தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - குறுக்கு வெட்டுப் பார்வை

| Thursday, October 27, 2016


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - குறுக்கு வெட்டுப் பார்வை 

-முனைவர் மு.பிரபு 

அறிமுகம் 

ஜனநாயகம் ஒன்றின் முதுகெலும்பான அம்சம் எதுவெனில் அந்த அமைப்பின் சாதாரண குடிமகன் ஒருவன் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற முடியும் என்பதே.  அரசும் அதன் அதிகாரிகளும் எப்படி இயங்குகிறார்கள் என்பதை அறிய அனைத்து வழிகளும் ஜனநாயக அமைப்பொன்றில் ஒரு சாதாரணனுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஜனநாயக அரசொன்றின் மந்தனத் திரைகள் முழுவதுமாக நீக்கப்பட்ட நிலையில்தான் அது தான் ஏற்படுத்தப்பட்ட லட்சியத்தைத் தொட முடியும். உண்மையில், அனைத்து தகவலும் அனைவருக்கும் கிடைக்கும் நிலையில்தான் ஜனநாயக அமைப்பொன்று வெற்றிபெற்றதாகக் கருத முடியும். 

இதை வேறு விதமாகவும் சொல்லலாம்.  ஜனநாயக அமைப்பொன்றில் தகவலை வெளியிடுவது விதியாகவும், தகவலைப் பொதுப்பார்வையிலிருந்து விலக்குவது அல்லது மந்தனப்படுத்துவது விலக்காகவும் இருக்க வேண்டும்.  அப்படி தகவலை  பொதுப்பார்வையிலிருந்து விலக்கும் நேர்விலும் கூட, அந்தச் செயல் பொதுநலன் கருதிதானா என்று உறுதி செய்யப்படல் வேண்டும். தேச இறையாண்மை, தேச பாதுகாப்பு போன்ற சில விடயங்களைத் தவிர மற்ற அனைத்து விடயங்களிலும் ஒளிவு மறைவற்ற தன்மை இருந்தால்தான் ஜனநாயகம் தன்னுடைய இருப்பை நியாயப்படுத்த முடியும்.

சட்ட வரலாறு 

இந்தியாவில் தகவல் அறியும் உரிமையைப் பொறுத்தவரை சட்ட ரீதியான நீண்ட வரலாறு உண்டு.  உத்தர பிரதேச அரசு எதிர். ராஜ் நாராயன் வழக்கில் உச்ச நீதி மன்றம் தெரிவித்திருப்பது முக்கியமானது. "நமது நாட்டைப் போன்ற ஒரு ஜனநாயக அமைப்பில், அரசும் பொதுமக்களும் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும்.  இத்தகைய அமைப்பில் ரகசியம் என்பது மிகவும் குறைவாகவே இருத்தல் தகும். இந்த அரசின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும், அவற்றின் செயற்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டுக் குடிமகனுக்கு உண்டு.  அனைத்துப் பொது அதிகார அமைப்புகளும் அவற்றின் செயற்பாடுகளும் வெளிப்படையாகவே இருத்தல் வேண்டும்.  ரகசியம் ஆகாது.  இந்த அதிகார அமைப்புகளின் ஒவ்வொரு செயற்பாடும் போது மக்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும்.  தகவல் அறியும் உரிமை என்பது அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.  பேச்சுரிமை என்பதிலிருந்து தகவல் அறியும் உரிமை கிளைக்கிறது."   

