பண்பாட்டுக்
களத்திலும் சமூகத் தளத்திலும் தமிழ் வெகுஜன ஊடகத்தின் பங்களிப்பு பற்றி இங்கு போதுமான அளவு
அலசப்பட வில்லை. ஒருவன் காவல் துறைக்கு அல்லது கட்டப் பஞ்சாயத்திற்கு
பயப்படுகிறானோ இல்லையோ, அச்சு மற்றும்
காட்சி ஊடகத்திற்கு பயப்படுகிறான். இந்த ஊடகங்களின் நம்பகத்தன்மை பற்றி
யாரும் இங்கு எந்தக் கேள்வியும் கேட்பதில்லை அல்லது கேள்வி கேட்க பயப்படுகிறார்கள்
என்ற உண்மை, ஊடகம்
ஒரு hijacker-ன்
வேலையைத்தான் செய்து கொண்டுள்ளதா என்ற கேள்வியைக் கொண்டு வருகிறது. உள்ளூர்
ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை இந்த ஹைஜாக் இருக்கிறது. ஊடகங்கள்
நினைத்தால் ஒருவரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முடியும். ஊடகங்களுக்கு
எந்தவிதமான பொறுப்புணர்வும்
இருக்கத் தேவையில்லை. மொழியை எந்தவிதமாகவும், அறவுணர்வு ஏதுமின்றி, ஊடகத்தினால் பயன்படுத்த முடியும். அதனால்
விளையும் நாசங்களுக்கு
அவை எந்தவிதமான பொறுப்பையும் ஒத்துக்கொள்ள மாட்டா.
அரசின்
உதவியை/கிருபையைப் பெற ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் கிழிக்கும். ஊடக
வெளிச்சம் யார் மேல் படுகிறதோ அவன் வீட்டில் அமீனா நுழைந்த மாதிரிதான். சில
ஊடகவியலாளர்கள் குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போய் எங்கோ வைத்துக் கொண்டு
பணயப் பணம் கேட்கும் கும்பல்காரர்களைப் போலவே செயல்படுகிறார்கள். ஊடகத்தின்
அறவுணர்வு கேலிப் பொருளாகி நிறைய காலம் ஆகி விட்டது. எழுபதுகளின் மத்தியில் திருமதி.காந்தி
அவர்களால் பிகடனம் செய்யப்பட்ட மிசா சட்டத்திற்கு எத்தனை தமிழ் பத்திரிகைகள்
தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன என்று தெரிந்து கொள்வது இந்த
பத்த்ரிகைகளின் தர்மத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
"மாமனாரின் இன்ப
வெறி", "செக்ஸ்
சைக்கோ சின்னம்மாவை சின்னாபின்னம் செய்தான்", "கணவன் கொலை: காதலனுடன் காமுகி கைது"
- எந்த வித சமூகப்
பொறுப்பும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் தலைப்பிட்டுக் கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. கூடாது. நாற்பது வருடங்களுக்கு
முன்பு தினத்தந்தியின் தமிழ் மிகவும் பாமரத்தனமாக இருந்தது என்றால், முதல் தலைமுறை எழுதப் படிக்கத்
தெரிந்தவர்களை அகன்ற உலகத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதான பணியில்
அப்படித்தான் மொழியை கையாண்டிருக்க முடியும். ஆனால் இன்றைய நிலை வேறு. பரபரப்பு
ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் தினசரிகளும், புலனாய்வு இதழ்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு
செய்திகளை முந்தித் தருகிறோம் என்ற உத்திரவாதத்தோடு, மஞ்சள் மொழியோடு வெளியிடும் செய்திகளின்
பின்னால் எத்தனை மனித மனங்கள் முற்றாக ஒடித்துப் போடப் படுகிறதோ. ஆவண
ஆதாரங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஜனரஞ்சக பிரியத்தையே முதலாகக் கொண்டு செய்திகளுக்கு தேவையற்ற
பரபரப்பை ஏற்றி
'சூடாக' பரிமாறும் இந்தச் செய்தி நிறுவனங்கள்
எவரையும் 'குற்றவாளியாக'
நிறுத்தும் வல்லமை
கொண்டவை. காட்சி
ஊடகங்கள் இதற்கும் மேலாக சமூகத்தையே ஒரு பால்வினை நோய் போல பீடித்துக்
கொண்டுள்ளன. (sexually transmitted disease). 'டாக்டரிடம் கேளுங்கள்' என்ற பாணியில் இரவு பத்து மணிக்கு
மேல் வரும் நிகழ்ச்சிகள் வேறு எதையோ ஒளிபரப்ப ஆசைப்பட்டு அது
முடியாமல் போக
இதையாவது ஒளிபரப்பலாமே என்று செய்யப்படுபவைதான்.
