என்னுடைய நண்பர் ஒருவர் மனநல மருத்துவராக இருக்கிறார். இன்னொருவர் மனநல ஆலோசகராக இருக்கிறார். இருவரிடமும் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்த
பொழுது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது
தவிர வேறென்ன செய்து வந்தால் குணமடைய ஏதுவாக இருக்கும் என்று வினவிய பொழுது,
இரண்டு பேருமே ஒரே மாதிரியாக, “பாதிக்கப் பட்டவருக்கு பிடித்த இசை வடிவம் எதுவாக
இருந்தாலும், அதைக் கேட்டு வர வேண்டும். இது மிகவும் பயன் தரக் கூடியது”
என்றார்கள்.
உண்மையாக இருக்க வேண்டும். இசை
ஒருவனோடு அந்தரங்கமாக உறவாடுகிறது. ஒருவன்
அல்லது ஒருத்தி வாழ விரும்புகிற, ஆனால் வாழ முடியாத வாழ்க்கையாக இசை விரிகிறது.
அதனுடைய மிகைத் தன்மைதான் அதனுடைய பலம்.
நம்முள் ஒரு பாடகனும் பாடகியும் எப்பொழுதும் இருக்கிறார்கள். பாடுகிற பொழுது யாதார்த்தத்தில் இருந்து
விடுபடுகிறோம். இந்த மிகை யதார்த்தம்
காரணமாக, பாடுகிற பொழுது, பாட்டைக் கேட்கிற பொழுது வேறு எதுவுமே பொருட்படுத்த
தேவையில்லை என்றாகி விடுகிறது.
சினிமா இசை மட்டுமே எனக்குப் பரிச்சயமான இசை வடிவம். இது தவிர பாரம்பரிய இசை வடிவங்களைப் பற்றிய
அறிவை வளர்த்துக் கொள்ள இரண்டு முறை வாய்ப்பிருந்தும் தவற விட்ட பேரறிவாளன்
நான். பள்ளிப் பிராயத்தில் எனக்கு இரண்டு
பிராமண குடும்பங்களோடு நல்ல கொடுக்கல் வாங்கல்.
அந்த வீட்டு பிராமணப் பையன், கிருஷ்ணமூர்த்தி என்று ஞாபகம், என்னுடைய
ஆத்மார்த்த சிநேகிதன். எங்கு போனாலும் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டேதான்
போவேன். ஒருமுறை சண்டை போட்டுக்கொண்டு
சுமார் ஒரு வருட காலம் பேசாமல் இருந்தோம்.
அப்புறம், ஆடி மாத மாரியம்மன் பண்டிகைக்கு குகைப் பகுதியில் நடந்த பாட்டுக்
கச்சேரிக்கு தூறிக் கொண்டேயிருந்த ஒரு முன் இரவில் கூட்டமாக நடந்து போன போது,
முறைத்துக் கொண்டே அவன் கையைப் பற்றிக் கொண்டதை இப்பொழுது நினைத்தாலும் நட்பின்
அடர்த்தியால் கண்கள் ஈரமாகின்றன. அவனுடைய
அம்மாவும் அக்காளும் பெரிய பாடகிகள்.
வீட்டிற்குள் நடக்கும் போதும் பாட்டுதான். பூ கட்டும்போதும்
பாட்டுதான். வீட்டு ஆண்கள் அவர்களுடைய
பாட்டுக்கு விமரிசனம் வைத்துக் கொண்டே இருப்பார்கள். சில நேரம் பாட்டின் பொருட்டே அவர்களுக்குள்
சண்டை வந்து விடும். ஆச்சர்யமாக என்னுடைய
அம்மாவிடம் சொல்லும்பொழுது, சிரித்துக் கொண்டே “ஐயருங்களுக்கு எதுக்கு சண்டை
போடறதுன்னே ஒரு விவஸ்தை கிடையாது தெரிஞ்சுக்கோ” என்பதாக சொன்னது இன்றும் நினைவில்
இருக்கிறது.
இரண்டாவது வாய்ப்பு, நடுவண் அரசு பள்ளியில் கேரளாவில் பணி புரிந்த பொழுது
கிடைத்தது. ஆசிரியர் அறையில் எப்பொழுதும் பாட்டுக்
கச்சேரிதான். ஆசிரியர்களிலே
பெரும்பாலானோர் பிராமணர்கள். பாடிக்கொண்டே
பேப்பர்களை திருத்துவார்கள். ஒருவர்
பாடுவதை இன்னொருவர் திருத்தி பாடிக் காட்டுவார்.
சனிக்கிழமைகளில் சுதி ரொம்பவுமே கூடும்.
ஒருமுறை ஒரு சக ஆசிரியை பாடிய பாட்டை நான் பாட முயன்ற போது, அவர்கள்
என்னுடைய காலரைப் பிடிக்காத குறைதான். “இது
சாமியை குத்தம் பண்றதாக்கும், இந்தப் தப்பு மறுக்க செய்யாதிங்கோ” என்று ஒரு பிடி
பிடித்து விட்டார். பாரம்பரிய சங்கீதம்
பக்கம் மறுபடியும் தலை வைக்க நினைப்பதேயில்லை.
