சினிமாவின் சிவாஜி
மிகை நாடும் கலை -
காலச்சுவடு பத்திரிகையில் சினிமா சம்பந்தமாக வெளியான கட்டுரைகளைத் தொகுப்பாக
வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகத்தார். அனைத்து கட்டுரைகளுமே வாசிக்கத்
தக்கவையாக உள்ளன. சிவாஜி அவர்களின் நினைவுக் கட்டுரையாக அம்ஷன் குமார்
எழுதியுள்ள குறிப்புகள் நடு நிலையோடும் மிகுந்த ஆய்வோடும் எழுதப்பட்டுள்ளது. சிவாஜி
அவர்களின் நடிப்பு மிகை வகையைச் சார்ந்தது - அவரின் நாடக
அனுபவத்தால் விளைந்தது என்று பரவலாக நம்பப்பட்டு வருவதை அம்ஷன் குமார்
மறுக்கிறார். மிகை
சார் நடிப்புக்கும் சிவாஜியின் நாடக அனுபவத்திற்கும் எந்த வித
தொடர்பும் இல்லை என்று சொல்லும் அவர், டி.கே.பகவதி, முத்துராமன்,
கருணாநிதி
(தி.மு.க. தலைவர் அல்ல), பாலையா, ரங்காராவ்
போன்றோரும் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால்
அவர்களின் நடிப்பு மிகை சார் வகையைச் சார்ந்தது
அல்லவே; ஆகையால் சிவாஜி அவர்கள் தானாகவே மற்றவர்களை அவதானித்து, தான்
ஏற்கும் பாத்திரங்களுக்குள் புகாமல் அவைகளை
தன்னை விட மேலாக மிகவும் உயர்த்திப் பிடித்திருக்கிறார் என்று சொல்வது ஒரு புதிய வியாக்கியானமாக
உள்ளது. பத்திற்கும் மேற்பட்ட நடிப்பு வகைகளை தன்னுடைய பாத்திரங்களில் சிவாஜி
வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லும்
அம்ஷன் குமார், தமிழில் மற்ற நடிகர்களை விட இவர்
எவ்வளவோ கற்பனா சக்தி மிகுந்தவர் என்றும்
மதிப்பிடுகிறார்.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
அவர்களின் மேட்டுக்குடி கலைகளும் சினிமாவும் என்ற கட்டுரை அவரால் ஆங்கிலத்தில்
எழுதப்பட்டு ஞாநி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்தக்
கட்டுரை ஏற்கனவே எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறந்தபோது கொண்டுவரப்பட்ட ஒரு நினைவுத்
தொகுப்பிலும் வெளிவந்துள்ளது. ஆரம்ப வருடங்களில் சினிமா என்பது
மேட்டுக்குடி வர்க்கத்தால் கேலியுடன் ஒதுக்கப்பட்டே இருந்தது. அதில்
பங்கேடுத்தவர்கள் மேட்டுக்குடியினரால் "கூத்தாடிகள்" என்று கிண்டல்
செய்யப்பட்ட நாடகக் கொட்டாய் காரர்களும், தெருக்கூத்தாடிகளும்தான். அதில் உள்ள வியாபார வாய்ப்புக்களை
தெரிந்துகொண்ட பின்னரே மேட்டுக்குடியினர் சினிமாவில் நுழைந்தனர் என்றும்
சொல்கிறார் பாண்டியன். பாண்டியனின்
"இருவர்" சினிமா பற்றிய கட்டுரை திராவிட அரசியலில்
முக்கியத்துவம்
வாய்ந்தது. திராவிட
அரசியலின் முக்கியஸ்தர்கள் இரண்டு பேர்களை பற்றி, தேசியத்திற்கு வால் பிடிக்கும்
மணிரத்னம் எப்படி சித்தரித்துள்ளார் என்று அரசியல் விமரிசன நோக்கோடு
எழுதப்பட்டுள்ள கட்டுரை.
இந்தத் தொகுப்பில்
உள்ள பல கட்டுரைகள் அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன்,
எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
போன்றோரால் எழுதப்பட்டவை. சேரனின் "சொல்ல மறந்த
கதை"யைப் பற்றிய கட்டுரையும் சுவையானதே. சென்னை நகர சினிமாக் கொட்டகைகளின்
ஆதிகால வரலாறு மேல்நாட்டவர் ஒருவரால் நுண்ணியமாக ஆராயப்பட்டு
எழுதப்பட்டுள்ளது ஆச்சர்யமளிக்கிறது.
சினிமா ஒரு
பண்பாட்டின், மொழியின்,
இனத்தின் ஆவணம்தான். சந்தேகமேயில்லை.