தமிழகத்தில் கடந்த
இருபது வருடங்களாக "செய்தி" என்று ஒன்றுமே காட்சி ஊடகத்தில் இல்லை. சன் டிவிக்கும் ஜெயா டிவிக்கும் இடையே
உண்மை ஊசலாடியபடியே
இருக்கிறது. திமுக
உண்மை, அதிமுக உண்மை,
பாமக உண்மை, பாஜக உண்மை, காங்கிரஸ் உண்மை, மதிமுக உண்மை, SRM காலேஜ் ஓனர் உண்மை என்று ஊடக உண்மைகள்
பலவிதம். இவைகளில்
இருந்து தனக்கு வேண்டிய உண்மையத் தெரிந்து எடுக்க வேண்டிய அரும் பணியில் தமிழன்
தன்னுடைய சாயந்திரங்களைத் தொலைக்கிறான். அச்சு ஊடகங்களில் வரும் தொடர்கதைகளை
செல்லாக் காசாக்கி விட்ட தொலைக்காட்சி பகல் - சாயந்திர - இரவு நேரத் தொடர்கள்
மக்களை மனநோயாளிகளாக்கி
இரண்டு தசாப்தங்கள் முடிந்து விட்டன. பல நடுத்தர இல்லத்தரசிகள் இந்தத் தொடர்களில் வரும்
வசனங்களையே தங்களுடைய கணவன்மர்களிடமும் குழந்தைகளிடமும்
பேசுவது மிகுந்த அச்சவுணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. இரவு எட்டு
மணிக்கு மேல் ஒவ்வொரு சேனலிலும் கட்சி சார் மற்றும் கட்சி சாரா அறிவுஜீவிகள்
பவுடர் அப்பிய முகங்களுடன் தங்களது தரப்பின் உண்மை முகம் தெரியாதிருக்க
மணிக்கணக்காக தொண்டை வறண்டு கத்தி விட்டு, மக்கள் தூங்கியிருப்பார்கள் என்ற
அனுமானத்தின் பேரில் பத்தரை மணி அளவில் கருத்துலகத்திற்கு விடுதலை
வழங்கிவிட்டு, மீதியை
அடுத்த நாள் பார்த்துக்
கொள்ளலாம் என்ற அளவில் பின்வாங்குகிறார்கள்.
காலச்சுவடு கண்ணன்
அவர்கள் 1998ம்
ஆண்டிலிருந்து அவ்வப்போது ஊடகங்கள் பற்றி பல இதழ்களிலும் கருத்தரங்குகளிலும் பேசி
எழுதிவந்த பத்திகளின் தொகுப்பு ஒன்று "பிறக்கும் ஒரு புது அழகு -
ஊடக அரசியல் விமர்சனக் கட்டுரைகள்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. ஊடக
அரசியலின் பல்வேறு தன்மைகளைப் பற்றி போதுமான மேற்கோள்களைக் காட்டி, ஊடகங்கள், வணிகப் பேராசையால், தாங்கள் செய்யத் தவறும் fourth estate பங்கு பற்றி கடுமையான தொனியில் தனது கருத்துக்களைப்
பதிந்துள்ளார். இந்தத் தொகுப்பை ஒரே அமர்வில் படிக்க முடிந்தது. கடந்த முப்பது வருடங்களில் தமிழ்
மற்றும் தேசிய அச்சு / காட்சி ஊடகங்கள் செய்த - செய்யத் தவறியவைகளை
சுட்டி கண்ணன் சொல்வது, ஊடகவியல் கல்லூரிகளில்
ஆசான்களும் மாணவர்களும் திரும்பத் திரும்ப விவாதிக்கத் தக்கது. நம்மைப் போன்ற சாதாரணர்களும் கூட,
நமது
கருத்தாக்கங்களில் ஊடகத்தின் பங்கு என்னவாக இருந்துள்ளது என்பதை யோசித்து உணர
கண்ணனின் கட்டுரைகள்
வேண்டுகின்றன. இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன், சில நிமிடங்களில் அந்த படபடப்பு
அடங்குமுன்னரே செய்த பதிவு இது. கண்ணன் பயன்படுத்திய பல சொற்றொடர்கள் அப்படியே
இந்தப் பதிவில் பயன்படுத்தப் பட்டிருப்பது, அவர் சொல்லும் கருத்துக்கள் எவ்வளவு
ஏற்புடையதாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்ததின் சாட்சியாகவே
உள்ளது. நாவரசு
- ஜான் டேவிட் சம்பந்தப் பட்ட கட்டுரை, நான் சமீப காலங்களில் படித்த
பத்திகளிலேயே மிகவும் முக்கியமானதும், நான் யோசித்திராத கோணமும் ஆகும்.
இந்த நாட்டிற்கு
அரசியல் விழிப்புணர்வு தேவையோ இல்லையோ, மீடியா விடுதலை உடனடித் தேவை. ஒருவேளை, இந்த இரண்டும் ஒன்றுதானோ என்னவோ!
[பிறக்கும் ஒரு புது அழகு - ஊடக அரசியல் விமர்சனக் கட்டுரைகள், கண்ணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், உருபா 100/-]
0 comments:
Post a Comment