முத்திரையான தீர்ப்புரைகள் 

இன்னொரு வழக்கான எஸ்.பி.குப்தா எதிர். இந்திய நடுவண் அரசு (AIR 1982 SC 149) என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. "ஒளிவு மறைவற்ற அரசாங்கம் என்பது தகவல் அறியும் உரிமை என்பதிலிருந்தே தொடங்குகிறது.  இந்த உரிமையானது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு (19) (1) (a)-ல் உத்தரவாதமளிக்கப் பட்டுள்ளது.  ஆகையால், தகவல் அளிப்பது என்பது அரசின் செயல்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதும் விதிகளின்படியானதும் ஆகும்.  மந்தணம் என்பதுதான் விலக்காக இருக்க முடியுமே தவிர, தகவல் அளிப்பது என்பது அல்ல.  வெளிப்படையான அரசு கோரப்படும் தகவல்களை அளிப்பதில் ஆர்வம் கொண்டதாகவே இருக்க முடியும்.  பொதுநலனுக்கு நன்மை என்ற நேர்வுகளில் அரசானது தகவல் அளிக்க முன்வருகிறது என்பதை உறுதி செய்யும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு."  

மற்றுமொரு வழக்கான தினேஷ் திருவேதி எதிர். இந்திய நடுவண் அரசு (1997) 4 SCC 306-ல் உச்ச நீதிமன்ற இப்படியான கருத்தைத் தெரிவித்துள்ளது.  "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் நலன் பொருட்டு செயற்படும் அரசானது நாட்டுக் குடிமகன்களுக்கு தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்பதைப் புரிந்த அரசாக மட்டுமே இருக்க முடியும்."

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயற்படும் விதத்தை மீளாய்வு செய்வதற்கான தேசிய குழுவின் தலைவர் நீதியரசர் எம்.என்.வெங்கடாச்சலையா அவர்கள் தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியுள்ளதாவது: "ஒரு அரசை நிர்வகிப்பது பற்றி பல புதிய போக்குகள் தோன்றிய வண்ணம் உள்ளன.  அவற்றில் முக்கியமானது தகவல் அறியும் உரிமையாகும்.  சாதாரண குடிமகன் தனக்கு வேண்டிய தகவல் தன்னிடம் இல்லாத காரணத்தினால் மட்டுமே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறான். தன்னுடைய சிக்கல்களுக்கு யார் காரணம், யார் அந்த சிக்கல்களை விடுவிக்க முடியும் என்று தெரியாத அப்பாவியாகவும் கோடிக்கணக்கான மக்கள் இந்தத் தேசத்தில் உள்ளனர்.  தன்னுடைய பிரச்சினைகள் அரசால் எப்படி கையாளப்படுகின்றன என்பதை ஒரு சாதாரண குடிமகனால் தெரிந்து கொள்ளவே முடிவதில்லை. அதிகாரிகளை அணுகித் தெரிந்துகொள்ள அவனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.  அதிகாரிகள் எளிதில் அணுக முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.  குடிமகன்களை எடுத்தெறிந்து பேசியும் துடுக்காகவும் நடந்து கொள்பவர்களாகவே அதிகாரிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள்.  இத்தகைய நிலையில் தகவல் அறியும் உரிமை உத்தரவாதமளிக்கப் பட வேண்டுவது மட்டுமன்றி இந்தச் சட்டத்திற்கு சிறப்பான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.  கோரப்படும் தகவல்கள் குடிமங்களுக்கு சீராக போய்ச்சேருவதை உறுதிப்படுத்தும் விதமான செயல்முறைகளை ஏற்படுத்துவதில் அரசுக்கு ஆதாரமான பொறுப்புண்டு. நாம் நீண்ட காலங்களாக ரகசியங்களைப் பேணுவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.  வெளிப்படையாக நிர்வாகம் இயங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.  உண்மையில் ரகசியக் காப்புப் பிரமாணம் என்பதிற்குப் பதிலாக ஒளிவற்றத் தன்மைப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.  நிர்வாகம் என்பது ஒளிவற்றதாகவும் சாதாரணன் பங்குபெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.  நிர்வாகத்தின் 'தாமதப்படுத்துகிற' பாசாங்குகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.  இவைகளை ஏற்படுத்தினால்தான் லஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்."

