எம் தமிழர் செய்த படம்

| Monday, February 24, 2014
கவிக்கோ அப்துல் ரகுமான் ஒருமுறை சொன்னது நினைவில் தெரிகிறது. "உலகம் முரண்பாடுகளால் ஆனது." எல்லாவற்றையும் போலவே, சினிமாவிற்கும் இது பொருந்தும். நாடகத்தை விட்டு முற்றிலும் நகர்ந்த வடிவம் என்று சொல்ல முடிந்தாலும், சினிமா நாடகத்திற்குள்ளேயே இன்னும் தங்கியிருக்கிறது. ரசிகனால் வளர்த்தெடுக்கப் பட்டசினிமா, ரசிகனை வளர்க்கவே இல்லை.

தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்: " ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை கூறியது போல, சீரிய சினிமா - சீரழிந்த சினிமா என்ற இரு பிரிவுகள்தான் உண்டு. எல்லா திரைப்படங்களும் இந்த இரு புள்ளிகளுக்கிடையில் எங்கோதான். எந்தப் புள்ளிக்கு அருகே எந்தப் படம் இருக்கிறது என்றறிய சினிமா ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்".


எம்.ஏ. இதழியலும் மக்கள் தொடர்பியலும் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் படிக்கையில், Keval J Kumar அவர்கள் எழுதிய Mass Communication in India என்ற நூலை கற்றுத் தேறாவிட்டால், முதுகலை பட்டம் முடித்தல் இயலாது என்று சொல்வார்கள். இந்திய இதழியலின் தோற்றுவாயிலிருந்து நடப்புச் சமயம் வரை இதழியல் மற்றும் வெகு ஜனத் தொடர்பியல்களில் நடந்திருக்கும் மாற்றங்கள், வளர்ச்சி என்பதைப் பற்றி சுவையாக, பாடப் புத்தகங்கள் போல அல்லாமல், சொல்லிச் செல்லும் Keval J Kumar அவர்கள் தான் நூல் ஆக்கிய துறையில் தனக்கிருந்த வரலாற்றறிவு, வளர்ச்சியைப் பற்றிய பிரக்ஞை, மற்றும் எதிர்நோக்கு என்பவையை வாசகர் பிரமிக்கும் வண்ணம், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெகு ஜன ஊடகத்தின் ஒரு தன்மையைப் பற்றி, விளக்குவார்.
 

அப்படிப்பட்ட வாசக அனுபவத்தை அண்மையில் திரு.தியோடர் பாஸ்கரன் அவர்கள் 2004-ல் எழுதி, ஆறு ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கும் "எம் தமிழர் செய்த படம்" எனக்குத் தந்தது. பல உலக அறிவியல் மற்றும் தொழில் நுணுக்க சாதனைகள் எல்லாம் ஐரோப்பா/அமெரிக்காவில் நடந்து பல காலம் ஆகியும் இந்தியாவிற்கு வராமல் இருந்திருக்க, சினிமா மட்டும் 'கடலைத் தேடி வந்த நதியாக' இரண்டே வருடங்களில் சென்னைக்கு வந்திருக்கிறது. இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள் சினிமா எனும் ஊடகத்தின் மௌனப் பருவம், சினிமாவின் தென்னிந்திய முன்னோடிகள், ஆவணப் படங்கள் மற்றும் பேசும் படத்தின் தோற்றம் ஆகியவையைப் பற்றி விரிவாகச் சொல்லுகின்றன. முக்கியமாக, முதல் அத்தியாயத்தில் பாஸ்கரன் மௌனப் படத்தின் பிறப்பு, அதன் இந்திய வருகை, சென்னை வருகை, இதில் ஆர்வம் வளர்த்துக் கொண்ட தமிழர்கள், முதல் மௌனப் படங்களில் பல புராண கதைகளையே களமாக கொண்டதின் காரணம், கொட்டகைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி போன்றவையை மிகவும் நுண்ணிய அளவில் தகவல் எதுவும் விடுபடுதல் ஆகாது என்கிற கவனத்தில் விவாதித்திருப்பது சிலாக்கியமானது. இந்த அத்தியாயத்தின் பின் இருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

