கல்லும் சிலையும்

| Monday, October 31, 2016


(A.R.வேங்கடசலபதி Madras Institute of Development Studies பேராசிரியர். முதுகலைப் பட்டம் வரலாற்றில் பெற்றவர். புது தில்லி ஜவஹர்லால் நேரு சர்வகலா சாலையில் முனைவர் பட்டத்தை “Social History of Tamil Publishing” என்ற தலைப்பில் முடித்தவர். இவரது நாவலும் வாசிப்பும்மற்றும் அந்தக் காலத்தில் காப்பி இல்லைபோன்ற புத்தகங்கள் அபுதின வகைமையில் முக்கியமானவை. இலக்கியத் திறனாய்வு, கர்த்தாக்களைப் பற்றிய ஆய்வுகள், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். ஆழமான அரசியல் நோக்கர். 2016 செப்டம்பர் 16-ந்தேதி The Wire இணையப் பத்திரிகையில் The Atheist and the Saint என்ற தலைப்பில் வேங்கடசலபதி எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழில்: முனைவர் மு.பிரபு

இருபது வயதே நிரம்பியிருந்த அந்த இளம் துறவி தருமபுரம் மடத்தில் சேர்ந்த வருடம் 1945.  சைவ சித்தாந்தம், தமிழ் இலக்கியம் மற்றும் சமஸ்கிருதத்தில் மேன்மையான புலமை கைவந்தது அந்தத் துறவிக்கு.  குன்றக்குடி திருவண்ணாமலை மடத்தின் ஆதீனம் தனக்கான இளவலை தேடிக்கொண்டிருந்த பொழுது, அவரது கவனத்தில் இந்த இளம் துறவி விழுந்தார். தருமபுரம் ஆதீனத்திற்கு இந்த இளம் துறவியை குன்றக்குடிக்கு அனுப்ப விருப்பமில்லை. எப்படியோ பேசி, அவரை குன்றக்குடிக்கு அழைத்து வந்தார்கள்.  மூன்று வருடங்களுக்குப் பிறகு, குன்றக்குடி ஆதீனமானார் அந்த 23 வயதுத் துறவி.
புதிய ஆதீனம் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அவசரப்பட்டார்.  சைவ சித்தாந்த மடங்கள் ஏற்படுத்தப்பட்ட இலட்சியங்களிலிருந்து காலப்போக்கில் விலகி, சாதி இந்துக்களான வேளாளர்களின் கோட்டைகளாக மாறியிருந்தன.  புதிய ஆதீனத்திற்கு இந்த நிலை சம்மதமில்லை; மடத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக குன்றக்குடி ஆதீனம் அருகிலிருந்த ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் சென்றார்.  இதையும் தாண்டிய படிக்கு, தமிழில் அர்ச்சனை மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆவது என்பதாக சீர்திருத்தங்கள் தொடர்ந்தது. 

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும், பூதான் இயக்கத்திலும் தீவிரமான பங்கெடுத்தார் குன்றக்குடி ஆதீனம்.  இதன் காரணமாகவோ என்னவோ, ஆதீனம் மக்களால் குன்றக்குடி அடிகளார் (1925-1995) என்றே அழைக்கப்பட்டார்.  இறைவனுக்குத் தொண்டு செய்வதையே தனது முழுநேரக் கடமையாகக் கொண்ட ஆதீனம் ஒருவர், நாத்திகரான பெரியார் ஈ வெ ராமசாமி அவர்களுக்கு ஆப்த நண்பனாக இருந்தது மனித வாழ்வின் ருசிகரமான விந்தை.

1950களின் மத்தியில் விநாயகர் சிலைகளை உடைப்பது, ராமர் படங்களை எரிப்பது என்பதாக ஒரு போராட்டத்தைத் துவக்கினார் பெரியார்.  இதற்கான பதிலடியை உடனடியாகத் துவக்கியது குன்றக்குடி அடிகளார்.  "அருள் நெறித் திருக்கூட்டம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் துண்டறிக்கைகளை மாநிலம் முழுவதும் விநியோகிக்கச் செய்தார் அடிகளார்.  பெரியாரை எதிர்க்க பிராமணரல்லாத ஒரு மடாதிபதி தலைமையேற்பதில் உள்ள சௌகர்யங்களை உணர்ந்த காஞ்சி பீடம் அடிகளாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்தது. இது பிராமணர்களின் அரசியல்.  ஆனால் விரைவிலேயே காஞ்சி பீடம் ஏமாற வேண்டியிருந்தது.

1955-ன் துவக்கத்தில் பெரியார் மலேசியா பயணமானார்.  அங்கு கூட்டங்களில் பெரியார் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில வாரங்கள் கழித்து குன்றக்குடி அடிகளாரும் மலேசியா சென்றார்.  பொதுவாக மடாதிபதிகள் கடல் தாண்டுவதில்லை.  ஆனால் சமூகத்தில் வலுத்து வரும் நாத்திகர்களுக்கு பதில் சொல்லும் தேவை இருப்பதினாலேயே கடல் தாண்ட வேண்டி வந்தது என்று தனது தூரதேச பயணத்தை நியாயப்படுத்தினார் அடிகளார். தங்களுடைய மடங்களிலிருந்து வெளியே வந்து மக்களிடம் கடவுளின் கருணையை சொல்ல நேர்ந்தது மடாதிபதிகளின் கட்டாயம் என்றால், அத்தகைய கட்டாயத்தை ஏற்படுத்திய "நாத்திகப் பெரியார்களுக்கு" நன்றி சொல்லுதல் அவசியம் என்றார் அடிகளார்.

மலேசியப் பயணம் முழுவதிலும் மிகவும் சாமர்த்தியமாக சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கையாண்டார் அடிகளார். சைவம் சாதிகளை அங்கீகரிக்கவில்லை என்றும் பல கடவுளர்களைத் தொழுவது சைவத்திற்கு ஏற்புடையது அல்ல என்றும் சொல்லி, தனக்கு முன் அங்கு வந்த பெரியார் என்ன பரப்புரை செய்தாரோ அதையே சைவத்தின் பெயரால் செய்த அடிகளாரை விமரிசிப்பது பெரியாருக்கு முடியாத காரியமாய்ப் போய் விட்டது.  சென்னை வந்து சேர்ந்த பெரியார் அடிகளாரைப் பற்றி சொன்னார்: "நான் அங்கு இருக்கும்போது ஒரு சாமியார் வந்தார். அவரைப் பற்றி என்னிடம் கேட்டார்கள்.  அவர் எங்களில் ஒருவர் என்றும், அவரது உடையின் நிறம்தான் எங்களுடையதிலிருந்து மாறியிருக்கிறதே தவிர, கருத்துக்கள் அல்ல என்றும் சொன்னேன்.  அவரை வரவேற்று உபசரிக்கும் படிக்கும் அங்குள்ளவர்களிடம் சொன்னேன்."

பெரியாரும் அடிகளாரும் நட்புறவோடு இயங்குவது தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரிய பேரு என்பதை உணர்ந்த சில நலம் விரும்பிகள் இருவரின் ரகசியமான சந்திப்பு ஒன்றுக்கு ஈரோட்டில் ஏற்பாடு செய்தனர். தானே வந்து அடிகளாரைச் சந்திப்பதாக சொன்ன பெரியார் அவ்வாறே வரவும் செய்தார்.  மேல்மாடியில் தங்கியிருந்த அடிகளார், பெரியார் வரும்பொழுது, தரைத்தளத்திற்கே வந்து அவரை வரவேற்க முன்வந்ததை பெரியார் ஏற்கவில்லை.  அப்படியான செயல் முறையற்றது என்றும், மடாதிபதிகள் பின்பற்றும் சம்பிரதாயங்களுக்கு மாறானது என்றும், மஹாசன்னிதானம் தன்னை வரவேற்க வாயிலுக்கு வருவது பிசகான செயல் என்றும் சொன்ன பெரியார் அடிகளாரின் அறைக்கே சென்று அவரை சந்தித்தார்.  அதைவிட சிறப்பானது, அடிகளாரை மஹாசன்னிதானம் என்றே தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் அழைத்து வந்தார்.

