தன்னெழுச்சியும் செயல்தலைமையும்

| Sunday, January 22, 2017

இன்றைய தமிழ் தி ஹிந்து நாளிதழில் [22-1-2017] சமஸ் 'டெல்லிக்கட்டு' எனும் தலைப்பில் துணிச்சலான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.  என்னுடைய நண்பர்களிடம் கடந்த ஒரு வாரமாக இதே கருத்தை நான் பேசி வருகிறேன்.  இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ரொம்பவும் சிலாகித்து பேசும் அவர்களிடம், என்னுடைய அவநம்பிக்கையை சில காரணங்கள் கொண்டு விவாதித்திருந்தாலும் அடிக்கிற அலையில் பிரபலங்கள் யாரும் இப்படியான ஒரு பார்வையை முன்வைக்க தயங்குவார்கள் என்று அறிந்திருந்ததுதான்.  அந்த வகையில் சமஸ் துணிச்சலானவர்தான்; சந்தேகம் இல்லை.

முதலில், இந்தப் போராட்டத்தில் சித்தாந்தத்தின் பங்கு இல்லை.  கொஞ்சமும் இல்லை என்பது எனது கருத்து.  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதற்காக மட்டும் இத்தகைய தன்னெழுச்சி நடந்திருப்பதாக நான் நிச்சயம் கருதவில்லை.   ராமச்சந்திர குஹா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய தன்னெழுச்சி jobless growth-ன் அடையாளம் என்று சொல்லியிருப்பது முற்றிலும் ஒதுக்கிவிடக் கூடியது அல்ல. சித்தாந்தத்தின் அடிப்படையில் இல்லாத எந்த மக்கள் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றதாக பதிவு எதுவும் வரலாற்றில் இல்லை.  லெனினின் தலைமைக்குப் பின்னால், அதற்கு இருபத்திரண்டு ஆண்டுகள் முன்பாக மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் ஜென்னி உருவாக்கிய சித்தாந்த பங்களிப்பு இருந்தது.  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெரியார் உள்ளிட்டவர்கள் முப்பதுகளின் துவக்கத்திலிருந்தே உருவாக்கி வந்த சித்தாந்தம் இருந்தது.  சித்தாந்த அடிப்படை இல்லாத எந்தவித கட்டுமானமும் குலையும் என்பது விதி. அவசரச் சட்டம் போதாது; நிரந்தரமான பாதுகாப்பு ஜல்லிக்கட்டுவிற்கு வேண்டும் என்று சொல்லும் இளைஞர்களின் குரலுக்கு மாநில - நடுவண் அரசுகள் செவிசாய்த்து விட்டால் இந்த ஐம்பது லட்சம் இளைஞர்களும் அடுத்த நாள் காலையிலிருந்து அவரவர் வேலையைக் கவனிக்கப் போய் விடுவார்கள்.  அப்படியான நிலை என்ன அசந்தர்ப்பமானது! இத்தகைய மக்கள் சேர்க்கை - முன்னிகழ்வு இல்லாதது - ஒரு ஜல்லிக்கட்டிற்காக மட்டுமா?  இந்த ஒரு கலாச்சார அடையாளத்திற்காக மட்டுமா ஐம்பது லட்சம் கொண்ட மாநிலம் பரவலான - எல்லா அரசியல்வாதிகளும் திகிலடையும்படியான - ஒரு எழுச்சி?

அடுத்து, இந்த எழுச்சி ஆரம்ப நிலையில் யாரும் எதிர்பார்க்காதது.  காட்டுத்தீயை இதற்கு காட்டாக சொல்லலாம்.  ஒருவர் பின்னால் ஒருவராக சேர்ந்தது இது.  ஒரு தத்துவப் பின்புலம் மட்டும் இதற்கு இருக்குமானால் - ஒரு அமைப்பின் கீழ் இது நிகழ்ந்திருக்குமானால், இதைப் போன்ற மக்கள் வெள்ளத்தை எந்த நியாயமான சமூக எதிர்ப்பின் பொருட்டும் எப்போது வேண்டுமானாலும் கூட்டியிருக்க முடியும்.  ஜல்லிக்கட்டு எழுச்சி தத்துவப் பின்புலம் இல்லாதது; அந்த நேரத்து உணர்வுகளின் அடிப்படையில் தானாகவே கூடி வந்தது.  போராட்டத்தில் இருப்பவர்கள் உட்பட யாருமே எதிர்பார்க்காதது.  

