ப[பி]டித்தது

| Thursday, December 5, 2013
ஏற்காடு இடைத் தேர்தல் தொகுதி வாசிகளுக்கு நன்மை செய்ததோ இல்லையோ, தேர்தல் பணியாளர்களில் ரிசர்வ் அணியில் இருந்த எனக்கு பெரிய சகாயத்தை செய்தது.   நேற்று காலை முதல் மாலை ஐந்து மணி வரை வலசையூர் வருவாய் ஆய்வாளர் அலுவகத்தில் காத்திருக்குமாறு பணிக்கப்பட்டதின் பொருட்டு, திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் "புலிநகக் கொன்றை" நாவலை எடுத்துச் சென்றேன்.  328 பக்கங்கள் கொண்டது.  திருநெல்வேலி நாங்குநேரி ஐயங்கார் குடும்பம் ஒன்றின் தலைமுறைப் பயணம் வழியாக பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலிருந்து துவங்கும் (கட்ட பொம்மு மரணம் 1799 அக்டோபர்) இந்த கதை 1970கள் வரை நீண்டு குடும்பத்தின் கதையோடு சமூகத்தின் கதையாகவும் விரிந்து தாமிரபரணி போல சில இடங்களில் ஆர்ப்பரித்தும், சில இடங்களில் மெல்ல நகர்ந்தும், சில நேரங்களில் வெள்ளப் பெருக்காகவும், மற்ற நேரங்களில் சிற்றோடையாகவும் மாறி மாறி முன் நகர்வது, வாழ்க்கை என்னும் ஜீவ நதி மனிதம் என்ற சமுத்திரத்தில் கலக்க பாய்ந்தோடுவதை நினைவுபடுத்துகிறது. எல்லா நேரமும் பாயத்தான் ஆசை. முடிகிறதா என்ன?  ஆங்கிலத்திலும் திரு.திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களே இதை எழுதியிருக்கிறார்.  மூலம் ஆங்கிலந்தான். ஆங்கிலத்தில் எழுதியபிறகு, அவரே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  நாவலில் எங்குமே மொழிபெயர்ப்பு வாடை அடிக்கவில்லை என்பது, இதனுடைய அடி சிந்தனை தமிழில் இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.  ஜீவிதம் என்பதைப் பற்றி சைவமும் வைஷ்ணமும் சொல்லியிருக்கும் கருத்துக்கள், ஐயர் - ஐயங்கார், சிவன் - விஷ்ணு போன்றோரில் யார் பெரியவர் சின்னவர் என்ற விவாதங்கள் காலத்தின் நீட்சியில் எப்படி நடந்து வந்திருக்கின்றன, இந்திய விடுதலை போராட்டத்தில் மித வாதிகளும் தீவிரவாதிகளும் எப்படி நடந்து கொண்டார்கள், அவர்களை இந்திய தேசிய காங்கிரசும், கும்பினி ஆட்சியாளரும் எப்படி பார்த்தார்கள், மனுவின் கொடையான சமூக அடுக்குகள் மனிதனை பாதித்த விதம், இந்திய தேசியத்தின் ஆகப்பெரும் ஆளுமையான திரு.காந்தியின் அரசியல், இரண்டாம் நிலை தலைவர்களான நேரு மற்றும் ராஜாஜியின் நிலைப்பாடுகள், திராவிடம் எப்படி தமிழகத்தில் தேசியத்திற்கு இணையான அரசியல் தத்துவமாக வளர்ந்தது,  கம்யூனிஸ்டுகளை கும்பினி-காங்கிரஸ் ஆட்சிகள் நடத்திய விதம், மிக முக்கியமாக, ஏன் போலீஸ் கும்பினி ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் ஒரே மாதிரியான குரூரத்துடனேயே நடந்து வந்திருக்கிறது, பிராமணர்களின் திருப்பள்ளிகள் - அங்கே "சொர்க்கத்திலும் பரிமாறத்தக்க பதார்த்தங்கள்", பிராமணப் பையன்கள் மற்றும் பொண்டுகளின் படிப்பார்வம் என்பதைப் பற்றியெல்லாம் திரு.பி.ஏ.கிருஷ்ணன் நடத்திச் செல்லும் விவாதங்களும் வருணனைகளும் மிகவும் நேர்மையானவை.  இவரின் உரைநடை கூர்மையானதும், இந்திரா பார்த்தசாரதியை நினைவுபடுத்தக்கூடியதுமாகும். 

அண்மைக்கால நாவல் வெளியீடுகளில் முக்கியமான ஒன்றாக "புலிநகக் கொன்றை" விளங்குவதில் நியாயம் உண்டு.  இன்னொன்றைச் சொல்ல வேண்டும்.  328 பக்கங்களும் வேகமாக ஓடுகின்றன. கொட்டாவி வருவதேயில்லை.  இதை நீங்கள் படிக்கலாம் என்று நிச்சயமாக பரிந்துரை செய்வேன்.
[காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, உரூபா 250/-]

 

0 comments:

Post a Comment