பேச்சு என்னும் பெருங்கடல்

| Friday, July 24, 2015
சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகக் கடையில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு அவைகளுக்கான பணம் செலுத்தப் போகையில், கல்லாவில் இருந்தவர், “உங்களுடைய காம்ப்ளிமென்ட்” என்று சொல்லியவாறு என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.  இலவசம் என்பதாலேயே ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் அதைப் படிக்க வேண்டாமோ என்று இருந்தது.  உண்மையில் அதன் அட்டையைக் கூட சிரத்தையோடு பார்க்கவில்லை.  சில நாட்களுக்கு முன்பு, படிக்க வேண்டிய புத்தகங்களை priority அடிப்படையில் அடுக்கிக் கொண்டிருந்தபோது, இந்தப் புத்தகம் கண்ணில் பட, தலைப்பே சுவராஸ்யமாக இருந்தது. “உண்மை சார்ந்த உரையாடல்” என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் 1998-1999ம் ஆண்டுகளில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களை கண்ணன் தொகுத்துள்ளார்.  ஈழத்து நாடகக் கலைஞர் தாசீசியஸ், கேரளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா, ஈழத்துப் படைப்பாளி மு.பொன்னம்பலம், எஸ்ரா, துறவி நித்ய சைதன்ய யதி, ஊடகவியலாளர் சின்னக்குத்தூசி, ஈழக் கவிஞர் சேரன் மற்றும் ரமேஷ்:பிரேம் ஆகியோரோடு காலச்சுவடு நிகழ்த்திய எட்டு செவ்விகள் கிட்டத்தட்ட 300 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை நிறைத்திருக்கின்றன. ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், கண்ணன், திருச்சி கல்லூரி பேராசிரியர் க.பூரணச்சந்திரன் மற்றும் மு.புஷ்பராஜன் ஆகியோர் காலச்சுவடு இதழுக்காக இந்த நேர்காணல்களை நடத்தியிருக்கின்றனர்.


படைப்பைப் பற்றியும் படைப்பாளியைப் பற்றியும் எவ்வளவோ பேசப்பட்டு வருகின்றன.  படைப்பாளியை விட படைப்புதான் முக்கியம் என்று டி.எஸ்.எலியட் உட்கொண்டு பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  இது உண்மை இல்லை என்று சிலர் சொல்வாரெனின், ஒருவரின் சில படைப்புகள் பெரும் உயிர்ப்பு கொண்டதாகவும், மற்றவை உயிரற்று தட்டையாகவும் இருப்பதை எப்படி நியாயப்படுத்துவது?  வேறு சில விமரிசனக்காரர்கள் ஒரு நல்ல படைப்பு தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது, எழுத்தாளன் ஒரு medium-தான் என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.  என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் தி.ஜானகிராமன் அவர்கள் சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் கதை சொல்லும் உக்தியை மிகவும் தேர்ச்சியாக – அதன் உச்சபட்ச திறனில் – பயன்படுத்தியிருக்கிறார்.  ஆனால், அவருடைய வேறு சில நாவல்கள் மூன்றாந்தர தமிழ் சினிமாத் தனமாகவும் முதிர்ச்சியற்ற சம்பவ விவரிப்புகளும் கொண்டதாக உள்ளது.  தி.ஜானகிராமனிடம் உணர்ந்ததை நான் வேறு பல படைப்பாளிகளிடமும் கண்டுள்ளேன்.  ஒரு நல்ல படைப்பை உருவாக்கிவிடும் படைப்பாளி, அடுத்து வரும் தனது படைப்புகளின் தரத்திற்கு எந்தவித உத்தரவாதமும் தரமுடியாது.  இவைகள் ஏதேச்சையாக நிகழ்கின்றனவா என்பதும் பொருட்படுத்தத் தக்க கேள்வியே.  இப்படியான பல கேள்விகள் படைப்பைப் பற்றியும் படைப்பாளியைப் பற்றியும் எப்போது சூழ்ந்தே இருப்பதால், இவைகளைப் பற்றி திரும்பத் திரும்ப விவாதிப்பதும், இத்தகைய விவாதங்களில் படைப்பாளிகளையே பங்கேற்க வைப்பதும் ஒரு தீவிர வாசகனுக்கு மட்டுமன்றி சக படைப்பாளிகளுக்கும் பலனளிக்கக் கூடியதே.


