சேர்க்கப்படாத உப்பு

| Sunday, February 4, 2018

பொதுவாகவே வரலாறு என்றால், ஆட்சியாளர்களின் வரலாறு என்றுதான் அர்த்தம்.  அல்லது அவர்களுக்கு சௌகர்யமான வரலாறு என்றும் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னால், ஹிட்லரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வரலாறு திருத்தி எழுதப்பட்டது.  யூதர்களுக்கு அது பெரும் பாதகமாக முடிந்தது.  வரலாறு திருத்தி எழுதப்படுவதற்கு பாடப்புத்தகங்கள் சரியான வாய்ப்பு.  சிறுவர் சிறுமியர் மனங்களில் ஊன்றப்படுவது, அவர்கள் வளர்ந்தாலும் மாறுவதற்கில்லை. இளமையிலேயே செய்யப்பட்ட conceptual engineering நாளாக நாளாக வலுப்பெறும்.  பின்னாட்களில் கருத்து மாற்றம் செய்வது என்பது பெரும்பாலும் முடியாது.  இந்த ஒரு காரணத்தினால்தான் ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வந்தவுடன் பாடப்புத்தகங்களில் கை வைக்கிறது. வேறு எந்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்க ஏன் பள்ளிக்கூடப் புத்தகங்களில் ஒரு அரசு கவனம் செலுத்துகிறது என்றால், அப்படியான செயற்பாடு அதனைப் பொறுத்தவரையில் ஒரு முதலீடு - அரசியல் முதலீடு. 

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இதன் நிலப்பரப்பெங்கிலும் பாடப்புத்தகங்கள் காங்கிரசார் முடிவுப்படி எழுதப்பட்டன.  இந்திய அரசியல் போராட்டம் - அத்தகைய ஒரு போராட்டம் உருப்பெற்று வந்தபொழுது, இந்திய மண்ணில் வேறு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தன? - அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புப்படுத்தப்பட்டன - காங்கிரசின் தலைவர்கள் யார் - தொண்டர்கள் யார் - அந்தக் கட்சியின் நோக்கம் என்னவாக இருந்தது - ஏன் பல முக்கியமான தலைவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்கள் - அன்றிருந்த இந்து முஸ்லிம் சர்ச்சைகள் இப்போதைய சர்ச்சைகளை விட வேறுபட்டிருந்தனவா? - உப்புப் போராட்டம், பூர்ண சுயராஜ்ஜியம், வெள்ளையனே வெளியேறு, சைமன் கமிஷன், வட்டமேஜை மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும் நடந்தவை யாவை? - நீதிக்கட்சி, சுயராஜ்ஜியக் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசாரோடு ஒத்துப் போக முடியாதவாறு இருந்ததற்கான காரணங்கள் என்ன? - அவைகள் காங்கிரசோடு ஒத்துப் போன காலங்களிலும் இருந்த சமூக நிலைகள் என்ன? - போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு எந்த பாடப் புத்தகத்திலிருந்தும் ஒருவன் பதில் பெற முடியாது. 

ஆயிரமாயிரம் புத்தகங்களின் வழியேதான் ஒருவன் இவைகளுக்கான பதில்களை அடைய முடியும். காங்கிரஸ் துவக்கப்பட்ட நோக்கம் என்ன? - காங்கிரசில் முடிவெடுக்கும் நிலையில் எப்பொழுதுமே பார்ப்பனர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்களே, என்ன காரணம்? - அரசுப் பதவிகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏன் வழங்கப்பட்டு வந்தன? (ஓரிரு விலக்குகளைத் தவிர) - பெரியார் ராமசாமி நாயக்கர் ஏன் 1928-க்குப் பிறகு காங்கிரசிலிருந்து விலகினார்? - போன்ற கேள்விகள் தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை.  உண்மையில், பாஜக-வினர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் வரலாற்றுப் பாடப்புத்தகங்களை பெரியதொரு அளவில் மாற்ற வேண்டிய தேவையே ஏற்படவில்லை.  ஏற்கனவே இருந்த புத்தகங்களின் பெரும்பாலான கருத்துகள் அவர்களுக்கு இசைவானதுதான்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக மெட்ராஸ் மாகாணத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மட்டுமே தன்னை அரசாங்கத்திற்கு எதிர் நிலையில் இருத்தி வந்திருக்கிறது.  ஆனால், அது உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிர் நிலையைத்தான் எடுத்து வந்ததா என்பதும் ஒரு சுவராஸ்யமான கேள்வி. 