பெரியார் அடிகளாரின் அறைக்குச் சென்றதும் அவரை வணங்க அடிகளார் எழுந்தார். இதைக்கண்டு பதற்றமடைந்து அவரை அமரச் சொல்லும் அவசரத்தில் தன் கைத்தடியை தவற விட்டார், தன் நிலை இழந்தாலும் மரபை மதிக்கத் தவறாத பெரியார். இரண்டு நபர்கள் வசதியாக அமரக்கூடிய மடாதிபதியின் ஆசனத்தில் அடிகளார் அமர்ந்திருந்தார். அந்த ஆசனத்தில் தன்னருகே அமரும்படி சொன்ன அடிகளாரை மறுத்த பெரியார், அந்த சந்திப்பு முழுவதிலும் மஹாசன்னிதானத்திற்கு கொடுக்க வேண்டிய சம்பிரதாயமான மரியாதைகளை மிகவும் கவனமாகவும் உள்ளன்போடும் கொடுத்தார்.  மஹாசன்னிதானம் பெரியாரை விட ஐம்பது வருடங்கள் இளையவர் என்ற போதிலும்.

கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடத்தப் பெறுகிற சாதிப் பிரிவினைகள், தீண்டாமை பற்றி கடுமையாகவே அடிகளாரிடம் விவாதித்தார் பெரியார்.  பெரியாரின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகள் அடிகளாரை எதுவும் எதிர்த்துப் பேச விடாமல் செய்தது.  மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை உணர்ந்த அடிகளார், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அவலமான விலகலை எண்ணி மனம் வருந்தினார்.  அப்பர், ராமானுஜர், ராமலிங்க அடிகள் போன்ற குறவர்களின் தத்துவங்கள் மட்டும் நடைமுறையில் இங்கே இருக்குமானால் ஈரோட்டுப் பெரியார்கள் தோன்றுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்பதையும் உணர்ந்தார் மஹாசன்னிதானம். 

"நான் ஏன் கடவுளை எதிர்க்கிறேன்? எனக்கும் கடவுளுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல்? கடவுளை நான் பார்த்தது கூட கிடையாதே? கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள் இந்த நாட்டில் நடந்தேறா விட்டால், நான் ஏன் கடவுள் மறுப்பாளனாக இருக்கிறேன்?" என்று பெரியார் வினவியதில் உள்ள பேருண்மை புரிந்த நிலையில், மஹாசன்னிதானம் பெரியாரிடம் சொன்னார்: "நீங்கள் சொன்ன அக்கிரமங்களை எதிர்க்க சேர்ந்தே போராடுவோம்."  அதிர்ந்து போன பெரியார், "ஆனால் உங்களை பாரம்பரியமான இந்த மடம் அனுமதிக்குமா?" என்று கேட்டார். "ஐயா, மாற்றப்படுவதற்குத்தான் மரபுகள் இருக்கின்றன. மாற்றுவோம்" என்றார் மஹாசன்னிதானம்.

அண்மைக்கால தமிழக தத்துவ - சமூக - அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் நட்பு இப்படித்தான் துவங்கியது.  1956 செப்டம்பர் மாதம் பெரியாரின் பிறந்த நாள் விழா திருச்சி பொன்மலையில் திராவிடர் கழகத்தால் கொண்டாடப்பட்ட போது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டார் குன்றக்குடி மஹாசன்னிதானம்.  அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக அழைப்பை ஏற்றுக்கொண்ட அடிகளார், முதன்முறையாக பெரியாருடன் பொதுமேடையில் தோன்றினார்.  மிகுந்த மகிழ்ச்சியடைந்த பெரியார் விழா நேரம் முழுவதும் அடிகளாருடன் சிரித்துப் பேசியவாறே காணப்பட்டார்.  இரண்டு பெரியார்களும் ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாக கதைத்துக் கொண்டும், வெடிச் சிரிப்போடும் காணப்பட்டதில் ஊடகக்காரர்களுக்கு கொண்டாட்டமாகப் போய் படங்களாக எடுத்துத் தள்ளினர்.  காணக் கிடைக்காத காட்சியல்லவா? கூட்டம் முடிந்ததும் இருவரையும் தன்னுடைய ஸ்டுடியோவிற்கு ஒரு பிரத்தியேக புகைப்படச் சந்திப்பிற்கு அழைத்த நபரை பெரியார் கடிந்து கொண்டார்.  மஹாசன்னிதானம் அவர்களை அப்படியான ஒரு இடத்திற்கு அழைப்பது சம்பிரதாயமானது அல்ல என்று சொன்னார் பெரியார்.

இந்தக் கூட்டத்தில் இருவருக்கும் முன்பாக பேசிய திராவிடர் கழக பேச்சாளர் ஒருவர் மதம் - கடவுள் பற்றி கடுமையாகத் தாக்கி பேசியதைக் கேட்டுத் துணுக்குற்ற பெரியார் அவ்வாறு பிரசிங்கிக்க வேண்டாம் என்று குறிப்புணர்த்தும் விதமாக தனது கைத்தடியால் அவரை செல்லமாகத் தட்டினார்.  பாராட்டிப் பேச வந்த மஹாசன்னிதானம், பெரியாருக்கு பொன்னாடை ஒன்றைப் போர்த்தியது, பெரிய சர்ச்சைக்குள்ளானது.  சாதிகளுக்கிடையே இருக்கும் பிளவுகளைச் சமன் செய்ய பெரியார் ஆற்றிவரும் மகத்தானப் பணிகளைப் பாராட்டிய சன்னிதானம், நாத்திகர்களின் கடவுள் சம்பந்தமான வாதங்களை மறுத்து விலாவரியாக பதிலளித்தார்.  தன்னுடைய ஏற்புரையில் அடிகளாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பெரியார், "தமிழர்கள் சூத்திரர்கள் என்று அவமானப்படுத்தப் படுகின்றனர். இத்தகைய அவமானங்களை ராமசாமிதான் துடைத்தெறிய வேண்டும் என்பதில்லை.  மஹாசன்னிதானமோ அல்லது அவர் வணங்கும் கடவுளோ கூட இந்த வேலைகளைச் செய்யலாம்.  வேலை நடக்க வேண்டும், அவ்வளவுதான்.  யார் செய்தாலென்ன? எங்களுடைய குறையை மஹாசன்னிதானம் புரிந்து கொள்ள வேண்டும்.  குறையைத் தெரிவிக்க நாங்கள் தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பற்றி மஹாசன்னிதானம் கோபமடைய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டம் முடிந்தவுடன் இருவரும் ஒரே காரில் திருநெல்வேலிக்குக் கிளம்பிச் சென்றனர்.  திருநெல்வேலியில் காரை விட்டு இறங்கும் போது, சாதியை ஒழிப்பதில் இருவரும் இணைந்து செயல்பட உறுதி கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். 

இரண்டு துருவங்களிடையே அபூர்வமான நட்பு இப்படித்தான் துவங்கியது.  1973-ல் பெரியாரின் மறைவு வரைக்குமே கொஞ்சமும் மாசற்றதாகவே அந்த நட்பு நீடித்தது.

எம்ஜியார் – ஜெயலலிதா : தொடரும் ஒற்றுமை

| Sunday, October 30, 2016


(A.R.வேங்கடசலபதி Madras Institute of Development Studies பேராசிரியர்.  முதுகலைப் பட்டம் வரலாற்றில் பெற்றவர்.  புது தில்லி ஜவஹர்லால் நேரு சர்வகலா சாலையில் முனைவர் பட்டத்தை “Social History of Tamil Publishing” என்ற தலைப்பில் முடித்தவர்.  இவரது “நாவலும் வாசிப்பும்” மற்றும் “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” போன்ற புத்தகங்கள் அபுதின வகைமையில் முக்கியமானவை.  இலக்கியத் திறனாய்வு, கர்த்தாக்களைப் பற்றிய ஆய்வுகள், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.  ஆழமான அரசியல் நோக்கர்.  2016 அக்டோபர் 10-ந்தேதி The Wire இணையப் பத்திரிகையில் வேங்கடசலபதி எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.  தமிழில்: முனைவர் மு.பிரபு)  

1984-ம் ஆண்டு எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல் நலத்தைப் பற்றிய செய்திகள் ஊடகங்களுக்கு அரிதாகவே தரப்பட்டன.  தற்போது ஜெயலலிதாவின் விஷயத்திலும் அப்படியேதான்.  தமிழக முதல்வரைப் பற்றி அப்போலோ தெரிவிக்கும் உடல்நல அறிக்கைகளை ஒரு பள்ளிக்கூட பையன் கூட நம்பமாட்டான்.