இந்தத் தொகுப்பின் முதல் நேர்காணலாக தாசீசியஸ் என்ற ஈழத்து நிகழ்த்துக் கலைஞர் தமிழகத்தில் உள்ள இரண்டு நாடகக் குழுக்களோடு மாநிலம் முழுவதும் பல நகரங்களில் தம்முடைய குறிப்பிட்ட ஆக்கங்களை நிகழ்த்திக் காட்டியதின் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு அவரின் பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  “தமிழர்களுக்கென்று ஒரு பொது நாடக மரபை உருவாக்குவதுதான் தன்னுடைய நோக்கம்” என்று கூறும் தாசீசியஸ், நாடகத்திற்கு என்று பிரகாசமான எதிர்காலம் உண்டு என உறுதியாக நம்புகிறார்.  பேட்டியினை நடத்தும் திருச்சி பேராசிரியர் க.பூரணச்சந்திரன் தமிழக யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியும் கூட அதை மறுதலிக்கும் தாசீசியஸ், தமிழகத்தில் நாடகம் தனது வன்மையை இழந்து “முறையாகப் பயிற்சி பெறாத நடிகர்களைக் கொண்டு ஏனோ தானோ என்று நிகழ்த்தப் படுவதால் ஏற்படக் கூடியதாக இருக்கலாம்” என்று சொல்கிறார்.  சினிமாவாலும், வீட்டிற்குள் நுழைந்துவிட்ட மற்ற காட்சி ஊடகங்களாலும் தனது புராதனக் கலைகளில் பலவற்றை இழந்து, அவைகளுக்கு தனது ஆதரவை எப்போதோ நிறுத்தியும் விட்ட தமிழனைப் பற்றி தாசீசியஸ் அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  லண்டன் மற்றும் கனடா போன்ற இடங்களில் நாடகம் என்ற கலைக்கு இன்றளவும் வெகுஜன ஆதரவு இருக்கிறது என்ற தாசீசியஸ் கூற்று நமக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்தத் தொகுப்பின் இரண்டாவது செவ்வியாக கேரளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுடனான உரையாடல் இடம் பெற்றுள்ளது. ஆற்றூரார் தனது கவிதைகளில் சொற்சிக்கனத்தைக் கடைபிடிப்பவர். தீராத பயணங்களின் காதலர்.  ஒப்பனைகள் இல்லாத மொழிதான் கவிதைக்குத் தேவை என்று தனது கவிதைகளின் மூலமாகவே உரக்கச் சொல்லுகிறார். “ஒரு கவிஞனின் மொழியில் இருந்தே அவன் நடிக்கிறானா, மிகைப் படுத்துகிறானா, உங்களைக் கவர்வதற்காக மொழியைப் பயன்படுத்திகிறானா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.” ஆற்றூறாரின் வார்த்தைகள் ரொமாண்டிக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் rustic language எனும் சொற்றொடரையே எதிரொலிக்கின்றன.  தான் ஒரு ஆசிரியனாக இருக்க நேர்ந்தது பெருமைக்குரிய விஷயம் இல்லை என்பதாக சொல்லும் கவிஞர், ஆசிரியன் என்பவன் கூத்துக் கட்டும் கோமாளியாக பல சமயங்களில் நடந்தாக வேண்டியுள்ளது என்று குறிப்பிடுகிறார்.  உண்மையில், ஆசிரியன் வகுப்பறைகளில் தன் சுயத்தை இழந்து நிற்கும் பரிதாபமே மிஞ்சுகிறது என்னும் கவிஞரின் கூற்றில் உண்மை ‘உலகளந்த பெருமாள்’ போல விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.  சமீபத்திய கார் பயணம் ஒன்றின் போது, சக ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஒரே பாடத்தை பதினைந்து வருடமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.  வேறு எதையும் அப்பொருள் சார்ந்து நம்மில் யாரும் படித்ததேயில்லை.  திரும்பச் சொல்லும் கிளிகளைப் போன்ற ஜந்துக்களான நாம் ஏன் “சிறந்த ஆசிரியர்” என்ற பட்டம் கட்டிக்கொண்டு திரிய வேண்டும் என்று வினவியதும் நினைவுக்கு வருகிறது.   தமிழிலும் நல்ல பாண்டித்தியம் உள்ள ஆற்றூரார் அவர்கள் தமிழிலிருந்து சில நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.  ஜே.ஜே.சில குறிப்புகள், ஒரு புளிய மரத்தின் கதை ஆகிய சுந்தர ராமசாமியின் நாவல்களையும், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலும் மலையாளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.


