வெந்து தணியுமா காடு?

| Saturday, December 14, 2013
வெள்ளம் என்மீது புரண்டோடுகிறது..

தமிழ் எழுத்துலகில் பெண்களின் பிரவேசம் நடந்து பல நூற்றாண்டுகள் கழிந்திருக்கும். பல சங்கப் பாடல்கள் பெண்கள் பாடியிருக்கிறார்கள். எழுதிய பெண்களில் பெரும்பாலோர் தீவிரவாதிகளாக தெரிவதின் காரணம், எழுதிவந்த ஆண்களில் மிகப்பெரும்பான்மையோர் "மிதவாதிகளாக" தெரிவதால் இருக்கலாம். தங்களுடைய காதலையும், அரிதான சமயங்களில், காமத்தையும் அழகாக எழுதிய பெண் கவிகள், படைப்பாளிகள் உண்டு. காமத்தை எழுதுவது பெண்ணுக்கு அழகல்ல என்ற "தலிபானிசத்தையும்" மீறி, பெண் படைப்பாளிகள் தங்களை சுட்டு எரித்த காமத்தீயில் இருந்தே மை எடுத்து நிரப்பி, தாள்களை பற்ற வைத்திருக்கிறார்கள். வெந்து எரிந்தது காடு. "அதிர்ச்சி" தருவதுதான் இவர்களின் நோக்கம் என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. இது உண்மையில் பாராட்டுத்தான். "அதிர்ச்சி" தருவதுதான் இலக்கியத்தின் நோக்கமே. "அதிர்ச்சி" இன்றேல் இலக்கியம் இல்லை.
தி ஹிந்துவில் சக்தி ஜோதி அவர்களின் கவிதைகள் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உடலை ஊடுருவி எரிக்கும் காமத்தை "காதல் வழி" என்று தலைப்பிட்டு சொல்கிறார்:

"ஆற்றின் கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்.
வெள்ளம் என்மீது
புரண்டோடுகிறது.
தொண்டை வறண்டு
தாகத்தில் தவிக்கின்றேன்.
கால்கள் நீரில் மிதக்கின்றன.
ஆற்றின் போக்கை
எதிர்க்க இயலாமல்
மீனாய் மாறுகின்றேன்.
தப்பிக்க இயலாது
இனி
நானும்
என்னிடமிருந்து
நீரும்"

"என்னிடம் மாட்டிக்கொண்ட காமமும், காமத்திடம் மாட்டிக்கொண்ட நானும் இனி தப்புவதாக இல்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் கழுத்தை நெரித்தபடியே இருக்கிறோம். ஒருவர் தோற்றாக வேண்டும். தோற்ற பிறகும் விடமாட்டோம். காமத்திடம் மாட்டிக்கொண்ட பெண்ணுக்கு அதில் இருந்து வெளி வர மனதும் இல்லை. யாருக்குத்தான் அதிலிருந்து வெளியே வர மனசு வரும்? கட்டுப்பாட்டையும் முழுக்க இழந்தாயிற்று. பிடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு பற்றுக்கட்டை வேண்டும்." -இதுவெல்லாம் கவிதையை படிக்கும்போது எனக்கு சாத்தியமான அர்த்தங்கள்.

எரிமலை போல வெடிக்கும் இந்தக் கவிதையில், காற்று போல எதற்கும் அடங்கி முடியாத அர்த்தம் வளர்ந்துகொண்டே போகிறது. நல்ல கவிதை நேராக பேசாது. பாதிதான் சொல்லும். மீதியை வாசகன்தான் தேடிப்பார்க்க வேண்டும். முழுமையை தேடிக் கண்டடைந்து விட்டேன் என்று சொல்லவும் யாராலும் கூடாது. தேடத் தேட வளரும். கவிதையிடம் மாட்டிக்கொண்ட ரசிகனும், ரசிகனிடம் மாட்டிக்கொண்ட கவிதையும், பெண்ணும் காமமும் போலத்தான். சக்தி ஜோதியின் இந்த கவிதை, ஒரு சிறந்த படைப்புக்குரிய எல்லா தன்மைகளையும் உள்ளடக்கி நிற்கிறது.

0 comments:

Post a Comment