மனிதத் துயரத்தின் எல்லையில் துளிர்த்த மானுடம்

| Thursday, February 22, 2018
 மாமேதை மார்க்ஸ் என்னும் தலைப்பில் திருப்பூர் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு மணி நேரம் ஐம்பத்தேழு நிமிடங்கள் சொற்பொழிவாற்றுகிறார். இதைக் கண்ணுறும் - செவி மடுக்கும் வாய்ப்பு பெற்றோர் பெரு வரம் கொண்டு வந்தவர்கள். பொழிவு முழுவதையும் ஒரே நேரத்தில் கேட்கும் தெய்வாதீனம் எனக்குக் கிட்டியது. எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது இந்த நிகழ்வு. இந்தப் பொழிவிற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டதாகவும், நூற்றுக்கு மேற்பட்ட நூற்களை இதன் பொருட்டே வாசிக்க வேண்டியிருந்ததாகவும் எஸ்ரா பொழிவின் முதல் நிமிடங்களில் சொல்கிறார். எஸ்ரா தமிழ்ப் பேச்சுக் கலையின் முக்கிய புள்ளி. இந்தப் புள்ளியில் தமிழ்ப் பேச்சுக் கலையின் ஆராவாரம் குறைந்து, ஆய்வுக் குரல் மேலெழுந்து, தன்மையாக ஒருவருக்கொருவர் பேசும் குரல் அளவில், கீழே இறங்கி வந்த நதி அகண்ட பரப்பில் எதற்கும் அஞ்சத் தேவையில்லாது தன் போக்கில் நகர்ந்து போவதைப் போன்றது.


மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிய எதையும் தன்னுடைய பொழிவிற்கான பொருளாக எஸ்ரா எடுத்தாளவில்லை. மார்க்ஸின் பிறப்பு, வளர்ந்த விதம், குடும்பம், காதல், மனைவி ஜென்னி, குழந்தைகள், நண்பன் எங்கல்ஸ், அவரின் குடும்பத்தைக் காலம் முழுவதும் சூழ்ந்து கவிழ்ந்த வறுமை, அவரையும் மனைவி குழந்தைகள் ஆகியோருடன் கூடவே பயணித்த நோய்மை, ஏழு குழந்தைகளில் நான்கின் அகால மரணங்கள், பிழைத்த மகள்களின் அடுத்தடுத்த தற்கொலைகள், நாடு விட்டு நாடு நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டிய பிழைப்புக்கான புலம் பெயர்தல்கள், இவைகள் எவற்றாலும் தர்க்க முடியாத மார்க்ஸின் லட்சியம், இறக்கும் வரை எழுதிக்கொண்டேயிருந்த நெஞ்சுரம் - எஸ்ரா ஒரு யோகியைப் போல சொல்லிக்கொண்டே செல்கிறார்.


மார்க்ஸின் மரணத்தைப் பற்றி பேசும்பொழுதும், ஜென்னியின் இறுதிக்காலத்தையும், முப்பத்தெட்டு ஆண்டு காலம் வளர்ந்துகொண்டேயிருந்த அவர்களின் பரஸ்பர அன்பையும் பற்றிப் பேசுகின்ற எஸ்ரா, உணர்வேழுச்சியைத் தாங்கவொட்டாமல் சற்றே நா தழுதழுக்க நிறுத்தி, கீழே குனிந்து தன்னை ஒருமுகப்படுத்தி, முகத்தை உயரே நிமிர்த்தி, கூரையைப் பார்த்துக்கொண்டே பொழிவைத் தொடர எத்தனிக்கும் நொடியில், நமக்குள் எங்கோவிருந்து மானுட அவலத்தைப் பற்றிய ஏக்கம் மனதின் முன்பரப்பிற்கு ததும்பி வருகிறது.

மார்க்சை விட ஜென்னி வயதில் பெரியவர்.  மட்டுமன்றி, தனது தம்பியின் நண்பன்தான் மார்க்ஸ்.  இரு குடும்பங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. மார்க்ஸ் யூதர்; ஜென்னி கிறித்துவர்.  ஜென்னியின் அப்பாவிற்கு மார்க்சை ரொம்பவும் பிடிக்கும்.  மணிக்கணக்காக மார்க்சிடம் அவர் கதைத்துக் கொண்டிருப்பார்.  இப்படியான ஒரு புத்திக்காரனை தனது மகள் நேசிக்கிறாள் என்பதில் அவருக்குப் பெருமையும் கூட.  ஆனால், கிறித்துவர்கள் என்பதாலேயே ஜென்னி குடும்பத்தினரிடம் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மார்க்ஸின் வீட்டார் விரும்பவில்லை. தன்னுடைய விருப்பத்தை ஜென்னியிடம் தெரிவித்த பிறகு ஏழு வருடங்கள் திருமணத்திற்கு மார்க்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. இனிமேலும் காத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு ஜென்னியின் வந்தபோதுதான், மார்க்ஸ் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். 