இந்தத் தொகுப்பின் நான்காவது செவ்வியாக எஸ்ரா அவர்களிடம் மனுஷ்யபுத்திரன் உரையாடுகிறார்.  பூர்வீகக் கிராமமான மல்லாங்கிணர் என்ற நிலவெளி தனது பால்யத்தை எப்படி ஆக்கிரமித்தது என்று சொல்லத் தொடங்கும் எஸ்ரா தன்னுடைய வீட்டுச் சூழல் தன்னை ஒரு தீவிரமான வாசகனாக இளம் பிராயத்திலேயே உருவாக்கிற்று என்றும் நினைவு கூர்கிறார்.  விருதுநகர் மற்றும் கோவில்பட்டியில் வளர்ந்து வந்த எஸ்ரா தான் படித்து வந்த ரஷ்ய இலக்கியம் உள்ளிட்ட புத்தகங்களின் பாதிப்புத் தவிர சக எழுத்தாளரான கோணங்கி போன்றோரின் நட்பும் தம்மை உருவாக்கியவை என்று சொல்லுகிறார்.  டால்ஸ்டாய், தஸ்தோவெஸ்கி உள்ளிட்ட ரஷ்ய படைப்பாளிகள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தமது ஆதர்சம் என்று கூறும் எஸ்ரா அவர்கள், தமிழ்க் கதையின் பிரதான உலகம் குடும்பம்தான் என்று அறுதியிடுகிறார்.  தமிழ்க் கதையுலகு இந்த மண்ணின் மரபில் இருந்து எழுந்து வந்த ஆண் மைய ஒழுக்கக் கூறுகளை சாரமாகக் கொண்டிருப்பதாகவும், தமிழில் எழுதுவோரில் பலரும் இந்த ஒழுக்கக் கோட்பாடுகளின் காவலராகவே தம்மைப் பாவித்துக் கொள்கின்றனர் எனவும் எஸ்ரா கவலை தெரிவிக்கிறார்.  குடும்பம் அல்லது குடும்பம் இன்மை என்ற இரு முனைகளுக்கிடையேதான் தமிழ்க் கதையுலகு இயங்கி வருகிறது என்று உறுதிபட சொல்லும் எஸ்ரா, தமிழ்க் கதையுலகு ஒரு புதிய மொழியை படைத்துக் கொள்ள வேண்டும் என்று விழைகிறார்.

