தோல்வி
என்னும் சாகசம்
மனுசப்பயல்
அதை விட்டு எங்கு நகர்ந்தாலும் மீண்டும் நதிக்கரைக்குத் திரும்ப
வேண்டியதுதான். குழந்தையின் முகம் தாயின்
மார்பை நோக்கித் திரும்புவதைப் போல. பெரிய
மனுஷ நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரையிலே பிறந்தது என்பதைப் போலவே, மஹா காவ்யங்கள்,
இலக்கியப் படைப்புக்கள் எல்லாவற்றுக்குமே நதியோடோ கடலோடோ சம்பந்தம் பலமாகவே
உள்ளது. நான் படித்த வரையில்
இப்படித்தான். ஒருவேளை வேறு மாதிரி
இருந்தால் மற்றவர்கள் அதை எழுத்தில் தங்கள் பக்கத்து நியாயத்தோடு சொல்ல
வேண்டும். எனக்கு தமிழில் உடனடியாக ஞாபகம்
வருவது தி.ஜானகிராமனின் மோகமுள்.
பாபுவையும், யமுனாவையும், ரங்கண்ணாவையும் போல காவிரியும் அல்லவா ஒரு
கதாபாத்திரம் அதில்! ரயில் மாதிரியேதான்
நதியும். எல்லா உன்னதங்களுக்கும்
கேவலங்களுக்கும் மௌன சாட்சியாகி, தான் யார் பக்கம் என்பதைச் சொல்லாமலேயே
காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலும் நதியும் இன்னும் பார்க்கப் போவது எத்தனை
எத்தனையோ!
இப்பொழுதுதான்
“கம்பா நதி” படித்து முடித்தேன்.
வண்ணநிலவன் எழுதியது. இவரது
‘கடல்புரத்தில்’ பற்றி ஏகப்பட்ட பேர் எக்கச் சக்கமாக சொல்லியாகி விட்டது. கம்பா நதியைப் படித்தபோது, கூடவே இந்துமத்தின்
‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது. சாதாரண மனிதர்கள் தங்களது ஆசைகளை அபிலாஷைகளை
எப்படிக் குடும்பத்திற்காகவும் மற்றும் தான் சார்ந்தோ தன்னைச் சார்ந்தோ நிற்கும்
மனிதர்களுக்காகவும் மாற்றிக் கொள்ள நேர்கிறது என்பதையும், எங்கேயோ எப்படியோ இருக்க
ஆசைப்படும் மனிதன் தரையில் விழுந்து அடிபட்டு, மீண்டும் எழ முடியாது என்பதைத்
தெரிந்து கொண்டு நாளடைவில் புழுவாக உருமாற்றம் பெற்று சாக்கடையில்
சார்ந்துண்ணியாய் உழன்று, நேரம் வந்ததும் இடத்தைக் காலி செய்து நகர்கிறான் என்பதை
இந்துமதி தன்னுடைய ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலில் சென்னையைப் பின்புலமாகக்
கொண்டு இயல்பாக சொல்லியிருப்பார். 1987
வாக்கில் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் இதை தொடராகவும் செய்தது. ரகுவரனும் ஊட்டி ராகினியும் நடித்திருந்ததாக
நினவு.
கம்பா
நதியின் கதையும் இதுதான். ஆனால் இந்துமதி
தொடமுடியாத உயரத்தில் நின்று இதே விஷயத்தை நுண்ணியமாகவும், ஒரு அபூர்வமான
விட்டேத்தி தனம் நாவல் முழுக்க விரவி இருக்குமாறும் செய்திருப்பது வண்ணநிலவனின்
கலைத் தேர்ச்சிதான். திருநெல்வேலிப் பிள்ளைமார் குடும்ப உறவுகள், வாழ்ந்து கெட்ட
குடும்பங்களின் கதை, சுய லாபத்துக்காக தன் நிலையிலிருந்து இறங்க கொஞ்சமும்
தயங்காமை, சின்னப் பிள்ளைகளின் நிறைவேறவே முடியாத அ-யதார்த்த ஆசைகள், அவைகளை
நிர்த்தாட்சண்யமாக காலில் போட்டு மிதிக்கும் நிதர்சனங்கள் - மிகவும் இயல்பாக
அவர்களின் மொழியிலேயே சொல்லப்பட்டுள்ளது.