தகவல் சாதாரணனின் உரிமை 

மேலே சொன்ன தீர்ப்புரைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவையை உணர்த்துவதாகவே உள்ளன.  மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் அரசானது எப்படி இயங்குகிறது என்று அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.  தன்னுடைய பணம் நேர்மையாக சமூக நலன் பொருட்டு செலவிடப்படுகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஒருவரின் உரிமையைத் தவறென்று எப்படி சொல்ல முடியும்?  தகவல்களை வெளியிடுவது என்பது உரிமைமீறல் என்பதாகவும் பார்க்கப்பட்டு வந்தது விந்தையே. ஆனால், மாறிய சூழலில் தகவல்களை வழங்க மறுப்பது நிர்வாகத்தின் துர்நடத்தை என்பது மட்டுமன்றி குற்றமும் ஆகும்.  அரசுக்கு இருக்கும் பொறுப்பை ஒரு சாதாரண குடிமகன் உணர்த்த முடியும் என்பது தகவல்களை முழுமையாகப் பெற்றிருக்கும் நிலையிலேயே முடியும்.  ஆகவே, தகவல்களை வழங்க நடுவண் அரசும் மாநில அரசுகளும் எந்த அளவுக்கு முன்வருகின்றன என்பதைப் பொறுத்தே தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் பயன்பாடும் ஆற்றலும் இருக்கும்.

சட்டப் பின்னணி 

உலக அரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரலாறு என்ன? இதன் ஆதி 1948 மார்ச் மாதத்தில் இருக்கிறது.  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஜெனீவாவில் 1948 மார்ச் மாதம் கூட்டப்பட்டதில் 54 நாடுகள் கலந்துகொண்டு தகவல் பெறும் - வழங்கும் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக அறிவித்தன.  இது குறித்து 10-12-1948ந் திகதி ஒரு முறையான அறிவிப்பையும் பொதுச்சபை வெளியிட்டது.  பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூகக் கழகம் (Economic and Social Council) தகவல் சுதந்திரத்திற்கான சாற்றுதலை (Declaration) முறையாக அறிவித்தது.   உலகத்திலேயே முதன்முறையாக ஸ்வீடன் அரசு தகவல் அறியும் உரிமையை தன்னுடைய குடிமகன்களுக்கு சட்டபூர்வமாக வழங்கியது.  இதையடுத்து, வேறு சில நாடுகள் தங்களுடைய பாராளுமன்றங்களில் இது குறித்த சட்டங்கள் நிறைவேற்றின. 

இப்படியான அடிப்படையான உரிமையை இந்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் மூலமாக அங்கீகரித்து நமது ஜனநாயகத்தில் முடிவெடுக்கும் வழிமுறைகளில் சாதாரணன் பங்கு பெறுவதை உறுதி செய்கிறது. ஆனால் இதற்கு முன்னமேயே, 1997ம் ஆண்டு தகவல் சுதந்திரத்திற்கான சட்ட வரைவு ஒன்று திரு.H.D.ஷோரி (HD Shourie) தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ இது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் படாமலேயே கழித்துக் கட்டப்பட்டது.  இதற்குப் பிறகு 2000-ல் இன்னுமொரு முன்னெடுப்பு செய்யப்பட்டது. தகவல் சுதந்திரத்திற்கான தேசிய வரைவு (National Freedom of Information Bill, 2000) நாடாளுமன்றத்தில் தாக்கீது செய்யப்பட்டு, 2002-ம் ஆண்டு சட்டமாக இயற்றப்பட்டது.  ஆனால், இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தேதியை அறிவிக்காமல் விட்டதால், தானாகவே காலாவதியாகி விட்டது.  பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா 2004 நாடாளுமன்றத்தில் 23-12-2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக (Parlimentary Standing Committee) அனுப்பப்பட்டது. நிலைக்குழுவின் அறிக்கை மக்களவையில் 21-3-2005 அன்று தாக்கல் செய்யப்பட்டு, பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா 11-5-2005 அன்று மக்களவையால் நிறைவேற்றப்ப்பட்டது.  ஒரு மாதத்திற்குப் பின்னர், அதாவது 12-5-2005 அன்று இந்த மசோதா மேல்சபையாலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, நடுவண் அரசு பணித்துறை வெளியீட்டில் (Gazette) 15-6-2005 அன்று அறிவிப்பு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - சிக்கல்கள் 