அடுத்ததாக, இந்தத் தொகுப்பில் துறவி நித்ய சைதன்ய யதி அவர்களை ஜெயமோகன், ஆர்.குப்புசாமி மற்றும் சூத்ரதாரி ஆகியோர் சந்தித்து உரையாடுகிறார்கள்.  நித்ய சைதன்ய யதி நடராஜ குருவின் மாணவர்.  நடராஜ குரு நாராயண குருவின் முதன்மையான மாணவர்களில்  ஒருவர்.  துறவி யதி அவர்கள் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  தத்துவம் மற்றும் தருக்கத்தில் பெரும் புலமை உண்டு.  ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஆசிரமத்தில் வாழ்ந்தவர்.  மதம் என்பதைப் பற்றியதான துறவியின் கருத்துகள் மிகவும் புரட்சிகரமானவை.  மதத்தை தான் நம்பவுமில்லை ஏற்கவுமில்லை என்று கூறும் துறவி, நேற்றைய ஆன்மீக அடிப்படைகள் சிலவற்றைக் குறியீடுகளாகப் பயன்படுத்தி இன்று அதிகார மையங்களை உருவாக்குவதே மதம் என்கிறார்.  மேலும், மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவிப்பது மிக அவசியமான ஒரு பணி என்றும் கூறுகிறார்.  பகவத் கீதை என்பது இந்தியச் சிந்தனை மரபின் மூல நூல்களில் ஒன்று என்றும், நமது மரபு பற்றிய அறியாமையை நமது அறிவு ஜீவிகள் வளர்த்துக் கொண்டுள்ளதாகவும், இதில் அவர்களுக்கு வெட்கம் இல்லை என்றும் மேற்சொல்லும் யதி, “தன் மரபு பற்றிய ஞானம் இல்லாத மேற்கத்தியச் சிந்தனையாளர் யாருமில்லை.  மேற்கத்தியக் கருத்துக்களை சூட்டோடு சூடாக அறிந்து இங்கு அதைப் பற்றி பேச விரும்புவர்கள், அவர்கள் விஷயங்கள் அறிந்து வைத்திருக்கும் முறையையும் ஆராயும் முறையையும் ஏன் சிறிதாவது கற்றுக் கொள்ளக் கூடாது?” என்று வினவுகிறார்.  கூடவே மதம் என்பதற்கு புது விளக்கம் ஒன்றையும் தருகிறார் துறவி: “மூல நூல்களிலும் ஸ்தாபர்களிலும் மித மிஞ்சிய நம்பிக்கை, அவற்றுக்கு உரைகள் ... அவர்களுக்குச் சிலைகள் ... குழுச் சண்டைகள்.  சமஸ்க்ரிதத்தில் ‘மதம்’ என்றால் உறுதியான தரப்பு என்று பொருள்.”

இந்தத் தொகுப்பின் ஆறாவது நேர்காணல் தமிழக அரசியலைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  தற்போது தங்களுடைய இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கும் தமிழக இளைஞர்கள், தேசிய – திராவிட அரசியலைக் கற்க முனையும் போது, அவர்கள் ‘சின்னக்குத்தூசி’ என்ற பெயரை அடிக்கடி கண்ணுற நேரும்.  ஆர்.தியாகராஜன் என்னும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, சின்னக்குத்தூசி அவர்கள் தனது நீண்ட பத்திரிகைப் பணியை மிகவும் நேர்மையாக விவரிக்கிறார்.  நடுவுநிலைமை என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெளிவாக பிரகடனம் செய்யும் சின்னக்குத்தூசி தனது தத்துவமாகவே சொல்லுகிறார்: “எங்கே இருந்து எழுதினாலும் திராவிடர் இயக்கக் கொள்கைகளை ஆதரித்தே எழுதுவேன்.  தி.மு.கழக அனுதாபி என்ற முத்திரையோடுதான் எழுதுவேன்; சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே எழுதுவேன்.  இந்த ஒரு நிரந்தர நிலையை மட்டுமே எனது ஒரே பெருமையாகக் கருதுகிறேன்.” தீண்டாமை தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் அந்தக் காலத்தில் பரவி இருந்தது என்றாலும், தஞ்சை மாவட்டத்தில் அதன் தாக்கம் இன்னும் தீவிரமாக இருந்தது என்று சொல்லும் சின்னக்குத்தூசி, சிற்றுண்டிக் கடைகளில் சாப்பிட்டவுடன் இலையை எடுக்க வேண்டும் என்ற இன்றைய பழக்கத்தின் பின்னணியிலும் போன நூற்றாண்டின் சாதீயம் தொக்கி நிற்கிறது என்கிறார்.  பிராமணர்களிடம் சிறை பட்டுக் கிடந்த தமிழக அரசியல், மாற்றுச் சக்தியாக திராவிட அரசியல் நுழைந்திரா விட்டால், இந்த நிலப்பிரதேசத்தை முழுவதுமாக சீரழித்திருக்கும் என்று சொல்லும் சின்னக்குத்தூசி, அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றையும் ‘சரஸ்வதி’ எனும் பிராமண அம்மையாரின் நூலை மேற்கோள் காட்டி சொல்லுகிறார். “ஆஷ்துரை துரைச்சாணி அம்மாளோடு சாரட்டில் ஊருக்குள் வந்து கொண்டிருக்கார்.  அப்பொழுது கடுமையான வெயில் காலம்.  அப்ப ஒரு தாழ்த்தப்பட்ட பொண்ணு ஒரு புல்லுக்கட்டை தூக்கிக் கொண்டு வீதியில் வந்து கொண்டிருக்கா.  நிறைமாதக் கர்ப்பிணி. வெயில் தாங்காம மயக்கமடைந்து கீழே விழுந்துர்றா.  ஆஷ்துரை அந்த அம்மாவை வண்டியில் ஏற்றி உயர் ஜாதிக் காரர்கள் இருக்கிற தெரு வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்.  இதனால் கோபமடைந்த உயர் ஜாதிக்காரர்கள் கூடி ஆஷ்துரை எப்படி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை நம் தெரு வழியா அழைத்துக்கொண்டு போகலாம் – இதுதான் காரணம் ஆஷ்துரை பேரில் இவுங்களுக்குக் கோபம் வந்ததுக்கு.”  மேலும், வாஞ்சிநாதனுக்கு தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணத்திற்காக தியாகி பென்ஷன் தர மறுத்த காங்கிரஸ் ஆட்சிகள், அவரின் குடும்பத்தாருக்கு தியாகி பென்ஷனை யாரும் வற்புறுத்தாமலேயே தந்த சி.என்.அண்ணாதுரையின் செயலை வெட்கமின்றி பார்த்துக் கிடந்தன என்றும் சொல்கிறார்.  தமிழக அரசியலின் அறுபது ஆண்டு கால வரலாற்றைச் சொல்வதற்கு தகுதி படைத்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் சிலர் இன்னும் உயிருடன் உண்டு.  அவர்களில் முக்கியமானவர் சின்னக்குத்தூசி என்ற எண்ணத்தை இந்த நேர்காணல் எளிதாக ஏற்படுத்துகிறது.