பாப்பையாதான் ஒருவேளை வண்ணநிலவனோ? தமிழ்ப் புதின இலக்கியத்தில் நடுத்தரக்
குடும்பத்து இயலாமையில் உழலும் பிரதிநிதியாக பாப்பையாவைத் தவிர வேறு எந்த
கதாபாத்திரமும் இவ்வளவு கச்சிதமாகப் பொருந்த முடியாது. பாப்பையாவிற்கும் கோமதிக்கும் கல்யாணம் முடிந்திருக்கலாம். ஆனால் ஆகவில்லை. அதற்கென்ன போச்சு? ஆசைகளை நிறைவேற்றத் தெரியாவிட்டாலும் நிராசைகளை
ஜீரணம் செய்யும் சக்தி அவர்களிடம் கொஞ்சமாகவா இருக்கிறது? கோமதியும் பாப்பையாவும் அந்த நெல்லை சாலையில்
நடந்து செல்வதையும், கோமதி அதி நுட்பமான காரணங்களுக்காய் அழுவதையும், ஒரு தேர்ந்த
பிரெஞ்சு இயக்குனர் சரியான உணர்வு வெளிப்பாட்டுடன் சினிமாவில் கொண்டு வர முடியும்.
இதில்
வரும் சிவகாமி ‘அவள் ஒரு தொடர்கதை’யில் வரும் நாயகிதான். இரண்டாந் தாரத்தோடு கெடுவாழ்வு நடத்தி வரும்
அப்பன் சங்கரன் பிள்ளையால் குடும்பம் கரையேறப் போவதில்லை என்று எப்போதோ கண்டு
கொண்டவள் சிவகாமி. அனைவரின் மீதும்
கரிசனமும் ததும்பும் அன்பும் கொண்ட சிவகாமிகள் எழுபதுகளில் தெருவிற்கு ஓரிருவராவது
இருந்தனர். இவர்கள் தலையெடுத்துத்தான்
குடும்பங்கள் உருப்பட்டன. தங்கைகள்
கலியாணம் செய்யவும், தம்பிகள் படித்து வேலைக்குப் போகவும் சிவகாமிகள்
முதிர்கன்னிகளாய் நீடித்ததால் மட்டுமே முடிந்தது.
இப்பொழுதும் எழுபதுகளின் சிவகாமி அக்காக்களை ரோட்டில் ‘சிவகாமிப்
பாட்டிகளாக’ பார்க்க நேரும் அவலமான நேரங்களில் மனது சோர்ந்து போகிறது. ஆனாலும் அவர்கள் புன்னகைத்த படியே
நகர்கிறார்கள். சிவகாமிகளுக்கு அழத்
தெரியாது போலும்!
‘கம்பா
நதி’ தமிழ்ப் புதின வரலாற்றில் முக்கியமானது.
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ போலவே.
வண்ணநிலவன் எழுத்து என்ற வானப் பரப்பில் எங்கோ உசரத்தில் ராஜாளிப் பறவையைப்
போல பறக்கிறார். அண்ணாந்து பார்த்து
கழுத்து வலிக்கிறது.
[கம்பா நதி,
வண்ணநிலவன், நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு, சென்னை, நவம்பர் 2012, உரூபா 90/-]
----
விளையாட்டின்
விதிகள்
இன்றைய [ஜூன் 24, 2015] தமிழ் தி ஹிந்துவில் மிகச் சிறப்பான
கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மனோன்மணியம் சுந்தரனார் சர்வகலா சாலை துணை வேந்தர் வே.வசந்தி தேவி அவர்களின் கட்டுரை இந்தியக் கல்வி முறை எப்படி நூதனமாகவும், நுண்ணியமாகவும் வர்க்க வேறுபாட்டை பேணிக் காத்து வருகிறது என்பதையும், எழுபதுகளுக்கு முன்பு வரை அரசுப் பள்ளிகள் சமூகத்தின் அனைவரும் வந்து சேரும் சங்கமமாக இருந்தது - எழுபதுகளின் இறுதியில்
இந்த நிலை மாறி பொருளாதார ரீதியில் கடை நிலையர் மற்றும் ஜாதிய அமைப்பில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இனத்தோர் ஆகியோர் மட்டுமே தங்கிப் பயிலும் இடமாக மாறிப் போனதற்கு பின்னால் உள்ள macro conspiracy பற்றி திராவகம் ததும்பும் மொழியில் சொல்கிறது.
