கிழவன் காட்டும் கடல்

| Wednesday, October 5, 2016
செப்டம்பர் மாத 'விகடன் தடம்' இதழில் தமிழ் வட்டார இலக்கியத்தின் "முன்னத்தி ஏர்" கி.ராஜநாராயணன் அவர்களின் அட்டகாசமான பேட்டி ஒன்று வந்திருக்கிறது.  நீண்ட, மிர சுவராசியமான செவ்வி.  தமிழில் இப்படி ஒரு நேர்காணலைப் படித்து ரொம்ப நாளாகிறது.  மொழி, இலக்கியம், கதை சொல்லுதல், அரசியல் தொடர்புகள், சுதந்திரம், சொந்த வாழ்க்கை என்று தொட்டு நீள்கிறது இந்தப் பேட்டி. "இலக்கியம் சோறு போடும்னு நினைக்கிறீங்களா?" என்ற கேள்விக்கு கரிசல் காட்டுக்காரரின் பதில்" "போடும்.. நான் சாப்பிட்டுருக்கேன்".  

எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. தமிழ் இலக்கிய பட்டப்படிப்பில், முதுகலை படிப்பில் ஒரு தாள் 'நடந்து கொண்டிருக்கும்" இலக்கிய சூழலைப் பற்றியதாக இருக்க வேண்டும்.  Contemporary Literature என்றதாக இருக்கும் தாள்களின் பாடத்திட்டத்தை வகுக்கும்போது கூட முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மரித்துப் போன எழுத்தாளர்களின் கதைகள் / கவிதைகள் /  கட்டுரைகள்தான் இடம்பெறுகின்றன.  நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகள், அந்த வருடம் வெளியான முக்கிய படைப்புகள், தரப்படும் விருதுகள் - தொடரும் விவாதங்கள், இலக்கியப் பத்திரிக்கைகளின் போக்குகள் போன்றவை அந்தத் தாளில் இடம்பெற வேண்டும்.  பெருமாள் முருகனை "கோழையின் கவிதைகள்" என்ற படைப்போடு வரச் செய்தது எது? மாதொருபாகனில் சரி தவறு என்று எதையெதை இலக்கியம் பயிலும் மாணவன் நினைக்கிறான்? இதற்கெல்லாம் அவனுடைய எதிர்வினை எப்படிப்பட்டதாக இருக்கிறது? - என்பதெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட கேள்விகளே.  இந்தத் தாளின் பாடத்திட்டத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்தே அந்தந்த நிறுவனங்களில் அமைத்துக் கொள்ளலாம்.  தன்னாட்சி என்பதில் இதுவும் அடக்கம் என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்த பேராசிரியர் ஒருவர், எம்.பில். பட்ட ஆய்வுக்கு சேரும் மாணவர்களின் விருப்பத்தின் மற்றும் பரிந்துரையின் பேரிலேயே அவர்கள் எழுத வேண்டிய ஒரு பரீட்சையின் பாடத்திட்டத்தை அமைப்பார்.  நாங்கள் எல்லாம் பொறாமைப்படும் விதமாக அது அமையும்.  அப்படிப்பட்ட ஆய்வு நெறியாளர் கிடைப்பதுமே கூட "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற வரிசையில்தான்.

மறுபடியும் கி.ராவின் செவ்விக்கு வருகிறேன்.  தொண்ணூற்று நான்கு வயதில், ஒரு மனிதன் இலக்கியம் / வாழ்வியல் / அரசியல் போன்றவற்றை இப்படித் தெளிவாகச் சிந்திக்க முடியுமா? 'மனம் திறந்த பேட்டி' என்பதாக சில சிஞ்சிகைகள் caption போடுவதுண்டு.  'ஆத்மா திறந்த பேட்டி' என்றுதான் தடம் இதழுக்கு கி.ரா. கொடுத்த நேர்காணல் தெரிகிறது.

கி.ரா. போன்றவர்கள் நிறைய நாட்கள் வாழ்வது வீட்டுத் திண்ணையில் பெரிசு கட்டில் போட்டு உட்கார்ந்து வீட்டையும் தெருவையும் காவல் காப்பது போன்றது.  பாண்டிச்சேரி மண் புண்ணியம் செய்திருக்கிறது.  இடைசெவலின் நட்டம், புதுச்சேரியின் லாபம்.

0 comments:

Post a Comment