skip to main |
skip to sidebar
தி
ஹிந்து தமிழ் பதிப்பு 31-01-2014 நாளிட்டதில், திருமதி வே.வசந்தி தேவி
அவர்களின் "பல்கலைக் கழகங்களைக் காப்போம்" என்ற கட்டுரை வந்திருக்கிறது.
எனக்குத் தெரிந்த வரையில், கல்வி முறை, வகுப்பறைகள் - பள்ளி ஆகியவற்றின்
செயல்பாடு, கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு போன்றவயைப் பற்றி தமிழில் பல
புத்தகங்கள் அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ளன என்றாலும், அவைகளில்
பெரும்பாலானவை "மிகு உணர்ச்சிக் குரல்களாகவே" உள்ளன. பல புது யுகக்
கல்வியாளர்கள், ஆசிரியரின் பங்களிப்பை முற்றிலுமாகவே நிராகரிக்கின்றனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டு, வெகு ஜன மக்களுக்கு கல்வி
புகட்ட இதை விட சிறந்த வழியாக வேறெதுவும் தோன்றாத நிலையில், தொடர்ந்து
வரும் இந்த அமைப்பின் ஆணிவேர்கள் ஆசிரியர்கள்தான். அவர்களை நம்பித்தான் ஆக
வேண்டும். எல்லா பள்ளி மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடத் திட்டம் என்பது
எவ்வளவு கேலிக் கூத்தாக மாறியுள்ளதோ, அதற்கு சற்றும் குறையாதது அனைத்து
பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே பாடத் திட்டம் என்ற தமிழக அரசின் முடிவு.
பள்ளி தொடங்கி பல்கலைக் கழகம் வரை, ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது படிப்பு,
திறமை, விருப்பப் பாடம் போன்றவையை மாணவருக்குக் கற்றுத் தரவும், அதிலேயே
தேர்வுகள் - ஆசிரியரும் மாணவரும் கலந்து பேசி ஒப்புக் கொண்ட மாதிரியில்,
கால இடைவெளியில் - நடத்தப் பெறவும் வேண்டும். "எல்லோருக்கும் ஒரே விதமான"
எனும் சமப்படுத்துதல் மனிதத் தர அடைவுகள் நபருக்கு நபர் இயல்பிலேயே
மாறுபட்டவை என்ற உண்மையை நசுக்கிப் போட்டு விடுகிறது.
திருமதி
வசந்தி தேவி அவர்கள் பல்கலைக் கழகங்களுக்கான சுயாட்சி பற்றி பேசுகிறார்.
மிகவும் தேவையான விடயம் இது. பள்ளிகளின் சுயாட்சி, பாடங்களை
திட்டமிடுவதில் பள்ளி ஆசிரியருக்கு வேண்டிய சுய அதிகாரம் என்பதைப்
பற்றியெல்லாம் பேச வேண்டிய தருணம் நெருங்கி விட்டதாகவே நினைக்கிறேன்.
ஹாலந்தில் மிதி வண்டிகள், நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம். மிதி
வண்டியில் சொல்வோருக்கான பிரத்தியேக சாலைகள் ஆயிரக் கணக்கான கிலோ
மீட்டர்கள் அங்குண்டு. சொகுசுக் கார்கள், மோட்டார் பைக்குகள்,
பேருந்துகள், இதர வாகனங்களுக்கென்று பெரிய ரஸ்தாக்களும் அங்குண்டு. கல்வி
முறையும் அது போலத்தானே? எனக்கான கல்வியை நான் தேர்ந்தெடுக்க வேண்டாமா?
தைக்கப் பட்ட ஆடைக்குள், உடல் அளவுகள் வேறுபட்டிருப்பினும், புகுந்து கொள்ள
வேண்டும் என்ற கட்டாயத்தில் உடையைப் பற்றிய தேவையும் அழகுணர்வும்
முற்றிலும் சிதைவுறுகின்றன. ஒவ்வொரு பள்ளியும் தன்னாட்சி பெற்றதாக
இருப்பதிலே என்ன தவறு? பள்ளி அமைந்திருக்கும் சூழல், அங்கிருக்கும்
ஆசிரியரின் திறமை மற்றும் புலமை ஆகியன அடிப்படையில் ஏன் பாடங்கள் அமைதல்
கூடாது? வேண்டுமானால், கூட்டணி அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்
கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தமான common minimum programme என்பது மாதிரி
common minimum syllabus ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மீதித்
திட்டமிடலை முற்றாக ஆசிரியரிடமே கையளிப்பதில் என்ன தவறு?
ஒன்றே
ஒன்றை மட்டும் இதில் குறைபாடாகக் கூற முடியலாம். ஆசிரியர்களை நம்புவது
ஆபத்தில் முடியும். அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். இப்பொழுதே வேலை
எதுவும் செய்வதில்லை. பாடத் திட்டம் திட்டமிடல், தேவையான கற்றல் -
கற்பித்தல் முறை, அதற்கான தொழில் நுட்பம், கால அட்டவணைகள், பருவ முறைகளின்
கால நீட்சியை முடிவு செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் எல்லாம் ஆசிரியரிடமே
கொடுத்து விட நேரின், தான்தோன்றித் தனம் கொடி கட்டிப் பறக்கும்
என்பதிலெல்லாம் உண்மைகள் உண்டு. ஆனால், அமைப்பு முன் நகர இத்தகைய
பரிசோதனைகள் அவசியம். மேற்பார்வையிடலை இருப்பதை விட வலுவாக்கி,
ஆசிரியருக்கான பணியிடைப் பயிற்சிகள் மற்றும் புத்தாக்கப் பயிற்சிகள்
தீவிரமாக தொடர்ந்து நடைபெறச் செய்தால், ஆரோக்கியமான புது அமைப்பை
விரைவிலேயே ஏற்படுத்தி விட முடியும். இதில் அதிகாரிகளுக்கு இயல்பான
தயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. தங்களிடம் கையளிக்கப் பட்டிருக்கும்
எல்லையற்ற அதிகாரம் பகிரப் படுகிறது என்பதில் எந்த அதிகாரிக்கும் உவகை
ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், புதிய பணிகள், புதிய வகையான
மேற்பார்வையிடல்கள் அவர்களிடம் வந்து சேரும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
அமுக்கப்பட்ட பெண் குரல், திடீரென்று உரக்கப் பேசி கேட்கும் ஆணுக்கு
ஏற்படுவது போன்ற அதிர்ச்சிதானே ஒழிய, பெண் குரல் இனி கேட்கும், அதை மாற்ற
முடியாது என்ற நிதர்சனத்தில், அதிகாரிகள் தங்களுக்கான புதியதோர் பங்களிப்பை
இந்த மாற்றப் பட்ட அமைப்பில் காண முடியும்.
இதற்கெல்லாம் எத்தனை
ஆண்டுகள் பிடிக்குமோ, தெரியாது. ஆனால், இதை நோக்கிய பார்வைகள்,பதிவுகள்
தற்போது அவசியம். அப்படிப்பட்ட பார்வைகளில், திருமதி வசந்தி தேவி
அவர்களுடையது மிகவும் முன்னோடியானது.
0 comments:
Post a Comment