அடுத்த சில அத்தியாயங்கள் நாடகத்தின் பால் சினிமாவிற்கு இன்றளவும் நீண்டு வரும் தொடர்பு, பிரித்தானிய அரசின் தணிக்கை மற்றும் வளர்ந்து வரும் இந்தப் புதிய ஊடகத்தின் மேல் கவிந்த பயம், சினிமாவைப் பற்றிய எழுத்து எப்படி சினிமாவைப் பாதிக்காமல் சினிமாவால் பாதிக்கப்பட்டவாறே இருந்தது என்பதான விடயங்கள் பற்றி ஆழமான பார்வையை முன்வைக்கின்றன. சினிமாவின் சாத்தியங்களை தமிழ் மண்ணைப் பொறுத்தவரை தமிழர்கள் உணர்வதற்கு வெகுகாலம் முன்னமேயே, சில பிரித்தானியர்கள் அறிந்திருந்தனர் என்பது ஆச்சர்யமானது.

ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்'
தியோடர் பாஸ்கரன் இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயங்களில் அண்மை சினிமாவின் கலை அம்சங்களைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். தமிழ் சினிமா ஏன் இன்னும் நாடகத்தின் செல்லுலாயிட் வடிவமாகவே இருக்கிறது; ஏன் இன்னும் இந்த கட்புல ஊடகத்தின் இயற்கையான சினிமா மொழி கை வரவில்லை என்ற விவாதத்தை நடத்திச் செல்லும் பாஸ்கரன், தமிழில் சினிமா இன்னும் அதன் மொழி தெரியாதவர்களிடமே இருக்கிறது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். பாலு மகேந்திராவின் வீடு போன்ற சில படைப்பாக்கங்கள், மகேந்திரனின் உதிரிப் பூக்கள், ருத்ரையாவின் அவள் அப்படித்தான், அம்ஷன் குமாரின் சமீபத்திய படம், சேது மாதவனின் விருது பெற்ற படம், மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை சினிமா மொழியை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதாக கருதும் பாஸ்கரன், இசை சினிமாவை, அதன் மொழியைச் சிதைப்பதாகவே கருதுகிறார். அதீதமான பாத்திரப் பேச்சும், ஆக்கிரமிக்கும் இசைக் கோர்வைகளும் காட்சி ஊடகத்தின் கழுத்தை நெரிப்பதாக உணரும் இவர், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் திராவிட இயக்கங்கள் (ஈ.வே.ராமசாமி நாயக்கர் தவிர்த்து) சினிமாவில் தலையிட்டு, அதை தமது பிரசங்க பீரங்கிகளாக பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் கருவியாக உலகிலேயே முதன்முறையாக மாற்றிக்கொண்டனர் என்றும் பதிவு செய்கிறார்.

புத்தகத்தை முடிக்கும் வரையிலும் இது தனித்தனி கட்டுரைகளாக பல வருடங்களின் நீட்சியில் எழுதப் பட்டவை என்று ஐயப்பட முடியவே இல்லை. ஆனால், ஒவ்வொரு கட்டுரையும் முன் பின் கட்டுரைகளோடு கருத்துத் தொடர்ச்சி கொண்டதாகவே உள்ளது. கட்டுரைகளை தனித்தனியாகவோ, சேர்ந்தோ படிப்பதால் படைப்பு ஒருமை கெடாதது இப்புத்தகத்தின் ஆகப் பெரிய சிறப்பு.

தியோடர் பாஸ்கரனின் துறை வல்லமை தமிழில் நேரிணை இல்லாதது என்று சொல்லிவிட முடியும். நம் கவனத்தை முற்றாக ஈர்ப்பது இவரின் தமிழ் நடையும், துறைச் சொற்களுக்கு தமிழ் இணைச் சொற்களை உருவாக்கியிருப்பதும்தான். காட்டாக, film processing என்ற சொற்றொடருக்கு இணையாக 'உருத்துலக்கம்" எனும் பதத்தை ஆக்கித் தருகிறார்.

சினிமாவோடு - ரசிகனாகவோ, கலைஞனாகவோ, தொழில் நுணுக்க வல்லுனராகவோ, முதலீட்டாளனாகவோ - எந்த நிலையில் உறவு கொண்டிருந்தாலும் இந்தப் புத்தகம் உங்களுக்கென்று ஒரு சேதியை வைத்திருப்பது இதன் தனிச்சிறப்பு.

உயிர்மை பதிப்பகம், சென்னை, உரூபா 100/-.