1927ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பூர்ணசுயராஜ் தீர்மானம் முழுமையான விடுதலை என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.  டொமினியன் அந்தஸ்தை நோக்கியதாகவே அது இருந்தது.  மெட்ராஸ் மாகாணத்தின் உப்புப் போராட்ட கதைகூட நமக்கு அதிர்ச்சி தருவது. "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ராஜாஜி காந்தியின் தண்டிப்பயணத்தை தமிழ்நாட்டில் அப்படியே நகல் செய்ய விரும்பினார்.  அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரும், திருச்சி டி.எஸ்.எஸ்.,ராஜனும் ஆவர்.  ராஜாஜிக்கு சென்னையிலிருந்து ஆதரவு கிட்டவில்லை.  சென்னையைத் தங்கள் கோட்டையாகக் கருதிக்கொண்டிருந்த சுயராஜ்யக் கட்சியினர் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ராஜாஜியின் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தவர்கள் மதுரையிலுள்ள சௌராஷ்டிரா வகுப்புத் தலைவர்களும் முதலாளிகளும் பம்பாயிலிருந்த தென்னிந்தியப் பார்ப்பனர்களுமாவர்.  தஞ்சை மாவட்டத்திலிருந்த வேதாரண்யத்தை ராஜாஜி தேர்ந்தெடுத்தது தற்செயலானதல்ல.  சென்னை நகரம் சுயராஜ்யக் கட்சியினரின் கோட்டையாக இருந்ததால் அது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது ஓரளவே உண்மை; ஏனெனில் அங்கு ஆந்திரப் பார்ப்பனக் காங்கிரஸ் தலைவர்களான பிரகாசமும் நாகேஸ்வரராவும் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடத்தினர். தஞ்சை, காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருந்த மாவட்டமாகும். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், அப்போது ஆங்கிலேய அரசாங்கள் கொண்டுவந்த நில வரி விதிப்பு முறை ஆகியவற்றுக்கு எதிராக சுயராஜ்யக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பு அம்மாவட்டப் பார்ப்பனர்கள் மத்தியிலும் மிராசுதார்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அவ்வெதிர்ப்புணர்வு அவர்களிடையே தொடர்ந்து நிலவியது. எனவே அவர்களிடமிருந்து உப்புப் போராட்டத்திற்கு உற்சாகமான வரவேற்புக் கிடைக்கும் என்று ராஜாஜி எதிர்பார்த்தார். தமிழ்நாட்டில் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் இங்குதான் வக்கீல்கள், வணிகர்கள், மிராசுதார்கள் ஆகியோரின் ஆதரவு அதிகமாகக் கிடைக்கும் என்று கருதினார். அவரது பயணப்பாதை கள்ளர் வகுப்பினர் செறிவாக வாழும் பகுதிகளைத் தவிர்த்து, பழைய பார்ப்பன மையங்களான தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி ஆகியவற்றின் ஊடாகச் சென்றது. 1930ம் ஆண்டு ஏப்ரல் 13 - தமிழ்ப் புத்தாண்டு நாள் - பயணத்தின் துவக்க நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  வேதபாராயணங்கள் முழங்க, பார்ப்பனப் புரோகிதர்கள் ஆசி வழங்க, பார்ப்பனர்கள் நாமேசுவரத்திற்கு அடுத்தபடியாகப் புண்ணியத் தலமாகக் கருதும் வேதாரண்யத்திற்குத் திருச்சியிலிருந்து பயணம் தொடங்கியது. வழியெல்லாம் கள்ளர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரிடையே மதுவிலக்குப் பிரச்சாரமும் செய்யப்பட்டது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே தலைமைப் பாத்திரம் வகிக்கும்படு ராஜாஜி பார்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், மதுரை வைத்தியநாத அய்யர், கே.சந்தானம், ருக்மிணி லட்சுமிபதி ஆகியோர்தான் அவர்கள்.  தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியவர்களும் அதனை ரட்சிக்கக் கூடியவர்களும் பார்ப்பனர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்குத்தான் அந்த ஏற்பாடு." (பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி,ராஜதுரை & வ.கீதா, விடியல் பதிப்பகம், 1996, பக்கம் 103 மற்றும் 104).  

சரியாக நினைவிருக்குமேயானால், மூன்றாம் வகுப்பிலிருந்தே உப்புப் போராட்டத்தைப் பற்றி படித்துக் கொண்டு வந்திருக்கிறேன்.  சென்னை ராஜதானியில் வேதாரண்யத்தில் ராஜாஜி உப்பு எடுத்ததைப் பற்றி பக்கம் பக்கமாக சொல்லும் பாடப்புத்தகங்கள், அதே சமயத்தில் சென்னையில் பிரகாசம் உப்பு எடுத்த கதையை ஏன் சொல்வதில்லை? ஏன் வேதாரண்யம் ராஜாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கதை நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது எதனால்?  கள்ளர்கள் செறிவாக வாழும் பகுதிகளின் வழியாக ஏன் ராஜாஜி தன்னுடைய போராட்டத்தை வழிநடத்தி செல்லவில்லை? போராட்டத் தலைமை முழுவதும் ஏன் பிராமணர்களால் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது? இவை பற்றியெல்லாம் படிக்கும் மாணவனிடமிருந்து ஏன் மறைக்கப்பட வேண்டும்?