தற்போது நடைமுறையில் இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உண்மையில் தகவல் சுதந்திரத்திற்கான சட்டம் 2002ன் செறிவூட்டப்பட்ட வடிவமே ஆகும். அரசு இயந்திரங்களில் மலிந்திருக்கும் லஞ்சம், ஊழல் மற்றும் பிற நேர்மையற்ற செயல்களை சாதாரண குடிமகனே வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும் என்பதான வகையிலே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு வந்து பதினொரு ஆண்டுகள் மட்டுமே முடிந்த நிலையில், அரசு பொதுமக்களிடமிருந்து நடைமுறை விஷயங்களை ரகசியப்படுத்த முடியாது என்பதும் அரசு இயந்திரமானது ஒளிவு மறைவற்ற விதத்திலே இயங்க வேண்டியது கட்டாயம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் பொதுமக்கள் அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை கேள்வி கேட்கக்கூடியவர்களாக, தவறைச் சுட்டிக்காட்டக் கூடியவர்களாக, அரசு இயந்திரத்தின் நேர்மையற்ற செயல்களை பொதுவெளியின் கவனத்திற்கு கொண்டு வருபவர்களாக, அரசின் மெத்தனத்தால் விளைந்த கால தாமதம் மற்றும் முறையற்ற செயல்களால் விளைந்த கெடுதிக்கு நிவாரணத்தை ஆதாரங்களுடன் வேண்டுபவர்களாக உருவெடுத்துள்ளார்கள் என்பது இந்தச் சட்டம் பெற்றுள்ள பெருவெற்றியாகும். இச்சட்டத்தைப் பற்றி பல்வேறு அதிருப்திகள் எழுந்த வண்ணம் உள்ளது என்பது உண்மைதான். சொல்லப்போனால், கோப்புக் குறிப்புகளையும், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கான காரணங்களையும் தகவல் கோருபவருக்கு வழங்க வேண்டியதில்லை என்னும் வகையில் இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாக எழுந்த அதிருப்திக் குரல்கள் நல்லவேளையாக வலுப்பெறவில்லை.

வேறொரு விமர்சனமும் இச்சட்டத்தைப் பற்றி பரவலாக உள்ளதை அறிய முடிகிறது. இச்சட்டப் பிரிவு 7ல் சொல்லியுள்ளபடிக்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டுமென்பது அரிதாகவே பொது அதிகார அமைப்புகளால் பின்பற்றப்படுகிறது. பல நேர்வுகளில், சட்டத்தால் கொடுக்கப்பட்ட கெடுவிற்கும் மீறி தாமதமான நிலையிலேயே தகவல் வழங்கப்படுகிறது. அலுவலகங்களில் மனித வள, நிதி வள ஆதாரங்கள் போதாமை எனும் காரணங்கள் இப்படியான கால தாமதத்தை நியாயப்படுத்த முடியும் என்றாலும், இவை போன்ற தொடர் தாமதங்கள் இச்சட்டத்தின் வீரியத்தை குறைத்துவிடும் அபாயம் உண்டு. தகவல் வழங்குவதற்கென்றே அலுவலர்களை பொது அதிகார அமைப்புகள் ஏற்படுத்திக் கொள்வது கால தாமதத்தை தவிர்க்க வழி செய்யும். தற்சமயம் ஒரு அலுவலகத்தின் உயர் அலுவலர் தன்னுடைய இயல்பான பணிக்குக் கூடுதலாக பொதுத் தகவல் அலுவலர் பொறுப்பை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், தகவல் வழங்கும் அலுவலர் கோரப்பட்ட தகவல்களை வழங்க பல சமயங்களில் பிற அலுவலர்களின் மற்றும் பணியாளர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனாலும் குறிப்பிட்ட நேர்வுகளில் காலதாமதம் தவிர்க்கப்பட முடியாததாகிறது. ஆனாலும், இத்தகைய நேர்வுகள் காலப்போக்கில் அரிதாகிவிடும் என்றும் அரசு இயந்திரம் தகவல்களை தாமதப்படுத்தாமல் வழங்க முன்வரும் என்றும் எதிர்பார்க்கலாம். மக்களின் விழிப்புணர்வு தீவிரமடைகின்றபொழுது இப்படியான காலதாமதங்கள் அரிதாகிவிட வாய்ப்புகள் அதிகம்.