சக நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்ஜியார் 12-1-1967 அன்று சுடப்பட்ட போது, நான் அம்மாவின் வயிற்றில் இருந்தேன்.  அதற்குப் பதினேழு வருடங்கள் கழித்து எம்ஜியார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பொழுது, பள்ளிப் படிப்பை முடித்திருந்தேன்.  எம்ஜியார் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில்தான் ஜெயலலிதா இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.  வெறும் காலண்டர் காட்டும் தற்செயல்களுக்கு மேலே இதில் பல பொருத்தங்கள் இருக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, எம்ஜியாரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் ஆவண விவரங்களின் படி, அவரின் வயது 68.  தற்போது ஜெயலலிதா அம்மையாருக்கும் அதே வயதுதான்.  சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் எம்ஜியார்.  அக்டோபர் 31, 1984-ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை சில மாதங்களுக்கு முன்னாலேயே நடத்தத் தீர்மானித்தார் ராஜீவ் காந்தி. அப்போது தமிழகக் காங்கிரசின் கூட்டாளி எம்ஜியாரின் அதிமுக.

அது காட்சி ஊடகம் பிரபலமாகாத காலம்.  செய்தி ஊடகங்களின் வாயை அரசு எளிதில் அடைத்து விட முடிந்தது.  அன்றைய சுகாதார அமைச்சர் HV ஹண்டே அவர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகள் உண்மையைத் தவிர வேறு எல்லாவற்றையும் பேசின. அந்த ஹண்டே இப்போது பிஜேபி உறுப்பினர்.  ஒரு மருத்துவரும் கூட. ஹண்டேவின் பத்திரிகைச் செய்திகளை அவரது கட்சிக்காரர்களே நம்பவில்லை. எம்ஜியாரின் இளமைக்கால நண்பரும் அரசியல் எதிரியுமான முத்துவேல் கருணாநிதி “ஹண்டே புளுகு, அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு” என்று தனக்கேயுரிய எதுகை மோனையில் சொல்லி தமிழ் மீது தனக்கிருக்கும் செல்வாக்கை இன்னொரு முறை நிலை நாட்டினார்.

அன்றைய நிலையில், எம்ஜியாரின் மனைவியார் ஜானகி ராமச்சந்திரன் தாமாக எதுவும் செய்ய முடியாத நிலை.  அவரும் கட்சியும் இராம.வீரப்பனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர்.  இராம வீரப்பன் எம்ஜியாரை கதாநாயகனாக வைத்து சில படங்களைத் தயாரித்தவர்; ஸ்டுடியோ முதலாளி; தவிரவும், எம்ஜியாரின் அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பிலிருந்த அமைச்சர்.  அன்று நடந்தவைக்கெல்லாம் காங்கிரஸ் கூட்டாளி.  அமெரிக்காவில் இருந்த இந்திய தூதர் புரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்று, நோய்ப் படுக்கையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு எம்ஜியார் செய்த மனுத்தாக்கலை சாத்தியப்படுத்தினார் என்று சொல்லப்பட்டதை அடிப்படை அறிவு மட்டுமே இருந்தவர்கள் கூட நம்பவில்லை.   நல்லவேளையாக அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் இல்லை.  இந்திய சாட்சியச் சட்டம் 1872 பற்றி பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  (இப்போதும் தெரியாது என்பது வேறு விஷயம்.)  இன்றைய தேதி வரை எம்ஜியார் மனுத் தாக்கல் செய்ததின் சம்பந்தமான எந்தப் பொது ஆவணங்களையும் யாரும் பார்த்ததாக செய்தி இல்லை.  இந்திரா காந்தியின் கொலையும் எம்ஜியாரின் உடல்நலமின்மையும் காங்கிரஸ் – அதிமுக கூட்டணிக்கு முன்னுவமை இல்லாத வெற்றியைத் தேடிக் கொடுத்தன.  எம்ஜியார் சில மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு திரும்பி வரும் வரையில், ‘முதலமைச்சர் – பொறுப்பு’ என்னும் பதவியில் யாரும் அமர்த்தப்படவில்லை.  அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்ஜியார் ராஜ்பவனுக்கு சென்று “பிரமாணம் எடுத்துக்கொண்டதை” தூர்தர்ஷனோ இந்திய செய்திப்படக் கழகமோ காட்சிப்படுத்தவில்லை என்பது நிச்சயமாக தற்செயலான காரியம் அல்ல.

1987 கிறிஸ்துமஸ் முதல் நாள் வரை எம்ஜியார் முதலமைச்சராக இருந்தார்.  1984-லிருந்து 1987 வரையிலான காலம் சுதந்திரத்திற்குப் பிறகான தமிழக அரசியலில் இருண்ட காலம் என்று அரசியல் நோக்காளர்கள் பலரால் வர்ணிக்கப்படுகிறது.  இந்தக் கால கட்டத்தில் எம்ஜியார் அருகிலேயே ஜெயலலிதா அனுமதிக்கப்படவில்லை.  இராம வீரப்பனைப் பிடிக்காத சில அதிருப்தியாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவளித்து வந்தார்கள்.  கொடுமுடியாக, எம்ஜியாரின் சவ வண்டியில் ஏற முயன்ற செல்வி.ஜெயலலிதா சின்னப் பையன் ஒருவனால் கீழே பலவந்தமாக தள்ளப்பட்டு அதன் உதவியால் அடுத்தநாள் தலைப்புச் செய்தியானார்.

எம்ஜியாரின் மறைவுக்குப் பின்னான மாதங்களில் காங்கிரஸ் தமிழக அரசியலில் தனக்கான மறுமலர்ச்சிக்காக கடும் முயற்சி எடுத்தது. 1988-ம் ஆண்டில் மட்டும் ராஜீவ் காந்தி 17 முறைகள் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்தார்.  மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்ட தமிழக ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர், காங்கிரசின் முயற்சிகளுக்கு தன்னாலானது அனைத்தையும் பாராட்டும்படிக்கு செய்து காந்தி குடும்பத்திற்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். 1989-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.  ஏன் போட்டியிட்டோம் என்றானது தனிக்கதை. ஆனால், எம்ஜியாரின் அரசியல் வாரிசு ஜானகி அம்மையார் அல்ல, ஜெயலலிதாதான் என்று முடிவானது அந்தத் தேர்தலில்தான்.  1991 சட்டசபைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்தேறிய ராஜீவ்காந்தி கொலையின் மொத்த அனுகூலத்தையும் பெற்ற ஜெயலலிதா முதல்வரானது மட்டுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்தையும் ஸ்திரப்படுத்தினார்.  ஆட்சிக்கு வந்தவுடன், எம்ஜியாரைப் பற்றிய நினைவுகளை பொது நினைவிலிருந்து அகற்றும்படிக்கான அனைத்துக் காரியங்களும் முதல்வரின் ஆசிர்வாதத்தோடு நடந்தன.  சிக்கலான சமயங்களில் மட்டும் எம்ஜியாரின் பெயரும் உருவமும் ஆபத்வாந்தனாக பயன்படுத்தப்பட்டன.

கார்ல் மார்க்சின் புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “எல்லா வரலாற்று உண்மைகளும் நாயகர்களும் இரண்டு முறை தோன்றுகிறார்கள்.”  அவர் சொல்லாமல் விட்டது: “அவர்கள் முதன்முறை துன்பவியல் சம்பவங்களோடு தொடர்புடையவர்களாகவும் இரண்டாவது முறை கேலிக்கூத்தான சம்பவங்களோடு தொடர்புடையவர்களாகவும் தோன்றுகிறார்கள்.”  

அதுவரை தமிழ்நாட்டில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் எம்ஜியார் என்றால், ஜெயலலிதாவிற்கும் சிறப்பான பெருமைகள் இருக்கத்தான் செய்கின்றன.  எம்ஜியாரை விட அதிக காலம் முதலமைச்சராக நீடிப்பவர் என்பது மட்டுமன்றி, அதிமுகவின் ஓட்டு வங்கியை எப்போதையும் விட, எம்ஜியாரையும் விடவும், பெருமளவு அதிகப்படுத்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா.   

2014ம் ஆண்டின் இறுதியில் பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்தே உடல்நலம் சுகவீனப்பட்டுத்தான் இயங்கி வந்தார் முதல்வர்.  அவரது தோற்றமே உடல்நலமின்மையைக் காட்டிக்கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.  அண்மைப் பொதுத்தேர்தலின் போது கூட அவர் வழக்கமான உற்சாகத்துடன் காணப்படவில்லை.  பொது வெளியில் தோன்ற நேரும்போதெல்லாம் சகஜமாக காணப்பட வேண்டி பெரும் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.  அவரின் சுகவீனத்தை மறைக்க அதிகப்படியாக மெனக்கெட்டு செய்யும் ஒப்பனைகள் தேவைப்பட்டது ஒருபுறமிருக்க, அவரது நடமாடும் இயலாமையை மறைக்க விசேஷமான ஏற்பாடுகள் வேண்டியதாயிற்று.  கொடநாடுப் பயணங்கள் அதிகப்பட்டும் நீண்டும் போயின.

