தொட்டில் பழக்கம்

| Saturday, October 22, 2016
எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பதை யோசிக்க முடியவில்லை.  ஏதாவது தமிழ் அல்லது வரலாறு பரீட்சையின்போது இருக்கக்கூடும்.  தெரியாத கேள்விக்கு மனோ ராஜ்யத்திலிருந்து கற்பனையாக விடைகளை எழுதியபோது ஆரம்பித்திருக்கலாம்.  ஆனால் எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவிருக்கிறது.  தந்தையார் - அம்மா இருவரும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்.  தந்தையார் அதிகம் வாசிக்க மாட்டார்.  அவர் நல்ல ‘கோச்’ என்று சொல்ல வேண்டும்.  அம்மாவிற்கும் எனக்கும் ஏதாவது புத்தகங்களை வாங்கிக் கொடுத்தபடி இருந்தார்.  காசு விஷயத்தில் இழுத்துப் பிடிப்பவர் என்ற எண்ணம் எனக்கு உண்டு.  அம்மாவிற்குமே அதுமாதிரி அபிப்பிராயம் உண்டு. மாறாக, புத்தகங்களைப் பொறுத்த வரையில் அவர் ஒரு ஊதாரி என்றுதான் சொல்ல வேண்டும்.  மற்றவர்களை சாப்பிட வைத்து மகிழ்பவர்கள் என்று சில குணவதிகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.  தந்தையார் எங்களை வாசிக்க வைத்து மகிழ்ந்த குணவான்.  அப்பா இல்லாத இன்றைய நாட்களில் அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் என்னிடம் “படி” என்று சொல்லிய வண்ணம் இருக்கின்றன.  அப்பாவின் குரலிலேயே அந்தப் புத்தகங்கள் என்னிடம் பேசுவது ஏன் எனக்கு வியப்பாக இல்லை?
 
இன்னொன்று கூட என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டும்.  மிகச் சிக்கலான சமயங்களில், மனம் பல்வேறு உளைச்சல்களுக்கு ஆளாகி உறையும் தருணங்களில், துயரம் கவிழும் நாட்களில் ‘இனிமேல் புத்தகங்களைத் தொடக்கூடாது’ என்று சபதம் எடுத்தது உண்டு.  பல புத்தகங்களை வாரி நண்பர்களிடம் கொடுத்தது நிறைய முறை நடந்திருக்கிறது.  ஒருமுறை படிப்பதற்காக சேகரித்து வைத்திருந்த – இன்னும் தொடவே தொட்டிராத – இருபது முப்பது புத்தகங்களை நண்பனிடம் தூக்கிக் கொடுத்ததும் நடந்திருக்கிறது.  வாங்கவே மனசில்லாமல், கட்டாயப்படுத்தியதால், கொண்டு போனான்.  அப்பா இறந்த அந்தத் துக்கம் நிறைந்த நாட்களிலும் அப்படித்தான்.  நிறைய புத்தகங்களைக் கழித்துக் கட்டினேன்.  முதன்முறையாக புத்தகங்களை விற்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.  தனியார் பள்ளி ஒன்றின் நூலகத்திற்கு 140 புத்தகங்களை எண்ணி பாதி விலை போட்டு கறாராக விற்றுத் தலைமுழுகினேன்.  குடிகாரன் தன்னுடைய வீட்டிலிருக்கும் விலையுயர்ந்த பொருள்களை விற்கும் துயரத்திற்கு சமமான காரியம் என்னுடையது என்று அம்மா பிற்பாடு, நான் அமைதியடைந்த நாட்களில், மெதுவாக வலிக்காதபடிக்கு சொன்னபோது ரொம்பவும் வலித்தது.

இப்போது, பழைய தீவிரத்தோடு மறுபடியும் புத்தகங்களை வாங்க ஆரம்பித்துவிட்டேன்.  மீண்டும் படிக்கிறேன்.  எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பதுதான் கேள்வி.  எல்லாப் பசங்களையும் போல கவிதை எழுதியிருக்கிறேன்.  அடுத்தத் தெருவில் கண்ணழகி ஒருத்தி இருந்தாள்.  சிரிக்கும் போது கன்னத்தில் குழிவிழும்.  என்னைப் பார்த்து சிரிக்கும்போது மட்டும் குழி அதிகம் விழுவதாக சிநேகப் பசங்கள் சொன்னதுண்டு.  அப்போது தாடி ராஜேந்தர் சினிமாவில் பிரபலமாக இருந்ததால், அவர் பேசுவது போலவே சில கவிதைகள் எழுதினேன்.  அவளிடம் கொடுத்தபொழுது நாகரீகமாக மறுத்தவாறே தன்னுடைய அண்ணன் ராதாரவி போல இருப்பதை ஞாபகப்படுத்தினாள். அவளிடமிருந்து விலகி, கவிதைகளை தமிழ் ஐயாவிடம் காண்பிக்க, ‘கணக்கும் கவிதையும் உனக்கு வராது’ என்று உறுதிபடக் கூறிவிட்டார்.  கணக்கு வாத்தியார் ஐயாவுக்கு ரொம்ப தோஸ்த்.  அப்போது விட்டதுதான்.  கிட்டத்தட்ட அதே சமயத்தில் வாசிப்பு தாங்க முடியாத தீவிரம் அடைந்திருந்தது.  ஆங்கிலத்திலுமே செய்தித்தாள்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன்.  The Hindu மற்றும் Indian Express இரண்டுமே வீட்டிற்கு வருமென்பதால், விளையாட்டுச் செய்திகளில் தொடங்கி முதல்பக்கம் வரை எல்லா தலைப்புச் செய்திகளையும் படித்துவிட்டு, சினேகக்காரர்களிடம் பெரிய பெரிய பெயர்களையெல்லாம் அவிழ்க்கும்போது மிரண்டு போவார்கள்.