ஆங்கிலக் கல்வி
முறை பற்றி சில முக்யமான யோசனைகளை தெரிவித்துள்ளார் வசந்தி தேவி அவர்கள். ஆங்கிலக் கல்வி 'எலிட்' பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப் படுவதற்கும் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப் படுவதற்கும் உள்ள
வித்தியாசத்தை தெளிவு படுத்துகிறார். ஆங்கிலம் second language-ஆக கற்றுத் தரப்படும் எந்த நாடுகளிலும் அதற்கென
நியமிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், அந்த மொழியை first language-ஆக கற்றுத் தரும் ஆசிரியர்களின் தரத்தை விட, ஒப்பீட்டளவில், குறைந்துதான் இருக்கும் என்று தெளிவு படுத்தும் வசந்தி தேவி அவர்கள், இத்தகைய செயற்பாடுகளுக்கு தரப்படும் நியாயப்படுத்த முடியாத முக்கியத்துவமானது ஆதிக்க சாதியினர் மற்றும் ஆளும்
வர்க்கத்தினர் ஆகியோர் சேர்ந்து செய்யும் சதி என்றும்
சொல்கிறார்.
"விளையாட்டின் விதிகளை
தீர்மானிப்பவன் நீயாக இருந்தால் எந்த விளையாட்டிலும் ஜெயித்து விடலாம், ஜோயி!" என்ற
கார்ட்டூன் வசனத்தை மேற்கோள் காட்டும் வசந்தி தேவி, இந்தியக் கல்வி முறை என்ற விளையாட்டின் விதிமுறைகள் "ஆதிக்க சாதி & ஆளும் வர்க்கம்" ஆகியோரால் தீர்மானிக்கப் படுவதால்
ஜெயிப்பவர்கள் அவர்களின் வாரிசுகள் மட்டும்தான் என்கிறார்.
பின், வேறெதற்கு அரசுப் பள்ளிகள்? காட்டும் இடத்தில் கையெழுத்து இடத் தெரிந்த கூலிகள் மற்றும் நவீன அடிமைகள் ஒரு நாட்டின் மேல்தட்டு மக்கள் சுகமாக வாழ இன்றியமையாதவர்கள். அந்தக் கூலிகளின் உற்பத்தியை உறுதி
செய்யும் கூடங்களாக அரசுப் பள்ளிகள் இருப்பதில் இந்திய
ஜனநாயகத்திற்கு தடையெதுவும் இருக்க முடியுமா என்ன? அல்லது அமைப்பதிகாரம் இந்த நிலையை மாற்றிட முன்னெடுப்பேதும் செய்திடுமா என்ன?
----
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் அடுத்ததாக
எதைப் படிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்டமைப்பின் நேர்த்திக்காக எனது கவனத்தைக் கவர்ந்தது
"நெஞ்சின் ஒளிரும் சுடர் - சுந்தர
ராமசாமி பற்றிய நினைவுகள்".
