[இன்று செப்டம்பர் 23, பாப்லோ
நெரூடாவின் நினைவு தினம்]
தென் அமெரிக்கா கடந்த ஒரு
நூற்றாண்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்ட பூமி. சர்வாதிகாரம் அங்கிருக்கும் பல நாடுகளில்
தலைவிரித்தாடியது. புரட்சிக்காரர்களும்
பஞ்சமில்லாமல் தோன்றிய வண்ணமே இருந்தார்கள்.
வீரியமிக்க படைப்பாளிகளும் கவிஞர்களும் புரட்சியாளர்களுடன் கைகோத்துக்
கொண்ட கதைகள் இந்தப் பூமியில் ஏராளம்.
Magical Realism என்ற நவ கதை சொல்லும் முறை உலக இலக்கியப் போக்கையே
புரட்டிப் போட்டது. அது வேர் பிடித்து
கிளைத்தது இங்கிருந்துதான். அடிப்படை
உரிமைகள் மறுக்கப்பட்ட அரசியல் பிரதேசத்திலிருந்துதான் சுதந்திரத்தின் தீ
நாக்குகள் எழுந்து எங்கெங்கும் அலைபாய்கின்றன.
யார் இந்த நெரூடா?
பிறந்தது 1904; மரித்தது 1973
- இடையில் கவிதைகள் எழுதினார்; அரசுப் பதவிகளில் இருந்தார் என்று இரண்டு வரிகளுக்குள்
பாப்லோ நெருடாவை அடக்கிவிட முடியாது. ஜூலை
12, 1904-ல் சிலி நாட்டில் பிறந்தவர் நெரூடா.
ஜோசப் ஸ்டாலின், பாடிஸ்டா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரை துணிந்து தன்
எழுத்துக்களில் புகழ்ந்ததால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வந்தவர். 1971-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்
பெற்றவர். இரண்டு வருடங்கள் கழித்து,
மிகவும் சந்தேகத்திற்கான முறையில் தன் உயிரை விட நேர்ந்தது, தன் பிரபல்யத்திற்காக
கொடுக்க வேண்டிய விலை.
சிறு வயது நெரூடா
ரிகார்டோ எலிசர் நேட்டாலி
பசால்டோ - இதுதான் இவரது இயற்பெயர். அப்பா
ரயில்வேயிலும் அம்மா ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர். நெரூடா பிறந்தவுடனேயே அம்மா மரித்துப்
போனார். பாப்லோ தனது 13 வயதிலேயே கவிதைகள்
எழுதி அவைகள் பிரசுரிக்கவும் பட்டன.
தனக்கு 20 வயது ஆன நிலையில், ஏற்கனவே இலக்கியப் பரப்பில் தெரிந்த முகமாக
ஆகியிருந்தாலும், செக் நாட்டுக் கவிஞர் ஜான் நெருடாவின் நினைவாக, பாப்லோ நெரூடா
என்ற புனைப் பெயரில் எழுதத் துவங்கினார்.
அந்திப் பொழுதின் கதை [Book
of Twilight, 1923], தோல்வியின் கீதமும் இருபது பாடல்களும் [Twenty Love Poems and
A Song of Despair, 1924] ஆகியவை இவரது ஆரம்ப கால படைப்புக்களில் பிரசித்திப்
பெற்றவை.
லத்தீன் அமெரிக்கப் பாரம்பரியப்
படி, கவிஞரான இவருக்கு சிலி நாட்டின் தூதராகப் பணி புரிய அழைப்பு வந்தது. 1927ல் துவங்கிய இவரது அயல் நாட்டுப் பணி
உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளுவதாக அமைந்தது. 1935ல் நடைபெற்ற ஸ்பானிஷ் குடிமைப் போரின்
அட்டூழியங்களை தனது படைப்புக்களின் பின்புலமாக கொண்ட நெருடாவை, இந்தப் போரில்
ஈடுபட்டு பலியான தனது நண்பனின் சாவு மிகவும் மோசமாக பாதித்தது. இதைத் தொடர்ந்த பத்து வருடங்கள், நெரூடாவின்
வாழ்வில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். சிலியை விட்டு வெளியேறுவதும்
உட்புகுவதுமாகவே இருந்தார். சிலி நாட்டுத்
தூதுவராக மெக்சிகோவில் சில காலம், சிலி நாடாளுமன்ற உறுப்பினராக கொஞ்சகாலம் என்று
பரமபதம் ஆடிவந்த நெரூடா இடது சாரித் தத்துவத்தின் முகமாக மாறிப்போனது இக்கால
கட்டத்தில்தான்.