இவை இத்தனை இருந்தும், இந்த சட்ட மறுப்பு இயக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரியமான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று எஸ்.வி.ஆர். மற்றும் கீதா கூறுகின்றனர். மாறாக, இந்தப் போராட்டம் சென்னையில் மாபெரும் வெற்றிகண்டது.  "... எதிர்பாராத வகையில் சென்னை நகரில் நடந்த உப்புப் போராட்டமோ வெகுமக்கள் தன்மையையும் வன்முறைப் பரிமாணத்தையும் பெற்றுவிட்டது. அச்சமயத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சூளை ஜவுளி ஆளைத் தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து அதில் கலந்து கொள்வதன் மூலம் ஆலை நிர்வாகத்தின் மீதிருந்த ஆத்திரத்தை வெளிப்படுத்திட ஒரு வடிகால் தேடிக்கொண்டிருந்தனர்.  உப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த கொடிய ஒடுக்குமுறைகளைக் கண்டித்து நீதிக்கட்சியினர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற பொதுக்கூட்டமொன்று சென்னையில் ஏப்ரல் 27-ல் நடைபெற்ற போது வேலை நிறுத்தம் செய்து வந்த தொழிலாளர்கள் ஏறத்தாழ 3000 பேர் அந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தவுடனேயே கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக மோதல்கள் ஏற்பட்டன. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் மாண்டனர்; ஐவர் காயமடைந்தனர். மே 1-ல் வேலைக்குத் திரும்பிய தொழிலாளிகள் பின்னர் சட்டமறுப்பியக்கத்தில் கலந்துகொள்ளவில்லை.  தன்னெழுச்சியாக வந்து தன்னெழுச்சியாகத் திரும்பியவர்கள் அவர்கள்." (பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி,ராஜதுரை & வ.கீதா, விடியல் பதிப்பகம், 1996, பக்கம் 106).  
   
இந்தப் போராட்டம் தொடர்பாக பெரியார் அவர்களுக்கு என்ன கேள்வி இருந்தது. "காந்தியின் கடந்த பத்து ஆண்டுக்கால முயற்சியால் இந்தியாவில் பொருளாதார மாற்றம் ஏதேனும் ஏற்பட்டதா? உத்தியோகஸ்தர்கள், வக்கீல்களைத் தவிர பாமர மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனரா? இவ்வளவு பெரிய தேசியப் போராட்டம் மகமதிய மக்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ கலந்து செய்யப்பட்டதா?" (குடி அரசு, தலையங்கம், 13-4-1930)

பாடப்புத்தக வரலாற்றுக்குப் பின்தான் எத்தகைய சுவராஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன! தான் ஜெயிலுக்குப் போனாலும் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைமை பார்ப்பனரல்லாதோர் கைகளுக்குப் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ராஜாஜி. இதைப் பற்றி பெரியார் சொல்கிறார்: "சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத வெறுங்காவல் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்ட சி.ஆர். சிறைக்குப் போகும் முன் வெகு ஜாக்கிரதையாக தலைமை ஸ்தானத்தை திரு.சந்தான அய்யங்காரிடம் ஒப்புவித்துப் போயிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  ஏனெனில் திரு.வி.க., ஆச்சாரியார் சிறை செல்ல நேர்ந்தால் அந்தத் தலைமைப் பொறுப்பை மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தும் அவரிடம் அது ஒப்படைக்கப்படவில்லை. ஒத்துழையாமைக் காலத்திலும் கூட ஆச்சாரியார் தனது தலைமைப் பதவியை சீனிவாசய்யங்காரிடமோ ராஜனிடமோதான் ஒப்புவிக்கக் கவலையாக இருந்தார்." (குடி அரசு, 4-5-1930)

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பல்பரிமாண ஆய்வுக்குட்பட்டது.  அவரவர்களுக்கு ஏற்ற வரலாற்றை ஒவ்வொருவரும் படைத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். இவைகளில் அரசு ஆதரவு பெற்ற வரலாறு சிறார்களின் மனதில் பதியம் போடப்படுகிறது. எனக்கென்ன படுகிறதென்றால், மெட்ராஸ் ராஜதானியைப் பொறுத்த அளவிலாவது, கடந்த முன்னூறு ஆண்டுகால வரலாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முடிந்த அளவில் நேர்மையான நிகழ்வுக் கட்டுமானம் ஒன்று மாணவர்களின் கருத்துக்கு வைக்கப்பட வேண்டும்.  இத்தகைய ஒரு முயற்சியை திராவிடக் கட்சிகள்தான் செய்ய முடியும்.  ஏன் செய்திருக்கவில்லை என்பது மர்மமாக இருக்கிறது.  இங்கிருந்து இந்த மீளாய்வைத் தொடங்கலாம்.


0 comments:

Post a Comment