மொழிகளின் தேசம் |
இந்தியா பல நூறு மொழிகள் பேசப்படும் பிரதேசமாகவே எப்பொழுதும் இருந்து
வந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட செவ்வியல்
கலாச்சாரங்களைக் கொண்ட ஒரே பூமி இது.
பழமையான ஒன்றுக்கொன்று வேறுபட்ட இனப் பாரம்பரியங்களைக் கொண்ட நிலவியலும்
கூட. இவைகளில் பெரும்பாலானவை வளர்ந்தும்
செழித்தும் வந்திருக்கின்றன. வேறு நாடுகளிலிருந்தும்
மொழிகள் பல காரணங்கள் பொருட்டு இங்கு நுழைந்து செல்வாக்கை அடைந்திருக்கின்றன. மதம், அரசியல், வணிகம் போன்றவை பொருட்டு
நுழைந்த மொழிகள் தவிர்த்து, இங்கிருந்து வெளியே சென்றவர்கள் கொண்டு வந்த மொழிகளும்
இந்த மண்ணுடைய வரலாற்றில் உண்டு. புலம்
பெயர்ந்தவர்கள் புது மண்ணின் அழகில், சிறப்பில் மயங்கி அங்கிருந்த இலக்கியங்களை
இந்திய மொழிகளில் பெயர்த்த சம்பவங்கள் நிறைய உண்டு. இந்திய பாஷைகளை மொழியியல்
ஆய்வுக்குட்படுத்துகிற போது, அவைகள் குறைந்த பட்சம் நான்கு வேறுபட்ட மூல மொழிகளில்
இருந்து கிளைத்துள்ளதை அறிய முடியும். இந்திய மொழிகளையும் அவற்றின் வட்டார வழக்குகளையும்
கணக்கிட்டால், ஆயிரத்தைத் தாண்டும்.
இந்தியாவின் “தேசிய மொழி” என்று எந்த ஒற்றை மொழியையாவது அறிவிக்க வேண்டும்
என்று விரும்புவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டார்களா என்று
தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச்
சட்டம் 22 மொழிகளை தேசிய மொழிகள் என்று அறிவிக்கிறது. இந்திய பணத் தாள்களில்
மதிப்பு பதினேழு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.
குறைந்தது பத்தாயிரம் நபர்களாவது பேசும் அட்டவனையிடப்படாத மொழிகள் நூறுக்கு
மேல் உள்ளன. “செத்துப் போன மொழிகளும்”
கோயில்களில் தஞ்சம் புகுந்து பிழைத்து வரும் பெரும் புண்ணிய பூமி இந்தியா.
“இந்தியாவில் ஆங்கிலம்” என்பதை இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் பார்க்க
வேண்டும். எங்கிருந்தோ வந்து, மெதுவாக
தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டவாறு வணிகத்தை முதலில் வசப்படுத்தியது ஆங்கிலம். நிர்வாகம், கல்வி மூலமாக எங்கும் வியாபித்து
இந்திய துணைக் கண்டத்தையே இணைக்கும் பாலமாக இன்று விஸ்வரூபமெடுத்து
நிற்கிறது. இதைத் தங்களுடைய மொழியாகவே
பாவிக்கும் இந்தியர்கள், இதன் மூலமாகவே பல இலக்கிய அந்தஸ்துகளையும் பெற்றுத்
துலங்குகின்றனர். [தாகூர், முல்க்ராஜ்
ஆனந்த், ராஜாராவ், ஆர் கே நாராயண், விக்ரம் சேட், ரோஹின்டன் மிஸ்திரி, அமிதவ்
கோஷ், நயன்தாரா சேகல், கமலா தாஸ், ஷோபா டே, அருந்ததி ராய், சேட்டன் பகத் உள்ளிட்ட
எத்தனையோ எழுத்துக்காரர்கள்].
இது மட்டுமன்றி, இந்தியாவைப் பொறுத்தவரை, ஆங்கிலம் அந்நியச் செலாவணியைப்
பெற்றுத் தரும் மூலாதாராமாகவும் உள்ளது.
வெளிநாடுகளுக்கு பிழைப்புக்காக செல்லும் இந்தியர்களின் ஆங்கில மொழி வன்மை
அவர்களுக்கு எத்தனையோ வழிகளில் அனுகூலமாகிறது.
உலோகப் பயன்பாட்டு அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ஜெர்மனியின் பிராங்பர்ட்
நகரிலிருந்து இருநூறு மைல் தொலைவில் இருக்கும் நியுரம்பெர்க் [இரண்டாம் உலகப் போர்
புகழ்!] என்ற சிறு நகருக்கு சென்றிருக்கும் நண்பரின் மகன் தனது ஆய்வையும்,
ஆசிரியப் பணியையும் ஆங்கிலத்திலேயே மேற்கொண்டு வருகிறார் என்ற செய்தி, முற்றிலும்
நவீனமயமான மேற்கத்திய நாடுகளிலும் ஆங்கிலம் பெற்றுள்ள செல்வாக்கை விளக்கப்
போதுமானது.
0 comments:
Post a Comment