ரேஷன் கார்டு பெறுவது சுலபம்

| Monday, January 16, 2017
மணல் வீடு

சேலம் மாவட்டம், மேச்சேரி தாலுக்கா பொட்டநேரி கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பார் அங்கிருக்கும் இரும்பாலை ஒன்றில் பணிபுரிகிறார். அந்த நிலையிலேயே சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், ஆளை இலக்கியம் பிடித்து ஆட்டுகிறது.  இரும்பு பிடித்தவன் கதைதான்.  நிறைய உழைப்பிற்கிடையில் "மணல்வீடு" என்ற பதிப்பகத்தையும் சிற்றிதழையும் நடத்துகிறார்.  பெரிய தலைகள் எல்லாம் எழுதுகின்றன.  எனக்கு நண்பர் சண்முகம் மூலமாக அறிமுகமாகி முகவரி வாங்கி இதழைத் தவறாமல் அனுப்பி வைக்கிறார். ரொம்பவும் கண்ணியத்துடன் கட்டமைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் corporate brochure போன்ற தோற்றத்துடன் அச்சு, சித்திரங்கள், பக்க வடிவமைப்பு, பைண்டிங் போன்றவையுடன் நம்ப முடியாத தரத்துடன் இருக்கிறது 'மணல்வீடு' இதழ். 

திசம்பர் மாத இதழ் வீட்டிற்கு வந்து இரு வாரங்கள் ஆகியிருக்கும்.  இதற்கென நேரம் ஒதுக்கித்தான் படிக்க முடியும் என்ற மாதிரியான serious reading தேவைப்படுகிற சமாச்சாரம் என்பதால் இன்று காலை முழுவதையும் ஒதுக்கியும் பாதிதான் படித்து கிரகிக்க முடிந்தது.  உயர் மதிப்பு கொண்ட கரன்சிகளை முன்னறிவிப்பின்றி செல்லாது என்ற அறிவித்த பிரதமர் மோடியின் நடவடிக்கையைப் பற்றி கடந்த இரண்டு மாதமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறையப் படித்தாகி விட்டது.  வாசித்ததிலேயே நன்கு புரிகிற மாதிரியும், பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் அணுகியும், இதன் தத்துவப் பின்னணி, திட்டத்தின் நோக்கங்கள், செயல்படுத்தப்பட்ட விதம், இந்தத் திட்டத்தின் மீது வைக்கப்படும் விமரிசனம், இதையே வேறு விதமாக எப்படி நடைமுறைப் படுத்தியிருக்க முடியும், இத்தகைய திட்டம் ஒன்றின் தேவை என்ன, திட்டத்தின் எந்தக் கூறு நம்மை சந்தேகப்பட வைக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக ஒன்றன் பின் ஒன்றாக இலக்கமிட்டு பட்டியலிட்டு விவரிக்கிறது பாலசுப்ரமணியன் முத்துசாமி எழுதியுள்ள "அள்ளித் தெளித்தக் கோலம் அவசரக் கோலம்.. அறுதிப் பெரும்பான்மை அரசின் நிலைத் தடுமாற்றம்" என்ற கட்டுரை. 

மொத்தமாக 170 பக்கங்களை உடைய இந்த இதழின் ஆகச் சிறந்த பக்கம் என நான் கருதுவது 14ம் பக்கத்தைத்தான்.  பெருமாள் முருகன் இரண்டு கவிதைகளை எழுதியிருக்கிறார்.  தனக்கு திருச்செங்கோட்டில் நேர்ந்த அவலத்தை இந்தக் கவிதைகளின் மூலமாக அமிலமாகப் பொழிந்திருக்கிறார்.

வெட்டப்பட்ட
கட்டைவிரலை
ஒட்டிக்கொள்ளக்  
கடவுள் அனுமதித்து விட்டார்
கடவுளின் பேச்சுக்கு
மறுபேச்சேது
ஒட்டிக்கொள்கிறேன்
இனி
என் கட்டை விரல்
கட்டை விரல் அல்ல
ஒட்டு விரல்.

கவிஞனை - இலக்கியவாதியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பது இதனால்தான்.  பெருமாள் முருகனிடம் இவர்கள் சாகும்வரைக்கும் செருப்படி வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.  நினைத்தபோதெல்லாம் கவிதை - கதைகள் மூலமாக அடித்துக் கொண்டேயிருப்பார்.  முரசு கட்டிலில் புலவன் படுத்திருந்ததைப் பார்த்துவிட்டு அவன் தலையை வெட்டி எறியாமல் சாமரம் வீசிய வேந்தன், என்னைப் பொறுத்தவரை, தமிழ்க் காதலனோ இல்லையோ தெரியாது, பெரிய புத்திசாலி.  எழுதி எழுதியே வெறுப்பேற்றுவான் கவிஞன். பெருமாள் முருகனை ஊரை விட்டு துரத்தியவர்கள் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு நாட்களை நகர்த்துவதை விட வேறு வழியில்லை.  

