பள்ளிக் கல்வித் துறை செயலராக உதயச்சந்திரன் அவர்கள் வந்ததிலிருந்து நடந்தவைகளில் முக்கியமானதாக நான் கருதுவது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொருட்படுத்தத் தக்க இலக்கிய / சமூக ஆளுமை ஒருவரை அழைத்து ஒரு பிரசங்கத்திற்கு ஏற்பாடு செய்து அதை உடனடியாக YouTube-ல் பதிவேற்றம் செய்து வருவதுதான். இது இன்னும் தொடர்ந்து வருகிறதா என்று தெரியவில்லை. அறிவுலகத்திற்கு பெரிய கைங்கர்யமானது இதுவென்று தெரிந்த மாத்திரத்திலேயே இவரைவிடப் பெரியோர்களால் இது தடுக்கப்படும். தடுக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.
இருக்கட்டும். நடந்த வரை / நடக்கும் வரை நல்லதுதான். இங்கு நான் சொல்ல விரும்புவது கே.வி.சைலஜா மற்றும் பவா செல்லத்துரை ஆகியோரின் பிரசங்கங்கள் பற்றி. ஒரே காணொளித் தொகுப்பில் இருவரின் பிரசங்கங்களும் உள்ளன. அடுத்தடுத்த பொழிவுகள். முதலில் சைலஜா பேசுகிறார். இவருடைய மொழிபெயர்ப்பான "சிதம்பர நினைவுகள்" தற்காலத்திய தமிழில் அதி முக்கியமான code changing work என்று சொல்லுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. பொதுவாக, மூல நூலில் இருக்கும் அர்த்தப் பொதிவுகள் பிரதி நூலில் இல்லாது போய்விடும். மூல ஆசிரியர் தன்னுடைய மொழியில் அவருக்கு இருக்கும் பாண்டித்தியம் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு புதுவிதமான சொல்லாடலை உருவாக்கியிருப்பார். அந்த சொற்சேர்க்கைகள் - பிரத்தியேகமான பிரதி மொழி ஆகியவை அந்தப் படைப்பிற்குத் தேவையான ஆழத்தை வழங்கியிருக்கும். இவை அனைத்தையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது சாத்தியமே இல்லை.
தமிழில் நல்ல வாசிப்பாளர்கள் என்று கூறத் தக்கவர்கள் குறைந்த பட்சம் ஆயிரம் பேராவது இருப்பார்கள், இன்றைய நிலையில். இவர்கள் அனைவருமே மேனாள் தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் மொழிபெயர்த்துள்ள லியோ டால்ஸ்டாயின் "போரும் சமாதானமும்" வாசித்திருக்கக் கூடும். மூன்று தொகுதிகளாக வந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் இருக்கும் மூலப் பிரதி விசுவாசம் கடைசித் தொகுதியில் இல்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். வந்தவரையிலுமே மகத்தான மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவனால், இந்த வித்தியாசத்தை எளிதில் உணர முடியும். மூவாயிரம் பக்கங்களுக்கு மேலதிகமாக நீளும் ஒரு படைப்பை பெயர்க்கும் போது, பல்வேறு தடைகளை மொழிபெயர்ப்பாளன் சந்தித்திருக்கக் கூடும். ஒரு வித மன அயர்ச்சிக்குமே கூட அவன் ஆளாகியிருக்கலாம். முதல் இரண்டு தொகுதிகளும் பதிப்பிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதை பதிப்பிக்க, நிதி காரணம் பொருட்டு, உண்டாகியிருக்கக் கூடிய அசாத்தியம் மொழிபெயர்ப்பாளனின் உற்சாக இழப்பிற்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். எது எப்படியிருப்பினும், மொழிபெயர்ப்புத் தரம் கவனிக்கத் தக்க அளவில் குறைந்துபோய் விட்டது என்பது உண்மை. முதல் இரண்டு தொகுதியிலுமே கூட, இது ஒரு ரஷ்ய நாவல் என்ற உணர்வு வாசகனுக்கு முதல் பக்கத்திலிருந்தே ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு மொழிபெயர்ப்பாளரின் போதாமை மட்டுமே காரணமாகி விடாது. தமிழ் - ரஷ்ய கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள வேற்றுமை பெரிதும் காரணமாக இருக்கலாம்.