பள்ளிப் பருவம் எழுபதுகளில் என்பதால் இரண்டு லாபங்கள். திரு.ராமமூர்த்தியிடம் இருந்து பிரிந்த பிறகு,
திரு. விஸ்வநாதன் அவர்கள் தன்னுடைய அதி பெரும் பிரபல பாடல்களைத் தொடர்ந்து
கொடுத்துக் கொண்டே வந்தது இந்தக் காலத்தில்தான்.
அவரைவிடவும் மென்மையாக பாடல்களைக் கொடுத்த திரு.வி.குமார் அவர்களின்
பிரபல்யமான பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்ததும் இச்சமயத்தில்தான். ஏழரை மணியிலிருந்து எட்டு மணி வரை திருச்சி
வானொலியும், எட்டு இருபதிலிருந்து ஒன்பது மணி வரை கோவை வானொலியும் சினிமாப்
பாடல்களை ஒலி பரப்பும். இதைக் கேட்காமல்
பள்ளிக்கூடத்திற்கு போனதில்லை. கேட்ட
பாடல்களைப் பற்றித்தான் அன்று நண்பர்களிடம் பேச்சு.
இந்த சமயத்தில்தான் “அன்னக்கிளி” வந்தது. SSLC, PUC மற்றும் கல்லூரிக்குப்
போய்க் கொண்டிருந்த அண்ணன்கள், அக்காக்களிடம் ஒரு பெரிய மாறுதல். ‘மச்சானைப் பார்த்தீங்களா?’ பாட்டு எல்லா
டீக்கடைகளிலும் தூள் பரத்திக் கொண்டிருந்தது.
இளையராஜா என்ற பெயரை அனைவரும் மிரட்சியோடு பார்த்தார்கள். ஒரு முறை குமுதம் அரசு கேள்வி பதில் பகுதியில்,
“விஸ்வநாதன் – இளையராஜா இடையில் என்ன வித்தியாசம்?” என்ற கேள்விக்கு “மெல்லிசை
மன்னர் – டப்பாங்குத்து மன்னர்” என்ற பதில் போட்டிருந்தார்கள். இது குறித்து இரண்டு அண்ணன்களிடையே பெரிய
குத்து வெட்டு சண்டையே வந்து தெருவே களேபரம் ஆனதில், இளையராஜா எங்களிடையே இன்னும்
பிபலமாகிப் போனார்.
எழுபதுகளில் வந்த ஒவ்வொரு இளையராஜா பாடலும் அவரின் படைப்பாளுமைக்கு சரியான
சாட்சிகள். நண்டு, எனக்காக காத்திரு,
அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள், மூன்றாம் பிறை, நெஞ்சத்தைக் கிள்ளாதே
படங்களின் பாடல்கள் எங்களது தூக்கத்தை மாதக் கணக்கில் கெடுத்திருக்கின்றன. பெரிய தொப்பையுடன் சிவாஜி கணேசன் அவர்கள்
ஜெயசுதாவை மிரட்டலோடு கட்டிப் பிடித்துக் கொண்டு பாடும் “எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்” இளையராஜாவின் கொடுமுடி. அந்தப் பாடலை தொப்பை சிவாஜிக்கு கொடுத்ததற்காக
ராஜாவின் மேல் எங்களுக்கு அடங்காத கோபம். ரஜினியோ
கமலஹாசனோ அந்தப் பாடலுக்கு அபிநயம் பிடித்திருந்தால் அந்தப் பாடல் எங்கேயோ
போயிருக்கும்.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தேனியில் இருக்க வேண்டி
வந்தது. காலைச் சிற்றுண்டிக்காக வரவேற்பறை
வழியாக நடந்த பொழுது, தி ஹிந்து தமிழ் பதிப்பின் ஒரு பக்கம் கவனத்தை ஈர்க்க,
படிக்கத் தொடங்கினேன். வெ.சந்திரமோகன்
இளையராஜாவின் பாரியமான பாடல்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து அந்தப் பாடல்களின்
சிறப்புக்களை விளக்குவதாக ஒரு தொடரை அன்று துவங்கியிருந்தார். “காற்றில் கலந்த இசை” என்ற தலைப்பில் இன்று வரை
தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் சந்திரமோஹனை எப்படிப் பாராட்டினாலும்
தகும். இருபத்து மூன்று வாரங்களைத் தாண்டி
இந்தத் தொடர் வந்து கொண்டிருக்கிறது.
இன்றைய எந்தப் பாடலுமே புரியாமல், வீட்டு சின்னஞ்சிறுசுகளிடம் திட்டு
வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், இளையராஜாவின் எழுபதுகளின் பாடல்களை
கேட்டாலே மனம் லேசாகி, புன்னகை உதடுகளில் தவழுவதைக் கட்டுப்படுத்த
முடியவில்லை. அதிலும் மலேசியா வாசுதேவன்
அவர்கள் ராஜாவிற்காக பாடிய பாடல்கள்! ராசாவினாலும் மறுபடி அப்படி மெட்டுக்களைத்
தரமுடியாது. பாடித்தர வாசுவும்
இங்கில்லை.
திரும்பத் திரும்ப அதே பாடல்களைக் கேட்டுக்கொண்டே போய் சேர வேண்டியதுதான்! இந்த
வரமே போதும்!
0 comments:
Post a Comment