இத்தருணத்தில் இச்சட்டத்தின் அடிப்படையில் எழுந்த தாவா ஒன்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமே. இச்சட்டப்பிரிவு 20ன் அடிப்படையிலே எழுப்பப்பட்ட தாவா ஒன்றில் தீர்ப்பளித்த மத்திய தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட நேர்வில் பொதுத்தகவல் அலுவலரும் மேல் முறையீட்டு அலுவலரும் வரவு செலவு திட்டம் தயாரித்தல், நிதியாண்டு முடிவு நடைமுறைகள், தேர்தல், சட்டத்துறையோடு கலந்தாலோசித்தல் போன்ற பணிகள் இருந்ததால் ஏற்பட்டிருந்த காலதாமதம் தவிர்க்க முடியாதது என்றும் காலதாமதமானது சரியான காரணங்களின் அடிப்படையிலேயே நேர்ந்திருப்பதால் இச்சட்டப்பிரிவின்படி பொதுத்தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் ஆகியோர் வேண்டுமென்றே சட்டத்தை மீறியவர்களாக கருதப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் தீர்ப்பளித்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 19(1)(a) தகவல் பெறும் சுதந்திரத்தைப் பற்றி பேசுகையில், இது ஒரு அடிப்படையான உரிமை என்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டென்றும் சில விசேஷமான நேர்வுகளைத் தவிர, (இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, அயல் நாட்டுறவு, பொது ஒழுங்கு) வேறு விடயங்களில் இந்த அடிப்படை உரிமை அனைத்து குடிமகன்களுக்கும் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் கூறுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த குறிப்பிட்ட சாராம்சத்தைப் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட மேதை P.N.பக்க்ஷி (P.N.Bakshi) கூறுகையில், இந்த நாட்டுக் குடிமகன் ஒருவன் அரசு மற்றும் அதன் அங்கங்களைப் பற்றிய செயல்பாடுகளைப் பற்றியும் மட்டுமல்லாது அரசின் முகமைகளின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் உரிமை கொண்டுள்ளான். அரசு இயந்திரத்தின் நிர்வாக விஷயங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தேவையில்லை என்பதானது காலாவதியாகி விட்ட ஒரு போக்கு. அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 19ன் படி பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை. பேச்சுரிமை என்பது தகவல்களை அறிகின்ற உரிமை என்பதால் மட்டுமே சாத்தியப்படும். வேண்டுமானால் அரசானது சில விஷயங்களில் மட்டும் சில ரகசியங்களை - அரசின் பாதுகாப்பு, இறையாண்மை - போன்றவற்றை பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கி வைக்கலாம். ஆனால், அப்படியான நேர்வுகளிலும் ஏன் அந்த தகவல்கள் தன்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன என்பதை அறிகின்ற உரிமை குடிமகனுக்கு உண்டு.