இந்தத் தொகுப்பின் ஏழாவது நேர்காணலில் ஈழக் கவிஞர் சேரன் அவருடைய ஈழத்து அனுபவங்கள், புலம் பெயர நேர்ந்ததின் பின்னணி, புலிகளை மையப் படுத்திய ஆயுதப் போராட்டம், அதனால் விளைந்ததாக சேரன் உட்பட பலர் நம்பும் எதிர்மறை விளைவுகள், சிங்களப் பேரினவாத இன ஒழிப்பு அட்டுழியங்கள், ஈழத்துக் கவிதை மரபு, மஹாகவி – காசி ஆனந்தன் தொடங்கி இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் வரையிலான அவர்களின் பாடுபொருள் ஆகியன பற்றி, வரவிருக்கும் எதிர்வினைகளைப் பற்றி கவலைப் படாமல் தெளிவாகச் சொல்கிறார்.  தமிழ்நாட்டு படைப்பிலக்கியம் இலங்கையில் செலுத்திய வாசக சொல்வாக்கு போன்று ஈழப் படைப்பிலக்கியம் தமிழக வாசகப் பரப்பில் தனது ஆளுமையை செலுத்த முடியவில்லை என்று கவலையுறும் சேரன், ஈழ விடுதலைப் போராட்டம் கூட “விடுதலை (liberation) என்ற பரந்த ஆழமான போராட்டத்திலிருந்து அரசியல் சுதந்திரம் (independence) என்ற பின்னடைவான நிலையையே” வந்தடைந்திருக்கிறது என்று வருத்தப்படுகிறார்.