மார்க்ஸின் வலக்கை ஜென்னி என்றால் சந்தேகமில்லாமல் இடக்கை நண்பன் எங்கல்ஸ்.  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் நீடித்தது இவர்களின் நட்பு.  மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்ட பொழுது வந்திருந்தவர்கள் பதினோரு பேர்கள். அதற்கான செலவினங்களை செய்தவர் எங்கல்ஸ். பிறகு, அவரின் விருப்பத்திற்கிணங்க மார்க்ஸின் அஸ்தியை கடலில் எங்கல்ஸ்தான் கலக்கிறார். எங்கல்ஸ் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு டெக்ஸ்டைல் மில் முதலாளி. மார்க்ஸ் குடும்பத்தின் வறுமையை ஒவ்வொரு நிலையிலும் துடைக்கும் உற்ற தோழனாக இருந்ததிலேயே தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டவர் எங்கல்ஸ்.  இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. தோழி ஒருவருடன் நீண்ட காலம் வாழ்ந்தவர்.  தோழி இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், மரித்த பிறகு இடுகாட்டில் இடம் தரப்பட வேண்டுமே என்பதற்காக, இதைக் காரணம் காட்டி தோழி வேண்டிக்கொண்டாள் என்பதற்காக, அருகிலிருந்த தேவாலயத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார் எங்கல்ஸ். நண்பனின் வாழ்வையே தனது வாழ்வாக கொண்ட எங்கல்ஸ் போல நண்பன் கிடைத்தவர் எவ்வளவு பேறு பெற்றவர்!
  
தனது உயிருக்குயிரான மனைவியை, நோய்தொற்று காரணமாக,  பார்க்க முடியாமல் அடுத்த அறையில் வறுமையுடனும், நோயமையுடனும் போராடியபடியேதான் தன் அந்திம நாட்களைக் கழித்தார் மார்க்ஸ்.  மனைவி இறந்த பிறகு, அடக்கம் செய்யும் மயானத்திற்கு அவரால் போக முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்த பிறகு, அவரின் கடைசி மகளும் எங்கல்சும்தான் அங்கு கூட்டிச் செல்கிறார்கள். மனைவிக்குப் பிறகு, தனது மூத்த மகளை நோயில் பறிகொடுக்கிறார். இந்த இருவரின் மரணமும் அவரை முற்றாக முறித்துப் போடுகின்றன.  சில மாதங்களிலேயே சோகம் அழுத்த இந்த மண்ணிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்.

மானுட துயரம் இதற்குப் பிறகும் மார்க்ஸின் குடும்பத்தை விடவில்லை. எஞ்சியிருந்த இரண்டு பெண்களும் மன அழுத்தம் காரணமாக தங்களது கணவர்களுடன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டார்கள்.  கடைசிப் பெண்ணின் தற்கொலை எங்கல்சை மிகவும் பாதித்தது.  ஏனென்றால், அவளே தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியுள்ளபடி, எங்கல்சும் அவளுக்கு தந்தைதான்.

எஸ்ரா சொல்கிறார்: மார்க்ஸ் வாழ்வால் துரத்தப் பட்டவர்.  பிறந்த பிரஷ்யாவிலிருந்து, பாரீசுக்குப் போய், பிறகு இங்கிலாந்தில் இந்த ஜீவன் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், மானுட குலத்திற்கு தன்னுடைய பங்களிப்பாக, கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை என்ற இருபத்தேழு பக்கங்கள் கொண்ட சிறு நூலையும், மூலதனம் என்கிற ஒரு மகத்துவமான பொருளாதார விளக்கப் புத்தகத்தையும் எழுதி நமக்கு அளித்துள்ளார். பதிமூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ள மூலதனத்தின் முதல் பாகம் மட்டும்தான் மார்க்ஸ் தனது கைப்பட எழுதியது.  எஞ்சிய பாகங்கள் தோழர் எங்கல்ஸ் அவர்களால் தொகுக்கப்பட்டது.

தொடர்ந்து துரத்திக்கொண்டிருந்த வறுமை, குழந்தைகளின் மரணம், தனது மனைவிக்கோ குடும்பத்திற்கோ சின்னஞ்சிறு சந்தோஷங்களையும் கொடுக்கத் துப்பில்லாமல் போன மார்க்ஸ், இந்த உலகத்தையே உய்வித்த சோஷலிசக் கொள்கையின் அடிநாதமான தத்துவத்தை வழங்கிவிட்டே சென்றிருக்கிறார்.  இந்த உலகின் பொருளாதார வரலாற்றை, மானுட வரலாற்றை எழுதும் எவனொருவனும் மார்க்ஸிற்கு சில அத்தியாயங்களை ஒதுக்கியே ஆக வேண்டும். மாவீரர்களும், மாமேதைகளும் நடப்புலகில் வாழ்வதில்லை.  கனவுகளை ஊடுருவி எதிர்காலத்தில் வாழ்பவர்கள் அவர்கள். இவர்கள் இறப்பதில்லை.  தாங்கள் வழங்கியிருக்கிற தத்துவத்தால், பங்களிப்பால் காலம்தோறும் வாழ்கிறவர்கள். மார்க்ஸ் மாவீரரும் மாமேதையுமானவர்.     

நன்றி எஸ்ரா! உங்களது இந்தப் பொழிவை தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்களது மாணாக்கருக்கு எடுத்துச் செல்லும் அறிவை எந்தக் கடவுளாவது, இயற்கையாவது அவர்களுக்கு வழங்கக் கூடட்டும்!



0 comments:

Post a Comment