இன்றைய உலகம் ஊடக உலகம். தகவல்
தொடர்புத் துறை நாட்டின் ஒவ்வொரு நாளைய நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது. வெகுஜன தகவல் தொடர்புச் சாதனங்கள் அரசு மற்றும்
பெரும் முதலாளி ஆகியோரின் கைகளில் மட்டுமே இருந்த நிலை மாறி, ஒவ்வொருவரின்
கைகளிலும் இன்று வந்து விட்டது. Facebook
மற்றும் WhatsApp மூலமாக பரவும் செய்திகள் மாநில சட்டசபைகளிலும்
பாராளுமன்றத்திலும் விவாதமாக மாறுகின்றன.
லஞ்சம் கேட்கும் அதிகாரியின் குரலிலேயே லஞ்சத் தொகையைக் கேட்டு
மகிழலாம். நடிகையோடு கொஞ்சும்
பிரம்மச்சாரி சுவாமியின் கதவு மூடியிருந்தாலும் காற்றைப் போல வெகுஜன ஊடகம் உள்ளே
நுழைந்து விடுகிறது.
இந்திய வெகுஜன ஊடகத் துறை தோராயமாக ஒரு நூறு வருடங்கள் வரலாறு கொண்டது. இந்தியப் பல்கலைக் கழகங்கள் தாமதமாகத்தான்
விழித்துக் கொண்டன. தொண்ணூறுகளின்
மத்தியில்தான் ‘பொது தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகையியல்’ எனும் துறையில்
இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள் பரவலாக தென்னிந்திய சர்வகலா சாலைகளில்
ஏற்படுத்தப் பட்டன. அதற்கு முந்தைய
கல்விசார் படிப்புகள் இந்தத் துறையில் யாரால் நடத்தப்பட்டன என்று பார்த்தால், புது
தில்லி, அருணா ஆசப் அலி சாலையில் உள்ள இந்திய பொதுத் தகவல் தொடர்பு நிறுவனம்” [Indian
Institute of Mass Communication] நினைவுக்கு வருகிறது. இது தவிர, கேரள மாநிலம் கொச்சி நகரில்
தூர்தர்ஷன் பிரமுகர் சசிகுமார் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஒரு நிறுவனமும்,
சென்னையில் தி ஹிந்து நிறுமம் நடத்தி வரும் ஆசியன் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் என்ற
நிறுவனமும் சிறப்பாகவே தங்களது பணியை ஆற்றி வருகின்றன. எந்த துறையையும் போலவே வெகுஜனத் தொடர்புத்
துறையிலும் ஒரு மாணவர் தெரிந்து கொள்ள தொழில்நுட்பச் செய்திகள், சமூகவியல்
செய்திகள், உளவியல் செய்திகள், பண்பாட்டுச் செய்திகள் என்று இருக்கின்றன. இந்தத் துறைக்கென்று இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு
இருக்கிறது. புரவி மீதேறி செய்தி கடத்திய
காலம் மலையேறி இன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிக்கணக்கானோர் செய்தியை தங்களது
உள்ளங்கைகளில் தவழும் ஆண்ட்ராய்ட் பேசிகளின் வழியே பெற்றுத் தவிக்கின்றனர் அல்லது
மகிழ்கின்றனர்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் எம்.ஏ. தகவல் தொடர்பியலும் பத்திரிகையியலும்
படித்தபோது, துறை சம்பந்தமான அனைத்து நூற்களும் ஆங்கிலத்தில் மட்டுமே
கிடைக்கும். ஆங்கில இலக்கியம் முதுகலை
அளவில் படித்த பிறகு இதை எடுத்துப் படித்ததால் எங்களில் சிலருக்கு மட்டும் இந்த
நிலைமை சிரமத்தைத் தரவில்லை. வேறு பாடங்களை
இளங்கலை / முதுகலை அளவில் படித்து விட்ட வந்த எங்களின் வகுப்புத் தோழர்கள் தமிழில்
புத்தகங்கள் கிடைக்காமல் ரொம்பவுமே சிரமப்பட்டார்கள். Keval J Kumar அவர்கள் எழுதிய Mass
Communication in India என்ற புத்தகம் அனைவருக்கும் ஆத்திசூடி. அதிலிருந்து சில பகுதிகளை நண்பர்களுக்காக
மொழிபெயர்த்துத் தந்ததுதான் எனது மொழிபெயர்ப்பு ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது. Keval J Kumar சொல்லாத
சில விடயங்களையும் சேர்த்து மசாலா தூவி மொழிபெயர்த்ததில் கிடைத்த பாராட்டு போதையாக
தலைக்கேறிக் கிடந்த காலமும் உண்டு.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு
பெற்றுள்ள க. பூரணச்சந்திரன் அவர்கள் “தொடர்பியல் – சமூகம் – வாழ்க்கை” என்ற
நூலைப் பற்றிச் சொல்லத்தான் மேற்கண்டவையை சொல்ல வேண்டி வந்தது. பூரணச்சந்திரன் அவர்கள் இந்தத் துறையைப் பற்றி பல
புத்தகங்கள் கூறுவதைத் தொகுத்து ஒரே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார் என்றுதான்
படித்து முடித்தவுடன் தோன்றியது. தகவல்
தொடர்பியலின் வரலாறை சில புத்தகங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தத் துறையின் சமூகப் பொருத்தப்பாட்டைப்
பற்றி சில புத்தகங்கள் விவரிக்கின்றன.
வெகுஜன தகவல் தொடர்பியலில் உள்ளிருக்கும் தொழில்நுட்ப கூறுகளைப் பற்றி பல
புத்தகங்கள் பேசுகின்றன. இதற்கென்றவாறான தத்துவங்களைப் பற்றியும் புத்தகங்கள்
வெளிவந்துள்ளன. இவை அனைத்தையும் உள்வாங்கி
தமிழில் ஒரு உபயோகமான புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளார் என்றுதான் பூரணச்சந்திரனின்
நூலைப் பற்றி மதிப்பிட முடிகிறது. இந்த நூலின் பின்னிணைப்பாக ‘உதவிய நூற்கள்’
மற்றும் ‘கலைச் சொற்கள் பட்டியல்’ கொடுக்கப்பட்டிருப்பது பயன்பாட்டுத் தன்மையை
அதிகப்படுத்துவதாக உள்ளது.
இளங்கலை / முதுகலை தகவல் தொடர்பியல் பட்டங்களை தமிழில் பயில்வோருக்கு இந்தப்
புத்தகம் வரும் காலங்களில் மிகவும் இன்றியமையாததாக இருக்கும் என்று சொல்லத்
தோன்றுகிறது. மாணவர்கள் மட்டுமல்லாது
இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டோருக்குமே கூட ஒரு ஆழ்ந்த அபிப்பிராயத்தை
ஏற்படுத்தக் கூடியதாக இது அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பேராசிரியரின் தமிழ் நடை எளிமையானது. இவரின் பிற நூற்களைப் போலவே இதையும் ‘அடையாளம்’
வெளியிட்டுள்ளது.
[தொடர்பியல் – சமூகம் – வாழ்க்கை, க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு,
திருச்சி, உரூபா 140/-]
0 comments:
Post a Comment