இந்தத் தொகுப்பின் கடைசி செவ்வியாக பிரேம்:ரமேஷ் அவர்களுடான உரையாடல் அமைந்துள்ளது.  தங்களது படைப்புலகத்தைப் பற்றி மிக விரிவாகப் பேசும் அவர்கள், தங்களுடைய தற்சமய நிலைப்பாடாக “உலகு சார் நிலையில் தாங்கள் பின் நவீனத்துவ கவித்துவ வாதிகள், இதன் இந்திய வடிவு நிலையில் அம்பேத்கரியர்கள், மனம் மற்றும் நடத்தையியல் பொறுத்தவரை பெண்ணிய தத்துவங்களின் சிரத்தையான மாணவர்கள்” என்று அறிவிக்கிறார்கள்.  உடலை மையப் படுத்திய அரசியல் இன்று சர்வதேச அளவிலானது என்று சொல்லும் இவர்கள், “எந்த உடலின் இருப்பையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்த, கண்காணிக்க, மறுக்க, ஒடுக்க எந்த நிறுவனத்திற்கும் உரிமை கிடையாது.  ஆனால் எதையும் விட மலிவாக, எதையும் விட கீழாக இன்று மனித உடல் மாறியிருக்கிறது.  இந்தக் கீழ்மை நீண்ட வரலாற்றுப் பின்னணி உடையது” என்றும் விவாதிக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய ஆதிக்க சாதிகளின் அரசியலே இந்திய அரசியல் என்பதாக சொல்லும் இவர்கள், “மக்கள் தொகைப் பெருக்கம் மிகவும் பயமுறுத்துவதான ஒரு அரசியல் சொல்லாடலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தோன்றுவதற்கு இந்த பிற சாதி வெறுப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் தொகைப் பெருக்கம் என்பவைதான் முக்கிய காரணங்கள்” என்றும் சொல்கிறார்கள்.  இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கும் இவர்கள், “(கிறித்துவம் போன்ற மதங்கள்) ... எனது வேதத்தைக் கேள், எனது வேதத்தைப் படி; இல்லையென்றால் தண்டிப்பேன் என்பதற்கும், (இந்து மதம்) ... எங்கள் வேதத்தைப் படிக்காதே, கேட்காதே, மீறினால்... என்பதற்கும் வேறுபாடு இல்லாமலா இருக்கிறது?” என்று வினவுகின்றனர்.

இந்தத் தொகுப்பின் இறுதியில் ‘எதிர்வினைகள்’ என்று சில பக்கங்களில், சில நேர்காணல்களுக்கு வந்த எதிர்வினைகளையும் வெளியிட்டுள்ளனர்.  எஸ்ரா அவர்களின் நேர்காணலுக்கு பிரேம்:ரமேஷின் எதிர்வினையும், சேரனின் நேர்காணலுக்கு பொன்னம்பலத்தின் எதிர்வினையும், பிரேம்;ரமேஷ் நேர்காணலுக்கு சாருநிவேதிதாவின் எதிர்வினையும் சூடுபறக்க எழுந்துள்ளது.  எதிர்வினைகளில் சில ரசக்குறைவாக உள்ளதோ என்ற ஐயம் படிக்கும்பொழுது எழுவது தவிர்க்க இயலாதது.

இத்தகைய நேர்காணல் தொகுப்புகள் பல அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளன.  ஒரு முழு புத்தகமுமே திருமதி வே.வசந்தி தேவி அவர்களை சுந்தர ராமசாமி நேர்காணல் செய்து காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது.  ஞாநி சில பிரமுகர்களை நேர்காணல் செய்து ஞானபானு வெளியீடாக எண்பதுகளிலேயே பிரசுரித்துள்ளார்.  படைப்பும் படைப்பாளியும் தங்களைச் சுற்றி தீராத மர்மம் நீடிப்பவர்களாகவே என்றென்றும் உள்ளனர்.  எவ்வளவு பேசியும் இந்த மர்மம் முழுவதுமாகக் கலைவதில்லை.  மர்மத்தின் ஆழம் அளக்க முடியாதது.  மொழி எனும் பெருஞ்சமுத்திரத்தில் பேச்சு என்னும் படகில் இலக்கேயின்றி  பயணிக்கும் போது, மர்மம் கலைவதற்கான சாத்தியம் ஏதோ ஒரு இருளின் விளிம்பில் தொடங்கலாம்.
      

[உண்மை சார்ந்த உரையாடல் – காலச்சுவடு நேர்காணல்கள் (1998-1999), தொகுப்பு: கண்ணன், காலச்சுவடு வெளியீடு, நாகர்கோயில், உரூபா 140/-]                            

0 comments:

Post a Comment