1984-ல் எம்ஜியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஊடகங்களுக்கு அவரைப் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைத்தன.  அதைப்போலவேதான் இப்போதும்.  சொல்லப்போனால், 1984 பரவாயில்லை என்பதே உண்மை.  தற்போதைய அப்போலோ மருத்துவ அறிக்கைகளை துவக்கப்பள்ளி மாணவன் கூட நம்பமாட்டான்.  நடுவண் அரசு அமைச்சர்கள், தமிழக ஆளுநர் உள்ளிட்ட எவரும் இதுவரை ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்பது அவர் சசிகலா மற்றும் குடும்பத்தினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதைத் தெளிவாக்குகிறது.

அரசு இயந்திரம் முழுவதும் செயலற்றுப் போன நிலையிலும், பொறுப்பு முதமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல் அதிமுகவில் எழவில்லை.  எம்ஜியார் அப்போலோவில் இருந்தபோது காங்கிரஸ் நடுவண் அரசு எப்படி மௌனம் காத்ததோ அப்படியே பிஜேபி மத்திய அரசும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது.  எம்ஜியாருக்குப் பிறகு தங்களுக்கு மீண்டும் ஒரு எதிர்காலம் தமிழ்நாட்டில் இருக்குமா என்று காங்கிரஸ் அன்று கணக்குப் போட்டதைப் போலவே, இன்று பிஜேபியும் வெவ்வேறு கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கலாம்.  காவேரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கிட உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அக்டோபர் 3-ந்தேதி பிஜேபி உச்சநீதி மன்றத்தில் பிரமாணம் வழியே சொன்னது நமது ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.  விரைவில் கர்நாடகம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் இக்கட்டான இந்தத் தருணத்தில் யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் பிஜேபிக்கு.

இன்னுமொருவர் இதையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.  கடந்த எண்பது வருடங்களாக தமிழ்நாட்டு அரசியலில் அவரின் தடம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.  முத்துவேல் கருணாநிதி.  1977 மற்றும் 1980 படுதோல்விகளுக்குப் பிறகு, 1984 தேர்தலை ரொம்பவும் நம்பிக்கொண்டிருந்தார்.  இந்திரா காந்தியின் கொலையும் எம்ஜியாரின் நோய்மையும் முக-வின் கனவைக் குலைத்தன.  ஆனால் எம்ஜியாரின் மறைவிற்குப் பிந்தைய இந்த முப்பது ஆண்டுகளில் கருணாநிதி இரண்டு முறை முழுமையாக ஆட்சிப் பீடத்தில் இருந்திருக்கிறார்.  இன்னொரு முறைக்கு ஆயத்தமாக இருக்கிறார்.  ஜெயலலிதா சினிமாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது முக தமிழ்நாட்டின் முதலமைச்சர்.  இவருக்கெதிராக தாம் அரசியல் செய்ய வேண்டி வரும் என்பதை நிச்சயம் முத்துவேல் கருணாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார்.  ஆனால் இப்போது நிலைமை வேறு.  ஜெயலலிதாவை எதிர்த்து கட்சிக்கு வெளியே அரசியல் செய்து வந்தாலும், கட்சிக்கு உள்ளே தனது மகன் ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்தாக வேண்டிய கட்டாயம்.  இருந்தாலும், ஆட்சிப்பீடம் இன்னொரு முறை கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது முக-விற்குத் தெரியும். 

நாம் இங்கு பார்த்தவைகளைத் தவிர வேறு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும்.  அவைகளை காலம் நமக்குக் காட்டலாம்.

பிதாமகன்

| Friday, October 28, 2016
(ஆ.இரா.வேங்கடசலபதி Madras Institute of Development Studies பேராசிரியர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் ஆராய்ச்சி எழுத்தின் அதி முக்கியமானவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து இலக்கியம், பொருளாதாரம், சமூகம் பற்றி எழுதி வருகிறார். அபுனைவ எழுத்துக்களில் இவருக்கென்று தமிழில் இடம் உண்டு. "அந்தக் காலத்தில் காபி இல்லை" இவரது சிறப்பான படைப்பு. ஞானபீடம் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து Outloook வாராந்தரியில் 2005 ஏப்ரலில் வேங்கடசலபதி எழுதிய கட்டுரை இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில்: முனைவர் மு.பிரபு

1972-ம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட பொழுது ஜெயகாந்தனுக்கு வயது கிட்டத்தட்ட 40 இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் அன்று இது அரிதான நிகழ்வு. தலைமுடி நரைக்காத பொழுதே சாஹித்ய அகாடமி அதுவரை யாருக்கும் சாத்தியப்படவில்லை. அது தொட்டு, இலக்கிய கர்த்தாக்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான விருதுகள், கவுரவங்கள் தண்டபாணி ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஞானபீடம் உட்பட. எவ்வளவு எழுதியிருக்கிறார் இவர்? நாற்பது நாவல்கள், நூற்றுக்கணக்கில் கட்டுரைகள், சில திரைக்கதைகள், பத்திரிகைகளில் பத்திகள் - எல்லாம் இருந்தாலும் நூற்று ஐம்பது சொச்சம் சிறுகதைகள் இன்னும் பலகாலம் தமிழின் சிறந்த கர்த்தாக்களில் ஒருவராக இவரை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும்.

தற்போதைய கடலூர் மாவட்டத்தின் மஞ்சகுப்பம் பகுதியில் பிறந்தவர். பள்ளியிலிருந்து இடைநின்று சென்னைக்கு ஓடிவந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அடைக்கலம் தேடியவர். கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாக இருந்து தெரு முனைகளில் நோட்டிஸ் விநியோகித்தவர். அதற்குப்பிறகு கட்சியோடு எத்தனையோ முரண்பாடுகள் வந்து கட்சியை காட்டமாக இவர் விமரிசித்திருந்தாலும், பெரும்பாலான கம்யூனிஸ்டுகள் இன்றும் இவரை விரும்புவதற்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன, நெருக்கடியான காலகட்டத்தில் கட்சிப் பணியாற்றியவர் என்பது உள்ளடங்க.

இவரின் ஆரம்பகால படைப்புகள் அன்னாரது பதின்ம வயதுகளிலேயே சாமரம், சரஸ்வதி என்ற இதழ்களில் வெளியாகின. புதுமைப்பித்தனுக்குப் பிறகு, நகர - கீழ் - நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை ஜெயகாந்தன் அளவுக்கு நிஜமாக எழுதியவர்கள் என்று யாரையும் சுட்டக்கூடுவதில்லை. தமிழ் நாவல் வரலாற்றில் முதன்முறையாக ரிக்சா இழுப்பவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், அச்சகர்கள், விலைமாதர்கள், கூலித் தொழிலாளிகள், சாமியார்கள் கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் அந்தஸ்து பெற்றது ஜெயகாந்தனிடம்தான். 'ட்ரெடல்' கதையின் நாயகன் அச்சகத்தில் பணியாற்றுபவன். எத்தனையோ கல்யாணப் பத்திரிகைகளை அச்சடிக்கிறான். அவனுக்கு கல்யாணம் ஆகவேயில்லை. ஜெயகாந்தனின் விளிம்புநிலை மனிதர்கள் தமிழ் வாசகர் உலகை அதிருப்திக்கு உள்ளாக்கினர் என்றால், அவர்களது பாலியல் வேட்கைகள் - தீவிரங்கள் பற்றிய ஜெயகாந்தனது விவரணைகள் வாசகரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

