மூன்றாம் பிறை

| Friday, February 14, 2014
மூன்றாம் பிறை
திரைப்படக் கலைஞர் பாலு மகேந்திரா நினைவாக இன்றைய தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் இன்று இரண்டு நினைவஞ்சலிகள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று, சமஸ் எழுதிய 'என்றும் அழியாத கோலம்'. இவரின் அண்மைக்கால எழுத்துக்களிலேயே மிகவும் சிறப்பாக அமைந்தது. பாலு மகேந்திராவின் கலைத் தேர்ச்சி சினிமா ரசிகர்களில் பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான். இதுவரை எழுத்தில் வெளிவந்திராத அவரின் ஆளுமையின் நுண்ணிய பகுதிகளை கவிதைத் தன்மையுடன் அவரின் வார்த்தைகளையே நினைவு கூர்ந்து எழுதப்பட்டது சிறப்பானதொன்று. Artistic excellence is the neurotic compensation of the perverted mind என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். பாலுவின் மனது, அவரின் அழகுணர்ச்சி, மெலிதான நகைச்சுவை, படைப்புலக உந்துதல்கள், படைப்பாளியின் சாபம், அவன் விட்டுச் செல்லும் பாரம்பரியம், அவனின் என்றுமே முடியாத கலை ஆசை என்று இந்தப் பெரும் கலை ஆளுமையின் பரிமாணங்களை ஊடுருவிப் பார்க்கும் இந்தக் கட்டுரை, கடுகில் கடலை நுழைத்த கதையாக சின்னஞ் சிறு இடத்தில் பெரும் கலைஞனின் மொத்தத்தை சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டூரை திரு சொர்ணவேல் அவர்கள் எழுதிய 'மஞ்சில் முகிழ்ந்த ஓவியம்'. இதில் மிகவும் சிலாக்கியமானது பிரதி மொழி. ஒளிப்பதிவுத் துறைக்கென்று ஆகியிருக்கும் கலைச் சொற்களைக் கொண்டு கவிதைத் தனமாக இக்கட்டூரையை ஆக்கியிருக்கிறார். காட்சிகளை சட்டகப்படுத்துவதில் பாலுவின் அழகுணர்ச்சி பெரும் பங்கு வகித்திருக்கிறது என்று கருதும் சொர்ணவேல், "ஆவணப் படங்களைவிட யதார்த்தத்தைச் சித்தரிக்கப் புனைவுப் படங்களே சாத்தியங்கள் நிறைந்தவை" என்று பாலு தன்னிடம் சொல்லியிருப்பதாக இங்கு தெரிவிக்கும் போது, நம்பியதையே செய்தவன் இந்தக் கலைஞன் என்ற பெருமிதம் மிகுகிறது.

பெரும் கலைஞனானவன், கலையைப் பொறுத்து எடுத்த தன்னுடைய நிலைப்பாட்டையே, தனி வாழ்விலும் நிறுவ முயன்று தோல்வியடைவான் என்ற பொதுவிதியை இன்னொருமுறை நிரூபணம் செய்து விலகியிருக்கிறான் பாலு என்ற கலைஞன்.
 
----
 
பெண்ணின் ஆணும், ஆணின் பெண்ணும்
 
 பெப்ரவரி இரண்டாம் திகதி பிருந்தா சீனிவாசன் அவர்கள்          தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் 'நாங்கள் எங்கே செல்வது?' என்ற தலைப்பில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு அடிக்கடி உள்ளாக்கப்படுவதைப் பற்றி மிகவும் காட்டமாக சொல்கிறார். நான் பெண்களின் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவன் என்பது மட்டுமன்றி, இந்த உலகின் மிக முக்கியமான சரி பாதி அவர்கள் என்பதில் எந்த குழப்பமும் இல்லாதவன். மீண்டும் மீண்டும் மிகவும் உரத்த குரலில் சொல்லப் படுவது என்னவென்றால், பெண்கள் அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆண்களால் உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதுதான். இதில் பெண்களின் பங்கு ஏதேனும் இருக்கிறதா என்று சிந்திக்க ஆரம்பித்தாலே, பல பெண்ணீ யக் குழுக்கள் நம்மை தாக்க ஆரம்பித்து விடுகின்றன. எனக்குப் புரியாதது, பெண்களின் உடை ஆண்களைப் பாதிக்கக் கூடாது என்ற வாதம்தான். இந்த உலகம் சராசரி ஆண்களால் ஆனது. சராசரி ஆண் பெண்களின் ஆடை அணியும் முறையால் பாதிக்கப் படுகிறான் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த அறிவு ஜீவித் தனமான வாதமும் இது குறித்த தீர்வுக்கு நம்மை .இட்டுச் செல்லாது. மிகவும் நாகரீகமான, உண்மையான கல்வி அறிவு நிறைந்த, பண்பட்ட, மகாத்மாவான ஆண்கள் நிறைந்த உலகில் இந்த பெண்கள் நிச்சயம் வாழவில்லை. ஒரு பெண் கவர்ச்சியாகத் தெரிந்தால், அருகே யாரும் இல்லாவிட்டால் - தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கும் விருப்பம் உள்ள ஆண்களால் இந்த உலகம் பஞ்சமே இல்லாமல் நிறைந்திருக்கிறது. இந்த மாதிரி ஆண்களால், பாலியல் ரீதியாக தாக்கப்படாமல் இருக்க ஒரு பெண் விரும்பினால், இரண்டு வழிகள் உள்ளன. கவர்ச்சியாக உடை அணிவதைத் தவிர்க்கலாம். இல்லையேல், கவர்ச்சியாக உடை அணியும் போது, நிறைய பேருடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். இரண்டும் முடியாவிட்டால், பின்னால் குறைந்த பட்சம் வருத்தப்படாதவாறு இருக்கலாம்.

அடுத்து, பிருந்தா 'பெண்கள் வெறும் உடல்களா?' என்று கேட்கிறார். பெண்களும் வெறும் உடல்கள் இல்லை; ஆண்களும் வெறும் உடல்கள் இல்லை. இருவரும் ஒருவரையொருவர் வெறும் உடல்களாக பார்க்கத் தேவையில்லை. ஆண்களை வெறும் உடல்களாக மட்டும் பார்க்கும் பெண்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் ரஷ்யாவில் மட்டுமல்ல, இங்கும் உண்டு. வரலாறை மட்டும் பார்க்கத் தேவையில்லை; சுற்றுமுற்றும் பார்த்தாலே போதும். அதைப் போன்ற பெண்கள் தட்டுப்படுவர். 
 

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், தவறு செய்த ஆணுக்கு தண்டனை கடுமையாக இருக்கலாம். கூடவே, பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடை எப்படி வேண்டுமானாலும் அணிய முடிகிற பெண்கள்,
அதைக் குறித்த பார்வைகள் 'மிகவும் நல்ல ஆணாக' இல்லாதவனுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தின் நிதர்சனம் தெரியாத பெண்களா இவர்கள்? ஒரு லட்சிய சமூகத்தைப் பற்றிய விமர்சனத்தை இன்றைய சமூகத்தின் மீது வைக்கும் இவர்கள் 'லட்சியப் பெண்களா' அல்லது 'அலட்சியப் பெண்களா?'

பிருந்தா சீனிவாசனுக்கு உண்மை நிச்சயம் தெரியும்.
 
----

0 comments:

Post a Comment