேராசிரியர்களானதால், வெவ்வேறு காரணங்களையும், அவை குறித்து தங்களது பதிப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் சுட்டிக்காட்டி சூடு கிளப்பினார்கள். அவர்கள் சென்ற வெகு நேரமாகியும் இது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
கல்லூரிகளில் இசையில் பி.ஏ. எம்.ஏ. பயிற்றுவிக்கும் போது பாடுவதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். இசைக் கருவிகளை வாசிக்க கற்றுத் தருகிறார்கள். இசைக் கருவிகளின் வரலாறு, இசைப் பண்பாட்டு வரலாறு என்பதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வேறு மாதிரி சொன்னால், இசையை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பரீட்சைகள் கூட, இசை உருவாக்கம் அடிப்படையில்தான். ஒரு பாடகியாகவோ அல்லது ஒரு வாத்தியக் கலைஞராகவோதான் அந்தக் கல்லூரிகளில் இருந்து வெளிவருகிறார்கள்.
ஆனால், பி.ஏ. எம்.ஏ. ஆங்கில இலக்கிய பட்ட, பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் ஆங்கில மொழி வரலாறு, ஆங்கில இலக்கிய வரலாறு, விமரிசன போக்குகள் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. இவைகளை படித்து விட்டு வெளியே வரும் மாணவன் படைப்பு எழுத்தில் எந்த பயிற்சியும் இல்லாதவனாகவே இருக்கிறான். ஒரு நாவலோ, சிறுகதையோ, கட்டுரையோ, பத்தியோ, ஏன் ஒரு வரியோ சொந்தமாக எழுத முடியாதவனாக இருப்பது இசை பற்றிய பாடத்திட்டமும், இலக்கியம் பற்றிய பாடத்திட்டமும் வேறு வேறு அடைவு நோக்கங்களை கொண்டதாக இருப்பதாலா?
அமெரிக்க சர்வ கலா சாலைகளில் படைப்பு இலக்கியம் சொல்லித் தரப்படுவதைப் போல இங்கே ஏன் சொல்லித் தருவதில்லை? இலக்கியத்தின் வரலாறை மாணவனே தனியே படித்துவிட முடியாதா? அதற்கு என்று ஏன் ஐந்து வருடங்களை வீணடிக்க வேண்டும்? இதை விட கொடுமை, ஆங்கில இலக்கியம் படித்து விட்டு வருபவனை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க பணிக்கும் அமைப்பின் குருட்டுத் தனத்தை என்னவென்று சொல்வது? MA English Literature படித்தவன் English Skills-ஐ சொல்லிக் கொடுக்க தகுதியானவன். ஆனால், MA Linguistics [English] அல்லது MA Communicative English அல்லது MA English Language Teaching படித்தவன் English Skills-ஐ சொல்லிக் கொடுக்க தகுதியானவன் இல்லை என்று வரையறுக்கும் இந்த அமைப்பின் விசித்திரத்தை விமரிசிக்க வார்த்தைகளை தேடுவது ஆங்கிலத்திலோ தமிழிலோ சிரமமானது. ஊமை பாட்டு வாத்தியாராக லைசென்ஸ் கொடுக்கப்படும்; ஆனால், பாலமுரளி கிருஷ்ணாவோ, ஜேசுதாசோ பாட்டு சொல்லிக் கொடுத்துவிடக் கூடாது. லைசென்ஸ் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்களை ஊமையர்களாகவும் ஆக்கிவிடும் இந்த குருட்டு அமைப்பு.
இந்த லட்சணத்தில் நமது மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் போதவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளும் அமைப்பிற்கு யார் இதையெல்லாம் சொல்லுவது. மாணவர்கள் அனைவரும் ஆங்கிலம் பேச எழுத வேண்டுமென்றால், அவர்களின் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச, எழுத வேண்டும். இந்த ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச, எழுத வேண்டுமென்றால் இலக்கிய வரலாறைப் பக்கம் பக்கமாக படிக்காமல், செய்முறை அடிப்படையில் BA / MA Creative Competency in English போன்ற பட்டங்களுக்கு பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து சர்வகலா சாலைகளிலும், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட கல்லூரிகளிலும் கொண்டுவரப்பட வேண்டும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஆசிரியரின் உதவியின்றி மாணவனே நுகர முடியாதா? சொல்லப்போனால், பெரும்பாலான சமயங்களில் இலக்கியத்தை நுகர்வதற்கு வகுப்பாசிரியர் தடையாகத்தான் இருக்கிறார். இலக்கியம் வாசகனிடம் முகவரை வேண்டுவதில்லை. வாசகனிடம் ஒரு திறந்த மனதைத்தான் வேண்டுகிறது அது. மேலும், ஆசிரியர்களால் எந்த ஆங்கில இலக்கிய பட்ட மாணவனும் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதில்லை. அந்தப் புண்ணியத்தை மினர்வா கைடு கட்டிக் கொள்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பு சேலத்தில் ஒரு தனியார் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவத் துறையை சார்ந்த ஒருவர்தான் நிறுவனர். விசேடமானது என்னவென்றால், அங்கே ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் BA/MA/BEd/MEd தகுதி அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. நன்றாக ஆங்கிலம் பேசும் எழுதும் பொறியாளர்கள், பொறியியல் டிப்ளமா முடித்தவர்கள், Fashion Technology, Catering Technology, Hotel Management, Commerce படித்தவர்கள் அங்கே ஆங்கிலத்தை ஒரு மொழித்திறன் என்பதாக சொல்லிக் கொடுத்தார்கள். குடும்பத் தலைவிகள் கூட ஒரு சிலர் இருந்தார்கள். அந்தப் பள்ளியின் மாணவர்கள் அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாடுவர். மூன்றாம் நான்காம் வகுப்புகள் படித்து வந்த மாணவ மாணவியர் சிற்சிறு கதைகள் / கவிதைகள் எழுதுவர். பிழைகளே இல்லாமல் இருக்கும்.
இவர்களால் முடிந்ததை ஆங்கில இலக்கியத்தில் BA / MA /BEd / MEd பட்டங்கள் முடித்த பெரும்பாலானோர் ஏன் சாதிக்க முடியவில்லை என்பதை அமைப்பு யோசிக்க முடியாமல் உள்ளது என்பதை நான் நம்பவில்லை. வேறு எதோ ஆங்கிலம் சம்பந்தம் இல்லாத காரணங்கள் இருக்க வேண்டும். இதற்கான ஒரு மாற்றை மேலே கண்டவாறோ அல்லது வேறு மாதிரியாகவோ நடைமுறைப்படுத்தா விட்டால், இந்தியாவிலேயே உசத்தியான மூளை கொண்டவன் கேரளாவில் இருந்து மட்டும்தான் உற்பத்தியாவான். இப்பொழுதே புது தில்லி North Block, South Block, மற்றும் PMO என்று எங்கேயும் அதிகாரக்கட்டுகளில் முடிவெடுப்பவர்களின் பெயர்களின் இறுதியில் மேனன், நாயர், நம்பூதிரி, செரியன், என்றுதான் இருக்கிறது.
இன்னும் சில வருடங்களில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் பெயர்கள் இப்படித்தான் முடியும்.
0 comments:
Post a Comment