ஜெயகாந்தனின் "அதிர்ச்சி எழுத்துக்களில்" வியாபாரத்தை மோப்பம் பிடித்த வெகுஜன பத்திரிகைகள் அவருக்கு தொடர்ந்து பக்கங்களை அள்ளிக்கொடுத்தன. ஆனால், முதன்முறையாக அந்தப் பத்திரிகைகள் தரமான எழுத்துக்களை தங்களது பக்கங்களில் ஏந்திச் சென்றதும் அப்போதுதான். தரமான எழுத்துக்கள் என்பது, தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த அளவில், சிறு பத்திரிகைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தபோது, நல் எழுத்தை வெகுஜன வாசக வெளிக்குக் கொண்டு வந்தவர் ஜேகே தான். பெரும் பத்திரிகைகளின் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாதவர். கட்டுப்படுத்தப்பட முடியாதவர். எந்த சமரசங்களுமின்றி, சிறு பத்திரிகைகளில் எழுதுமிடத்து என்ன எழுதுவாரோ, அதையே வணிக இதழ்களிலும் சஞ்சலமின்றி எழுதியவர். குறிப்பிட்ட தசாப்தத்தில், இவரது எழுத்துக்கள் பெருமளவில் ஆனந்தவிகடன் வாராந்தரியில் வெளிவந்தன. இதே காலகட்டத்தில்தான், இவரது கதைமாந்தர்கள் சேரி மனிதர்களிலிருந்து அக்கிரகாரத்து மனிதர்களாக மாறியதும். நடுத்தர வர்க்க பிராமண வாழ்க்கை இவரளவுக்கு வேறு யாரும் சிறப்பாக கையாளவில்லை என்பது விசேஷமானது. ஈடிபஸ் மனச்சிக்கல், திருமணத்திற்கு முந்தைய பாலுறவு, தனிநபர் அந்தரங்கங்களின் புனிதம், தனியுரிமைக் கோட்பாடு போன்ற கருத்தாங்களுக்கு தமிழர் உலகில் பெரும் பங்களித்தவர் என்று எளிதாக ஜெயகாந்தனைப் புரிந்து கொள்ளலாம். இன்னொன்று கூட சொல்ல வேண்டும், பிராமண எழுத்தாளர்கள் கூட இவரளவுக்கு பிராமணாள் பாஷையை அதன் சிறப்புத் தன்மைகளோடு பயன்படுத்தவில்லை என்று சொல்ல வேண்டும்.

சிறுகதைகளிலேயே தனிக்கவனம் செலுத்திவந்த ஜெயகாந்தன் மெல்ல மெல்ல நாவல்களின் பக்கம் திரும்பினார். பாரீசுக்குப் போ, சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் போன்ற நாவல்கள் சமூகத்தோடு இணக்கம் காணமுடியாத தனியர்களின் அகம் / புறப் போராட்டங்களை விவரிக்கின்றன. 1950களின் இறுதியிலிருந்து 1970களின் ஆரம்ப வருடங்கள் வரை, ஒவ்வொரு வருடமும் ஜெயகாந்தனால் துவக்கப்பட்ட சர்ச்சைகளையே தமிழ் சமூகம் பெரும் இரைச்சல்களுடன் விவாதித்து வந்தது. 'அக்கினிப்பிரவேசம்' இதில் தலையானது என்று சொல்லலாம். வயதின் அலைக்கழித்தலால் தன்னை ஒருவனிடம் இழந்த பிராமண இளம் பெண்ணை அவளது அம்மா தலையில் தண்ணீர் ஊற்றி புனிதப்படுத்துவதை இந்தப் பாரதப் பெரு நாட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஜெயகாந்தனின் பெண் பாத்திரங்கள் அவரது ஆண் மாந்தர்களை விட வலிமையானவர்கள் மற்றும் புரட்சிக்காரர்கள். 

அவர் தனது வாழ்நாளின் கடைசி முப்பது முப்பத்தைந்து வருடங்கள் எதுவுமே பொதுவெளியில் எழுதி பிரசுரிக்கவில்லை என்றாலும், அவரது புகழ் எள்ளளவும் குறையவில்லை என்பது முன்னுவமை இல்லாதவாறு ஆச்சர்யமானது. இவரது இளமைக் காலம் இலக்கியத்தில் மட்டுமல்லாது திரைப்படம், இதழியல் என்பதில் செலவிடப்பட்டது. தமிழின் முதல் கலைப்படம் என்று இன்றளவும் போற்றப்படுவது ஜெயகாந்தன் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன்'. குடியரசுத் தலைவரின் பரிசும் பெற்ற படம் இது (1965). எம்ஜியாரின் அதிசாசக கதாநாயக கருத்தாக்கத்தால் கட்டுண்டு கிடந்த தமிழ் சினிமா ரசிகனுக்கு ஜெயகாந்தனின் சினிமாக்கள் ஒரு தர்க்க மாற்றாக இயல்பிலேயே அமைந்துவிட்டன. தமிழை மையப்படுத்திய அரசியல் மற்றும் திராவிட அரசியல் ஆகியவைக்கு மாற்றுகள் எவை என்பதை ஜெயகாந்தனின் திரைப்படங்கள் பேசின.

திராவிட அரசியலை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டுகளின் சார்பாக, கே.பாலதண்டாயதத்தோடு சேர்ந்து தொடர்ந்து குரலெழுப்பியவர் ஜேகே. ஒரு முறை பெரியாரை எதிர்த்தும் மேடை நிகழ்வொன்றில் கண்டனம் எழுப்பியவர். இவரது அரசியல் கடந்த தசாப்தங்களில் எவ்விதம் கட்டப்பட்டுள்ளது என்று பார்ப்பது சுவராஸ்யமானது. இடது சாரி இயக்கங்களுடன் தீவிரமான பற்றுக்கொண்டிருந்தாலும் இந்திய தேசியத்தின் ஆதரவாளர், காமராஜரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நெருக்கடி நிலையை எதிர்த்தவர், சீறி லங்காவில் இந்திய அமைதிப்படையின் இருப்பை ஆதரித்தவர், மத மாற்றத்திற்கு எதிராக ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தை நியாயப்படுத்தியவர் என்றும் இவரைப் புரிந்து கொள்ளலாம். சிறந்த மேடைப் பேச்சாளர். தானே கட்டமைத்துக் கொண்ட எதிரிகளின் கருத்தாங்களை கடுமையாக விமர்சனம் செய்வார். இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து இப்படி சொன்னார்: "இந்திய அரசியலில் பாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதமேந்தி நான் போராட விட்டாலும், தேரோட்டியாக நிச்சயம் இருப்பேன்." 

தனது படைப்பாற்றல் குறைந்து வருவதாக உணர்ந்ததும் எழுதுவதை முற்றிலும் நிறுத்தி விட்டார். இருப்பினும், பத்திரிகைகளில் பத்திகள் எழுதி வந்திருக்கிறார். குத்தலும் நையாண்டியும் மிகுந்த இவரது உரைநடை இவரது பத்திகளுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. பரபரப்பு மிகுந்த தனது அரசியல் நிலைப்பாடுகளால் நீண்ட காலம் பொதுமக்களின் மனதில் நீங்காதிருந்தவர். அமெரிக்காவிற்குப் போய் வந்த பிறகு சொன்னார்: "அமெரிக்கா ஒரு சோஷலிச அரசு." எழுபதுகளில் இவர் எழுதிய 'ஜெயஜெய சங்கர' தன்னை வருத்திக்கொண்டு துறவு என்ற மேன்மையின் புனிதத்தை உலகுக்கு துலக்கிக்காட்டிய உத்தமரை ஸ்படிகம்போல வாசகனுக்கு ஓதியது என்றால், தொண்ணூறுகளில் இவர் எழுதிய 'ஹர ஹர சங்கர' காஞ்சியில் தற்போது மடத்தில் இருக்கும் சர்ச்சைக்கார ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்க முயற்சித்தது.

இன்னொரு அளவில் கூட ஜெயகாந்தன் விசேஷமானவர்தான். தமிழ் எழுத்தாளருக்கு ஜிப்பாதான் சீருடை. ஜிப்பா அணியாத ஒருவரை எழுத்தாளர் என்று நம்ப தமிழ் சமூகம் தயாராக இல்லாத போது, நவ நாகரீக உடைகளை அணிந்து, பெரிய மீசை வைத்து, உதட்டில் பெரிய பைப் என்று உலா வந்தவர் ஜேகே. அப்போது இந்தப் தோற்றம் பெரிய கலாச்சார அதிர்ச்சி. தமிழ் எழுத்தாளன் வறுமையில் சிக்கி அன்றாடங்காய்ச்சியாக நலிந்து மரபை போற்றும் சமூகச் சக்கரங்களில் சிக்குண்டுத் தவித்த பொழுது, கஞ்சா பிடிப்பது நல்லது என்று நல் அகந்தையுடன் சொல்லித் திரிந்தவர் ஜேகே.