இந்த இதழின் இன்னுமொரு சிறப்பாக நான் கருதுவது பைரு ரகுராம் அவர்களின் ஓவியங்களை.  இதழின் 88ம் பக்கத்தில் சேவலை தூக்கிக்கொண்டு நிற்கும் கருப்பியின் ஓவியம் பிரமிக்க வைக்கிறது.  நம்ம ஊர் கறுப்பழகிகள் கண் முன்னே வருகிறார்கள்.  கூத்துக் கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களின் நேர்காணல் அற்புதம். "கூத்த அத்துபடியா கத்துக் கர கண்டவன் எவனுமில்ல, எல்லாமே கண்டு பாவனதான், அரகரா சிவ சிவான்னாப் பத்தாது, அமுது படைக்கனும். உங்கள மாதிரி படிச்ச டிக்கட்டுங்க உள்ற குதிக்கணும். அலங்காரத்த பூர்த்தியா படிச்சி தேறனும், அப்படி ஓராளு இருக்கிரான்னா அவனாலக் கூட சட்டுன்னு கூத்த புதுமையா ஆட முடியாது, கருத்தா கவனிச்சி, உகத்தமா தொழில் செஞ்சிக்கிட்டே வந்தா எந்த பொருள கழிக்கிறது எந்த பொருள சேக்கிரதுன்னு நெட்டு சிக்கும்." 

இதைப் படிக்கும் யாராவது இந்த இதழை வாங்கிப் படிக்க பிரியப் படலாம்.  அவர்களுக்காக முகவரி கொடுக்கிறேன். மு.ஹரிகிருஷ்ணன், களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம், ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் 636 453. அலைபேசி: 98 9460 5371.

விகடனின் தடம் இதழை விட தீவிரமான தொனியில் இருக்கிறது 'மணல் வீடு'. இது போன்ற முயற்சிகள் தோற்காமல் பார்த்துக் கொள்வது, ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்களால் செய்யப்படும் பிரயத்தனங்களை விட முக்கியமானது.  திரிஷாவிற்கும் விஷாலுக்கும் இது புரியாமல் போகலாம்.  ஆனால், கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் இரவு பகல் பார்க்காமல் பதிவுகளாக இட்டுத்தள்ளும் தமிழ் இளைஞர் - இளைஞிகளுக்கு கண்டிப்பாக புரியும் என்று எதிர்பார்க்கலாம்.

------
அம்மா தொழிற்சாலை

அண்மையில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் "காயமே இது பொய்யடா" என்ற தலைப்பில் வாஸந்தி எழுதியிருக்கிற கட்டுரை சில சுவாராஸ்யமான சங்கதிகளை முன்வைக்கிறது. அதிமுக கட்சிக்காரார்களுக்கு 'அம்மா' இல்லாத நிலையில் இன்னொரு 'அம்மா' தேவை.  சின்னம்மாவிற்கு இவர்கள் தேவையோ இல்லையோ இவர்களுக்கு சின்னம்மா தேவை.  சொல்லப்போனால், சின்னம்மாவே இவர்களின் உருவாக்கம்தான்.  சின்னம்மாவை அவர்கள் கடவுளாக்கி காலில் விழுவதற்கான பிம்பமாக்கி விடுவார்கள்.  தாங்கள் அதிகாரத்தில் நின்று நிலைப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமை - பிரநிதித்துவப் பிம்பம் தேவை.  இங்கே, தலைவர் தொண்டர்களைத் தீர்மானிப்பதில்லை.  தொண்டர்களே தலைவர்களைத் தீர்மானிக்கிறார்கள்.  விழுவதற்கான கால்கள் இல்லாவிட்டால் தங்களுடைய பணிவை அவர்களால் வெளிக்காட்ட முடியாது.  காலில் விழுவது வெறும் மானங்கெட்ட அரசியல் அல்ல.  பிழைப்பின் அடிப்படை சூத்திரம்.  'எல்லாம் வல்ல தலைவர்' என்ற பிம்பம் இன்றியமையாதது.  இல்லாவிட்டால் ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும். எல்லா அட்டூழியங்களும் எல்லாம் வல்ல தலைவரின் பெயராலேயே நடத்தப்படுகின்றன.  "எல்லாப் புகழும் தலைவருக்கே; எல்லாப் பழியும் தலைவருக்கே."  பணமும் அதிகாரமுமே அவர்களைப் போலிப் பணிவு காட்ட வைக்கிறது. அம்மா பிம்பம் புனிதமாக்கப்படுவதும் அதனால்தான்.  உண்மையில் 'அம்மாக்கள்' பாவம்:  'ஐயாக்களும்" கூடத்தான்.  புகழப்படுபவனை விட புகழுபவனே புத்திசாலி என்ற பால பாடம் தெரியாமல் அம்மாக்களும் ஐயாக்களும் தாங்கள் செய்யாதவற்றுக்குமான பழியையும் தூக்கிக்கொண்டு தவிக்கும் பொழுது, "கால் விழு" மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு போகிறார்கள்.  "அம்மாக்கள்" உதிர்கிற பொழுது, இவர்களால் அரங்கேற்றப்படும் புதிய சின்னம்மாக்கள் பிம்பம் கவனமாக அம்மாக்களைப் போலவே கட்டமைக்கப் படுகிறது. நிதானமான நடை, பயிற்சி பெற்ற மேடைப் பேச்சு, மறைந்த தலைவரை நினைவுப் படுத்தும் உடை என சின்னம்மாக்கள் முழுக் கவனத்துடன் தயாரிக்கப்படுகிறார்கள்.

