படித்தவனுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்த ஒரு
காலம் இருந்தது. எழுபதுகளிலும் அடுத்த
பத்தாண்டுகளிலும் நிலைமை இதுதான்.
படித்தவர்களும் குறைவு; அதனினும் குறைவு வேலை வாய்ப்புகள். எனக்குத் தெரிந்து MA / MSc BEd முடித்த
முதுநிலைப் பட்டதாரிகள் இருபது வருடங்கள் தங்கள் தகுதிக்கான வேலை கிடைக்காமல்,
எந்தவொரு வேலையையும் செய்தவாறு கல்யாணித்து குழந்தைகள் பெற்று
வளர்த்திருக்கிறார்கள். ஐம்பது வயதில்
அரசு வாத்தியார் ஆகி அடுத்த எட்டு வருடங்களில் பனி ஓய்வு பெற்று வீணாகிப்
போனவர்கள் நூற்றுக்கணக்கில். உலகமயமாக்கலின்
பெருங்கொடையாக, இந்திய இளைஞர்களைப் பொறுத்தவரையேனும்,
நான் கருதுவது புதிதாக நுழைந்த ஆயிரமாயிரம் பணி வாய்ப்புக்களையே. தகவல் தொழில் நுட்பம் மட்டுமன்றி, புதிது
புதிதான பல்வேறு தொழில்துறைகள் முதன்முதலாக உருவாக்கப்பட்டு, படித்து முடித்தவுடன்
- பல தருணங்களில் படித்து முடிக்கும் முன்னரேயே - வேலைவாய்ப்புக்களைப் பெற்ற
லட்சக்கணக்கான இளைஞர்கள் 1991ம் ஆண்டிற்குப் பிறகு சாதாரணமாக ஒருவர்
பார்த்திருக்கக் கூடியது. "கால் காசானாலும் கவர்ன்மெண்டு காசு" என்ற பெருமிதமெல்லாம்
காற்றிலே கரைந்து, அரசு வேலையே வேண்டாம், கார்ப்பரேட் வேலையே சாஸ்வதம் என்று
பெங்களூரு, புனே, சென்னை, ஹைதராபாத் வழியாக அமெரிக்கா போய்ச் சேர்ந்து திரும்பி வர
முடியாத தொலைவில் மறைந்து போன இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அரசு வேலையில்
இருந்தவன் பணித்துறப்பு செய்துவிட்டு, பெங்களூரு வழியாக அமெரிக்கா போன நண்பர்கள்
எனக்கே உண்டு. "என் மகன் இன்போசிஸ்,
உங்களது மகள்?" என்ற கேள்விக்கு "சின்னவள் டிசிஎஸ், பெரியவள் கனடாவில்
செட்டிலாகி விட்டாள்" எனும்படியான பதில் எங்கும் கேட்கக் கிடைத்தது.
இந்த இளைஞர்களின் ஊதியம் அரசு ஊழியர்களின் ஊதியத்தோடு ஒப்பீட்டளவில்
மிக அதிகம். முதல் மூன்று
வருடங்களுக்குள்ளாக பெருநகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வங்கிக்
கடனில் வாங்கிவிட முடிந்தது. சென்னையில் சொந்தவீடு என்பது சேலத்துக் காரர்களுக்கு
பரம்பரையின் ஊடே ஒளிர்ந்து கொண்டிருக்கும் கனவு. இவர்களைக் காட்டாகக் கொண்டுதான்,
கடந்த இரண்டு நடுவண் அரசு சம்பளக் குழுக்கள் அரசு ஊழியர்களுக்கான தங்களது ஊதியப்
பரிந்துரைகளை செய்தன. மாத ஊதியம் கணிசமாக
உயர்ந்தாலும் கூட வேறு புதிய பிரச்சினைகள் எழும்பின. 1-4-2003 முதல் மத்திய மாநில அரசுப் பணிகளில்
சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் இல்லை என்ற அறிவிப்பின் தத்துவம் என்னவென்றால், அரசு
ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அரசு பொறுப்பேற்க
முடியாது என்பதே. சமத்துவ சமூகம் என்ற
போர்வையிலிருந்து தைரியமாக வெளியேறி முதலாளித்துவ சமூகம் என்ற அரிதாரமில்லாத தனது
இயல்பான முகத்தோடு இந்திய அரசும் சமூகமும் உலா வரத் துவங்கியது தொண்ணூறுகளின்
இறுதி ஆண்டுகளிலேயே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
தொடர்ந்த வருடங்களில், அரசுப் பணிகள் தங்களது இயல்பான பணிப்
பாதுகாப்பை பல விதங்களில் இழக்கத் துவங்கின.
நவீன தொழிற்புரட்சியின் விளைவாக பணியாளர்களின் தன்மையிலும் அவர்களது பணி
நிலையிலும் நம்பமுடியாத மாற்றங்கள் துவங்கின.
நிரந்தரப் பணியாளர்களை முதலாளிகள் தவிர்க்கத் தொடங்கினர். இரண்டு
லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தமிழக அரசு 2004-லிருந்து 2006-வரை
நியமித்ததும், அவர்களுக்கு அந்தப் பணி நிலைகளில் உண்டான ஊதியத்தில் நான்கில் ஒரு
பங்கை மட்டுமே வழங்கி எந்தவித பணி உத்திரவாதமும் இல்லாமல் வருடக்கணக்கில் அவர்களை
அவதிக்குள்ளாக்கியதும் முன்னுவமை இல்லாத நிகழ்வு. இப்பொழுதும் கூட, ஒவ்வொரு மாநில
அரசும், நடுவண் அரசும் லட்சக்கணக்கில் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்
செய்து மிக மோசமான ஊதியம் வழங்கி வருகின்றன.