கடந்த இரண்டு மூன்று தலைமுறை வாசகர்கள் ஜெயகாந்தனைக் கற்றுத் தேர்ந்தவர்கள்தான். ஆனால், பல்வேறு காரணிகளால் இன்றைய இளைஞர் கூட்டத்திற்கு ஜேகே-யைப் பற்றி அதிகம் தெரியவில்லை. சில திறனாய்வாளர்களால் வேறொரு விமரிசனமும் வைக்கப்படுகிறது. "அதிக இரைச்சல், சர்ச்சைகள் இவற்றால் மட்டும் ஒருவர் சிறந்த கர்த்தாவாகிவிட முடியாது" என்பதே அது. கதைகளில் இவர் நடத்தும் பிரசங்கங்கள் தவிர, முன்னுரைகள் என்ற பெயரில் இவர் நீண்ட சொற்பொழிவுகள் செய்திருப்பது அலுப்பைத் தரக்கூடியது என்றும் சிலர் அபிப்பிராயப் படுகின்றனர். இவரது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்த பிரபஞ்சன் இதுபற்றிக் கூறும்பொழுது, "காலையிலிருந்து சாயந்திரம் வரை இடைவிடாமல் கேட்க நேரும் அலுப்பான மேடைப்பேச்சு போன்றவை இவரது முன்னுரைகள்" என்கிறார்.

ஜெயகாந்தனை சிலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். A.A.ஹக்கீம், கே.திரவியம் போன்றோர் ஜெகே-வின் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர் என்றாலும், அவைகள் வெற்றியடையவில்லை. இவரது படைப்புகள் ரஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. சொல்லிக்கொள்ளும் படிக்கு, அவை அமையவில்லை என்பது துரதிர்ஷ்டமே.

ஜெயகாந்தனுக்கு மிகவும் தாமதமாகத்தான் ஞானபீடம் அளிக்கப்பட்டது. 'சித்திரப்பாவை' நாவலுக்காக அகிலனுக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட களங்கத்தை ஜேகே-விற்கு அளிக்கப்பட்ட ஞானபீடம் ஓரளவு போக்கியுள்ளது என்று சொல்லலாம். தொடர்ந்து ஞானபீடம் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்களுக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஜேகே-விற்கு வழங்கியிருப்பதின் மூலம் கமிட்டியார் ஏற்படுத்தியிருக்கிறார்கள். வேறொரு தருணத்தில் ஜேகே சொன்னது ஞாபகம் வருகிறது: "எனக்கு வழங்கப்பட்டிருப்பதின் மூலம் இந்தப் பரிசு தன்னை கௌரவப்படுத்திக் கொண்டுள்ளது."

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - குறுக்கு வெட்டுப் பார்வை

| Thursday, October 27, 2016


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - குறுக்கு வெட்டுப் பார்வை 

-முனைவர் மு.பிரபு 

அறிமுகம் 

ஜனநாயகம் ஒன்றின் முதுகெலும்பான அம்சம் எதுவெனில் அந்த அமைப்பின் சாதாரண குடிமகன் ஒருவன் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற முடியும் என்பதே.  அரசும் அதன் அதிகாரிகளும் எப்படி இயங்குகிறார்கள் என்பதை அறிய அனைத்து வழிகளும் ஜனநாயக அமைப்பொன்றில் ஒரு சாதாரணனுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஜனநாயக அரசொன்றின் மந்தனத் திரைகள் முழுவதுமாக நீக்கப்பட்ட நிலையில்தான் அது தான் ஏற்படுத்தப்பட்ட லட்சியத்தைத் தொட முடியும். உண்மையில், அனைத்து தகவலும் அனைவருக்கும் கிடைக்கும் நிலையில்தான் ஜனநாயக அமைப்பொன்று வெற்றிபெற்றதாகக் கருத முடியும். 

இதை வேறு விதமாகவும் சொல்லலாம்.  ஜனநாயக அமைப்பொன்றில் தகவலை வெளியிடுவது விதியாகவும், தகவலைப் பொதுப்பார்வையிலிருந்து விலக்குவது அல்லது மந்தனப்படுத்துவது விலக்காகவும் இருக்க வேண்டும்.  அப்படி தகவலை  பொதுப்பார்வையிலிருந்து விலக்கும் நேர்விலும் கூட, அந்தச் செயல் பொதுநலன் கருதிதானா என்று உறுதி செய்யப்படல் வேண்டும். தேச இறையாண்மை, தேச பாதுகாப்பு போன்ற சில விடயங்களைத் தவிர மற்ற அனைத்து விடயங்களிலும் ஒளிவு மறைவற்ற தன்மை இருந்தால்தான் ஜனநாயகம் தன்னுடைய இருப்பை நியாயப்படுத்த முடியும்.

சட்ட வரலாறு 

இந்தியாவில் தகவல் அறியும் உரிமையைப் பொறுத்தவரை சட்ட ரீதியான நீண்ட வரலாறு உண்டு.  உத்தர பிரதேச அரசு எதிர். ராஜ் நாராயன் வழக்கில் உச்ச நீதி மன்றம் தெரிவித்திருப்பது முக்கியமானது. "நமது நாட்டைப் போன்ற ஒரு ஜனநாயக அமைப்பில், அரசும் பொதுமக்களும் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும்.  இத்தகைய அமைப்பில் ரகசியம் என்பது மிகவும் குறைவாகவே இருத்தல் தகும். இந்த அரசின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும், அவற்றின் செயற்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டுக் குடிமகனுக்கு உண்டு.  அனைத்துப் பொது அதிகார அமைப்புகளும் அவற்றின் செயற்பாடுகளும் வெளிப்படையாகவே இருத்தல் வேண்டும்.  ரகசியம் ஆகாது.  இந்த அதிகார அமைப்புகளின் ஒவ்வொரு செயற்பாடும் போது மக்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும்.  தகவல் அறியும் உரிமை என்பது அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.  பேச்சுரிமை என்பதிலிருந்து தகவல் அறியும் உரிமை கிளைக்கிறது."   

முத்திரையான தீர்ப்புரைகள் 

இன்னொரு வழக்கான எஸ்.பி.குப்தா எதிர். இந்திய நடுவண் அரசு (AIR 1982 SC 149) என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. "ஒளிவு மறைவற்ற அரசாங்கம் என்பது தகவல் அறியும் உரிமை என்பதிலிருந்தே தொடங்குகிறது.  இந்த உரிமையானது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு (19) (1) (a)-ல் உத்தரவாதமளிக்கப் பட்டுள்ளது.  ஆகையால், தகவல் அளிப்பது என்பது அரசின் செயல்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதும் விதிகளின்படியானதும் ஆகும்.  மந்தணம் என்பதுதான் விலக்காக இருக்க முடியுமே தவிர, தகவல் அளிப்பது என்பது அல்ல.  வெளிப்படையான அரசு கோரப்படும் தகவல்களை அளிப்பதில் ஆர்வம் கொண்டதாகவே இருக்க முடியும்.  பொதுநலனுக்கு நன்மை என்ற நேர்வுகளில் அரசானது தகவல் அளிக்க முன்வருகிறது என்பதை உறுதி செய்யும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு."  

மற்றுமொரு வழக்கான தினேஷ் திருவேதி எதிர். இந்திய நடுவண் அரசு (1997) 4 SCC 306-ல் உச்ச நீதிமன்ற இப்படியான கருத்தைத் தெரிவித்துள்ளது.  "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் நலன் பொருட்டு செயற்படும் அரசானது நாட்டுக் குடிமகன்களுக்கு தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்பதைப் புரிந்த அரசாக மட்டுமே இருக்க முடியும்."