[மிகை நாடும் கலை,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோயில்]
----
வாயை மூடிப் பேசவும்
கடந்த சில தசாப்தங்களிலேயே அண்மைக்காலத்தில்தான்
கருத்துச் சுதந்திரம் மிகவும் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. சில
கட்சிகளுக்கு, சில
இயக்கங்களுக்கு, சில
சமூகப் பிரிவினருக்கு
நம்முடைய கருத்து ஏற்புடையதாக இருக்குமா என்று பலமுறை சிந்தித்து விட்டு, பிறகே அதை பதிவேற்றமோ, பிரசுரமோ செய்ய வேண்டி உள்ளது. இதில்
ஒருவர் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பிறகு தன்னையே நொந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.
MISA காலத்தில் இந்தப்
பத்திரிகை தணிக்கை முறை வெளிப்படையாக அமுலில் இருந்தது. ஆகையால் நமது கருத்து
வெளிடப்படும் முன்னரே, தணிக்கைக்காக அமர்த்தப்பட்டோர் அதைப்
படிப்பார்கள். ஆட்சேபம் சொல்வார்கள். அவர்கள் சொல்கிறபடி செய்தியை / கருத்தை
கத்தரித்தோ மாற்றியோ விட்டால், பிரச்சினை அத்தோடு விட்டது. ஆனால் இன்றைய நிலை வேறு. FB உள்ளிட்ட
சமூகத் தளங்களில் தம்முடைய கருத்தை
வெளியிடுவோர் முதன் முறையாக வெகுஜன வாசிப்பிற்குள்
வருகின்றனர். இவர்களது கருத்தை சமூக நிலை அறிந்து பக்குவப்படுத்தக் கூடிய editors சௌகர்யம்
இவர்களுக்கு இல்லை. அந்தந்த
நேர உணர்வின் வெளிப்பாடாக
இவர்களது கருத்து அமைந்து விடுவதால், கருத்துக் காவலர்களிடம்
வசமாக மாட்டிக் கொள்கின்றனர். வேறு
எந்த வேலையையும் பார்க்காமல் யார் எந்த கருத்தை
சொல்கின்றனர், அதில் ஆட்சேபம் சொல்ல என்ன உள்ளது, எப்படி
பிரச்சினையை ஆரம்பிக்கலாம் என்று உற்று நோக்கிய வண்ணம் ஊருக்கு
நூறு பேர் குறைந்த பட்சம் இருப்பதாகத் தெரிகிறது. Big brother is watching
us, 24 x 7.
பிரச்சினை என்று
வந்தவுடன் மன்னிப்பு கேட்டு விடுவது நல்லது. உருவ பொம்மையை எரிப்பதை எல்லாம் பெரிது
படுத்த வேண்டியதில்லை. வீட்டில் பெட்ரோல் குண்டு எறியப்படுவதற்கு முன்போ,
வீட்டையோ ஆபீசையோ
களேபரம் செய்வதற்கு
முன்போ, நிபந்தனையற்ற
மன்னிப்பும், கையெடுத்து
கும்பிட்டவாறு ஒரு போட்டோவும் தயாராக இருப்பது FB உள்ளிட்ட தளங்களில் கருத்து சொல்லும் அனைவரிடமும்
இருப்பது நல்லது.
நான் ரெடி, நீங்கள் ரெடியா?
----
WELL DONE MR.THAROOR!
BRITAIN OWES REPARATIONS என்ற
தலைப்பில் சொற்போர்
ஆக்ஸ்போர்ட் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றதின் காணொளி YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது. அகில
இந்திய காங்கிரஸ் பிரமுகரும் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி
உறுப்பினருமான திரு.சசிதரூர் பதினைந்து நிமிடங்கள் பிரித்தானிய காலனியாதிக்கம்
அவர்கள் ஆண்ட நாடுகளில் எல்லாம் விளைவித்த கொடுமைகளையும்
சுரண்டல்களையும் பற்றியும், முக்கியமாக பிரித்தானிய
காலனி ஆதிக்கத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றியும் உணர்ச்சி பொங்க
அற்புதமான ஆங்கிலத்தில் உரையாடுகிறார். அவருடைய
சொல்தேர்வு அபாரமாகவும் நம்பமுடியாததாகவும் உள்ளது. மேடைப் பேச்சில் அவருக்கு இருக்கும்
அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இவர் ஐ.நா.விலேயே
இருந்திருக்கலாம். இந்தியா வராமலேயே இருந்திருக்கலாம். வந்த பிறகு அரசியலில் சேராமல்
இருந்திருக்கலாம். INDIA: FROM MIDNIGHT TO MILLENNIUM போன்ற புத்தகங்களை மட்டும் தொடர்ந்து
எழுதிக் கொண்டிருந்திருக்கலாம். அமைச்சராக
மறுத்திருக்கலாம். IPL அணி எதுவும் வாங்காமல் இருந்திருக்கலாம். குறைந்த
பட்சம் சிலரை வாழ்க்கையில் சந்திக்காமலாவது இருந்திருக்கலாம்.
எங்கேயோ இருந்திருக்க
வேண்டியவர்!
----
0 comments:
Post a Comment