தகவல் அளிப்பதில் தமிழ்நாடு

நடுவண் அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஐ நடைமுறைப்படுத்தியதற்கு சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 1997 அரசிதழில் அறிவிக்கப்பட்டு 5.5.1997 முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டப்படி தகவல் வழங்கும் அலுவலர் கோரப்பட்ட தகவலை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்காதிருக்கும் நேர்வில், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு விதிக்கப்படும் அபராதம் என்ன என்பதைப் பற்றி இச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து பின்னர் எழுந்த தாவாக்களில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 1997 நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதன் மேலுரிமைப்பாடாக (Overiding) நடுவண் அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நடைமுறைக்கு வந்துள்ளதால் அன்றைய நாள் வரை முடிவு செய்யப்படாமல் தேங்கியிருக்கும் வழக்குகள் நடுவண் அரசின் சட்டத்தின்படியே முடிவு செய்யலாகும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (Diamond Jubilee Higher Secondary School Vs. Union of India 2007 - 3MLJ (77)).

இந்திய சாட்சிய சட்டம் 1872

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உண்மையில் இந்திய சாட்சியச் சட்டத்தின் (1872) நீர்த்துப்போன வடிவம்தான் என்று சொல்வோரும் உண்டு. இந்திய சாட்சியச் சட்டம் 1872 முதல் அமலில் இருந்து வருகிறது. இந்திய சாட்சியச் சட்டத்தின்படி பெறப்பட்ட சான்று நகலை எந்த ஒரு நீதிமன்றத்திலும் தக்க சான்றாவணமாக பயன்படுத்தலாம் என்பது இச்சட்டப்பிரிவு 77ன் படி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பெறப்பட்ட தகவலை நீதிமன்ற தாவாக்களில் தக்க சான்றாவணமாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றி இச்சட்டப் பிரிவுகள் எதுவும் கூறாமல் உள்ளன. மேலும், இந்திய சாட்சியச் சட்டத்தின் படி எந்த அலுவலரிடம் மனு விண்ணப்பிக்கப்படுகிறதோ அந்த அலுவலர் ஒரு வாரத்திற்குள் தகவலை வழங்க வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் படி தகவல் வழங்குவதற்கென்றே சிறப்பாக நியமிக்கப்பட்ட அலுவலரிடம் மட்டுமே மனு செய்ய இயலும். மேலும், இச்சட்டப் பிரிவு 7 தகவல் அளிக்க 30 நாட்களை கெடுவாக நிர்ணயித்துள்ளது. மேலும், இந்திய சாட்சியச் சட்டம் 1872ன் படி குறிப்பிட்ட நேரத்தில் கோரப்பட்டுள்ள தகவல் வழங்கப்படவில்லை எனும் நேர்வில், பிரிவு 159ன் கீழ் நினைவூட்டல் ஒன்றைத் தொடர்ந்து தேவையான நீதிமன்ற வழக்கு தொடர முடியும். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் படி தகவல் வழங்கப்படாத நேர்வில் எவ்வித வழக்கும் தொடுக்க இயலாது. இன்னமும் கூட பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் இந்திய சாட்சியச் சட்டம் 1872-த்தில் வீரியமாக உள்ளன என்றும் அத்தகைய சங்கதிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நீர்த்துப்போகச் செய்துவிட்டது என்று சொல்வாரும் உண்டு. அவை உண்மையாகவும் இருக்கலாம். இருந்தாலுமே கூட, பொது அதிகார அமைப்புகளிடமிருந்து தகவலை கேட்டுப்பெறும் உரிமையானது தங்களது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற விழிப்புணர்வு இந்த நாட்டுக் குடிமகன்களிடம் பெரிய அளவில் கொண்டு வந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நூற்பட்டியல்:
1. Acharya.N.K. Commentary on the Right to Information Act, 2005, Asia Law House, Hyderabad, 2013.
2. Rajaraman.S. The Right to Information Act, 2005, C.Sitaraman Company Private Limited, Chennai, 2005.
3. Venkatesan.S.N. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Giri Law House, Salem, 2013.
4. புலமை வேங்கடாசலம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Giri Law House, Salem,2015.

0 comments:

Post a Comment