சொக்கலிங்கத்தின் குறைபாடுகள் எதுவும் சைலஜாவிடம் காண்பதற்கில்லை. இவரிடம் தமிழ் விளையாடுகிறது. இவருக்கு "பெண் மொழி" கைவசப்பட்டு விட்டது. மூலப்பிரதிக்காரர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களிடமுமே பெண் மொழி இருக்கக்கூடும். Auto-fiction என்ற வகைமையைச் சேர்ந்ததுதான் இந்தப் புத்தகம். மலையாளத்தில் "சிதம்பர ஸ்மரண" என்ற பெயரில் வெளிவந்து பெரிதும் பிரபலமான படைப்பு. இந்தப் புத்தகத்தை கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தில் 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் வாங்கியதிலிருந்து இதுவரை ஐம்பது முறைகளுக்கு மேலாகப் படித்திருக்கிறேன். சைலஜாவின் பிரதி மொழிக்காகவே. நூறுக்கும் மேற்பட்ட பிரதிகளை வாங்கி கல்யாணம், இதர தருணங்கள் ஆகியவற்றின் பொழுது, பிறருக்கு பரிசளித்திருக்கிறேன். இதில் பல வரிகள் எனக்கு மனப்பாடம். "ஒரு மனிதனின் யோக்கியதையை தீர்மானிப்பது பணம், பெண், அதிகாரம் ஆகிய மூன்று தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே."
சைலஜாவின் பிரசங்கத்திலிருந்து அவர் மேற்சொன்ன படைப்பைத் தவிர, வேறு சில நூற்களையும் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவைகளுமே நன்றாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால், சைலஜாவின் பொழிவிலிருந்து, அவருக்கு அப்படியான மொழி இயல்பாக வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்கிறேன். இயல்பான கண்ணியமான பேச்சு. சௌகர்யமாகவும், கவனமாகவும் கேட்க முடிகிறது. எல்லோரும் கேட்கலாம்; கேட்க வேண்டும். ஆனால், உரத்த குரலில் மூன்றாந்தர ஜோக்குகளை நிரல்படுத்தி பேசும் பட்டிமன்ற பேச்சாளர்களின் பொழிவுகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட காதுகள் சைலஜாவின் பிரசங்கத்தை ரசிக்குமா என்பது சந்தேகம்தான்.
சைலஜாவிற்கு அடுத்து அவரது கணவரும், கதைசொல்லியும், வம்சி பதிப்பக உரிமையாளருமான பவா செல்லத்துரை பேசுகிறார். அற்புதமான பேச்சு. திருவண்ணாமலை பேச்சுவழக்கு இவரது பிரசங்கத்திற்கு ஒரு பேரழகைத் தருகிறது. ஏன் கதைகள் எழுதப்பட வேண்டும், ஏன் அவைகள் வாசிக்கவும் கேட்கவும் பட வேண்டும் என்பதாக இவரது பிரசங்கம் அமைகிறது. தனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சில கதைகளை நமக்கு சொல்கிறார். பஷீர் கதை ஒன்று. அதை பஷீர் அவர்களே சொல்கிறார். ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, காசு கொடுக்கப் போகும் சமயம் தன்னுடைய பர்ஸ் திருட்டுப் போய் விட்டதை உணர்ந்த பஷீர், ஓட்டல் முதலாளியிடம் சொல்ல, முதலாளி நம்ப மறுத்து உரத்த குரலில் சண்டை பிடிக்கிறார். பஷீர் பெரிய எழுத்துக்காரர் என்பது ஓட்டல் முதலாளிக்குத் தெரியும். ஆனால், அதை அவர் பொருட்படுத்தாது, பஷீரின் வேட்டி சட்டையை அவிழ்த்துத் தர சொல்கிறார். எவ்வளவோ பஷீர் மன்றாடி பார்த்தும் முதலாளி மசியவில்லை. பஷீர் கண்களில் நீர் திரள்கிறது. அங்கிருப்போர் ஒன்றுமே செய்ய முடியாமல் இந்த மனித அவலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது உள்ளே நுழைந்த நடுத்தர வயது மனிதனொருவன், பஷீருக்காக பரிந்து பேசுகிறான். அவருக்கான பணத்தை தான் தருவதாக கூறி, அந்தப் பணத்தை முதலாளி மேல் எறிந்துவிட்டு, முதியவர் பஷீர் அவர்களை மெதுவாக ஒரு மரத்தடிக்குக் கூட்டி வருகிறான். தனது கால்சராயின் பாக்கெட்டில் கையை விட்டு ஆறேழு பர்சுகளை எடுத்து, "ஐயா, இவற்றில் உங்களின் பர்ஸ் எது என்று சொல்லுங்கள்" என்று கேட்கிறான்.
ஒரு திருடனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இல்லாமல், மற்றவர்கள் ஏன் பஷீர் சிறுமைப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்? என்று கேட்கிறார் பவா செல்லத்துரை. அந்த ஓட்டலில் அந்த நேரத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் என்னுடைய ஒரே ஆறுதல்.
"அண்ணா நூற்றாண்டு நூலகம் பொன்மாலைப் பொழுது" என்று YouTube-ல் தேடினால், மேற்சொன்ன பிரசங்கமும், வண்ணநிலவன், வண்ணதாசன், இமையம், மருத்துவர் ஷாலினி, கவிதா முரளிதரன், அருள்மொழி மற்றும் பலரின் பொழிவுகளும் கிடைக்கின்றன.
0 comments:
Post a Comment