இந்நிலைக்கு எதிரான போராட்டங்கள் எந்தவிதப் பலனையும் தருவதில்லை என்பது
கசப்பான உண்மை. உன்னிப்பாக கவனித்தோமானால், அரசுப் பணிகள் உட்பட எங்கும்
முதலாளித்துவம் நுழைந்து விட்டது.
சோஷலிஸ்ட் அரசாக திரும்பவும் மாறப்போவது அண்மைக் காலத்தில் நிச்சயமாக
இல்லை. நிலைமை இன்னும் தீவிரமாகலாம்.
அப்படியான நிலை வந்து கொண்டிருக்கிறது என்பதை சத்துருன்ஜய் கிருஷ்ணா அவர்கள் தி
ஹிந்துவில் 18-1-2017 அன்று Are the days of the permanent employee numbered?
என்ற கட்டுரையில் விலாவாரியாக விளக்கி நம்மைப் பயமுறுத்துகிறார். இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில்
பணிபுரிபவர்களில் மூன்றில் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார் என்பதை
கிருஷ்ணா தரவுகளோடு முன் வைக்கிறார்.
நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு பல சட்டரீதியான
அனுகூலங்கள் இருப்பதால், நிறுவனங்கள் அப்படியான ஊழியர்களை விரும்புவதில்லை. ஊதியம் தொடர்பான செலவினங்கள் ஒப்பந்த
அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதின் மூலம் வெகுவாகக் குறைகின்றன. மீதமாகும் தொகையை தொழில்நுட்ப
மேம்பாட்டுக்காகவும் மற்றவற்றுக்காகவும் பயன்படுத்தப் பட முடியும். பல தொழில்களைப் பொறுத்தவரை நிரந்தர - ஒப்பந்த
ஊழியர்களுக்கிடையேயான ஊதிய வேறுபாடு மிகவும் கணிசமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். மேலும், வேறு சில தொழிற்துறைகள்,
பழங்கள் பதனிடுதல் போன்றவை, நிரந்தரப் பணியாளர்களை வேண்டுவதேயில்லை. அடுத்ததாக, மிக வேகமாக வளர்ந்துவரும்
தொழில்நுட்ப வளர்ச்சி என்ற நிலையில் நிரந்தரப் பணியாளர்கள் ஒரு சுமையே. ஒரு குறிப்பான தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களை
ஒரு குறிப்பிட்ட காலம் பணியமர்த்தினால் நிறுவனங்களுக்குப் போதுமானது. நிரந்தரப் பணியாளர்களை இடைவிடாமல் பணியிடைப்
பயிற்சியில் ஈடுபடுத்த முடியாது.
அப்படியான ஒரு நேர்விலும், அதற்கான செலவினம் மிகவும் அதிகம். நிறுவனத்தின் செலவில் பணி மேம்பாட்டு பயிற்சி
பெறும் ஊழியர் ஒருவர் சிறிது காலத்திற்குள் நிறுவனத்தை விட்டு விலக மாட்டார்
என்பதற்கான எந்தவித உத்திரவாதமும் இல்லை.
மேலும், ஒப்பந்த ஊழியர்களை, அதாவது உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற ஒப்பந்த
ஊழியர்களை, உலகின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் கால விரயமின்றி
அழைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை, நிரந்தர ஊழியர்கள் எனும் பணியாளர் பிரிவே
எதிர்வரும் காலத்தில் இருக்காது என்ற நிலையை உறுதிபடுத்தியிருக்கிறது. தவிர, அரசு அமைப்புகள்
உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தமது பணித்தன்மைகளையும், வேண்டிய
தொழில்நுட்பங்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பதால், நிரந்தர ஊழியர்கள்
பெரும் சுமையாக மாறிவிடக் கூடும். உலகப்
பொருளாதார மன்றம் (World Economic Forum) தன்னுடைய சமீபத்திய குறிப்பு ஒன்றில்,
இன்றைய நாட்களில் பள்ளிக்கு செல்லத் துவங்கும் குழந்தைகள் பள்ளிப் படிப்பை
முடித்து வெளியேறும்பொழுது, இதுவரை இல்லாத - இனிமேல்தான் உருவாகப் போகிற - புதிய பணிகளில்தான்
அமர்த்தப்படப் போகிறார்கள் என்று சொல்வது அனைவரும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவை தவிர,
நிறுவனங்கள் தமக்கிடையே பணியாளர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றிக் கொள்வதும்
நடக்கிறது. புதிய சிந்தனைகள்
கட்டுப்பாடின்றி வெளிவருவதற்கான சாத்தியங்களும் இப்படியான ஒரு ஏற்பாட்டில்
அதிகம். பணியிடைப் பயிற்சிகளும் நடத்தத்
தேவையில்லை.
இத்தகைய பணிப்பாதுகாப்பு அற்ற நிலையில் அரசுகள் எவ்வித நிலைப்பாட்டை
எடுக்க வேண்டும்? அரசு தன்னுடைய ஊழியர்களை எவ்விதம் நடத்த வேண்டும்? சோஷலிஸ்ட்
அரசு ஒன்றின் நிலைப்பாடுகளில் எவையெல்லாம் திரும்ப நடைமுறைப் படுத்தத் தகுந்தவை?
மாறிவிட்ட சூழலில் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த ஏதேனும்
வழிவகைகள் மீதமிருக்கின்றனவா? என்பவையெல்லாம் வருகின்ற நாட்களில் நம் அனைவரையும்
எதோ ஒரு வகையில் எதிர்நோக்கும் கேள்விகள்.
0 comments:
Post a Comment