எருமைகள் காணோம்; அமைச்சர் பத்திரம்

| Tuesday, February 4, 2014
இன்று (03-02-2014) தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் தலையங்கப் பக்கத்தில் ஞானி அவர்கள் 'இன்னும் தேவைப்படும் அண்ணா' என்ற தலைப்பில் திராவிடக் கட்சிகளின் இன்றைய அரசியல் அண்ணா காண்பித்தது அல்ல என்பதாக எழுதியிருக்கிறார். பெரியாரிடம் ஜனநாயகம் இருக்கவில்லை என்று ஞானி சொல்வது உண்மைதான். அவருக்கு ஜனநாயகம் தேவைப்படவில்லை. அப்பொழுது தமிழ் சமூகம் இருந்த நிலையில், ஜனநாயகம் தேவைப்படாதது மட்டுமன்றி, அது வேறு பல இடைஞ்சல்களை உருவாக்கக்கூடியதாகவும் இருந்தது. படிப்பறிவே இல்லாமல், வாழ்வின் எளிமையான தேவைக்கும் கூட, ஊர் செல்வந்தரையோ, காளி-மாரியையோ நம்பிய அந்த இருட்டு மனிதர்களை தைரியப் படுத்தி, வெளிச்சத்திற்கு கொண்டு வர, சொல்லுகின்ற வேலையைச் செய்கின்ற மனிதர்களே அவருக்குத் தேவைப் பட்டார்கள். தேவையான தீப்பந்தம் அவரிடமே இருந்தது. அதிலிருந்து தன்னுடையதைப் பற்ற வைத்துக் கொண்டு, ஊர் ஊராக அலைய முடிகிற "ஊர்சுற்றி"களே அவருக்குத் தேவை. இருட்டைத் தீயடித்து துரத்த, ஜனநாயகம் பேசும் பொறுமையோ தேவையோ அவருக்கு இல்லை. எவருடைய ஓட்டையும் நம்பியிருக்கும் நிலை, அவ்வளவு பெரிய பகுத்தறிவுவாதிக்கு மிகவும் துரதிர்ஷ்டமான நிலையையே அளித்திருக்கும். தீயாகவே வாழ்ந்து அருட் பெரும் ஜோதியாக மறைந்த பெரு மகனார் பெரியார் - மார்க்ஸ், கிறித்து, காந்தி போல.

அண்ணாவின் கதை வேறு. அவருக்கு ஆசைகள் இருந்தன. அவர் நோய்மையால் தாக்கப் படாமலிருந்தால் வேறு ஒரு அண்ணாவைப் பார்த்திருக்கலாம் என்று ஞானி சொல்கிறார். அந்த அண்ணா எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்ற கேள்வி யூகங்களால் நிறைந்தது. என்ன இருந்தாலும், அவருக்குப் பின் வந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் அளவுக்கு பிரதேச அரசியலை கீழ் இறக்கியிருந்திருக்க மாட்டார் என்று நம்ப, வாழ்ந்த போது அவர் நடத்திய அரசியல் இடம் தருகிறது.

பெரியார் தரம் உருவாக்கினார். அண்ணா அதைக் குறைத்தார். பின்வந்தவர்கள் ஒன்றுமே தெரியாமல் உருக்குலைத்தார்கள்.

நல்லவேளை, பெரியார்தான் செத்துப் போய் விட்டாரே! அவர் இருந்திருந்தால், கனிமொழி, ராஜா, ஸ்டாலின், அழகிரி, மாறன்கள் - ஆகியோரைப் பற்றி என்ன சொல்லுவார்? யூகங்கள் நாகரீகமாக இல்லை.

வாழ்க திராவிடம்!

