ஆடுகளம்

| Wednesday, September 9, 2015
“விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால்...”
கடந்த இரண்டு நாட்களாக இந்த வலைத் தளத்தில் எனது பதிவுகள், தமிழிலும் ஆங்கிலத்திலும், தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தைப் பற்றியும், அது குறித்து முன்னாள் அன்னை தெரசா மகளிர் சர்வகலா சாலை துணைவேந்தர் வே.வசந்தி தேவி அவர்களின் எதிர்வினையாற்றலை தொடர்ந்தும் இருந்தன.  இதன் தொடர்ச்சியாக இன்னுமொரு செய்தி.  இன்று [09-09-2015] Times of India நாளிதழில் Education World India என்ற அரசு சாரா அமைப்பின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை சுட்டிக்காட்டி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. [20 SCHOOLS IN STATE AMONG BEST IN COUNTRY] இந்தியாவின் சிறந்த பள்ளிகள் என்று பல பிரிவுகளில் கல்வி நிறுவனங்களை இந்த நிறுவனம் அடையாளப் படுத்தியுள்ளது.  மேட்டிமை இருபாலர் பள்ளிகள், மேட்டிமை உண்டு உறைவிடப் பள்ளிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கான இரு பாலர் பள்ளிகள், சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள், அரசுப் பள்ளிகள் என்ற பல பிரிவுகளில் இந்தியாவின் சிறந்த பள்ளிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. 

அடையாளம் காட்டப்பட்டுள்ள பள்ளிகள் குறித்தோ, அவைகளின் தகுதிகள் குறித்தோ நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.  Education World India தனது ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை காமாலைக் கண்கள் கொண்டு தயாரித்துள்ளது என்று புறந்தள்ளவும் நமக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.  இந்த அறிக்கை முழுமையும் கலப்படம் இல்லாத உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

நமது பிரச்சினை என்னவென்றால், வசந்தி தேவி அவர்கள் தொடர்ந்து சொல்லி வருவதைப் போலவே, ஏன் மாநில அரசுப் பள்ளிகள் எதுவுமே இந்த “அடையாளம் காட்டலில்” இடம் பெற முடியவில்லை.  அரசுப் பள்ளிகள் பிரிவில், தமிழகத்தைப் பொறுத்தவரை, இரண்டு பள்ளிகள் இடம் பெற்றுள்ளன.  இரண்டுமே நடுவண் அரசு நடத்தும் கேந்திரீய வித்யாலயாக்கள். Kendriya Vidyalaya – IIT Madras மற்றும் Kendriya Vidyalaya – Tambaram என்ற இரண்டு பள்ளிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.  இந்த இரண்டுமே கூட, சாதாரணன் தனது குழந்தையை சேர்த்துவிட முடியாத பள்ளிகள்.  நடுவண் பள்ளிகளில் பத்து வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணி செய்தவன் என்ற முறையில், அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இரண்டு நடுவண் அரசுப் பள்ளிகளைப் பற்றி கொஞ்சம் உள்விவரங்கள் தெரியும்.  இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை வளாகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயாவில் படிப்பவர்கள் அனைவருமே அந்நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் குழந்தைகள்.  ஒருவிதமான கல்விசார் மேட்டிமைத் தனம் அங்கு எப்பொழுதும் உலவியவாறே இருக்கும்.  மாணவர்களில் பெரும்பாலோனோரின் அறிவுத் திறன் நம்ப முடியாத தரத்தில் இருக்கும்.  கேந்திரீய வித்யாலயா, தாம்பரமும் அப்படியே.  இந்திய விமானப் படை அதிகாரிகள் மற்றும் அலுவலரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.  அங்கு படிக்கும் மாணவர்கள் பல மொழி வித்தகர்கள்.  ஆறு மொழிகளில் LSRW திறன்களை சாதாரணமாகக் கையாளும் குழந்தைகள் அங்கு நூற்றுக் கணக்கில் உண்டு. 
  
