ஜனவரி மாத விகடன் தடம் இதழ் கடந்த இதழை விட சிறப்பாக வந்துள்ளது. வருடத் துவக்கத்திலேயே தீவிர வாசிப்பாளர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்க முயல்கிறது இந்த இதழ். அட்டைப்பட நேர்காணலாக அமார்க்ஸ் அவர்கள் தன்னுடைய நீண்ட வாசிப்பு, இயக்க மற்றும் போராட்ட வாழ்க்கையை விலாவாரியாக சொல்லியிருக்கிறார். தமிழில் காந்தியைப் பற்றிய மீள்வாசிப்பைத் துவங்கி வைத்தவர் என்று இவரை எளிதாகச் சுட்ட முடியும். தமிழகத்தில் இடைநிலை ஆதிக்க சாதிகளின் வளர்ச்சி என்பது இந்துத்துவாவின் வளர்ச்சி என்பதில் முடியும் என்ற மார்க்சின் கூற்று முழுமையும் உண்மையே. ஜெயமோகனைப் பற்றிய விமரிசனம் இந்த நேர்காணலில் இருப்பதால் உடனடியாக ஒரு காட்டமான பதிலை ஜெயமோகனிடமிருந்து எதிர்பார்க்கலாம். நீண்ட, நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நேர்காணல் இது.
"என் தோழர் இன்குலாப்" என்ற தலைப்பில் மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களைப் பற்றி தோழர் தியாகு நினைவு கூறும் கட்டுரை ரொம்பவும் நெகிழ்ச்சியோடு வந்திருக்கிறது. இன்குலாப் கவிதைகள் எந்தவித சட்டதிட்டங்களுக்கும் அடங்காமல் தன்னுடைய கோபத்தை அப்படியே வெளிப்படுத்துபவை.
வெண்மணி மக்களை
வெட்டிப் பொசுக்கையில்
வெட்டிப் பொசுக்கையில்
வேடிக்கை பார்த்தாயே அடே
வீணே கிடந்தாயே!
குள்ள நரிகளைக்
குத்திக் கிழிக்கிற
குத்திக் கிழிக்கிற
கோபத்தில் முன்னேறு
அடே, கொன்ற பின் நின்றாடு!
புதுக்கவிதையில் இசைமைக் கூறுகளோடு தொடர்ந்து உறவாடியவர் இன்குலாப்.
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
இந்த இதழின் ஐம்பத்தொன்றாம் பக்கம் வந்திருக்கிற எஸ்.பிருந்தா இளங்கோவனின் "ஊடலின் இரவு" கவிதை அந்தரங்கத்தின் உண்மைகளைப் பேசுகிறது.
"காலையில் நீ
வீசியெறிந்துவிட்டுப் போன
வீசியெறிந்துவிட்டுப் போன
ஒற்றைக் கடுஞ்சொல்
நம்மிருவருக்கும் இடையில்
சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது
நம் நேசத்தை வென்றுவிட்ட களிப்புடன்.
இந்த இரவு
இன்னும்
இன்னும்
எவ்வளவு மீதமிருக்கிறதென்று
தெரியவில்லை."
இந்த இதழின் மிகச் சிறப்பான கட்டுரை ஜெயராணியின் "ஜெயலலிதா: இனி எதைப் பேச வேண்டும் நாம்?". இறந்து போனவர்களைப் பற்றி கழிவிரக்கம் கொண்டு நடந்த உண்மைகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் புதைத்து விட்டு மாறான பிம்பம் ஒன்றை கட்டமைத்து மக்களிடையே உலவ விடும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது இந்தக் கட்டுரை. வன்மம் கொண்ட ஆண்கள் மத்தியில் தன்னந்தனிப் பெண்ணாக - வெற்றியாளராக வாழ்ந்து முடிந்தவர் ஜெயலலிதா என்ற உண்மையின் மறுபக்கம் வேறானது. இவரது அரசியல் வாழ்வு கறைபடிந்தது; ஊழல் மிகுந்தது. தனக்குப் பின்னால் கட்சிக்கு ஏற்படப் போகும் நிலை பற்றிய சிந்தனையை சீர் தூக்காமல் விழிப்புணர்வுடன் இரண்டாம் நிலைத் தலைமை உருவாக்காமல் சென்றவர். வெள்ளத்த்தில் பாதிக்கப்பட்ட எளியவர்களிடம் பேசும்போது கூட அவர்களை "வாக்காளர்களே" என்று விளித்தவர். தமிழ் சமூகத்தின் மேல்சாதியினருக்கு அதிகாரத்தையும், இடைநிலை சாதியினருக்கு ஊழலையும், கடைநிலை சாதியினருக்கு சலுகைகளையும் பிரித்துக் கொடுத்தவர், மர்மமாகவே வாழ்ந்து மர்மமாகவே விடைபெற்றுக் கொண்டவர், மக்களிடமிருந்து தன்னை முற்றிலும் தனிமைப் படுத்திக் கொண்டவர், தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் சலுகைகள் மூலமாகவே தேர்தல்களை வென்றவர், இந்துத்துவா தமிழகத்தில் நுழைய வாசல் வைத்தவர், மதமாற்றச் சட்டம் கொண்டு வந்தவர், சொத்துக் குவித்தவர், அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கேவலப்படுத்தியவர், கல்லூரி மாணவிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதை அசட்டை செய்தவர், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியவர், சென்னை வெள்ளக்காடாகிக் கொண்டிருந்தபொழுது அரசு அதிகாரிகள் இவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட காரணமாகி செயற்கை வெள்ளத்தை உருவாக்கி நகரை அழித்தவர் - இவைகளும் கூட ஜெயலலிதாவின் வாழ்க்கைதான். இறந்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக இவை எல்லாவற்றையும் மறைத்து விட்டு, வானத்திற்கு புகழுவது வரலாற்றைப் புரட்டி எழுதுவதற்கு ஈடாகும் என்று ஜெயராணி சொல்லுவது நியாயமே.
"அடுப்பங்கரை ஆவணம்" என்ற கட்டுரை அடுப்பங்கரையின் வழியாக சமூக வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.
அ.முத்துலிங்கம், சுப வீரபாண்டியன், அ.முத்துகிருஷ்ணன், சி.மோகன், அம்பையைப் பற்றிய சு.தமிழ்ச்செல்வியின் கட்டுரை என்று இந்த மாத "விகடன் தடம்" ஒரு அழகிய கர்ப்பவதி போன்ற சூழும் உருவும் கொண்டாகி வந்துள்ளது.
தினமும் ஐம்பது பக்கங்களாவது படிக்க வேண்டும்; அதிலும் படிக்கத் தகுந்தவையைப் படிக்க வேண்டும் - என்ற தீர்மானம் இந்த மாத 'தடம்' இதழால், நேற்றைப் பொறுத்தவரை, நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
0 comments:
Post a Comment