மூன்றாம் பிறை

| Friday, February 14, 2014
மூன்றாம் பிறை
திரைப்படக் கலைஞர் பாலு மகேந்திரா நினைவாக இன்றைய தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் இன்று இரண்டு நினைவஞ்சலிகள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று, சமஸ் எழுதிய 'என்றும் அழியாத கோலம்'. இவரின் அண்மைக்கால எழுத்துக்களிலேயே மிகவும் சிறப்பாக அமைந்தது. பாலு மகேந்திராவின் கலைத் தேர்ச்சி சினிமா ரசிகர்களில் பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான். இதுவரை எழுத்தில் வெளிவந்திராத அவரின் ஆளுமையின் நுண்ணிய பகுதிகளை கவிதைத் தன்மையுடன் அவரின் வார்த்தைகளையே நினைவு கூர்ந்து எழுதப்பட்டது சிறப்பானதொன்று. Artistic excellence is the neurotic compensation of the perverted mind என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். பாலுவின் மனது, அவரின் அழகுணர்ச்சி, மெலிதான நகைச்சுவை, படைப்புலக உந்துதல்கள், படைப்பாளியின் சாபம், அவன் விட்டுச் செல்லும் பாரம்பரியம், அவனின் என்றுமே முடியாத கலை ஆசை என்று இந்தப் பெரும் கலை ஆளுமையின் பரிமாணங்களை ஊடுருவிப் பார்க்கும் இந்தக் கட்டுரை, கடுகில் கடலை நுழைத்த கதையாக சின்னஞ் சிறு இடத்தில் பெரும் கலைஞனின் மொத்தத்தை சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டூரை திரு சொர்ணவேல் அவர்கள் எழுதிய 'மஞ்சில் முகிழ்ந்த ஓவியம்'. இதில் மிகவும் சிலாக்கியமானது பிரதி மொழி. ஒளிப்பதிவுத் துறைக்கென்று ஆகியிருக்கும் கலைச் சொற்களைக் கொண்டு கவிதைத் தனமாக இக்கட்டூரையை ஆக்கியிருக்கிறார். காட்சிகளை சட்டகப்படுத்துவதில் பாலுவின் அழகுணர்ச்சி பெரும் பங்கு வகித்திருக்கிறது என்று கருதும் சொர்ணவேல், "ஆவணப் படங்களைவிட யதார்த்தத்தைச் சித்தரிக்கப் புனைவுப் படங்களே சாத்தியங்கள் நிறைந்தவை" என்று பாலு தன்னிடம் சொல்லியிருப்பதாக இங்கு தெரிவிக்கும் போது, நம்பியதையே செய்தவன் இந்தக் கலைஞன் என்ற பெருமிதம் மிகுகிறது.

பெரும் கலைஞனானவன், கலையைப் பொறுத்து எடுத்த தன்னுடைய நிலைப்பாட்டையே, தனி வாழ்விலும் நிறுவ முயன்று தோல்வியடைவான் என்ற பொதுவிதியை இன்னொருமுறை நிரூபணம் செய்து விலகியிருக்கிறான் பாலு என்ற கலைஞன்.
 