இன்னும் சொல்லப் போனால், எனக்குத் தெரிந்து ஒரு ஹிந்தி உபாத்தியாயர் விமானப் படை வளாகம் ஒன்றில் இருக்கும் கேந்திரீய வித்யாலயா ஒன்றில் பணியில் சேர்ந்த பொழுது, அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வராது.  மிகவும் பரிதாபமாகக் காட்சியளிப்பார்.  உத்திரப் பிரதேசத்தின் வடக்கு மூலையில் இருந்து வந்தவர்.  தனது முதல் வருடத்தில் மாணவர்களின் கேலிச் சித்திரம் அவர்தான்.  அவர் ஆங்கிலத்தில் தடுமாறுவதைப் போலவே மாணவர்கள் பேசிக் காண்பிப்பார்கள்.  ஆனால் ஒரு மாயம், கண்ணுக்குத் தெரியாமல், நடந்து கொண்டே இருந்தது.  தன்னை கேலி செய்யும் மாணவர்கள்தான் தனக்கு ஆங்கிலம் கற்பித்து வரும் குருக்கள் என்று அறிந்து வைத்திருந்தார் அந்த கோரக்பூர் உபாத்தியாயர்.  அவர் பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆன நிலையில், பள்ளியின் ஆண்டு விழாவில் தான் நெறியாள்கை செய்த ஒரு ஹிந்தி நாடகத்தைப் பற்றி அவர் மேடையில் ஆற்றிய அறிமுக உரை அற்புதமான ஆங்கிலத்தில் இருந்தது.  தாளில் எழுதி படிக்கவில்லை.  இயல்பாக உள்ளுக்குள் இருந்த தன் எண்ணத்தை ஆற்றொழுக்காக அவர் திறந்து காட்டிய பொழுது, மாணவர்கள் பாராட்டி ஆர்ப்பரித்ததை இன்றளவும் என் கண் முன்னே நிறுத்திப் பார்க்க முடிகிறது.  மாணவர்கள் ஆசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் சூழல் உள்ள அரசுப் பள்ளி மட்டும்தான் Education World India பட்டியலில் இடம் பெற முடியும்.  மற்றவை அல்ல.

பின் எதற்காக மற்ற அரசுப் பள்ளிகள்? நான் வெற்றியாளனாக அறிவிக்கப்பட வேண்டுமென்றால், ஒரு போட்டி தேவை.  ஒரு போட்டி நடத்தப்பட வேண்டுமென்றால், சக வீரர்கள் தேவை.  அவர்களை நான் வென்றாக வேண்டுமென்றால், அவர்கள் சோப்ளாங்கிகளாக இருப்பது மிகவும் அவசியம்.  முட்டாள்களைத் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.  அதற்கு மிகுந்த மதிநுட்பம் தேவை.  அதுவும் லட்சக் கணக்கில் முட்டாள்களைத் தயாரிப்பது எண்ணிப் பார்க்கவே மலைப்பைத் தரும் காரியம்.  அதற்கு அத்துணை பேரின் ஆதரவும் தேவை.  இத்தகைய பெரும் கைங்கர்யத்தில் அமைப்போடு கைகொடுக்கும் அனைவருக்கும் தக்க வெகுமதிகள் உண்டு.  சம்பளம், இதர படிகள், பென்ஷன், மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, மதிய உணவு, பஸ் பாஸ் உட்பட வெகுமதிகள் ஏராளம்.  தயாரிப்புப் பட்டறைகளில் முட்டாள்களின் உற்பத்தி உறுதியானதும், மார்ச்சு மாதம் நடக்கும் பந்தயத்தில், ‘மேட்டிமைப் பள்ளிகள்’ தயாரித்து வழங்கும் ‘அறிவுஜீவிகளோடு’ மோதவிடப் படுவார்கள்.  இரண்டு மாதங்களில் போட்டி முடிவுகள் சமதர்ம உணர்வோடு அறிவிக்கப்பட்டு, வீரர்களும் – சோரர்களும் இனம் பிரிக்கப் பட்டு, வீர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகளுக்கு ‘தகுதியானவர்கள்’ என்பதால் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு, சோரர்கள் அடிமாடுகளின் நிலைக்கலன்களுக்கு தள்ளப்படுவார்கள்.  போட்டி நியாயமாக நடந்த மாதிரியே தோற்றம் உண்டு.  ஏனென்றால், தோற்றவர்கள் தங்களை விட சிறந்தவர்களால்தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்ற நம்ப வேண்டும்.  இந்த ஆட்டத்தில் இது மிகவும் முக்கியமானது.

மீண்டும் வே.வசந்தி தேவி அவர்கள் அடிக்கடி சுட்டும் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது:

“விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம், ஜோயி!”.   

0 comments:

Post a Comment