ராதிகா சித்சபைஈசன்

| Tuesday, December 17, 2013
"இளைய தளபதி" என்றால் பொருந்தும்
படித்த நபர்கள் தமக்கான நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கு உலகெங்கிலும் ஆட்கள் இருக்கிறார்கள். மற்றவர்க்கு உத்வேகம் தரக்கூடிய சாதனையாளர்களின் சுயசரிதங்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள், ஆற்றிய பேருரைகள் போன்றவை புத்தகங்களாக பதிப்பிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள படித்தவர்க்கு தேவையான உத்வேகத்தை கொடுத்து வருவதை நாம் அறிவோம். படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள் கேள்வி ஞானத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் அல்லவா? "கற்றலின் கேட்டல் நன்று" என்று சொல்லப்பட்டிருப்பதில் ஆறுதல் கொள்ளவேண்டியதுதான். கேட்பதில் உள்ள அனுகூலத்தை மதிப்பிடவே முடியாது என்றாலும், நாமே நமக்கு தேவையான புத்தகத்தை வாங்கி, முடிகிற பொழுதில், பேருந்தில் பயணம் செய்யும் போது, இரவு தூங்கப் போகும் முன் படுக்கையில் தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றை அடுக்கிவைத்து அவைகளின் மீது சொகுசாக சாய்ந்த வண்ணம் படிக்கும்போது நமக்கு சௌகர்யமான முறையில் நமக்குத் தேவையான நம்பிக்கை தரும் செய்திகளை பெற முடிகிறதல்லவா? Stephen Covey, Napolean Hill, Shiv Khera போன்ற "நம்பிக்கைத் தலைவர்கள்" எப்போதுமே ஏதேனும் சொல்லியபடியே இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுவதை படிக்கும்போது high-voltage மின்சாரம் ரத்த நாளங்களில் பாய்ந்தாலும், படித்து முடித்தவுடன் அவர்களின் செய்திகளுக்கும் நம்மைச் சுற்றிய நடைமுறைக்கும் இருக்கும் வேறுமைகளின் பிரம்மாண்டம் அவர்களை "ஏட்டுச் சுரைக்காய்களாக" நிறுத்திவிடுகிறது. பிறகு, எது நம்மை உற்சாகப்படுத்த வல்லது? நம்மைப் போல ஒருவன் அல்லது ஒருவள், நம்மைவிட கீழே இருந்தவர், அவரின் உயிர், உடல், தன்மானம் எதுவுமே எப்போது வேண்டுமானாலும் மற்றவரால் பறிக்கப்படலாம் என்ற உத்தரவாதமில்லாத நிலையில் இருந்தவர், இவைகளின் பாதுகாப்பிற்காகவும், குறைந்த பட்சம் உயிர் வாழ்வதற்காகவும் பிறந்து வாழ்ந்த ஊரை விட்டே ஓடிய நமது ஓர் சகோதரனோ, சகோதரியோ நம்மிடம் தான் உயர்ந்து "பெரிய ஆளாக" ஆன கதையை சொல்லும்போது அந்த "நம்பிக்கை செய்திக்கு" ஒரு நம்பகத் தன்மை வந்து விடுகிறது.

இதுதான் ராதிகா சித்சபைஈசன் அவர்களின் சொற்பொழிவையும், செவ்வியையும், அதற்கும் மேலாக கனடா தேசத்தின் பாராளுமன்றத்தில், முதல் தமிழ்ப் பெண் பாராளுமன்ற உறுப்பினராக இவர் கர்ஜித்த கன்னிப் பேச்சையும் கேட்ட பொழுது நடந்தது. பார்ப்பதற்கு அழகாகவும் (சமஸ்கிருதத்தில் உள்ள 'தேஜஸ்' என்ற வார்த்தை இன்னும் பொருத்தமோ இவருக்கு!), கேட்பதற்கு பிரமிப்பாகவும் இருக்கிறார். FeTNA மேடையில் ஏறத்தாழ 35 நிமிடங்கள் கர்ஜிப்பதை (YouTube உபயம்) கேட்பது ஒருவனுக்கு "பாக்கியத்தால்" மட்டுமே கிடைப்பது. ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறது இந்த நங்கை பேசுவதை கேட்க. தனது தாயகமான இலங்கையில் நடந்த இனப் படுகொலையை பற்றி உரையாடுவதற்கு அரசியல் சாதுர்யமாக humanity crisis என்ற பதத்தை பயன்படுத்தும் இவர், பெண்களின் சமத்துவம் என்பதைத் தொடும்போது 'காளியாக' மாறி அரசியல் சமத்காரங்களை கடாசிவிடுகிறார். ஒருவேளை, இதுவுமே அரசியலாக இருக்கலாம்; ஆனால் எல்லோருக்கும் வேண்டுவதான அரசியல்தான் இது. தனக்கும், தன் குடும்பத்திற்கும் அடைக்கலம் தந்து, தனது தாயகத்தில் நினைத்துப் பார்க்கவும் முடிந்திராத வாய்ப்புக்களை (கல்வி, வாழ்வு, வேலை, அரசியல் நுழைவு) புலம் பெயர்ந்தோருக்கு வழங்கிய கனடா தேசத்திற்கு அதன் பாராளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சினூடே தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நன்றி தெரிவித்து பேசுவதைக் கேட்ட நான் மயிர்க்கூச்செறிந்து புறம் மறந்தேன்.

யார் ஒரு மொழியை அதன் இலக்கணப் படிதான் பேச வேண்டும் என்று சொன்னது? வேற்று மொழியை கலக்காமல்தான் ஒரு மொழியை பேச வேண்டும் என்று யார் சொன்னது? மேடையில் பேசும்போது நாடு நடுவே வார்த்தை கிடைக்காமல் திணறி நின்றால் மேடைப் பேச்சின் அழகு கெட்டுவிடும் என்று யார் சொன்னது? ராதிகா சித்சபைஈசன் அவர்கள் தமிழை அதன் மழலையின் உச்சத்தில்தான் பேசுகிறார். அவர் தமிழ் தவறுகள் நிறைந்தது. பேச்சின் நடுவே ஆங்கிலம்தான் மேலோச்சுகிறது. உணர்ச்சிப் பிழம்பாக மாறி தனது எண்ணத்தை கொட்டும்போது வார்த்தை வராமல் தடுமாறுகிறார். ஆனால், சொற்பொழிவிற்கு என்று ஒரு அழகு இருந்தால் அது இதுதான். ராதிகாவின் பேச்சுதான். இவரின் சொற்பொழிவு மற்றும் உரையாடல் பேச்சழகின் கொடுமுடி. உணர்வை உயிராக வைத்து உரையாடும்போது எல்லா இலக்கணங்களும் உடைக்கப்பட்டாலும், புதிய இலக்கணம் ஒன்று எழுந்து வந்து அழகு சேர்க்கிறது.

நாஞ்சில் சம்பத்துகளும், வைகோக்களும், நெல்லை கண்ணன்களும், கருணாநிதிகளும், இன்ன பிற மேடைச் சிங்கங்களும் உடையாத தமிழில் மணிக்கணக்கில் பேசி கொடுக்க முடியாத உணர்வலைகளை, இந்த சின்னப்பெண் தன்னுடைய உடைந்த மழலையில், ஆங்கிலமும் பிரெஞ்சும் கலந்த மணிப்பிரவாளத்தில் நிமிடங்களில் ஏற்படுத்தி விடுவது ஒருவேளை "உண்மை பேசுவதால்" இருக்கலாமோ?

கோடி நமஸ்காரம் ராதிகா சித்சபைஈசன் அவர்களே!

0 comments:

Post a Comment