----
 
பெண்ணின் ஆணும், ஆணின் பெண்ணும்
 
 பெப்ரவரி இரண்டாம் திகதி பிருந்தா சீனிவாசன் அவர்கள்          தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் 'நாங்கள் எங்கே செல்வது?' என்ற தலைப்பில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு அடிக்கடி உள்ளாக்கப்படுவதைப் பற்றி மிகவும் காட்டமாக சொல்கிறார். நான் பெண்களின் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவன் என்பது மட்டுமன்றி, இந்த உலகின் மிக முக்கியமான சரி பாதி அவர்கள் என்பதில் எந்த குழப்பமும் இல்லாதவன். மீண்டும் மீண்டும் மிகவும் உரத்த குரலில் சொல்லப் படுவது என்னவென்றால், பெண்கள் அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆண்களால் உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதுதான். இதில் பெண்களின் பங்கு ஏதேனும் இருக்கிறதா என்று சிந்திக்க ஆரம்பித்தாலே, பல பெண்ணீ யக் குழுக்கள் நம்மை தாக்க ஆரம்பித்து விடுகின்றன. எனக்குப் புரியாதது, பெண்களின் உடை ஆண்களைப் பாதிக்கக் கூடாது என்ற வாதம்தான். இந்த உலகம் சராசரி ஆண்களால் ஆனது. சராசரி ஆண் பெண்களின் ஆடை அணியும் முறையால் பாதிக்கப் படுகிறான் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த அறிவு ஜீவித் தனமான வாதமும் இது குறித்த தீர்வுக்கு நம்மை .இட்டுச் செல்லாது. மிகவும் நாகரீகமான, உண்மையான கல்வி அறிவு நிறைந்த, பண்பட்ட, மகாத்மாவான ஆண்கள் நிறைந்த உலகில் இந்த பெண்கள் நிச்சயம் வாழவில்லை. ஒரு பெண் கவர்ச்சியாகத் தெரிந்தால், அருகே யாரும் இல்லாவிட்டால் - தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கும் விருப்பம் உள்ள ஆண்களால் இந்த உலகம் பஞ்சமே இல்லாமல் நிறைந்திருக்கிறது. இந்த மாதிரி ஆண்களால், பாலியல் ரீதியாக தாக்கப்படாமல் இருக்க ஒரு பெண் விரும்பினால், இரண்டு வழிகள் உள்ளன. கவர்ச்சியாக உடை அணிவதைத் தவிர்க்கலாம். இல்லையேல், கவர்ச்சியாக உடை அணியும் போது, நிறைய பேருடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். இரண்டும் முடியாவிட்டால், பின்னால் குறைந்த பட்சம் வருத்தப்படாதவாறு இருக்கலாம்.

அடுத்து, பிருந்தா 'பெண்கள் வெறும் உடல்களா?' என்று கேட்கிறார். பெண்களும் வெறும் உடல்கள் இல்லை; ஆண்களும் வெறும் உடல்கள் இல்லை. இருவரும் ஒருவரையொருவர் வெறும் உடல்களாக பார்க்கத் தேவையில்லை. ஆண்களை வெறும் உடல்களாக மட்டும் பார்க்கும் பெண்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் ரஷ்யாவில் மட்டுமல்ல, இங்கும் உண்டு. வரலாறை மட்டும் பார்க்கத் தேவையில்லை; சுற்றுமுற்றும் பார்த்தாலே போதும். அதைப் போன்ற பெண்கள் தட்டுப்படுவர். 
 

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், தவறு செய்த ஆணுக்கு தண்டனை கடுமையாக இருக்கலாம். கூடவே, பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடை எப்படி வேண்டுமானாலும் அணிய முடிகிற பெண்கள்,
அதைக் குறித்த பார்வைகள் 'மிகவும் நல்ல ஆணாக' இல்லாதவனுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தின் நிதர்சனம் தெரியாத பெண்களா இவர்கள்? ஒரு லட்சிய சமூகத்தைப் பற்றிய விமர்சனத்தை இன்றைய சமூகத்தின் மீது வைக்கும் இவர்கள் 'லட்சியப் பெண்களா' அல்லது 'அலட்சியப் பெண்களா?'

பிருந்தா சீனிவாசனுக்கு உண்மை நிச்சயம் தெரியும்.
 
----

எருமைகள் காணோம்; அமைச்சர் பத்திரம்

| Tuesday, February 4, 2014
இன்று (03-02-2014) தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் தலையங்கப் பக்கத்தில் ஞானி அவர்கள் 'இன்னும் தேவைப்படும் அண்ணா' என்ற தலைப்பில் திராவிடக் கட்சிகளின் இன்றைய அரசியல் அண்ணா காண்பித்தது அல்ல என்பதாக எழுதியிருக்கிறார். பெரியாரிடம் ஜனநாயகம் இருக்கவில்லை என்று ஞானி சொல்வது உண்மைதான். அவருக்கு ஜனநாயகம் தேவைப்படவில்லை. அப்பொழுது தமிழ் சமூகம் இருந்த நிலையில், ஜனநாயகம் தேவைப்படாதது மட்டுமன்றி, அது வேறு பல இடைஞ்சல்களை உருவாக்கக்கூடியதாகவும் இருந்தது. படிப்பறிவே இல்லாமல், வாழ்வின் எளிமையான தேவைக்கும் கூட, ஊர் செல்வந்தரையோ, காளி-மாரியையோ நம்பிய அந்த இருட்டு மனிதர்களை தைரியப் படுத்தி, வெளிச்சத்திற்கு கொண்டு வர, சொல்லுகின்ற வேலையைச் செய்கின்ற மனிதர்களே அவருக்குத் தேவைப் பட்டார்கள். தேவையான தீப்பந்தம் அவரிடமே இருந்தது. அதிலிருந்து தன்னுடையதைப் பற்ற வைத்துக் கொண்டு, ஊர் ஊராக அலைய முடிகிற "ஊர்சுற்றி"களே அவருக்குத் தேவை. இருட்டைத் தீயடித்து துரத்த, ஜனநாயகம் பேசும் பொறுமையோ தேவையோ அவருக்கு இல்லை. எவருடைய ஓட்டையும் நம்பியிருக்கும் நிலை, அவ்வளவு பெரிய பகுத்தறிவுவாதிக்கு மிகவும் துரதிர்ஷ்டமான நிலையையே அளித்திருக்கும். தீயாகவே வாழ்ந்து அருட் பெரும் ஜோதியாக மறைந்த பெரு மகனார் பெரியார் - மார்க்ஸ், கிறித்து, காந்தி போல.

