கவிக்கோ
அப்துல் ரகுமான் ஒருமுறை சொன்னது நினைவில் தெரிகிறது. "உலகம்
முரண்பாடுகளால் ஆனது." எல்லாவற்றையும் போலவே, சினிமாவிற்கும் இது
பொருந்தும். நாடகத்தை விட்டு முற்றிலும் நகர்ந்த வடிவம் என்று சொல்ல
முடிந்தாலும், சினிமா நாடகத்திற்குள்ளேயே இன்னும் தங்கியிருக்கிறது.
ரசிகனால் வளர்த்தெடுக்கப் பட்டசினிமா, ரசிகனை வளர்க்கவே இல்லை.
தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்: " ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை கூறியது போல, சீரிய சினிமா - சீரழிந்த சினிமா என்ற இரு பிரிவுகள்தான் உண்டு. எல்லா திரைப்படங்களும் இந்த இரு புள்ளிகளுக்கிடையில் எங்கோதான். எந்தப் புள்ளிக்கு அருகே எந்தப் படம் இருக்கிறது என்றறிய சினிமா ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்".
எம்.ஏ. இதழியலும் மக்கள் தொடர்பியலும் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் படிக்கையில், Keval J Kumar அவர்கள் எழுதிய Mass Communication in India என்ற நூலை கற்றுத் தேறாவிட்டால், முதுகலை பட்டம் முடித்தல் இயலாது என்று சொல்வார்கள். இந்திய இதழியலின் தோற்றுவாயிலிருந்து நடப்புச் சமயம் வரை இதழியல் மற்றும் வெகு ஜனத் தொடர்பியல்களில் நடந்திருக்கும் மாற்றங்கள், வளர்ச்சி என்பதைப் பற்றி சுவையாக, பாடப் புத்தகங்கள் போல அல்லாமல், சொல்லிச் செல்லும் Keval J Kumar அவர்கள் தான் நூல் ஆக்கிய துறையில் தனக்கிருந்த வரலாற்றறிவு, வளர்ச்சியைப் பற்றிய பிரக்ஞை, மற்றும் எதிர்நோக்கு என்பவையை வாசகர் பிரமிக்கும் வண்ணம், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெகு ஜன ஊடகத்தின் ஒரு தன்மையைப் பற்றி, விளக்குவார்.

அப்படிப்பட்ட வாசக அனுபவத்தை அண்மையில் திரு.தியோடர்
பாஸ்கரன் அவர்கள் 2004-ல் எழுதி, ஆறு ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பாக
வெளிவந்திருக்கும் "எம் தமிழர் செய்த படம்" எனக்குத் தந்தது. பல உலக
அறிவியல் மற்றும் தொழில் நுணுக்க சாதனைகள் எல்லாம் ஐரோப்பா/அமெரிக்காவில்
நடந்து பல காலம் ஆகியும் இந்தியாவிற்கு வராமல் இருந்திருக்க, சினிமா
மட்டும் 'கடலைத் தேடி வந்த நதியாக' இரண்டே வருடங்களில் சென்னைக்கு
வந்திருக்கிறது. இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள் சினிமா எனும்
ஊடகத்தின் மௌனப் பருவம், சினிமாவின் தென்னிந்திய முன்னோடிகள், ஆவணப்
படங்கள் மற்றும் பேசும் படத்தின் தோற்றம் ஆகியவையைப் பற்றி விரிவாகச்
சொல்லுகின்றன. முக்கியமாக, முதல் அத்தியாயத்தில் பாஸ்கரன் மௌனப் படத்தின்
பிறப்பு, அதன் இந்திய வருகை, சென்னை வருகை, இதில் ஆர்வம் வளர்த்துக் கொண்ட
தமிழர்கள், முதல் மௌனப் படங்களில் பல புராண கதைகளையே களமாக கொண்டதின்
காரணம், கொட்டகைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி போன்றவையை மிகவும் நுண்ணிய
அளவில் தகவல் எதுவும் விடுபடுதல் ஆகாது என்கிற கவனத்தில் விவாதித்திருப்பது
சிலாக்கியமானது. இந்த அத்தியாயத்தின் பின் இருக்கும் உழைப்பு பிரமிக்க
வைக்கிறது.