"கால் விழு" மன்னர்களின் ராஜ்ஜியத்தில் ஒருவன் கம்பீரமாக இருக்க முயல்வது என்பது, அம்மண ஊரில் கோவணத்தாண்டியின் கதியைப் போலத்தான்.
-----

ரேஷன் கார்டு பெறுவது சுலபம்

மதுபானப் பிரியர்களுக்கான நல்ல செய்தி ஒன்று ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையிலிருந்து வந்திருக்கிறது.  மனித சமுதாயத்தோடு மிக நீண்ட காலம் தன்னுடைய சகவாசத்தைப் பேணிக்காத்து வரும் மது, சமூக இணக்கத்தைப் பேண தனியார்களுக்கு உதவுகிறது என்கிறது இந்த ஆய்வு.  அதிகமாகவும், தொடர்ந்தும் குடிப்பது ஆரோக்கியத்திற்கும் சமூக உறவுகளுக்கும் குந்தகமானது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அவ்வளவு உண்மை மிதமான மற்றும் சரியான இடைவெளியில் நண்பர்களுடன் குடிப்பது சமூக உறவைப் பேணுவதற்கு அனுகூலமானது என்பதும் ஆகும்.  கிளப்பிற்கு வந்து குடிப்பது, அந்த ஊரில் தன்னுடைய செல்வாக்கை ஜபர்தஸ்தாக வைத்திருக்க உதவுகிறது என்பதாக ஒக்ஸ்போர்ட் ஆய்வு சொல்கிறது. ஆனால் வெளியூரில் இருக்கும் கிளப்புகளில் குடிப்பது என்பது சமூக செல்வாக்கைப் பேண உதவுதில்லை என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தமக்கென சமூகத்தில் ஒரு வட்டம் இருக்கிறது என்று மனிதன் நினைத்து பெருமைப்படுவதற்கு இந்த கிளப்புகளில் சென்று குடிப்பது முக்கியம் என்று இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னுடைய அனுபவமும் கூட அப்படித்தான். ரெகுலராக குடித்துக் கொண்டிருந்த சமயத்தில் உள்ளூரில் எனக்குத் தெரிந்த பிரமுகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.  எந்த வேலையும் உடனே முடிந்து விடும். ரேஷன் கார்டில் விடுபட்ட பெயரை சேர்க்க எவ்வளவோ முயன்றும் முடியாதிருந்த பொழுது, ஒரு இரவு ஒன்றில் நண்பர்களுடன் குடிக்க கூடிய சமயத்தில் இது பற்றி பிதற்றிக் கொண்டிருக்க, நண்பரோடு எங்களுடன் குடிப்பதற்கு வந்திருந்த ஒருவர் அறச்சீற்றத்தோடு ஒரு போனை போட்டு யாரோ ஒருவருடன் பேசிவிட்டு, அடித்த நாள் காலையில் ஆட்சியர் வளாகத்தில் ஒருவரை பார்க்கச் சொன்னார்.  அடுத்த நாள், ஒரு மணி நேரத்திற்குள் பெயர் சேர்க்கப் பட்டது.  இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய நண்பர்களை எனக்கு பெற்றுத் தந்திருப்பது மதுதான். இன்னொரு பக்கமும் இருக்கிறது. எனக்காக உயிரையே விடத் தயாராக இருப்பதாக முதல் நாள் இரவு கிளப்பில் சொன்னவர்கள் அடுத்த நாள் காலையில் போனை எடுக்க மாட்டார்கள். என்றாலும், இன்னொரு மாலையில் குடிக்கக் கூடும்போது தவறாமல் மன்னிப்பு கேட்கும் நற்குணம் அவர்களிடம் வழிந்தோடியவாறே இருந்தது.

குடிக்காத இற்றை நாட்களில் அந்தக் குடிகார நண்பர்களை கண்களில் வழிந்தோடும் கண்ணீரின் ஊடே நினைத்துப் பார்க்கிறேன்.  என்ன அருமையான மனிதர்கள்! அவர்களோடு குடித்து மகிழ்ந்த பொழுதுகள் என் வாழ்விலே கிடைத்திட எந்த பிறவியில் என்ன தவம் செய்தேனோ!




0 comments:

Post a Comment