அண்ணாவின் கதை வேறு. அவருக்கு ஆசைகள் இருந்தன. அவர் நோய்மையால் தாக்கப் படாமலிருந்தால் வேறு ஒரு அண்ணாவைப் பார்த்திருக்கலாம் என்று ஞானி சொல்கிறார். அந்த அண்ணா எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்ற கேள்வி யூகங்களால் நிறைந்தது. என்ன இருந்தாலும், அவருக்குப் பின் வந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் அளவுக்கு பிரதேச அரசியலை கீழ் இறக்கியிருந்திருக்க மாட்டார் என்று நம்ப, வாழ்ந்த போது அவர் நடத்திய அரசியல் இடம் தருகிறது.

பெரியார் தரம் உருவாக்கினார். அண்ணா அதைக் குறைத்தார். பின்வந்தவர்கள் ஒன்றுமே தெரியாமல் உருக்குலைத்தார்கள்.

நல்லவேளை, பெரியார்தான் செத்துப் போய் விட்டாரே! அவர் இருந்திருந்தால், கனிமொழி, ராஜா, ஸ்டாலின், அழகிரி, மாறன்கள் - ஆகியோரைப் பற்றி என்ன சொல்லுவார்? யூகங்கள் நாகரீகமாக இல்லை.

வாழ்க திராவிடம்!

----


நேற்று (02-02-2014) உளுந்தூர்பேட்டையில் தேதிமுக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தும் அவரது மனைவியும் பேசுவதைக் கேட்ட போது, சந்தோஷமும் வருத்தமும் மாறி மாறி வந்து போயின. கடந்த ஐம்பது வருட தமிழக அரசியல் நாவன்மையால் ஆனது. திமுகவிடம் காங்கிரஸ் தோற்றோடியதற்கு முக்கியமான காரணமே, தேசியக் கட்சியிடம் "கவர்ச்சிப் பேச்சாளர்கள்" இல்லாமல் போனதுதான். அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் நூறு ஜோடனைப் பேச்சாளர்கள் திமுகவில் அணிவகுத்து நின்ற போது, காமராஜர் போன்ற தட்டைப் பேச்சாளர்கள் காணாமல் போயினர்.

விஜயகாந்த் திராவிடப் பேச்சுப் பாரம்பரியத்தையே பரிகசிக்கிறார். உளறுவதை விட மோசம். கருத்தொற்றுமை இல்லை. சபை நாகரீகம் இல்லை. நல்ல தமிழுக்கும் அவருக்கும் இடையே உள்ள தொலைவு, ராகுல் காந்திக்கும் பிரதமர் பதவிக்கும் உள்ளதை விட அதிகமானது.
ஆனாலும் மேடையில் ஒரு மணி நேரம் மைக் முன் நிற்க முடியும் தைரியம் அசாத்தியமானது. எனக்கென்னமோ, தமிழ் மேடைப் பேச்சு ஒரு முழு வட்டம் வந்துவிட்டதைப் போலத்தான் தோன்றுகிறது.

பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, சம்பத், கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோரின் அரசியல் மேடைப் பாரம்பரியத்தின் பின்நவீனத்துவ தொடர்ச்சியாகத்தான் கேப்டன் தெரிகிறார்.

பண்ருட்டியார்தான் இது சரியா என சொல்ல வேண்டும்!