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயற்படும் விதத்தை மீளாய்வு செய்வதற்கான தேசிய குழுவின் தலைவர் நீதியரசர் எம்.என்.வெங்கடாச்சலையா அவர்கள் தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியுள்ளதாவது: "ஒரு அரசை நிர்வகிப்பது பற்றி பல புதிய போக்குகள் தோன்றிய வண்ணம் உள்ளன.  அவற்றில் முக்கியமானது தகவல் அறியும் உரிமையாகும்.  சாதாரண குடிமகன் தனக்கு வேண்டிய தகவல் தன்னிடம் இல்லாத காரணத்தினால் மட்டுமே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறான். தன்னுடைய சிக்கல்களுக்கு யார் காரணம், யார் அந்த சிக்கல்களை விடுவிக்க முடியும் என்று தெரியாத அப்பாவியாகவும் கோடிக்கணக்கான மக்கள் இந்தத் தேசத்தில் உள்ளனர்.  தன்னுடைய பிரச்சினைகள் அரசால் எப்படி கையாளப்படுகின்றன என்பதை ஒரு சாதாரண குடிமகனால் தெரிந்து கொள்ளவே முடிவதில்லை. அதிகாரிகளை அணுகித் தெரிந்துகொள்ள அவனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.  அதிகாரிகள் எளிதில் அணுக முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.  குடிமகன்களை எடுத்தெறிந்து பேசியும் துடுக்காகவும் நடந்து கொள்பவர்களாகவே அதிகாரிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள்.  இத்தகைய நிலையில் தகவல் அறியும் உரிமை உத்தரவாதமளிக்கப் பட வேண்டுவது மட்டுமன்றி இந்தச் சட்டத்திற்கு சிறப்பான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.  கோரப்படும் தகவல்கள் குடிமங்களுக்கு சீராக போய்ச்சேருவதை உறுதிப்படுத்தும் விதமான செயல்முறைகளை ஏற்படுத்துவதில் அரசுக்கு ஆதாரமான பொறுப்புண்டு. நாம் நீண்ட காலங்களாக ரகசியங்களைப் பேணுவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.  வெளிப்படையாக நிர்வாகம் இயங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.  உண்மையில் ரகசியக் காப்புப் பிரமாணம் என்பதிற்குப் பதிலாக ஒளிவற்றத் தன்மைப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.  நிர்வாகம் என்பது ஒளிவற்றதாகவும் சாதாரணன் பங்குபெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.  நிர்வாகத்தின் 'தாமதப்படுத்துகிற' பாசாங்குகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.  இவைகளை ஏற்படுத்தினால்தான் லஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்."

தகவல் சாதாரணனின் உரிமை 

மேலே சொன்ன தீர்ப்புரைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவையை உணர்த்துவதாகவே உள்ளன.  மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் அரசானது எப்படி இயங்குகிறது என்று அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.  தன்னுடைய பணம் நேர்மையாக சமூக நலன் பொருட்டு செலவிடப்படுகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஒருவரின் உரிமையைத் தவறென்று எப்படி சொல்ல முடியும்?  தகவல்களை வெளியிடுவது என்பது உரிமைமீறல் என்பதாகவும் பார்க்கப்பட்டு வந்தது விந்தையே. ஆனால், மாறிய சூழலில் தகவல்களை வழங்க மறுப்பது நிர்வாகத்தின் துர்நடத்தை என்பது மட்டுமன்றி குற்றமும் ஆகும்.  அரசுக்கு இருக்கும் பொறுப்பை ஒரு சாதாரண குடிமகன் உணர்த்த முடியும் என்பது தகவல்களை முழுமையாகப் பெற்றிருக்கும் நிலையிலேயே முடியும்.  ஆகவே, தகவல்களை வழங்க நடுவண் அரசும் மாநில அரசுகளும் எந்த அளவுக்கு முன்வருகின்றன என்பதைப் பொறுத்தே தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் பயன்பாடும் ஆற்றலும் இருக்கும்.

சட்டப் பின்னணி 

உலக அரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரலாறு என்ன? இதன் ஆதி 1948 மார்ச் மாதத்தில் இருக்கிறது.  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஜெனீவாவில் 1948 மார்ச் மாதம் கூட்டப்பட்டதில் 54 நாடுகள் கலந்துகொண்டு தகவல் பெறும் - வழங்கும் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக அறிவித்தன.  இது குறித்து 10-12-1948ந் திகதி ஒரு முறையான அறிவிப்பையும் பொதுச்சபை வெளியிட்டது.  பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூகக் கழகம் (Economic and Social Council) தகவல் சுதந்திரத்திற்கான சாற்றுதலை (Declaration) முறையாக அறிவித்தது.   உலகத்திலேயே முதன்முறையாக ஸ்வீடன் அரசு தகவல் அறியும் உரிமையை தன்னுடைய குடிமகன்களுக்கு சட்டபூர்வமாக வழங்கியது.  இதையடுத்து, வேறு சில நாடுகள் தங்களுடைய பாராளுமன்றங்களில் இது குறித்த சட்டங்கள் நிறைவேற்றின. 

இப்படியான அடிப்படையான உரிமையை இந்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் மூலமாக அங்கீகரித்து நமது ஜனநாயகத்தில் முடிவெடுக்கும் வழிமுறைகளில் சாதாரணன் பங்கு பெறுவதை உறுதி செய்கிறது. ஆனால் இதற்கு முன்னமேயே, 1997ம் ஆண்டு தகவல் சுதந்திரத்திற்கான சட்ட வரைவு ஒன்று திரு.H.D.ஷோரி (HD Shourie) தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ இது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் படாமலேயே கழித்துக் கட்டப்பட்டது.  இதற்குப் பிறகு 2000-ல் இன்னுமொரு முன்னெடுப்பு செய்யப்பட்டது. தகவல் சுதந்திரத்திற்கான தேசிய வரைவு (National Freedom of Information Bill, 2000) நாடாளுமன்றத்தில் தாக்கீது செய்யப்பட்டு, 2002-ம் ஆண்டு சட்டமாக இயற்றப்பட்டது.  ஆனால், இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தேதியை அறிவிக்காமல் விட்டதால், தானாகவே காலாவதியாகி விட்டது.  பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா 2004 நாடாளுமன்றத்தில் 23-12-2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக (Parlimentary Standing Committee) அனுப்பப்பட்டது. நிலைக்குழுவின் அறிக்கை மக்களவையில் 21-3-2005 அன்று தாக்கல் செய்யப்பட்டு, பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா 11-5-2005 அன்று மக்களவையால் நிறைவேற்றப்ப்பட்டது.  ஒரு மாதத்திற்குப் பின்னர், அதாவது 12-5-2005 அன்று இந்த மசோதா மேல்சபையாலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, நடுவண் அரசு பணித்துறை வெளியீட்டில் (Gazette) 15-6-2005 அன்று அறிவிப்பு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - சிக்கல்கள் 

தற்போது நடைமுறையில் இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உண்மையில் தகவல் சுதந்திரத்திற்கான சட்டம் 2002ன் செறிவூட்டப்பட்ட வடிவமே ஆகும். அரசு இயந்திரங்களில் மலிந்திருக்கும் லஞ்சம், ஊழல் மற்றும் பிற நேர்மையற்ற செயல்களை சாதாரண குடிமகனே வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும் என்பதான வகையிலே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு வந்து பதினொரு ஆண்டுகள் மட்டுமே முடிந்த நிலையில், அரசு பொதுமக்களிடமிருந்து நடைமுறை விஷயங்களை ரகசியப்படுத்த முடியாது என்பதும் அரசு இயந்திரமானது ஒளிவு மறைவற்ற விதத்திலே இயங்க வேண்டியது கட்டாயம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் பொதுமக்கள் அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை கேள்வி கேட்கக்கூடியவர்களாக, தவறைச் சுட்டிக்காட்டக் கூடியவர்களாக, அரசு இயந்திரத்தின் நேர்மையற்ற செயல்களை பொதுவெளியின் கவனத்திற்கு கொண்டு வருபவர்களாக, அரசின் மெத்தனத்தால் விளைந்த கால தாமதம் மற்றும் முறையற்ற செயல்களால் விளைந்த கெடுதிக்கு நிவாரணத்தை ஆதாரங்களுடன் வேண்டுபவர்களாக உருவெடுத்துள்ளார்கள் என்பது இந்தச் சட்டம் பெற்றுள்ள பெருவெற்றியாகும். இச்சட்டத்தைப் பற்றி பல்வேறு அதிருப்திகள் எழுந்த வண்ணம் உள்ளது என்பது உண்மைதான். சொல்லப்போனால், கோப்புக் குறிப்புகளையும், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கான காரணங்களையும் தகவல் கோருபவருக்கு வழங்க வேண்டியதில்லை என்னும் வகையில் இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாக எழுந்த அதிருப்திக் குரல்கள் நல்லவேளையாக வலுப்பெறவில்லை.