நூலைப் படிக்கத் துவங்கி ஒரே மூச்சில்
முடித்த போது மணி இரண்டரை. துவங்கும் போது நடுநிசியாக இருந்திருக்கலாம். மிகவும் எளிமையான மொழி. இதனூடே நூலாசிரியர் தான்
யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவரை மிகவும் அந்தரங்கமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக
அறிந்ததின் சரளம் இழையோடுகிறது. திருமதி கமலா
ராமசாமி அவர்கள் தனது கணவரின் இறப்பிற்கு பிறகு
எழுதிய சுயசரித்திரம் இது. தான் பிறந்து
வளர்ந்த கிராம, குடும்பப் பின்னணி பற்றியும் திருமணமாகி நாகர்கோயில் வந்த
பிறகு, கணவர் ராமசாமி வீட்டில்
படிப்பைத் தொடர்ந்தது, மாமனார் மாமியார் குணச்சித்திரங்கள்,
கணவரின்
சகோதரிகள், திருமணமாகியும் கணவரின் உந்துதலால் பள்ளி இறுதிப் படிப்பு வரை தொடர்ந்தது, மாமனாரின்
ஜவுளிக்கடை வியாபாரம், அதில் கணவரின் உற்சாகமின்மை, கணவரின் எழுத்துத்
திறமை, அதிலே குடும்பத்தாருக்கு
இருந்த நம்பிக்கையின்மை, கணவரின் நண்பர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகள், தங்கள் வீட்டுக்கு
நிற்காமல் பெய்யும் மழை போல வந்து கொண்டேயிருந்த
கணவரின் இலக்கிய சகாக்கள் என்று அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக மிகச்
சரளமாக எழுதியுள்ளார். படித்து
முடித்ததும் இவரின் உரைநடைதான் என்னை
மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. இதுதான் இவரின்
முதல் எழுத்து. கணவரின் அந்திமக்
காலத்தில் அவரின் கட்டுரைகளை மெய்ப்புப் பார்த்துள்ளார்
என்பதே இவருக்கும் எழுத்துக்கும் இருந்த சம்பந்தம். ஆனாலும் கூட,
வந்து
சேர்ந்திருக்கும் கோர்வையும் பிரவாளமும் ஐம்பது ஆண்டுகள் சு.ரா.வை
அருகிலுருந்து அவதானித்து வந்ததால் வாய்த்த வரம்.
கணவரின் நண்பர்களிலேயே அதிகம் இவர்
சிலாகிப்பது கிருஷ்ணன் நம்பியைத்தான். அதிகம் ஆடிப் போனது, தருமு சிவராமு என்னும் பிரமிள் தொடர்பைப் பற்றித்தான். ஜெயமோகன், ராஜமார்த்தாண்டன், ஜி.நாகராஜ் உள்ளிட்ட பலரைப் பற்றி கமலா அவர்களின் நினைவுகள் எந்தவித
காழ்ப்பும் இன்றி வெளிப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் ஒரு பெண்மணியின் பார்வை என்பதால்,
அடிக்கடி சமையல்கட்டும் பதார்த்தங்களும்
தலைகாட்டுகின்றன. சு.ரா.வுக்கு தோசை ரொம்பவும் பிடிக்கும் என்பதிலிருந்து "தோசை எனக்கு எப்ப
பிடிக்காமல் போறதோ
அப்போ நான் செத்துட்டதா அர்த்தம்" என்று அவர் சொன்னதை அமெரிக்க மருத்துவமனையில்
போராடிக் கொண்டிருந்தபோது ஞாபகம் வந்ததாக கமலா அம்மா சொல்வது ஒரு அன்பான மனைவியின் உருக்கம்.
சு.ரா.வின் அன்பர்களுக்கும், சரிதம் - சுயசரிதம் ஆகியவைகளில் விருப்பம்
கொண்டோருக்கும் படிக்கத் தகுந்த நூலாகவே இதைக் கருத முடியும். நேர்த்தியாக புத்தகம் கட்டமைக்கப் பட்டுள்ளது கூடுதல் விசேஷம். புத்தகத்தின் இறுதியில் சு.ரா.வின் குடும்ப
வரைபடமும், கமலா அம்மையாரின்
குடும்ப வரைபடமும் சேர்க்கப்பட்டிருப்பதும், சு.ரா.தொடர்பான
சில அரிய குடும்பப் புகைப்படங்களைச் சேர்த்திருப்பதும் சிறப்பானவை.
[நெஞ்சில் ஒளிரும் சுடர் - சுந்தர
ராமசாமி பற்றிய நினைவுகள், கமலா
ராமசாமி, காலச்சுவடு அறக்கட்டளை
வெளியீடு, நன்கொடை உரூபா 100/-.]
----
0 comments:
Post a Comment