----

                                          எருமைகள் காணோம்; அமைச்சர் பத்திரம்

உத்திரப் பிரதேசத்தில் அசாம் கான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருக்கிறார். சகல கலா வல்லவர். உ.பி. முதல்வருக்கும் அவரது தந்தைக்கும் மிகவும் நெருக்கமானவர். சர்ச்சைகளின் தொடர் நாயகன். இவரது பேச்சைக் கேட்கும், செயல்களைப் பார்க்கும் தென்னாட்டு அரசியல்வாதிகள், இவருக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பற்றி பொறாமையுருவர். 

கடந்த சனிக்கிழமை இவரது பண்ணையில் இருந்த
ு ஏழு எருமை மாடுகள் காணாமல் போய்விட்டன. வெகுண்டெழுந்த அமைச்சர், உடனடியாக தனது அ(எ)ருமைகளைக் கண்டுபிடிக்க மாநிலத்தின் மொத்த காவல் துறைக்கும் ஆணையிட்டார். காவல்துறையின் மொத்த எந்திரமே முனைந்து, இரண்டு நாட்களுக்குள், முதல் புலனாய்வில் மூன்று எருமைகளை ஞாயிற்றுக் கிழமையும், இரண்டாவது புலனாய்வில் நான்கு எருமைகளை அடுத்த நாளான திங்கள் கிழமையே கண்டுபிடித்து, ஸ்காட்லான்ட் யார்ட் காவல் துறையையே பொறாமைப் பட வைத்து விட்டனர்.

வீரப்பனைக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்ற காவல் துறையினருக்கு பரிசும் பதவி உயர்வும் கொடுத்து மகிழ்வித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல, அசாம்கானும், முதல்வரும் ஏதாவது செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் உத்திரப் பிரதேச காவல் துறையினரிடம் கொழுந்து விடுவதை உணர்ந்த, பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள், "எருமைகள் காணாமல் போனது ஒரு சிறிய விஷயம். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்துகின்றன" என்று சொல்லி அணைத்துவிட்டார். 



தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்று இப்போதாவது புரிகிறதா?


----

திண்ணை 5

| Sunday, February 2, 2014
                                     மசாலா தோசை

எதுவுமே காரசாரமாக நுகர்ந்து பழகியிருக்கிறோம் நாம். உணவு, இசை, சினிமா, கதை, பேச்சு என்று எல்லாமே உரைப்போடு இருக்க வேண்டும். இதைதான் 'மசாலாத் தனம்' என்று சொல்கிறார்கள். எழுத்தென்று வரும்போது மசாலாத் தனத்துடன் புத்திசாலித் தனத்தையும் ஒரு சரி விகிதத்தில் கலந்து கொடுத்தவர்கள் பெரிய இலக்கிய பிரபலங்களாக உலா வந்திருக்கிறார்கள். உலகெங்கிலும் நிலை இதுதான். Dan Brown எழுதிய The Da Vinci Code 2003-ல் வெளிவந்து கோடிக்காணக்கான பிரதிகள் விற்று முடிந்து விட்டன. புதிய பதிப்புகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. 1929-ல் வெளிவந்த Faulkner எழுதிய The Sound and The Fury சில நூறு பிரதிகள் விற்கவே பல ஆண்டுகள் பிடித்தன.

தமிழிலும் இதே கதைதான். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' படிக்காத தமிழரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுள் இல்லை என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யலாம். தமிழின் ஆகச் சிறந்த நாவல்களுள் ஒன்றான .நா.சுப்ரமண்யம் அவர்களின் "பொய்த்தேவு" படித்தவர்கள் நம்மில் எத்தனை பேர்? எதை விற்கவும் ஒரு glamor தேவைப் படுகிறது. திரு.சுஜாதா எழுதிய எல்லா நவீனங்களுமே வணிக ரீதியில் வெற்றி அடைந்தவைதாம். ஆனால், ஏன் அசோகமித்திரன் போன்றவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள்? தரமும் இருந்து, வெகு ஜன வெற்றியையும் கைப்பற்றியவர்கள் என்று பார்த்தால், சுந்தர ராமசாமி மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வருகின்றனர். அசோகமித்திரன் அவர்களின் சில படைப்புக்கள் இந்திய இலக்கியத்தில் கடந்த நூற்றாண்டில் வெளி வந்த சிறந்த புதின ஆக்கங்களோடு ஒப்பு நோக்கத் தக்கவை. இவரது 18-வது அட்சக்கோடு, அப்பாவின் சிநேகிதர்கள் போன்ற ஆக்கங்கள் நவீனத் தமிழ் இலக்கியத்தில் தரக் கட்டுப்பாட்டுக் கோலாக இருக்கத் தகுந்தவை. இவரின் இரண்டு கட்டுரைத் தொகுதிகள் அண்மையில் நர்மதா பதிப்பகத்தால் மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. "நினைவோடை" மற்றும் "எவை இழப்புகள்?" எனும் தலைப்பில் உள்ள இவ்விரண்டு தொகுதிகளும் பல சுவையான தகவல்களை, பார்வைகளை, வேறு வேறு விடயங்களைக் குறித்து, கொண்டுள்ளதாக உள்ளன.