அடுத்த சில அத்தியாயங்கள் நாடகத்தின் பால் சினிமாவிற்கு இன்றளவும் நீண்டு வரும் தொடர்பு, பிரித்தானிய அரசின் தணிக்கை மற்றும் வளர்ந்து வரும் இந்தப் புதிய ஊடகத்தின் மேல் கவிந்த பயம், சினிமாவைப் பற்றிய எழுத்து எப்படி சினிமாவைப் பாதிக்காமல் சினிமாவால் பாதிக்கப்பட்டவாறே இருந்தது என்பதான விடயங்கள் பற்றி ஆழமான பார்வையை முன்வைக்கின்றன. சினிமாவின் சாத்தியங்களை தமிழ் மண்ணைப் பொறுத்தவரை தமிழர்கள் உணர்வதற்கு வெகுகாலம் முன்னமேயே, சில பிரித்தானியர்கள் அறிந்திருந்தனர் என்பது ஆச்சர்யமானது.

தியோடர் பாஸ்கரன்
இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயங்களில் அண்மை சினிமாவின் கலை அம்சங்களைப்
பற்றி விரிவாக விவாதிக்கிறார். தமிழ் சினிமா ஏன் இன்னும் நாடகத்தின்
செல்லுலாயிட் வடிவமாகவே இருக்கிறது; ஏன் இன்னும் இந்த கட்புல ஊடகத்தின்
இயற்கையான சினிமா மொழி கை வரவில்லை என்ற விவாதத்தை நடத்திச் செல்லும்
பாஸ்கரன், தமிழில் சினிமா இன்னும் அதன் மொழி தெரியாதவர்களிடமே இருக்கிறது
என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். பாலு மகேந்திராவின் வீடு போன்ற சில
படைப்பாக்கங்கள், மகேந்திரனின் உதிரிப் பூக்கள், ருத்ரையாவின் அவள்
அப்படித்தான், அம்ஷன் குமாரின் சமீபத்திய படம், சேது மாதவனின் விருது பெற்ற
படம், மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை சினிமா மொழியை
சிறப்பாக பயன்படுத்தியிருப்பதாக கருதும் பாஸ்கரன், இசை சினிமாவை, அதன்
மொழியைச் சிதைப்பதாகவே கருதுகிறார். அதீதமான பாத்திரப் பேச்சும்,
ஆக்கிரமிக்கும் இசைக் கோர்வைகளும் காட்சி ஊடகத்தின் கழுத்தை நெரிப்பதாக
உணரும் இவர், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் திராவிட இயக்கங்கள்
(ஈ.வே.ராமசாமி நாயக்கர் தவிர்த்து) சினிமாவில் தலையிட்டு, அதை தமது பிரசங்க
பீரங்கிகளாக பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் கருவியாக
உலகிலேயே முதன்முறையாக மாற்றிக்கொண்டனர் என்றும் பதிவு செய்கிறார்.
புத்தகத்தை முடிக்கும் வரையிலும் இது தனித்தனி கட்டுரைகளாக பல வருடங்களின் நீட்சியில் எழுதப் பட்டவை என்று ஐயப்பட முடியவே இல்லை. ஆனால், ஒவ்வொரு கட்டுரையும் முன் பின் கட்டுரைகளோடு கருத்துத் தொடர்ச்சி கொண்டதாகவே உள்ளது. கட்டுரைகளை தனித்தனியாகவோ, சேர்ந்தோ படிப்பதால் படைப்பு ஒருமை கெடாதது இப்புத்தகத்தின் ஆகப் பெரிய சிறப்பு.
தியோடர் பாஸ்கரனின் துறை வல்லமை தமிழில் நேரிணை இல்லாதது என்று சொல்லிவிட முடியும். நம் கவனத்தை முற்றாக ஈர்ப்பது இவரின் தமிழ் நடையும், துறைச் சொற்களுக்கு தமிழ் இணைச் சொற்களை உருவாக்கியிருப்பதும்தான். காட்டாக, film processing என்ற சொற்றொடருக்கு இணையாக 'உருத்துலக்கம்" எனும் பதத்தை ஆக்கித் தருகிறார்.
சினிமாவோடு - ரசிகனாகவோ, கலைஞனாகவோ, தொழில் நுணுக்க வல்லுனராகவோ, முதலீட்டாளனாகவோ - எந்த நிலையில் உறவு கொண்டிருந்தாலும் இந்தப் புத்தகம் உங்களுக்கென்று ஒரு சேதியை வைத்திருப்பது இதன் தனிச்சிறப்பு.
உயிர்மை பதிப்பகம், சென்னை, உரூபா 100/-.
0 comments:
Post a Comment