கம்யூனிஸ்ட் கட்சி
சிலி நாட்டு கம்யூனிஸ்ட்
கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக 1945ல் தன்னை இணைத்துக் கொண்ட நெரூடா, 1948ல்
கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக தன் குடும்பத்தினருடன் நாட்டை விட்டு
வெளியேற வேண்டி வந்தது. இடது சாரி
கவிஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விதித்திருந்த நெருக்கடியை அரசு 1951ல் விலக்கிக்
கொண்டதை தொடர்ந்து, அதே ஆண்டு மீண்டும் தாயகம் திரும்பினார்.
படைப்பூக்கம்
1952லிருந்து தொடர்ந்த 21
வருடங்கள் பாப்லோவின் படைப்புக்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. 1951ல் இவரது கவிதைகள் ஒரே தொகுப்பாக
வெளியிடப்பட்ட போது, அதன் பக்கங்கள் 459.
ஆனால் 1968ல் இவரது கவிதைகள் இரு தொகுப்புகளாக வெளியான போது, மொத்தப்
பக்கங்களின் எண்ணிக்கை 3237. இந்த இரு
தசாப்தங்களின் ஊடாக, இவருக்கு சர்வதேசத்திலிருந்து பரிசுகள் பாராட்டுக்கள் குவிந்த
வண்ணமே இருந்தன. சர்வதேச அமைதிப் பரிசு
[1950], லெனின் அமைதிப் பரிசு, ஸ்டாலின் அமைதிப் பரிசு [1953] மற்றும்
இலக்கியத்திற்கான நொபல் பரிசு [1971] ஆகியவை ஒரு சிலவே.
மறைந்து தோன்றிய நெரூடா
நொபல் பரிசு வழங்கப்பட்ட
இரண்டு வருடங்கள் கழித்து, செப்டம்பர் 23,1973ந் திகதி மரணமெய்திய நெரூடா, கேன்சர்
நோயால் முடிவெய்தினார் என்று அப்பொழுது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டாலும்,
விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்ற வதந்தியும் பரவிய வண்ணமே இருந்தது. 1973ல் சிலி நாட்டின் சர்வாதிகாரியான அகஸ்டோ
பினோசெட்டின் [Augusto Pinochet] அரசியல் எதிரியை நெரூடா புகழ்ந்து எழுதியதே
இதற்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது.
திரை விலகிய மர்மம்
பாப்லோவின் காரோட்டியாக
இருந்தவர், 2011ல் சர்வதேச ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், மருத்துவ மனையில்
தனக்கு போடப்பட்ட ஊசிக்குப் பிறகு தனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு
விட்டதாக தன்னிடம் பாப்லோ கூறினார் என்று சொன்னது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2013ல் அவரது உடல் தோண்டி
எடுக்கப்பட்டது. விஷம் வைத்து கொல்லப்
பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிய மருத்துவர் குழுவின் முடிவு அரசால்
ஏற்றுக்கொள்ளப் படாமல், மீண்டும் ஒரு தடய பரிசோதனை நிபுணர் குழு
அமைக்கப்பட்டது. நெரூடாவின் உடலில்
வேண்டாத உலோகங்களின் தடயங்கள் இருப்பதாக கூறிய அந்த நிபுணர் குழு, அவரது இறப்பில்
நாற்பது வருடங்களாக தொடர்ந்த மர்மத்தை அவிழ்த்தது. நீதிமன்ற உத்தரவுப் படி, இரண்டு
வருடங்களுக்கு முன் தோண்டியெடுக்கப்பட்ட பாப்லோ, 2015 ஏப்ரலில் மறு அடக்கம்
செய்யப்பட்டார்.
இவர்
கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் பாப்லோவை மீட்டெடுத்த வண்ணமே உள்ளனர். மகா கவிஞர்கள் மரிப்பதில்லை.
0 comments:
Post a Comment