'
தட்டையாக எழுதுபவர்' என்ற விமர்சனம் இவரைப் பற்றி உண்டு. அதாவது, எந்த வித ஜோடனைகளும் இல்லாமல் எழுதுவதைக் குறிப்பிடுவதான விமர்சனம் இது. நம்ப முடியாத எளிமை படிப்பதற்கு எந்த வித கவர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை என்பதால் இப்படி சொல்கிறார்கள். ஆனால், இந்த எளிமை கைவருவதற்கு ஆண்டாண்டுகால பயிற்சி வேண்டும். 'நினைவோடையில்' .நா.சு. பற்றி அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்: "ஒருவனை 'மிகவும் கெட்டிக் காரத்தனமாக எழுதுகிறான்' என்பதே அவரைப் பற்றி .நா.சு. அவர்கள் செய்யும் கடுமையான விமர்சனம் ஆகும்." ஜோடனை, புத்திசாலித்தனம், செய் நேர்த்தி என்பதெல்லாம் மிகவும் எளிதாக கைவருபவை. இருப்பதிலேயே கைப்பற்றுவதற்கு கடினமானது 'எளிமை' ஒன்றே. .நா.சு., அசோகமித்திரன் போன்றோர் தங்களது கடுமையான கர்மயோகத்தால் அதை அடைந்து விட்டனர்.

ஆனால், கல்கி, சுஜாதா, பாலகுமாரன் உள்ளிட்டோர் வேறு வகை. காரசாரமான மசாலாக்காரர்கள்!

"
நினைவோடை" மற்றும் "எவை இழப்புகள்?" - அசோகமித்திரன், நர்மதா வெளியீடு, சென்னை, உரூபா 60/- (ஒவ்வொன்றும்).


----

இவர்கள் இருந்தார்கள்

நமது பாடங்கள் அனைத்துமே மனிதர்கள் கொடுத்ததுதான் - புத்தகங்களிருந்து வந்தாலுமே கூட. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த பாடங்களை, தாங்கள் தேர்ச்சியுற்ற பாடங்களை பிறருக்கு கற்றுக் கொடுத்த வண்ணமே இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் மட்டும் தாங்கள் இறந்த பின்னும், வாழ்ந்த போது தாங்கள் எடுத்த பாடங்களை, அருவமாக புத்தகங்களின் ஊடே கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நல்லவைகள், கெட்ட விடயங்கள், அருவருப்பானவை, பிரமிப்பானவை - என்று கற்றுக் கொள்ளத்தான் எத்தனை!

ஏதோ ஒரு லட்சியத்துக்காக தாலி கட்டிக் கொண்டவர்கள் கற்றுக் கொள்ளும் மற்றும் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மிகவும் அலாதியானவை. இருட்டுக் குகைக்குள் கண்ணை கட்டிக்கொண்டு வேகமாக ஊர்தி ஒன்றை ஓட்டிக் கொண்டு போவது மாதிரி, அவர்கள் தங்களின் லட்சியத்திற்கு வெளியே இருக்கும் எதையும் மறுதலித்து விட்டு, அதிலேயே மூழ்கிக் கிடப்பதுதான் அவர்களை சுவாராஸ்யமான மனிதர்கள் ஆக்குகிறதா?