அண்மையில் சுந்தர ராமசாமி பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றை இணையத்தில் வாசிக்க வாய்த்தது.  “தொடர்ந்து படிக்காதவன் எழுத முடியும் என்பதை நான் நம்பவில்லை” என்பதாக சுரா தன்னிடம் சொன்னதாக கட்டுரை ஆசிரியர் சொல்லியிருந்தார்.  புத்தகங்களைப் படித்தவுடன் அவை பற்றிய குறிப்புகளை எழுதி வருவது நல்ல பழக்கம் என்று சுரா அதில் கூறியிருந்ததில் எனக்கு சந்தோசம்.  கடந்த முப்பது வருடங்களாக இதைச் செய்து வருகிறேன்.  படித்து முடித்தவுடன் புத்தகத்தின் பின் அட்டை உள்பக்கத்தில் அதைப்பற்றி ஏதாவது எழுதுவேன் அல்லது ஒரு தாளை இரண்டாக மடித்து நான்கு பக்கங்களில் நுணுக்கி குறிப்பெழுதுவேன்.  அந்தப் புத்தகங்களை இப்போது படிக்கையிலும் என்னுடைய குறிப்புகள் என் வாசிப்புத் தரத்தைப் பெருமைப் படுத்துவதாகவே இருக்கின்றன.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மாணவன் ஒருவன் வலைப்பக்கம் ஒன்று துவக்கித் தந்தான்.  தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் ஒலிபெயர்த்து தமிழாக மாற்றும் மென்பொருள் கணினியில் பதிவிறக்கிய பிறகு, எழுதும் வேகம் அதிகமானது.  இருநூறுக்கும் அதிகமான புத்தகங்களைப் பற்றி எழுதி வலைப்பக்கத்தில் பதிப்பித்தாயிற்று.  பல எழுத்தாளர்களை எனது நண்பர்களுக்கு இதன் மூலம் அறிமுகம் செய்ய முடிகிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களைப் பற்றி எழுதியாகி விட்டது.  எழுதாமல் இருக்க முடியவில்லை என்ற நிலையில் இன்னொரு விஷயமும் புரிந்தது.  மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கான மாமருந்து ‘எழுத்து’. ஐந்து கிலோமீட்டர்கள் நடந்து பிறகு குளிர்ந்த தண்ணீரில் குளித்து தலை துவட்டும் போது உணர்வதை, சில பக்கங்கள் எழுதி முடித்த நிலையிலும் உணர்வது விந்தையானது; சுகமானதும் கூட.  ஆக எழுதுவது என்பது ஆரோக்கியத்திற்காக என்றாகிவிட்ட படியால், இப்போது தினந்தோறும் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது.  அதற்கேற்றாற்போல, அலுவலகத்திலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நித்தமும் எழுத வேண்டியிருக்கிற வரைவுகள், எதிர்வாதவுரைகள், மீளாய்வு – சீராய்வு மனுக்கள் ஆகிய அனைத்துமே பயிற்சியாகப் போய்விட, அப்பா போன துக்கத்திலிருந்து மெல்லத் திரும்பியிருப்பது நீண்ட கனவு போல இருக்கிறது.  “படிச்சுக்கிட்டே இரு, உனக்கு வேண்டியது எல்லாம் தானா வரும்” என்று தந்தையார் சொன்னது மந்திரமாகிறது.

இதையெல்லாம் எதற்காகச் சொல்லவேண்டி வந்தது என்றால், இன்றைய தமிழ் தி ஹிந்து (22-10-2016) தலையங்கத்தில் வலைப்பதிவர்கள் புத்தகங்களைப் பற்றியதான மதிப்புரைகளை அதிகம் எழுதுவதில்லை என்று குறைப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.  வலைப்பதிவர்கள் பெரும்பாலும் சினிமாக்களைப் பற்றியே எழுதுகிறார்கள் என்றும்,   குப்பைப் படங்களைப் பற்றிய பதிவுகள் கூட ஏராளமாக இணையத்தில் கணக்கிடைப்பதாகவும், புத்தக மதிப்புரைகளை இந்தப் பதிவர்கள் ஏன் அதிகமாக எழுதுவதில்லை என்றும் இந்தத் தலையங்கம் ஆதங்கப்படுகிறது. புத்தகங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுகிறேன் என்பதில் உண்மையாகவே சந்தோசம்.  தவிரவும், ஒரு பெரிய நாளிதழ் தமிழ் வாசகப் பரப்பில் என்ன நடந்து கொண்டிருக்கவேண்டும் என்று ஆதங்கப்பட்டுக் கொள்வதை, தன்னிச்சையாகவும் இயல்பாகவும் பல ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தேடித் தேடி வந்த இடம் இது.  போய்ச் சேரும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்ததோ, வந்தடைந்த இடம் அதை விட அற்புதமாக இருக்கும் போது, துவக்கத்தையும் பயணத்தையும் சாத்தியப்படுத்தித் தந்த தந்தையை வான் நோக்கி தாள் பணிந்து வணங்குவது தவிர வேறு என்ன செய்யக் கூடும் நான்?
     

0 comments:

Post a Comment