----


நேற்று (02-02-2014) உளுந்தூர்பேட்டையில் தேதிமுக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தும் அவரது மனைவியும் பேசுவதைக் கேட்ட போது, சந்தோஷமும் வருத்தமும் மாறி மாறி வந்து போயின. கடந்த ஐம்பது வருட தமிழக அரசியல் நாவன்மையால் ஆனது. திமுகவிடம் காங்கிரஸ் தோற்றோடியதற்கு முக்கியமான காரணமே, தேசியக் கட்சியிடம் "கவர்ச்சிப் பேச்சாளர்கள்" இல்லாமல் போனதுதான். அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் நூறு ஜோடனைப் பேச்சாளர்கள் திமுகவில் அணிவகுத்து நின்ற போது, காமராஜர் போன்ற தட்டைப் பேச்சாளர்கள் காணாமல் போயினர்.

விஜயகாந்த் திராவிடப் பேச்சுப் பாரம்பரியத்தையே பரிகசிக்கிறார். உளறுவதை விட மோசம். கருத்தொற்றுமை இல்லை. சபை நாகரீகம் இல்லை. நல்ல தமிழுக்கும் அவருக்கும் இடையே உள்ள தொலைவு, ராகுல் காந்திக்கும் பிரதமர் பதவிக்கும் உள்ளதை விட அதிகமானது.
ஆனாலும் மேடையில் ஒரு மணி நேரம் மைக் முன் நிற்க முடியும் தைரியம் அசாத்தியமானது. எனக்கென்னமோ, தமிழ் மேடைப் பேச்சு ஒரு முழு வட்டம் வந்துவிட்டதைப் போலத்தான் தோன்றுகிறது.

பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, சம்பத், கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோரின் அரசியல் மேடைப் பாரம்பரியத்தின் பின்நவீனத்துவ தொடர்ச்சியாகத்தான் கேப்டன் தெரிகிறார்.

பண்ருட்டியார்தான் இது சரியா என சொல்ல வேண்டும்!


----

                                          எருமைகள் காணோம்; அமைச்சர் பத்திரம்

உத்திரப் பிரதேசத்தில் அசாம் கான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருக்கிறார். சகல கலா வல்லவர். உ.பி. முதல்வருக்கும் அவரது தந்தைக்கும் மிகவும் நெருக்கமானவர். சர்ச்சைகளின் தொடர் நாயகன். இவரது பேச்சைக் கேட்கும், செயல்களைப் பார்க்கும் தென்னாட்டு அரசியல்வாதிகள், இவருக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பற்றி பொறாமையுருவர். 

கடந்த சனிக்கிழமை இவரது பண்ணையில் இருந்த
ு ஏழு எருமை மாடுகள் காணாமல் போய்விட்டன. வெகுண்டெழுந்த அமைச்சர், உடனடியாக தனது அ(எ)ருமைகளைக் கண்டுபிடிக்க மாநிலத்தின் மொத்த காவல் துறைக்கும் ஆணையிட்டார். காவல்துறையின் மொத்த எந்திரமே முனைந்து, இரண்டு நாட்களுக்குள், முதல் புலனாய்வில் மூன்று எருமைகளை ஞாயிற்றுக் கிழமையும், இரண்டாவது புலனாய்வில் நான்கு எருமைகளை அடுத்த நாளான திங்கள் கிழமையே கண்டுபிடித்து, ஸ்காட்லான்ட் யார்ட் காவல் துறையையே பொறாமைப் பட வைத்து விட்டனர்.

வீரப்பனைக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்ற காவல் துறையினருக்கு பரிசும் பதவி உயர்வும் கொடுத்து மகிழ்வித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல, அசாம்கானும், முதல்வரும் ஏதாவது செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் உத்திரப் பிரதேச காவல் துறையினரிடம் கொழுந்து விடுவதை உணர்ந்த, பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள், "எருமைகள் காணாமல் போனது ஒரு சிறிய விஷயம். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்துகின்றன" என்று சொல்லி அணைத்துவிட்டார். 



தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்று இப்போதாவது புரிகிறதா?


----

0 comments:

Post a Comment