கண்மணி குணசேகரன் அவர்களின் 'பொன்மாலைப் பொழுது' பொழிவைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அரசுப் போக்குவரத்து பணிமனையில் பேருந்து
மெக்கானிக்காக இருக்கிறார். நடுநாட்டு சொல்லகராதி ஒன்றைத் தொகுத்துள்ளார். தமிழ்ப்பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல சர்வகலா சாலைகள்
செய்ய முடியாத ஒன்றை ஒற்றை ஆளாக செய்து முடித்துள்ளார். சிறுகதைகள் - கவிதைகள் -
நாவல் - கட்டுரை தொடர்ந்து எழுதிவரும் குணசேகரன் தனது எல்லா படைப்புகளுக்கும்
நெய்வேலி - கள்ளக்குறிச்சி - தியாகதுருவம் - உளுந்துர்பேட்டை - கடலூர் பகுதி மக்களின்
வாழ்க்கையையே தனது பாடுபொருளாக எடுத்தாள்கிறார்.
கண்மணி குணசேகரனின் சொற்பொழிவு தமிழில் பிரசங்கப்
பாணிகளில் தனித்துவமான ஒன்று. நடு நாட்டு பேச்சு வழக்கு காதில் அமிர்தமாக இறங்குகிறது. நம்பமுடியாத
எளிமையோடு இருக்கிறார். 'காட்டான்' என்று சொல்வார்களே, அதைப் போன்ற தோற்றத்தோடு, பேச
ஆரம்பித்ததும் மேதமை பொழியத் துவங்குகிறது. நூற்றுக்கணக்கான நடுநாட்டு சொலவடைகள்,
ஒப்பாரிகள், பழமொழிகள் என்று தன்னெழுச்சியாக ஆர்ப்பரித்து வருகிறது. இவரின் கதை மாந்தர்கள் ரத்தமும் சதையுமாக இவர்
கண் முன்னால் நடமாடும் ஊர்க்காரர்கள்தான்.
அவர்களின் கதைதான் கண்மணி குணசேகரனின் கதைகளின் கதையும்.
தன்னுடைய கதைகளை,மற்ற படைப்புக்களை பிற மொழியில்
பெயர்ப்பதென்பது மிகவும் சிரமமான காரியம் என்கிறார். நாடு நாட்டு பேச்சு வழக்குதான் தனது படைப்புலகத்தின்
ஆதாரம் என்பதால், தனது படைப்புகள் தன் மண்ணின் மைந்தர்களின் கதையை அவர்களின்
மொழியிலேயே சொல்வதைத் தம் பிறவி நோக்கமாகக் கொண்டிருப்பதால், நடுநாட்டு பேச்சு
வழக்கின் நுணுக்கங்களை அப்படியே வேறொரு மொழியில் கொண்டுவருவது சாத்தியமே இல்லை
என்று சொல்லும் கண்மணி குணசேகரன், மாறாக இமையம் - கி.ராஜநாராயணன் ஆகியோரது
படைப்புக்கள் மொழிபெயர்க்கப்படும் பொழுது பெயர்ப்பாளருக்கு சிரமங்கள் எதனையும்
அதிகம் தராத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், படைக்கப்படும்பொழுதே
மொழிபெயர்ப்பு சாத்தியங்கள் மீது கண்வைத்தவை என்றும் கூறுகிறார்.
தமிழ் பிரசங்கப் பொது பாணியிலிருந்து முற்றிலும்
வேறுபட்டதாக இவரின் பொழிவு அமைந்துள்ளது.
இதைப்போன்ற பொழிவுகள் அதிகம் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும். எழுதவும் பேசவும் புதிய பாணிகள்
வந்துகொண்டேயிருப்பதை மொழி ஆர்வலர்கள் நேரடியாக உணர்ந்துகொள்ள இப்படியான
சந்தர்ப்பங்கள்தான் பயனுள்ளவை. தனித்தமிழ்,
மேடைத்தமிழ், அச்சுத்தமிழ், மற்றும் பாடப்புத்தகத் தமிழ் என்பவை உண்மையான
தெருத்தமிழை இளைய தலைமுறையின் கவனத்திற்கு கொண்டுவராமல் தம்மை வெட்டவெளி எங்கும் இட்டு
நிரப்பிக்கொள்கின்றன. உண்மையான பயன்பாடு தமிழ் ஆவணப்படுத்தப்படாமலேயே
போகிறது. இத்தகைய பண்டித மனோபாவம் தமிழ்
மொழிக்குப் பயனாகாது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சொற்றொடர் அகராதி,
கொங்கு நாட்டுத் தமிழகராதி, நாஞ்சில் நாட்டு தமிழகராதி போன்றவைகளுக்கு சற்றும்
குறையாமல், நடுநாட்டு மொழியை ஆவணப்படுத்த வேண்டும் என்று அரசுப் போக்குவரத்து மெக்கானிக்
ஒருவருக்குத் தோன்றியிருக்கிறது. இந்தப்
பகுதிலேயே அமைந்திருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் Advanced Center for
Linguistic Studies மற்றும் தமிழ்த்துறைகள் இருக்கின்றன. ஆனால் இப்படியான முன்னெடுப்பை ஒரு தனிநபர்,
அதுவும் கல்விப்புலத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாதவர் தனி முயற்சியாக செய்ய
வேண்டியிருக்கிறது. இப்படியான பணிகளை
முன்னெடுப்பதை விட, இந்த சர்வகலா சாலைகளுக்கு வேறு என்ன முக்கியமான பணிகள் இருக்க
முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. கண்மணி குணசேகரனின் பங்களிப்பைப் பற்றி
மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.இராமசாமி
அவர்கள் விருத்தாசலம் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவருக்கு எடுத்துக்கூறி,
அதற்குப் பின்னால், அந்த துறைத்தலைவர் தம்மை பேருக்கு தொடர்புகொண்டதாக கூறும்
குணசேகரனின் குரலில் எந்த ஏமாற்றத்தையும் உணரமுடியவில்லை.
'என்னைப் பயன்படுத்திக் கொள்வதும் அல்லதாததும்
உன்னுடைய பொறுப்பு. அதைப் பற்றிய கவலை எனக்கு சிறிதும் இல்லை' என்பதாக இருக்கும்
கண்மணி, தற்கால தமிழ் இலக்கிய உலகின் / மொழியியல் துறையின் மிகப்பெரிய ஆளுமை
என்பதை இந்தப் பொழிவு சந்தேகமற துலக்குகிறது.
0 comments:
Post a Comment