இன்னொன்று, தில்லி அரசால் (காங்கிரஸ் அல்லது பிஜேபி) தொடர்ந்து - காவிரி விடயம் உள்ளிட்டு - தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது  என்ற உணர்வு அனைத்துத் தமிழர்களுக்கும் நீண்ட நெடு நாட்களாகவே இருந்து வந்துள்ளது. அவ்வகையான அடக்கப்பட்ட கோபத்திற்கும் வடிகாலாக இந்தத் தன்னெழுச்சி அமைந்து விட்டது.  தில்லியின் கைப்பாவையாக இருந்து வரும் திமுக / அதிமுக கட்சிகளின் மேல் கவிழும் அதிருப்தியாகவும் இந்த எழுச்சியைப் பார்க்கிறேன். ஒரு வலிமையான சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டது திமுக.  நாற்பதுகளில் தன்னுடைய ஒட்டு வங்கி அரசியல் தடத்தை சித்தாந்த பலத்தின் மூலமாகவே அந்தக் கட்சி தமிழகத்தில் நிறுவியது.  துவக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகளுக்குள் அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தை காங்கிரசிடமிருந்து கைப்பற்ற முடிந்தது ஒரு மாற்று சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததினால்தான். சித்தாந்த பலம் குன்றி இளைத்துப் போய் விட்டதை திமுக உணர இளைஞர்களின் இந்த எழுச்சி ஒரு நல்ல வாய்ப்பு.

அதிமுகவிற்கு இதனால் ஒரு பெரிய நட்டம் எதுவுமில்லை. அது தனிநபர் வலிமையால் ஏற்படுத்தப்பட்டது; நடத்தப்பட்டது. வலிமையான தலைவர்கள் இல்லை என்ற நிலையில் அதன் இருப்பும் நியாமமும் கடுமையான கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.  திருமதி சசிகலா அல்லது திரு பன்னீர்செல்வம் இந்தக் கட்சிக்கு ஒரு தத்துவப் பின்புலத்தை / சித்தாந்தத்தை உருவாக்கித் தருவார்கள் என்பதை கட்சிக்காரரே நம்பமாட்டார்.  அடிமட்டத் தொண்டர்கள் திருமதி தீபாவிடம் ஏதேனும் சித்தாந்தங்கள் ஒளிந்திருக்காதா என்று தேடத் துவங்கியிருப்பதையும் தெருமுனைச் சுவரொட்டிகள் வழியாக அனுமானிக்க முடிகிறது. 

விஜயகாந்த் பற்றி எதுவும்  பேச வேண்டியிருக்கிறதா என்று தெரியவில்லை.  அவரைப் பொறுத்த வரையில் அண்மையில் இறகுப்பந்து அணி ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார்.  அதுவும் தேசிய அளவிலான போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்று மூன்று கோடிப் பரிசையும் பெற்றிருக்கிறது.  இந்த மாதிரியான அவருக்கும் இன்னும் சிலருக்கும் உபயோகமான காரியங்களில் அவர் ஈடுபட்டு வருவது தமிழகத்திற்கு நல்லது.  வைகோ சோ-வைவிட மோசமாகி விட்டார்.  திருமா - அன்புமணி வகையறாக்கள் எல்லோரிடமும் தங்களது சரக்கை விற்க முடியாது.  திருமாவளவனிடம் ஒரு சரியான அரசியல் பார்வை இருந்திருக்க முடியும்; வழியில் எங்கோ அதைத் தொலைத்து விட்டார். 

கம்யூனிஸ்டுகளிடம் ஒரு வலுவான சித்தாந்தம் இருக்கிறது.  அதற்கான தேவையும் முன்னெப்போதையும் விட இப்போது அனைவராலும் உணரப்படுகிறது.  குஹா தெரிவித்திருக்கும் jobless growth என்ற கருத்து உண்மை என்றால், இப்படியான விடயங்களை தத்துவப் புரிதலோடு முன்னெடுக்க கம்யூனிஸ்டுகளால் முடியும்.  அப்படியான ஒரு மக்கள் போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பது பொருத்தமும் கூட.  ஆனால், அங்கே தலைவர்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

திமுக செயல் தலைமை தன்னுடைய கட்சி ஆதிகாலத்தில் பிரதிநிதித்துவப் படுத்திய தத்துவங்கள் என்ன, சித்தாந்தங்கள் என்ன, பெரியார், அண்ணா மற்றும் ஆரம்ப கால கருணாநிதி ஆகியோர் அவைகளைப் பற்றி எவ்வகையான புரிதலோடு செயலாற்றி வந்தார்கள் என்பதைப் பற்றி கட்சியில் எஞ்சியிருக்கும் முதியவர்களிடம் சிரத்தையாக பாடம் கற்றுக் கொண்டால், செயல் தலைமையின் நாவன்மை தலைமையின் நாவன்மையோடு ஒப்பீட்டு தரத்தில் உயர்ந்தால், திமுகவிற்கு மீண்டும் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.


இளைஞர்களின் எழுச்சியால் நான் தெரிந்து கொண்டவை இவை. சரியா என்பதைக் காலம் சொல்லும்.  ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.    

0 comments:

Post a Comment