திரு.ஜெயமோகனின் "இவர்கள் இருந்தார்கள்" என்ற புத்தகம் லட்சியத்திற்காக தாலி கட்டிக் கொண்டு அதிலேயே மூழ்கி முத்தெடுக்க ஆசைப்பட்டு, கையில் அகப்பட்ட எதோ ஒன்று முத்தா என்ற ஐயப்பாட்டிலேயே முடிந்து போனவர்களைப் பற்றியது. இவர்கள் பெரியவர்கள். உண்மையில், மகாத்மாக்கள். இவர்களின் இலட்சியங்கள் தோல்வியைத் தழுவியிருப்பதே இவர்கள் மகா புருஷர்கள் என்பதற்கான உதாரணம். மகாத்மாக்கள் வெற்றியடைவதேயில்லை. நூற்றாண்டுகளுக்கான குற்ற உணர்ச்சியை ஒட்டு மொத்த மனித குலத்திடம் தப்பிக்கவே முடியாதபடி தலையில் அடித்துவிட்டு போகிறார்களே, இதுதான் மகாத்மாக்களின் வெற்றி. சோற்று மனிதர்களுக்கும் இவர்களுக்குமான இடைவெளி கடவுளால் கூட நிரப்ப முடியாதது.

நித்ய சைதன்ய யதி, சமுத்திரம்,கே.பி.ஆர்.கோபாலன், கவிஞர் சுரதா, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெ.ஹேமச்சந்திரன், பேராசிரியர் ஜேசுதாசன், டாக்டர் அய்யப்ப பணிக்கர், .நா.சு, லாரி பேக்கர், ஆதிமூலம், கந்தர்வன், பி.கே.பாலக்ருஷ்ணன், ஹனீஃபா, ஸ்ரீகண்டன் நாயர், சா.கந்தசாமி, லா..ரா, ராஜமார்த்தாண்டன், வலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன், சி.சு.செல்லப்பா, ஜகன்னாதராஜா, சுகந்தி, சோதிப்பிரகாசம், கீதா ஹிரண்யன் - இந்த 25 இலக்கிய ஆளுமைகள் பூமியை தங்களின் லட்சியங்களால் பாதித்து விட்டு நகர்ந்தவர்கள். ஏதோ ஒன்று இவர்களை தீவிரமாக இயக்கியபடியே இருந்தது.

நெருக்கமாகவோ, அல்லது தெரிந்தவர் என்ற முறையிலோ இந்த பெரும் ஆளுமைகளை அவதானிக்க முடிந்த ஜெயமோகன், அற்புதமான பேனாச் சித்திரங்களை தந்திருக்கிறார். ஜெயமோகனின் உரைநடை மனோகரமாக, ஆளை மயக்கிப் போடும் அளவில் வந்திருக்கிறது இதில்.  ஆனால், புத்தகத்தை முடிக்கும் போது நம்மைத் தாக்கும் அந்த குற்ற உணர்வு, நம்மை எரிக்கவோ புதைக்கவோ செய்யும் வரையில் கூடவே வருவது.

[
நற்றிணைப் பதிப்பகம், உரூபா 160/-]


----


கோமல்
'அறம்' தொகுப்பில் ஜெயமோகன் கோமல் சுவாமிநாதன் அவர்களைப் பற்றி எழுதியுள்ள சிறுகதை [இதை சிறுகதை என்று சொல்லலாமா அல்லது இது ஒரு நினைவுக் கட்டுரையா?] நெகிழ்வானது. அதற்கு முன்னால் இருக்கும் கதை, சாப்பாட்டுக் கடையைப் பற்றியது, தொகுப்பின் மிகச் சிறந்தது. எனக்குத் தெரியும், மிகவும் தாமதமானது இந்த இடுகை. 'அறம்' தொகுப்பைப் படிக்காத நவீன தமிழ் இலக்கிய ஆர்வலர் எவருமிலர் என்ற நிலையில், இதை இடுகையிடுவது எனது அசட்டுத் தைரியம்தான்.

ஆனாலும், படிக்காத ஓரிருவராவது இருக்க மாட்டாரா? அவர், இதைப் பார்த்த பிறகாவது படிக்கத் தொடங்க மாட்டாரா என்ற நப்பாசையும் ஒரு காரணம்.

----
தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா மிகவும் கொச்சையாகப் பேசுகிறார், .வே.ரா. பெரியார் அவர்களை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா என்பதாகவெல்லாம் பேசுகிறார் என்று ஞாநி அண்மையில் தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் வருத்தப் பட்டிருக்கிறார். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், ஹெச்.ராஜாவிடம் ஞாநி வேறு என்ன எதிர்பார்த்தார்?

ஹெச்.ராஜா அவர்கள் அப்படியொன்றும் நம்ப வைத்து மோசடி செய்பவரில்லையே?

----