வேறொரு விமர்சனமும் இச்சட்டத்தைப் பற்றி பரவலாக உள்ளதை அறிய முடிகிறது. இச்சட்டப் பிரிவு 7ல் சொல்லியுள்ளபடிக்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டுமென்பது அரிதாகவே பொது அதிகார அமைப்புகளால் பின்பற்றப்படுகிறது. பல நேர்வுகளில், சட்டத்தால் கொடுக்கப்பட்ட கெடுவிற்கும் மீறி தாமதமான நிலையிலேயே தகவல் வழங்கப்படுகிறது. அலுவலகங்களில் மனித வள, நிதி வள ஆதாரங்கள் போதாமை எனும் காரணங்கள் இப்படியான கால தாமதத்தை நியாயப்படுத்த முடியும் என்றாலும், இவை போன்ற தொடர் தாமதங்கள் இச்சட்டத்தின் வீரியத்தை குறைத்துவிடும் அபாயம் உண்டு. தகவல் வழங்குவதற்கென்றே அலுவலர்களை பொது அதிகார அமைப்புகள் ஏற்படுத்திக் கொள்வது கால தாமதத்தை தவிர்க்க வழி செய்யும். தற்சமயம் ஒரு அலுவலகத்தின் உயர் அலுவலர் தன்னுடைய இயல்பான பணிக்குக் கூடுதலாக பொதுத் தகவல் அலுவலர் பொறுப்பை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், தகவல் வழங்கும் அலுவலர் கோரப்பட்ட தகவல்களை வழங்க பல சமயங்களில் பிற அலுவலர்களின் மற்றும் பணியாளர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனாலும் குறிப்பிட்ட நேர்வுகளில் காலதாமதம் தவிர்க்கப்பட முடியாததாகிறது. ஆனாலும், இத்தகைய நேர்வுகள் காலப்போக்கில் அரிதாகிவிடும் என்றும் அரசு இயந்திரம் தகவல்களை தாமதப்படுத்தாமல் வழங்க முன்வரும் என்றும் எதிர்பார்க்கலாம். மக்களின் விழிப்புணர்வு தீவிரமடைகின்றபொழுது இப்படியான காலதாமதங்கள் அரிதாகிவிட வாய்ப்புகள் அதிகம்.

இத்தருணத்தில் இச்சட்டத்தின் அடிப்படையில் எழுந்த தாவா ஒன்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமே. இச்சட்டப்பிரிவு 20ன் அடிப்படையிலே எழுப்பப்பட்ட தாவா ஒன்றில் தீர்ப்பளித்த மத்திய தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட நேர்வில் பொதுத்தகவல் அலுவலரும் மேல் முறையீட்டு அலுவலரும் வரவு செலவு திட்டம் தயாரித்தல், நிதியாண்டு முடிவு நடைமுறைகள், தேர்தல், சட்டத்துறையோடு கலந்தாலோசித்தல் போன்ற பணிகள் இருந்ததால் ஏற்பட்டிருந்த காலதாமதம் தவிர்க்க முடியாதது என்றும் காலதாமதமானது சரியான காரணங்களின் அடிப்படையிலேயே நேர்ந்திருப்பதால் இச்சட்டப்பிரிவின்படி பொதுத்தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் ஆகியோர் வேண்டுமென்றே சட்டத்தை மீறியவர்களாக கருதப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் தீர்ப்பளித்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 19(1)(a) தகவல் பெறும் சுதந்திரத்தைப் பற்றி பேசுகையில், இது ஒரு அடிப்படையான உரிமை என்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டென்றும் சில விசேஷமான நேர்வுகளைத் தவிர, (இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, அயல் நாட்டுறவு, பொது ஒழுங்கு) வேறு விடயங்களில் இந்த அடிப்படை உரிமை அனைத்து குடிமகன்களுக்கும் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் கூறுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த குறிப்பிட்ட சாராம்சத்தைப் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட மேதை P.N.பக்க்ஷி (P.N.Bakshi) கூறுகையில், இந்த நாட்டுக் குடிமகன் ஒருவன் அரசு மற்றும் அதன் அங்கங்களைப் பற்றிய செயல்பாடுகளைப் பற்றியும் மட்டுமல்லாது அரசின் முகமைகளின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் உரிமை கொண்டுள்ளான். அரசு இயந்திரத்தின் நிர்வாக விஷயங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தேவையில்லை என்பதானது காலாவதியாகி விட்ட ஒரு போக்கு. அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 19ன் படி பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை. பேச்சுரிமை என்பது தகவல்களை அறிகின்ற உரிமை என்பதால் மட்டுமே சாத்தியப்படும். வேண்டுமானால் அரசானது சில விஷயங்களில் மட்டும் சில ரகசியங்களை - அரசின் பாதுகாப்பு, இறையாண்மை - போன்றவற்றை பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கி வைக்கலாம். ஆனால், அப்படியான நேர்வுகளிலும் ஏன் அந்த தகவல்கள் தன்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன என்பதை அறிகின்ற உரிமை குடிமகனுக்கு உண்டு.

தகவல் அளிப்பதில் தமிழ்நாடு

நடுவண் அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஐ நடைமுறைப்படுத்தியதற்கு சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 1997 அரசிதழில் அறிவிக்கப்பட்டு 5.5.1997 முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டப்படி தகவல் வழங்கும் அலுவலர் கோரப்பட்ட தகவலை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்காதிருக்கும் நேர்வில், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு விதிக்கப்படும் அபராதம் என்ன என்பதைப் பற்றி இச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து பின்னர் எழுந்த தாவாக்களில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 1997 நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதன் மேலுரிமைப்பாடாக (Overiding) நடுவண் அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நடைமுறைக்கு வந்துள்ளதால் அன்றைய நாள் வரை முடிவு செய்யப்படாமல் தேங்கியிருக்கும் வழக்குகள் நடுவண் அரசின் சட்டத்தின்படியே முடிவு செய்யலாகும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (Diamond Jubilee Higher Secondary School Vs. Union of India 2007 - 3MLJ (77)).

இந்திய சாட்சிய சட்டம் 1872

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உண்மையில் இந்திய சாட்சியச் சட்டத்தின் (1872) நீர்த்துப்போன வடிவம்தான் என்று சொல்வோரும் உண்டு. இந்திய சாட்சியச் சட்டம் 1872 முதல் அமலில் இருந்து வருகிறது. இந்திய சாட்சியச் சட்டத்தின்படி பெறப்பட்ட சான்று நகலை எந்த ஒரு நீதிமன்றத்திலும் தக்க சான்றாவணமாக பயன்படுத்தலாம் என்பது இச்சட்டப்பிரிவு 77ன் படி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் பெறப்பட்ட தகவலை நீதிமன்ற தாவாக்களில் தக்க சான்றாவணமாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றி இச்சட்டப் பிரிவுகள் எதுவும் கூறாமல் உள்ளன. மேலும், இந்திய சாட்சியச் சட்டத்தின் படி எந்த அலுவலரிடம் மனு விண்ணப்பிக்கப்படுகிறதோ அந்த அலுவலர் ஒரு வாரத்திற்குள் தகவலை வழங்க வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் படி தகவல் வழங்குவதற்கென்றே சிறப்பாக நியமிக்கப்பட்ட அலுவலரிடம் மட்டுமே மனு செய்ய இயலும். மேலும், இச்சட்டப் பிரிவு 7 தகவல் அளிக்க 30 நாட்களை கெடுவாக நிர்ணயித்துள்ளது. மேலும், இந்திய சாட்சியச் சட்டம் 1872ன் படி குறிப்பிட்ட நேரத்தில் கோரப்பட்டுள்ள தகவல் வழங்கப்படவில்லை எனும் நேர்வில், பிரிவு 159ன் கீழ் நினைவூட்டல் ஒன்றைத் தொடர்ந்து தேவையான நீதிமன்ற வழக்கு தொடர முடியும். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் படி தகவல் வழங்கப்படாத நேர்வில் எவ்வித வழக்கும் தொடுக்க இயலாது. இன்னமும் கூட பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் இந்திய சாட்சியச் சட்டம் 1872-த்தில் வீரியமாக உள்ளன என்றும் அத்தகைய சங்கதிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நீர்த்துப்போகச் செய்துவிட்டது என்று சொல்வாரும் உண்டு. அவை உண்மையாகவும் இருக்கலாம். இருந்தாலுமே கூட, பொது அதிகார அமைப்புகளிடமிருந்து தகவலை கேட்டுப்பெறும் உரிமையானது தங்களது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற விழிப்புணர்வு இந்த நாட்டுக் குடிமகன்களிடம் பெரிய அளவில் கொண்டு வந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நூற்பட்டியல்:
1. Acharya.N.K. Commentary on the Right to Information Act, 2005, Asia Law House, Hyderabad, 2013.
2. Rajaraman.S. The Right to Information Act, 2005, C.Sitaraman Company Private Limited, Chennai, 2005.
3. Venkatesan.S.N. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Giri Law House, Salem, 2013.
4. புலமை வேங்கடாசலம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Giri Law House, Salem,2015.